Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வசு பஞ்சக தோஷம் எனும் தனிஷ்டா பஞ்சமி

பிறப்பிற்கு கிழமை, நட்சத்திரம், திதி என்பது மட்டும் எப்படி முக்கியமோ அப்படியே, இறப்பிற்கும் நாள், நட்சத்திரம் என்பது மிக முக்கியமாகும். ஒர் ஆன்மாவிற்கு வாழ்வதற்கு எப்படி இப்பூவுலகில் எல்லாம் தேவையோ, அப்படியே அந்த ஆன்மாவிற்கு இறப்பிற்கு பின்னால் மேலோகம் நோக்கி பயணிக்க வழிகள் தேவை. உடலை விட்டு விடுபடும் ஆன்மாவானது எமலோகம் நோக்கி பயணப்படாமல் மீண்டும் உடலுக்குள் உட்புக ஆவல் கொண்டு; உடலுக்குள் செல்ல முடியாமல் வந்து மனிதர்களை சில தருணங்களில் தொந்தரவு செய்கிறது. இவ்வாறு நிகழும் அக்காலத்தையே தனிஷ்டா பஞ்சமி என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனை ஜோதிடத்தின் வழி விரிவாகக் காண்போம்.

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன?

தனிஷ்டா என்றால் அவிட்ட நட்சத்திரத்தை குறிக்கும். பஞ்சமி என்பது அதற்கு பின் வரும் ஐந்து நட்சத்திரங்களான அவிட்டம், சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும். இந்த ஐந்து நட்சத்திரங்களில் ஒரு வீட்டில் மரணம் நிகழுமானால் அதனை தனிஷ்டா பஞ்சமி என்றும் இது ‘அடைப்பு’ என்றும் ‘வசு பஞ்சக தோஷம்’ என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், ரோகிணி, கார்த்திகை, உத்திரம் நட்சத்திரத்திலும் மரணம் நிகழும் போதும் இந்த ‘வசு பஞ்சக தோஷம்’ உண்டாகிறது.

தனிஷ்டா பஞ்சமி என்ன செய்யும்?

இறந்தபின் ஆன்மாவுக்கு விடுதலை ஏற்படுவதற்கு தடை ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் தடையினால், இறந்தவரின் குடும்பத்தில் தொடர் மரணங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றது. சில குடும்பங்களில் பெரிய கண்டங்கள் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.இறந்த ஆத்மாவனது எமலோகம் செல்ல முடியாமல் பூமியிலே இருக்கின்றது. அதுமட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஜோதிடத்தில் தனிஷ்டா பஞ்சமிக்கு சொல்லப்படும் விளக்கம் என்ன?

காலபுருஷனுக்கு லக்னம் மேஷம் என்பதாகும். மரணம் என்பது பன்னிரண்டாம் (12ம்) பாவகமாக வருகிறது. அந்த குறிபிட்ட பத்தாம் பாவகத்தில் (10ம்) இருந்து பன்னிரண்டாம் (12ம்) பாவகம் வரை சந்திரன் பயணிக்கும் காலத்தில்தான் இந்த அடைப்பு எனச் சொல்லப்படுகின்ற வசு பஞ்சக தோஷம் ஏற்படுகின்றது. இதில் உள்ள எல்லா நட்சத்திரங்களும் உடைந்த நட்சத்திரங்களாக உள்ள காரணத்தினாலும் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் சனியின் ஆட்சி வீடாக இருக்கும் காரணத்தினாலும் (சனி என்பவன் ஆயுள் காரகன்) மேலும், 12ம் வீடான மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரமாக இருப்பதாலுமே இந்த ‘வசு பஞ்சக தோஷம்’ என்ற தனிஷ்டா பஞ்சமி ஏற்படுகின்றது. சந்திரனின் நட்சத்திரங்களிலும் சூரியனின் நட்சத்திரங்களிலும் மரணம் அடைகின்ற ஆத்மாவானது அவ்வளவு சீக்கிரம் இந்த பூமியை விட்டு விலகுவதில்லை. எனவே, தோஷம் ஏற்படுகின்றது.

அந்த ஆத்மா நான் மீண்டும் உடலுக்குள் வந்து விடுவேன் என்ற எண்ணத்தில் பூமியை விட்டுச் செல்லாமல் இங்கேயே உலாவுகிறது. குறிபிட்ட காலத்திற்கு பின் தான் வசித்த வீட்டில் உள்ள நபர்களை தொந்தரவு செய்கிறது.

தனிஷ்டா பஞ்சமிக்கு என்னென்ன பரிகாரம் சொல்லப்படுகிறது?

* இறந்தவரை சூரியன் மறைவதற்கு முன்பு தகனம் செய்ய வேண்டும்.அவரை வீட்டின் கொல்லைப் புறமாக உள்ள சுவரின் வழியாக எடுத்து வெளியே சென்று பின்பு அந்த சுவரை மூடிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் இரவில் பிரேதத்தை வீட்டில் வைக்கக்கூடாது.

*இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அதனை ஒரு ரூமில் போட்டு பூட்டிவிட வேண்டும்.

* ஒரு வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அந்த கிண்ணத்தை தானம் செய்துவிட வேண்டும்.

* தினமும் வீட்டின் நடுவில் ஒரு சொம்பில் நீர் எடுத்து வீட்டில் வைக்க வேண்டும். தொடர்ந்து விடிய விடிய தீபம் எரிய வேண்டும். விடிந்தவுடன் அந்த நீரை தெருவின் முனையில் கொட்டிவிட வேண்டும்.

* மரணம் முடிந்த 16ம் நாள் வீட்டில் மிருத்யுஞ்சய ேஹாமம் செய்ய வேண்டும்.

* தனிஷ்டா பஞ்சமிக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை வீட்டை மூடி வைத்திருக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.

* மருத்துவமனையில் மரணித்தாலும் வீட்டில் மரணித்தாலும் கண்டிப்பாக பரிகாரத்தை செய்ய வேண்டும்.

* ரோகிணி நட்சத்திரத்தில் மரணம் நிகழ்ந்தால் நான்கு மாதமும் கார்த்திகை, உத்திரத்தில் நிகழ்ந்தாலும் மூன்று மாதம் அடைப்பு ஏற்படுகின்றது. நம் முன்னோர்கள் தங்களின் அனுபவங்களின் வாயிலாக தாங்கள் கடந்து வந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு தீங்கு நேராமல் இருக்க அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை கூறிச் சென்று இருக்கிறார்கள். அதை பின்பற்றுவது நமக்கு நற்பலனளிக்கும்.

கலாவதி