Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாராஹி அம்மனை வழிபடும் முறை; வழிபட வேண்டியவர்கள்

சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

​வாராஹி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்த விதமான தீய எண்ணங்களும் இல்லாமல், மன தூய்மையுடன் தொடர்ந்து, வாராஹிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும். வீட்டில் வாராஹியின் படம் அல்லது விக்ரஹம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி, வாராஹியின் முகம் இருக்கும் படி அமைத்து வழிபட வேண்டும். வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது.

வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும். நைவேத்தியமாக தயிர் சாதம், மாதுளை படைத்து, சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாத்தி வழிபடலாம்.27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை நிச்சயம் வழிபட வேண்டும். அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.

ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபடலாம். இந்த நாட்களில் வாராஹிலை தீபமேற்றி வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீளலாம். இது தவிர வாராஹி அம்மனை வழிபட ஏற்ற நாளான பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.