Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உணவால் ஒளியால் இறைவனைக் காட்டிய வள்ளலார்

இறைதரிசனம் எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை, எனக்கு அருள்புரிவீராக என ஏங்கி உள்ளம் உருக தொழுது, தேவைப்பட்டால் அழுது அரற்றி அவனை அழைப்பவர்களுக்கு மட்டுமே அவனது அருட்காட்சி கிடைக்கப்பெறும். இவ்வழிசென்று இறைவனை தரிசித்து அந்த பரவசத்தில் அவனுடன் ஒன்றிக் கலந்தவர்கள் எண்ணற்றோர். ஆனால் இப்படி உன்னை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இறைவன் ஜோதி வடிவானவன் அவனை எங்கிருந்தும் எப்பொழுதும் உன்னால் வணங்கவும் வழிபடவும் முடியும் என்றுரைத்தவர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகள், திருவருட்பா என்னும் நூலை எழுதியதால் திருஅருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்பட்டார்.

சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர் என்னும் சிற்றூரில் 1823 அக்டோபர் 5 (சுபானு புரட்டாசி இரண்டாம்நாள்) ஞாயிற்றுக்கிழமை அன்று இராமையாப்பிள்ளை -சின்னம்மையார் தம்பதிகளின் மகனாக அவரித்தார். உடன்பிறந்தோர் நால்வர். இரு சகோதரர்கள் இரு சகோதரிகள். அடிகளார் பிறந்த சில ஆண்டுகளில் அவரது தாயார் இறந்துவிடவே குடும்பம் உறவினர்கள் வசித்த சென்னையை அடுத்த பொன்னேரிக்கு இடம்பெயர்ந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து சென்னை ஏழுகிணறு பகுதிக்கு வந்தது. இதனால் அடிகளார் தனது 35 வயதுவரை (1825-58) சென்னையிலேயே வாழ்ந்தார்.

தனக்குக் கிடைத்த அறிவு மற்றும் அனுபவங்களுக்கு மாறாக தான் வாழும் சமுதாயம் இருப்பதும், சமயம் பழமைவாதத்தைக் கொண்டிருப்பதும் அவருக்கு பெரும் வேதனையை அளித்தது. இரண்டின் போக்கையும் மாற்றி பழமையை களைந்து சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் முடிவுக்கு வந்தார். அதற்காக படிப்பு, எழுத்து, பதிப்பு, சொற்பொழிவு, போதனை, சித்தமருத்துவம், மொழி ஆராய்ச்சி என வெவ்வேறுபட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தான் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரோ இல்லையோ சொல்லவேண்டியதும், செய்யவேண்டியதும் தன்கடமை என்ற அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டார். இதற்காக அவர் உருவாக்கியதே சன்மார்க்க

நெறியாகும்.

புலால் உண்ணக்கூடாது, சிறுதெய்வ வழிபாடுகூடாது, கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்ஜோதி, தெய்வங்களின் பெயரில் உயிர் பலிகூடாது, சாதிசமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தன்னுயிர் போல எண்ணும், ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வை கடைபிடிக்க வேண்டும், பசிதீர்த்தலே மகிழ்ச்சியின் திறவுகோல், இறந்தவர்களை எரிக்கக்கூடாது, புதைக்கவேண்டும், எக்காரியத்திலும் பொதுநோக்கம்வேண்டும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்பனவற்றை தான் உருவாக்கிய அமைப்பின் நெறிமுறையாக்கினார்.

அவரது சன்மார்க்க நெறிக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. சமயசீர்திருத்தங்களை பலரும் குறைசொன்னார்கள். சைவர்கள் அவரது எழுத்துக்களை புறந்தள்ளினர். சிலர் தங்கள் கண்டனத்தை நேரடியாகத் தெரிவித்தனர். சிலர் அவர் எழுதிய நூலுக்கு மாற்றாக மறுப்பு நூலை எழுதி வெளியிட்டனர். ஆறுமுகநாவலர் நீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்தினார். இதற்கெல்லாம் பின்வாங்காது தன் கொள்கைகளில் உறுதியாக இருந்தார் அடிகளார். சென்னையில் வசித்தாலும் அவ்வப்போது பிறந்தஊருக்கு வந்துச் செல்வதும் சிதம்பரம் நடராசரை தரிசிப்பதும் அவர் தவறாமல் கடைபிடித்து வந்தார். ஒருசமயம் சிதம்பரம் தரிசனத்தில் கருங்குழியைச் சேர்ந்து மணியக்காரர் வேங்கடரெட்டியார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஏற்கனவே அடிகளாரின் செயல்பாடுகளை அறிந்து அவர்மீது மதிப்புக்கொண்டிருந்த ரெட்டியார் அவரை தம் இல்லத்தில் வந்து தங்குமாறு அழைப்புவிடுத்தார். தனது நெறியை சென்னையிலிருந்து பரப்புவதைவிட தன்னையறிந்த மக்களின் நடுவிலிருந்து பரப்புவது நன்மை பயக்கும் எனக்கருதி ரெட்டியாரின் அழைப்பை ஏற்று 1858ல் கருங்குழிக்கு இடம்பெயர்ந்தார். 1867வரை கருங்குழியில் தங்கி பகல் பொழுதை மக்களை சந்திப்பதற்காகவும் இரவுப்பொழுதை எழுத்துப்பணிக்காகவும் செலவிட்டார். இக்காலகட்டத்தில் சிதம்பரம் தவிர திருமுதுகுன்றம், திருவதிகை, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டதுடன் தான் எழுதிவந்த திருவருட்பாவின் நான்காம் திருமுறையையும் ஆறாம் திருமுறையின் முன்பகுதியையும் எழுதினார். ஒருநாள் இரவு எழுதிக்கொண்டிருக்கும்போதே விளக்கு மங்கவே எண்ணெய் என்று கருதி அருகிலிருந்த சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து விளக்கில் ஊற்றினார். விளக்கு விடியும் மட்டும் எரிந்தது. எழுதிமுடித்தபின்னர்தான் தண்ணீரை ஊற்றிய நினைவுவந்தது. இது இறைவனின் அருளால் நிகழ்ந்ததாக கருதி பரவசப்பட்டார். இறைவனை ஜோதிவடிவில் வணங்கலாம் என்ற அவரின் நெறிக்கு இந்த அனுபவமும் ஒரு காரணமாக இருந்தது.

1867ல் உத்திரஞான சிதம்பரம் எனப்படும் வடலூரை தனக்கான இடமாக வரித்துக் கொண்டவர் ஒரு சிறுமண்கட்டிடத்தைக் கட்டி அதில் எழுந்தருளினார். சன்மார்க்கநெறியை மட்டுமல்ல துன்மார்க்க நெறியானாலும் அதை ஒருவர் பின்பற்றவேண்டுமானால் அவர் பசியின்றி வாழ்தல் வேண்டும். பசிக்குமிஞ்சிய பிணியில்லை, பசித்தவனுக்கு பணி மீது நாட்டமில்லை என்பதை உணர்ந்தவர். பசிப்பிணி போக்கவிரும்பி தன்னை நாடிவரும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்காக சத்தியதருமச்சாலையை தோற்றுவித்தார். 1867 மே 23 (பிரபவ வைகாசி 11) வியாழக்கிழமை தருமச்சாலையின் தொடக்கவிழாவின் கால்கோள்விழாவை நடத்தினார். அதேநாளில் தான் இருந்த சிறுகட்டிடத்தில் அற்றார் அழிபசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கப் பேரறத்தையும் தொடங்கிவைத்தார். அடிகளார் திருக்கரத்தால் ஏற்றிவைக்கப்பட்ட 21அடி நீளமும் 2.5அடி ஆழமும் கொண்ட அடுப்பு .150 ஆண்டுகளுக்கு மேலாகியும் .இன்றுவரை அணைக்கப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இரவு சமையல் முடித்துவிட்டு போகும்போது மறுநாள் காலைவரை தணல் இருக்கும் விதமாக அடுப்பில் விறகை இட்டுச் செல்வது வழக்கமாக உள்ளதால் அணையாமல் இருந்துவருகிறது. அன்னதானம் காலை ஆறுமணி, எட்டுமணி, பன்னிரண்டுமணி, மாலை ஐந்துமணி, இரவு எட்டுமணி என நாளொன்றுக்கு ஐந்துதடவை வழங்கப்படுகிறது. இதுவும் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அன்னதானம் வழங்கத் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் உப்பு ஆகியவை நன்கொடையாக கிடைக்கின்றன. தமிழகஅரசும் மானிய

விலையில் அரிசியை வழங்கி வருகின்றது.

1867 முதல்1870 வரை வடலூரில் இருந்தவர் பின்னர் வடலூருக்குத் தெற்கே ஐந்துகிலோமீட்டர் தொலைவில் மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தினரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். வெகுகாலம் பயன்படுத்தாமல் இருந்த வைணவ ஆசாரியார்கள் தங்கும் திருமாளிகைக்கு சித்திவளாக திருமாளிகை (சித்திவளாகம் - பிறப்பும் இறப்பும் எப்போதும் தடைபடாத இயற்கை பேரின்பத்தை வழங்குகின்ற மகோன்னத இடம்) என பெயரிட்டு அங்கே 1870 முதல் 1874 வரை அங்கேயே தங்கி அனுதினமும் வடலூர் வந்து பணிகளை மேற்கொண்டுவந்தார்.

பசிப்பிணி நீங்கப்பெற்றவர்கள் இறைவடிவான ஜோதிதரிசனத்தைக் காண 1871ல் (பிரஜோத்பதி ஆனித்தங்கள்) தன் நெறியால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மனமுவந்து அளித்த 80 ஏக்கர் நிலத்தில் சத்தியஞானசபையை நிறுவும் முயற்சியை மேற்கொண்டார். 1872ல் பணியை முழுமை செய்தார். சத்திய தருமச்சாலைக்கு அருகில் இந்த சத்தியஞானசபை எண்கோணவடிவில் தெற்குநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சபையின் முன்மண்டபத்தில் கீழ்புறம் பொற்சபையும் மேற்புறம் சிற்சபையும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு வாயிலையுடைய சிற்சபை, தெற்கு வாயிலையுடைய ஞானசபை, மேற்கு வாயிலையுடைய பொற்சபை மூன்றும் ஆயுத எழுத்தின் அமைப்பை ஒத்துள்ளன. எண்கோணவடிவ ஞானசபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும் ஒன்றினுள் ஒன்றாக இடம்பெற்றன. நாற்கால் மண்டபத்தின் நடுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். அவரின் அருகில் கடுக்காய் மையால் அவர் கைப்பட எழுதிய “அருட்பெருஞ்ஜோதி அகவல்” புத்தகம் இடம்பெற்றுள்ளது. அருட்பெருஞ்ஜோதியை மறைத்தவண்ணம் கருமை (அசுத்த மாயாசக்தி), நீலம் (சுத்த மாயாசக்தி), பச்சை (கிரியாசக்தி), சிவப்பு (பராசக்தி), பொன்னிறம் (இச்சாசக்தி), வெள்ளை (ஞானசக்தி), கலப்பு (ஆதிசக்தி) என ஏழு வெவ்வேறு வண்ண திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. திரைகளெல்லாம் தத்துவப்படலங்களே, மாயைத்திரைகளே. நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய திரைகளை் நீங்கப்பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம். என இதற்கு விளக்கம் அளித்தவர் அதை தனது அருட்பெருஞ்ஜோதி அகவலில்

குறிப்பிட்டுள்ளார்.

புலால் மறுத்தவர்கள் மட்டுமே ஞானசபைக்குள் செல்லலாம் என குறிப்பு எழுதப்பட்டுள்ளதால் இத்தகைய நெறியை கடைபிடிப்பவர்கள் மட்டுமே உள்ளேச் செல்கின்றனர். உள்செல்ல முடியாதவர்களில் பலர் இனிமேல் புலால் உண்பதில்லை என்று உறுதியேற்ற பின்னர் உள்ளேச் சென்று வழிபடுவதுடன் வாழ்நாள் பூராவும் அந்த உறுதியை கடைபிடிப்பதை இவரது நெறிக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறலாம். வள்ளலார் அகத்தே கண்ட அனுபவத்தை புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்தியஞானசபை என்றால் அது மிகையாகாது.

1872 ஜனவரி 25 (பிரஜோத்பதி தை 13) வியாழக்கிழமை இன்றைக்கு 149 வருடங்களுக்கு முன் பூசநன்னாளில் முதன்முதலாக சபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது. அனைவரும் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் கண்டுகளித்தனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த நிகழ்வில் ஏழு திரைகளை விலக்கி அதிகாலை ஐந்துமுப்பது, காலை ஆறு முப்பது, மற்றும் பத்து, நண்பகல் ஒன்று, இரவு எழு மற்றும் பத்து என ஆறு காலத்திற்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இதுதவிர பிரதிமாதம் பூசநட்சத்திர தினத்தில் இரவு எட்டு மணிக்கு ஆறுதிரைகளை மட்டும் விலக்கி மூன்றுமுறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய அகண்டத்தின் ஒளியானது ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் உள்ள கண்ணாடியில் பேரொளியாக பிரதிபலிப்பதே சபையிற் காணும் அருட்பெருஞ்ஜோதி தரிசனமாகும். இக்கண்ணாடி சித்திவளாகத்தில் ஒரு மண்டலம் (48நாள்) வழிபாட்டில் வைத்திருந்து பின்பு சபையில் நிறுவப்பட்டதாகும். நம் ஆன்மாவை ஏழுசக்திகள் மறைத்துள்ளன. அவைகளை விலக்கினால் இறைவன் ஜோதிவடிவில் காட்சித்தருவான் என்பதே இதன் தத்துவமாகும். தீபம் ஏற்ற தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

வயிற்றுப்பசிக்கு உணவு, ஆன்மபசிக்கு ஜோதிதரிசனம் என மொழிந்த இவரது உபதேசம் பல எதிர்ப்புக்களை எதிர்கொண்டாலும் காலப்போக்கில் பலரை ஈர்க்க இவரை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்ததுடன் இவரது சன்மார்க்கநெறி கடல் கடந்தும் பரவிற்று. திருவருட்பாவைத்தவிர மனுமுறைகண்டவாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர் சின்மயதீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டலசதகம் ஆகிய நூல்களையும் பதிப்பித்துள்ளார். இவரது முகத்தில் தெரியும் வசீகரத்தைப் பார்த்து ஒளியின் அருள்தரும் வள்ளளலான இவருக்கு வள்ளலார் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என இவரது சீடர் தொழுவூர் வேலாயுதமுதலியார் கூற வள்ளலார் என்னும் பெயருக்குரியவரானார். இவரது திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. பத்துதிருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நான்குதொகுதிகளை தொழுவூர் வேலாயுதமுதலியார் வெளியிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த பதிப்புகள் வெளியிடப்பட்டன. முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அடிகளார் பலருக்கும் எழுதிய கடிதங்களை தொகுத்து வெளியிட்டார்.

1873 அக்டோபர் (முக வருடம் கார்த்திகை) தீபத்தினத்தன்று சித்திவளாக திருமாளிகையில் சன்மார்க்க கொடியேற்றி பேருபதேசம் செய்தவர். சிலநாட்களில் சித்திவளாக திருமாளிகையில் ஒருதீபம் வைத்து அதை இறைவனாக வணங்கும்படி அறிவித்தார். கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் வரும் சாலையில் வறண்டு கிடந்த நீரோடைக்குச் சென்று கைவைத்தார். ஓடையில் குபீரென நீர் பொங்கி பிரவகித்து வந்தது. அதைக்கொண்டு மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்தார். (இன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீஞ்சுவை நீரோடை எனப்படும் இந்தநீரோடைக்குச் சென்ற இதன் நீரை எடுத்து நோய்நீங்கவேண்டி தலையில் தெளித்துக்கொள்வது வழக்கமாக உள்ளது). இதன் அருகேயும் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோடைக்காலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் வாடுகின்றன என்றும் கால்நடைகளும் மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர். அதுகேட்டவர் தருமசாலைக்கு உள்ளேச்சென்று கதவைத் தாள்போட்டு சிறிதுநேரம் தியானித்தவர் வெளியே வந்து ஒருசொம்பு நீரை தன் காலில் ஊற்றுமாறு கூறினார். என்ன ஆச்சிரியம் சற்று நேரத்தில் மேகம் திரண்டு நான்கு அங்குல அளவிற்கு மழைபெய்தது.

1874 ஜனவரி 30 (முக தை 19) வெள்ளிக் கிழமையன்று, சித்திவளாக திருமாளிகையினுள் தான் ஏற்றிவைத்த விளக்கை எடுத்துவந்து திருமாளிகைபுறத்தில் வைத்து இதை தடைபடாது ஆராதியுங்கள் இம்மாளிகையின்

கதவைச் சாத்திவிடப்போகின்றோம். ஆண்டவர் இப்போது தீபவடிவினராய் விளங்குவதால் இனி கொஞ்சகாலம் எல்லோரும் உங்கள் காலத்தை வீணாககழிக்காமல் “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுரங்களடங்கிய பாடலில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்துள் செலுத்துங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என திருவாய் மலர்ந்தருளியவர், சித்திவளாகத் திருமாளிகைக்குள் சென்று திருக்காப்பிட்டு(தாளிட்டு)கொண்டார். மூன்றுநாட்கள் கழித்து அந்த அறையை திறந்துபார்த்தபோது அடிகளார் இல்லை அவரது உடலும் இல்லை. சிறிய ஜோதிமட்டுமே இருந்ததாக தொழுவூர் வேலாயுதமுதலியாரின் குறிப்பில் காணப்படுகிறது. இறைவனை ஜோதியாக வணங்கக்கூறியவர் அந்த ஜோதியிலேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு அருட்பெருஞ்ஜோதியானார்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே, தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தாதே, மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே, ஏழைகள் வயிறை எரியச்செய்யாதே, பொருளை இச்சித்து பொய்சொல்லாதே, பசித்தோர் முகத்தை பாராதிராதே, உணவுகிடைத்து உண்டு பசியாறியவுடன் பசியால் நேர்ந்த அத்துணை துன்பங்களும் அகலும், இரப்போருக்கு இல்லை என்று கூறாதே, குருவை வணங்க கூசி நிற்காதே, வெய்யலுக்கு ஒதுங்கம் விருட்சத்தை அழிக்காதே, தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே என உபதேசம் செய்த வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரில் திருவிளக்கு எரித்து திருவருட்பா எழுதிய கருங்குழி இல்லம், அன்னதானத்திற்கான சத்தியதருமச்சாலை மற்றும் ஜோதி தரிசனம் காட்டப்படும் சத்தியஞானசபை அமைந்துள்ள வடலூர், திருக்காப்பிட்டுக் கொண்ட மேட்டுக்குப்பம் சித்திவனாக திருமாளிகை ஆகியவற்றை தரிசனம் செய்ய வடலூருக்கு வாருங்கள். சென்னையிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து 30கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் வடலூர் அமைந்துள்ளது.