Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வரங்களை அருளும் வக்ரகாளி

வக்ரகாளியை பார்த்தவுடன் மனது அமைதியடைந்து, நல்லெண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. நம் மனதில் உள்ள கோரிக்கைகளை அவள் முன்பு சமர்ப்பித்த திருப்தி ஏற்பட்டது. பொதுவாக, காளியை பார்த்தால் நமக்குள் ஓர்வித பயம் உண்டாகும். ஆனால், வக்ரகாளியை பார்த்ததும் பயம் ஏற்படவில்லை மாறாக, பக்தி ஏற்பட்டது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன், தற்போதுள்ள வக்ரகாளியம்மன் கோயிலின் பின்புறத்தில், பைரவர் மற்றும் பைரவியை பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், நாகல்கேனி, இரும்புலியூர், போன்ற மக்கள், கிராம தேவதையாக வழிபட்டும், பின்புறத்தில் உள்ள கிணற்றில் குளித்தும், பூஜைகளை செய்தும் வந்துள்ளனர். அவை, காலப்போக்கில் நின்றுவிட்டதாக வக்ரகாளியை பூஜை செய்யும் சிவாச்சாரியார் கூறினார். தொடர்ந்து, வக்ரகாளி உருவான வரலாறுகளையும் சொல்லத் தொடங்கினார்.

1972-ல் இந்த ஆலயம் இருக்கும் இடத்தில், வழிப்போக்கனாக வந்த கணேசன் என்னும் சிறுவன் (தற்போது இந்த கோயிலின் சிவாச்சாரியார்) ஓய்வெடுக்க கோயிலில் அமர, பைரவி அம்சமான காளி, அசரீரியாக, ``நீ.. எனக்கொரு அம்மன் கோயிலை எழுப்ப வேண்டும் என்றும், அதற்கு வக்ரகாளி என பெயரிடவும்’’ என்று கூறியது. அதன்படி, பல ஆண்டுகள் முயற்சிக்கு பின், காப்பர் ராடுகளால் செய்யப்பட்ட ``வக்ரகாளியம்மனை’’ பிரதிஷ்டை செய்தார்கள். காப்பர் ராடுகளால் செய்யப்பட்டதால், வைப்ரேஷன் (Vibration) அதிகம் என்கிறார் சிவாச்சரியார். வக்ரகாளியின் அருளால், 2008-ல் கோயிலுக்காக `` சக்ரம் எந்திரம்’’ மற்றும் ``யோனி எந்திரம்’’ பிரதிஷ்டை செய்யப்பட்டன. .

அதன் பிறகு, 23.04.2023 அன்று கும்பாபிஷேகம் செய்து, சிலா ரூபத்தில் சிறியதாக வக்ரகாளியம்மனை பிரதிஷ்டை செய்தார்கள்.ராகு - கேதுவின் அம்சமும் காளி என்பதால், இக்கோயில் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால், ராகு - கேது தோஷம் இருப்பவர்கள், ஜாதகத்தில் 5-ல் செய்வாய் உள்ளவர்கள், வக்ரகாளியம்மனுக்கு கருப்பு உளுந்து வடை நிவேதித்து வழிபடுவது விசேஷம். உடல் உஷ்ணம், தோல் வியாதிக்கு துள்ளுமாவு, பாசி பருப்பு பாயாசம், இளநீர் இவைகளை வைத்து நிவேதனம் செய்கிறார்கள்.வாதநோய் மற்றும் மன சஞ்சலமாக இருப்பவர்கள், வேப்பம்பூ அல்லது வேப்பிலை மாலை ஆகியவற்றை சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.

கருடப்பஞ்சமி - நாகபஞ்சமி அன்று, ஐந்து விளக்கேற்றி, அரளி பூ செலுத்தி வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். புத்திர சந்தானம் வேண்டுவோருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். வேண்டுதல்கள் நிறைவேறினால், 151 எலும்மிச்சை, 20 முழம் பூ சாற்றி, கருப்பு உளுந்து வடை, சக்கரைப்பொங்கல், புளியோதரை ஆகியவைகளை நிவேதனம் செய்து, அம்மனுக்கு புடவை சாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

பக்தர்கள்.அதே போல், வாழ்வில் எல்லாம் வளமும் பெற, வசந்த பஞ்சமி அன்று வழிபடுவது விசேஷம். மேலும், மாதாமாதம் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வக்ரகாளியை வழிபட்டால், கிரக திருஷ்டி, பந்து திருஷ்டி (சொந்தங்களால் வரக்கூடிய திருஷ்டி), நேத்திர திருஷ்டி, சத்துரு திருஷ்டி, ஸ்நேக திருஷ்டி ஆகியவை பரிகாரமாகும்.

வக்கிரமான புத்தி, வக்கிரமான எண்ணங்கள், வக்கிரமான செயல் ஆகியவை தோன்றாமல் இருக்க ஐந்து விளக்கு ஏற்றுதல் பலனைத்தரும். தேகபலம், ஆத்மபலம், வித்யாபலம், மனோபலத்துக்கு எலும்மிச்சை பழத்தை நன்கு பிழிந்து, அதில் ஏற்றுதல் நலம். (தனியாக ஏற்ற கூடாது. அதனுடன் ஐந்து விளக்கினையும் சேர்த்து ஏற்ற வேண்டும்) தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி அன்று தேங்காயை உடைத்து அதில் விளக்குகளை ஏற்றுவது விசேஷம்.ஈசானமூலையில்  சந்திர மௌலீஸ்வரர் மற்றும் திரயம்பக விநாயகர் இருப்பது கூடுதல் சிறப்பு. முதலில் விநாயகரை தரிசித்து, பிறகு சிவனை தரிசித்து, அதன் பின்பே வக்ரகாளியை தரிசிக்கவேண்டும் என்கிறார் சிவாச்சாரியார். மாதம் தோறும் அன்னதானம் நடைபெறுகின்றன.

விசேஷங்கள்: வசந்த பஞ்சமி அன்று  சக்கரம் எந்திரம் மற்றும் யோனி எந்திரம் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆவணி மாதத்தில் வருகின்ற ரிஷி பஞ்சமி அன்று ஹோமங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அதே போல், கருட பஞ்சமி - நாக பஞ்சமி அன்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் அமைவிடம்: 170, ஜி.எஸ்.டி ரோடு, தாம்பரம், சென்னை. தாலுகா அலுவலகம் அருகில். (கடப்பேரி மெப்ஸ் பஸ் ஸ்டாப்)

தொடர்புக்கு: சிவ..கணேச

சிவாச்சாரியார் - 7339265039.

ஜி.ராகவேந்திரன்