Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செல்வம் பொழியும் வைத்தமாநிதி பெருமாள்

நவ திருப்பதிகள்

காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்து, மீட்டு கொடுக்கும் பெருமாள் ``வைத்தமாநிதி பெருமாள்’’. நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதி. 108 திவ்ய திருப்பதிகளில் எட்டாவது தலமாகும். செவ்வாய் கிரகத்திற்கு உச்சம் பெற்ற தலமாகும். திருக்கோளூரில் பெருமையைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்று இருக்கிறது.

திருகைலாயத்தில் குபேரன்

பல கோடி வருடங்களுக்கு முன்பு குபேரன், செல்வச் செழிப்புடன் அழகாபுரியை ஆண்டு வந்தான். சிவபக்தனான குபேரன், சிவபெருமானை காண்பதற்காகக் கைலாயம் எழுந்தருளினார். அங்கே சிவபெருமான் பார்வதி தேவியுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். பார்வதி தேவியின் அழகில் மயங்கி தடுமாற்றம் அடைந்து ஓரக் கீழ்கண்ணால் நோக்கினான். தவறான எண்ணத்துடன் தன்னை நோக்கிய குபேரன் மீது பார்வதிதேவி சினம் கொண்டு, உக்கிரத்துடன் சபித்தார்.

“ஏ குபேரா! லோகத்திற்கு தாயாய் விளங்கும் என் மீதா துர்சிந்தனைத் தோன்றும்? அதற்கு காரணம், தான் என்ற அகங்காரம், கர்வமும், வற்றாத உன் செல்வ செழிப்புமே ஆகும். எனவே உன் நவநிதிகளும் தொலைந்து போகவும், கோர உருவத்துடன் கண்பார்வை இழப்பாய் எனச் சபித்தார். சாபம் பெற்ற, அக்கணமே குபேரனின் நவநிதிகளும் மறைந்தது. கோர உருவத்துடன் ஒரு கண் பார்வை இழந்து தவித்தான். தவறை உணர்ந்து கதறி அழுதான். மனம் இறங்கிய பார்வதி அன்னை, திருக்கோளூர் சென்று வைத்தமாநிதி பெருமாளை வணங்கி வந்தால், உன்னுடைய சாபம் விலகும் எனக் கூறினார்.

குபேரனின் நவநிதிகள்

சங்கநிதி,

பதுமநிதி,

மகரநிதி,

கச்சபநிதி,

மகுடநிதி,

நந்தநிதி,

நீலநிதி,

கர்வநிதி,

மகாபதுமநிதி

- என்னும், இவை ஒன்பது வகையானச் செல்வங்களும் குபேரிடத்தில் இருந்து மறைந்தது.

திருக்கோளூரில் குபேரன்

பூவுலகில் எழுந்தவுடன், தாமிரபரணி தீர்த்தத்திற்கு அருகே ``குபேரதீர்த்தம்’’ உண்டாக்கி, அதில் தினமும் நீராடி, வைத்தமாநிதி பெருமாளை நினைத்து தவம் இருந்தான். கடும் தவத்தை மெச்சி, அகம் பூரித்த பெருமாள், குபேரன் முன் காட்சியளித்து, அன்னை பார்வதியின் சாபத்தை விலக்கினார்.

மூலவர் வைத்த மாநிதி பெருமாள்

கருவறையில்,ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது புஜங்க சயன கோலத்தில் வலக்கரம் நீட்டி, இடக் கையால் அஞ்சனம் (மை) தடவி நவநிதிகள் எங்கே மறைந்து உள்ளது, எவ்வளவு செல்வம் எனக் கணக்கு பார்த்து அறிந்தார். இந்த சயனக் கோலத்தில், வைத்தமாநிதி பெருமாள் சேவை சாதிக்கிறார். குபேரனுக்கு, செல்வத்தை மரகாலால் அளந்து கொஞ்சம் கொடுத்து விட்டு, மீதியைத் தன்னிடமே வைத்துக் கொண்டார். குபேரனும் மன மகிழ்ந்து நிதிகளைப் பெற்று மீண்டும் அழகாபுரி நகரம் சென்று ஆட்சி புரிந்தான்.

திருக்கோளூர் என்ற பெயர் வர காரணம்

கோளூர் என்றுதான் அழைக்க வேண்டும். காரணம் `கோள்’ என்றால் புரம் கூறுதல் என்பது பொருள். (பெரும்பாலும் அடுத்தவரைப் பற்றி புறம் பேசுவதே வேலையாக இருப்பவரும் உண்டு) புரம் பேசுவாருடன் சேர வேண்டாம் என்று பெரியவர்கள்கூறி உள்ளனர். கோளூர்க்கு முன், திரு (செல்வம்) சேர்த்து `திருக்கோளூர்’ என்று அழைக்கப்படுகிறது.

அதர்மபிசுனம்

வைத்தமாநிதி பெருமாள், மகாலட்சுமி இடம் கொடுத்தார். செல்வம் ஒரே இடத்தில் நிலையாக இருக்காது என்பது ஐதீகம். அது சூழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் பெருமாளுடைய அனுக்கிரகம். தர்மதேவன் இருந்த இடத்தில் அதர்மம் வந்து அமர்ந்தால், அதற்கு பயந்து தர்மதேவன் ஒளிந்து கொண்டான். சில நாள் கழித்து அங்கு வந்த அதர்ம தேவதையிடம் சண்டையிட்டு இறுதியில்வெற்றி பெற்றான் தர்மதேவன். இதனால் இத்தலத்திற்கு `அதர்மபிசுனம்’ என்ற பெயர் ஏற்பட்டது. அதர்மம் இங்கிருந்து வெளியேறும் போது சும்மா செல்லாமல் குபேரிடம் சென்று உன்னுடைய நவநிதிகள் அத்தனையும் வைத்தமா நிதி பெருமாளிடம் நிரந்தர வாசம் செய்கிறது என்று கோள் சொல்லியதனால் இத்தலத்திற்கு திருக்கோளூர் என்று பெயரும் பெற்றுள்ளது.

மதுரகவியாழ்வார்

விஷ்ணுநேசர் என்பருக்கு மகனாக பிறந்தவர்தான் மதுரகவியாழ்வார். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவர். வடதிசையில் உள்ள திருமலையை வணங்கி வந்தார். தனக்கு ஒரு குரு கிடைக்கவில்லை என்று ஏக்கம் அவர் உள்ளத்தில் இருந்தது. வடதிசையில் சேத்திராடம் சென்றிருந்த போது தெற்கு திசையில் இருந்து ஓர் அற்புதமான ஒளி தோன்றியது. அதன் பின்னே தொடர்ந்து சென்றார். அவ்வொளி திருக்குரு கூர்புளிய மரத்தடியில் நின்றது. அவ்வூரில் உள்ளவரிடம் இங்கே ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்க, ஆம் இருக்கிறது.இங்கு உள்ள புளிய மரத்தின் பொந்தில் 16 வயது பாலகன் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்றார். அதன் பின்பு அந்த புளிய மரத்தின் அடியில் நின்று பொந்துகுள் ஒரு கல்லை விட்டெறிந்தார்.

சலனம் தெரிந்தது. ஆக பேசுவாரா என்பதை அறிவதற்காக, `செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேள்வியைக் கேட்டார். உடனே உள்ளே இருந்து பதில் வந்தது. `அத்தை தின்று அது அங்கே கிடக்கும்’ என்று கூறியதைக் கேட்டதும் சாஷ்டாங்கமாக 80 வயதான மதுரகவி ஆழ்வார் 15 வயது பாலகன் திருவடிகள் வணங்கி, குருவாக ஏற்றுக் கொண்டார்.

நம்மாழ்வார்

திரு குருகூரில் பிறந்த நம்மாழ்வார், தாம் இயற்றிய பாசுரத்தில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் பற்றி 11 பாசுரங்கள் பாடி உள்ளார்.

``உண்ணும் சோறு பருகும் நீர்

தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்,

எம்பெருமான் என்றுஎன்றே

கண்கள் நீர் மல்கி,

மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,

திண்ணம் என் இளமான் புகும் ஊர்’’ - திருக்கோளூரே - 3409

நாம் உண்ணுகின்ற உணவும், குடிக்கின்ற நீரும், தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் எம்பெருமாள் கண்ணனுக்கே என்றே கண்களால் நீர் பெருகி கசிந்து உருகி பாடினார். எம்பெருமாளின் கருணை எங்கும் நிறைய பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளமிக்க திவ்ய தேசத்தையும் கேட்டேன் என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்ய

தேசமேவாகும்.

``மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்

தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்

பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு

ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?’’

- 3404

என்னுடைய இளமை பொருந்திய பெண்ணானவள் எம் பெருமானை மனத்தாலே நினைத்து, அவனோடு சேர்ந்தாள். அவனோடு சேர்ந்ததால் மனமும் சரீரமும் உருகக் குலைந்து விளையாடுதலைச் செய்தாள். இனி திருமால் எழுந்தருளி இருக்கும் திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் இருக்க பூக்களும் நிறைந்த சோலைகளும், குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் சில்லென குளிரும்படி கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?

``நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப்போய்

அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனைத்

தினைத்தனையும் விடாள் அவன்சேர்திருக்கோளூர்க்கே

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே’’

- 3409

தெய்வங்களே! என் மகளுடைய செயல்களை என்னால் முடியவில்லை… நீண்ட கண்களை உடைய இளமை பொருந்திய மான் போன்றவளான என் மகள் இப்பொழுது எல்லா உலகங்களையும் உடைய, தாமரைக் கண்ணன் ஆகிய பெருமாளையே நினைத்து தினை அளவு சிறுபொழுதும் விடாத ஆளாகி அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற தேசத்துக்கே குடிக்கு உண்டாகும் பெரிய பழிகளையும் நினையாதவளாகக் சொன்னாள்.

``வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி,

கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன

பத்து நூற்றிள் இப்பத்து அவன்சேர் திருக்கோளூர்க்கே

சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகம் ஆள்வாரே’’

- 3419

சேமித்து வைத்த சேமநிதி போன்ற மதுசூதனையே பற்றி பூங்கொத்துகள் மலருகின்ற சோலைகள் சூழ்ந்திருக்கின்ற திருக்குருகூரில் அவதரித்த எம்பெருமாள்ஸ்ரீசடகோபராலே அருளப்பட்ட இந்த பத்து பாசுரங்களையும் அவன் செய்கின்ற திருக்கோளூரிலே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகிறது பரமபதத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ராமானுஜர் வருகையும் 81 வாக்கியங்களும்

ஸ்வாமி ராமானுஜர் திருக்கோளூருக்கு எழுந்தருளினர். அப்பொழுது தயிர் விற்கும் பெண்மணி அவ்வூரை விட்டு கிளம்புவதை கண்டு பெண்மணியிடம் உரையாடினார். அனைவருக்கும் புகும் ஊராக இருக்க உனக்கு மட்டும் கிளம்புவது ஏன் என்று கேட்க, வைத்தமாநிதி பெருமாளுக்கு நான் எந்த ஒரு கைங்கரிய சேவையும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பொழுது இங்கே இருந்தால் என்ன, வேறு ஊருக்கு சென்றால் என்ன, என்றுகூறி 81 வாக்கியங்களை அவள் கூறினாள்.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள், ராமானுஜர் வாழ்வில் நடைபெற்ற அற்புத செயல்கள் அத்தனையும் எடுத்துரைத்த பின்பு அவற்றைக் கேட்டு அவளின் அறிவு கூர்மையைக் கண்டு மெய்சிலிர்த்தார்.அவள் இல்லத்திலே உணவு உண்டு தங்கினார் என்ற செய்தியும் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் 81 வாக்கியங்கள் கூறும் சிறப்புடையச் செய்தியாகும்.

கோயில் அமைப்பு

தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப் பெற்றுள்ள இந்த கோபுரம் மொட்டை கோபுரத்தை கொண்டு உள்ளது. இந்த கோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால், முன் மண்டபம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கொடிமரமும், பலிபீடமும் அமையப்பட்டுள்ளது. அதையும் தாண்டி சென்றால் எதிரெதிரே கருடன் சிலை உள்ளது. அவரை வணங்கியபடி உள்ளே சென்றோம் என்றால், நடு நாயகமாக கருவறை அமையப் பெற்று இருக்கிறது. எம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.ஸ்ரீயோக நரசிம்மர் சந்நதியும் உள்ளது. வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சந்நதியில் அமையப் பெற்று இருக்கிறது. உள்ளே தீர்க்க கிணறும் இருக்கிறது. மதுரகவி ஆழ்வார் தெற்கு நோக்கிய

வண்ணம் தனி சந்நதி உள்ளது.

பரிகார தலம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து, குபேரன் தீர்த்தத்தில் நீராடி, வைத்தமாநிதி பெருமாளை வணங்கினால், எண்ணியது நடக்கும். திருமணத்தடை நீங்கும். பிள்ளை பேறும் கிட்டும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இவரை நினைத்து வேண்டிக் கொண்டால், சிறப்பு. காணாமல் போன பொருள் கிடைக்கவும், நல்ல செல்வந்தராக இருந்து செல்வத்தை இழந்தவர், இவருடைய தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால், படிப்படியாக இவரின் அருளால் செல்வநிலை திரும்ப பெறலாம் என்பது ஐதீகம்.

அறியாத ரகசியம்

வைத்தமாநிதி பெருமாள் கோயிலுக்கு பின்புறம், யோக நரசிம்மர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோயில்களில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். எங்கும் இல்லாத நிலையில், யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு, பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறும். அன்று மூலவருக்கு திருமஞ்சன நிகழ்ச்சியும் நடக்கும்.

திருவிழாக்கள்

ஆவணி புனர்பூச திருவிழா பத்து நாள் உற்சவம் நடைபெறும். தேரோட்டம், ஏகாதசி புரட்டாசி சேவை ஆகியவை சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் பெருமானை வணங்கி அருள் பெறுவர்.

மூலவர் பெயர்: வைத்தமாநிதி பெருமாள், கிடந்த கோலம்.

உற்சவர் பெயர்: நிஷேபவித்திரன், நின்ற கோலம்.

தாயார்கள்: குமுதவல்லி நாச்சியார்,

திருக்கோளூர் வல்லி நாச்சியார்.

விமானம்:ஸ்ரீகர விமானம்

தீர்த்தம்: நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி.

நடை திறக்கும் நேரம்: காலை 7:30 முதல் நண்பகல் 12 மணி வரை.

நண்பகல் 1 மணி முதல் இரவு 8:30 மணி வரை எம்பெருமாளை தரிசிக்கலாம்.

பொன்முகரியன்