Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

வளம் தந்தருளும் வைகுண்டவாசன்

அந்த அடர்ந்த காட்டில் தன்னை இறக்கிவிட்டுச் சென்ற ரதத்தைப் பார்த்தபடி நின்றாள் சீதை. கண்ணீரை துடைத்துக் கொள்ளவும் தோன்றாமல், விதியை நொந்தபடி சுற்றிலும் பார்த்தாள். துக்கம் தொண்டையை அடைக்க அந்த வனாந்திரத்தில் மெல்ல நடக்கத் தொடங்கினாள். நாலடி எடுத்து வைத்தவள் அடுத்த அடியெடுத்து வைக்க திராணி இல்லாமல் சரிந்தாள். நிறைமாத கர்ப்பிணி. நேற்றுவரை அரண்மனையில் வாழ்ந்தவள். தன் குடிமகன் விமரிசனத்தை மதிக்கும் வகையில் அவளை வனத்தில் விட்டுவரச் சொல்லிவிட்டார் ராமன். அவளது அழுகுரல், அருகே தவத்தில் மூழ்கியிருந்த வால்மீகி மகரிஷியின் நெஞ்சை உருக்கியது. யாருடைய அழுகுரல் இது? கண் விழித்தார். எதிர்கால ரகு வம்சத்தைத் தன் மணி வயிற்றில் சுமந்தபடி சீதை மரத்தடியில் சரிந்து கிடப்பதை கண்டார். உடனே அவளருகே சென்றார்.

முனிவரின் முகம் பார்த்த சீதைக்கு லேசாக மனதில் தெளிவு பிறந்தது. பயம் கொஞ்சம் விலகியது. ‘நானிருக்கிறேன் மகளே, கவலை வேண்டாம்’ என்று ஆதூரமாய் தலையைத் தடவி ஆசீர்வதித்தார், வால்மீகி. குடிக்க நீர் கொடுத்து அவளைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அவளது அச்சத்தைக் களைந்து ஆசுவாசப்படுத்தினார். அவள் யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். கர்ப்பிணிக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய ஆள் அமர்த்தினார். சில திங்கள் நகர்ந்தன. ஓர் அமிர்த காலத்தில் இரட்டைச் சூரியன்கள் உதயமாகின. ஆம்; சீதை இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அந்த குழந்தைகள் பிறந்த காலத்தைக் கணக்கிட்டு அவர்களுக்கு லவன் - குசன் என பெயரிட்டார் முனிவர். வளர்ந்த அந்தப் பிள்ளைகளுக்கு ராஜ புத்திரர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் அளித்தார்.

இந்நிலையில் திக் விஜயம் செய்ய அனுப்பப்பட்ட ராமனின் அசுவமேத யாக குதிரை, லவனும் குசனும் வசித்த வனப்பகுதிக்குள் வர, சிறுவர்கள் அதனை விளையாட்டாகப் பிடித்து கட்டிப்போட்டனர். சுதந்திரமாகத் திரிந்து திரும்ப வேண்டிய குதிரை கட்டுப்பட்ட விவரம் அறிந்து போர் புரிந்து குதிரையை மீட்க வந்த லட்சுமணன் லவ-குசர்களுடன் மோதி தோல்வியடைந்தார். செய்தி ராமனுக்கு எட்டுகிறது. அதிக கோபத்துடனும், வேகத்துடனும் வந்த ராமன் பாலகர்களை பார்க்கிறார். அவர்களிடம் குதிரையை விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறார். ஆனால் குழந்தைகளோ, போரிட்டு தங்களை வென்று குதிரையை மீட்டுக் கொள்ளுமாறு சவால் விடுக்கின்றனர். குழப்பத்துடன் போரில் இறங்கிய அவர், தான் தோல்வியின் பக்கம் சாய்கிறோமோ என்று சந்தேகப்பட்டார். ஒன்றுக் கொன்று மோதிக் கொள்ளும் அஸ்திரங்களின் இடியோசையைக் கேட்டு வால்மீகி அங்கு விரைகிறார். தந்தையும் பிள்ளைகளும் போரிடுவது கண்டு பதறி, போரை நிறுத்தி, அவர்களை பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தந்தையை எதிர்த்து விட்டோமே இதற்கு பிராயச்சித்தம் என்ன என்று முனிவரைப் பணிந்து சிறுவர்கள் கேட்க, சிவ வழிபாடு செய்ய சொல்கிறார் வால்மீகி. சகோதரர்கள் இருவரும் ஒரு சிறிய லிங்கத்தை அமைத்து வழிபட, சிவபெருமான் அவர்களுக்கு அருட் காட்சி தருகிறார். சிவ தரிசனம் பெற்ற வால்மீகி, நாராயணனையும் தரிசனம் தந்தருள வேண்ட அங்கே நித்ய வைகுண்டவாசனாய் தரிசனம் தந்தார் பெருமாள். சீதையும் ராமனும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். தந்தையைப் பிரிந்து தவித்த பிள்ளைகள் பெற்றோரின் அன்பு மழையில் நனைந்தனர். வால்மீகி முனிவரோ திவ்ய தரிசனம் பெற்ற திருப்தியில் வைகுண்டவாசப் பெருமாளை அதே கோலத்தில் அங்கேயே கோயில் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். பெருமாளும் வைகுண்டவாசப் பெருமாள் என்கிற நாமத்தோடு எழுந்தருளி அங்கேயே கோயில் கொண்டார். சென்னை-கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். இவர்களுக்கு அருள் புரிந்த ஈசன் குறுங்காலீஸ்வரர் என்ற பெயரில் அருள்கிறார். சிவாலயத்திற்கு அருகிலேயே வைகுண்டவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

கோயில் எதிரே அழகிய திருக்குளம். நுழைவாயிலைக் கடந்து உள்ளே பிராகாரத்தில் வலம் வந்தால், வேம்பும் வில்வமும் பின்னி வளர்ந்திருப்பது அங்கே தழைக்கும் சைவ-வைணவ ஒற்றுமையைக் காட்டுகிறது. இதை வணங்கினால் திருமணவரமும் குழந்தை பேறும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால் இத்தலத்தில் இரட்டைப்பலா மரமே தல விருட்சமாக இருக்கிறது. தனிச் சந்நதியில் கனகவல்லித்தாயார் அருள்கிறார். அருகே ஆண்டாள் சந்நதி. அதற்கு நேரே வைகானஸ ஆகமத்தை உருவாக்கி அளித்த விகனசர் கோயில் கொண்டுள்ளார். அடுத்து அர்த்த மண்டபம் செல்ல அங்கே மரவுரி தரித்தபடி அபூர்வ கோலத்தில் ராமனும் சீதையும் அருள்கிறார்கள். வால்மீகியோடு லவ-குச சகோதரர்களும் கர்ப்பிணி பெண்ணாக சீதையும் காட்சி தரும் விக்ரகங்களைக் காண, புராணக் கதை தானாக நினைவில் ஓடுகிறது. கருவறையில் மூலவர் வைகுண்டவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் நின்றத் திருக்கோலத்தில் அருள் காட்சி தருகிறார். தன்னைப் பணிந்தவர் வாழ்வில் வளமெல்லாம் தந்து அருள்கிறார். உற்சவ பெருமான், ஆக்வான முத்திரை காட்டி நம் நலனுக்காக ஆசியளிக்கும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கிறது; மனதில் நம்பிக்கை துளிர்க்க வைக்கிறது. இத்தலம் நித்ய வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. அதாவது தினந்தோறும் ஆனந்தம்.