Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரையூரில் இரண்டு தனிக் கோயில்கள்!

புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது காரையூர். இவ்வூர் முழுக்க, முழுக்க வேளாண்மையை நம்பியுள்ள கிராமமாகும். காரணம் என்னவென்றால், காரை என்றால் சுண்ணாம்பு என்று பொருள். இங்கு சுண்ணாம்புக் கற்கள் அதிகமாக காணப்படுவதால் காரைக்கற்கள் நிறைந்த ஊர் காரையூர் எனப்படுகிறது.

காரையூர் வடபுறத்தின் வயலை ஒட்டி, ஒரு சிவன் கோயில் கிழக்குப் பார்த்த நிலையில் உள்ளது. அச்சிவன் கோயில் கல்வெட்டில் இவ்விறைவன் மாங்கேணீ ஈசுவரர் என்ற பெயர் காணப்படுகிறது. ஆனால் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள் இதனை மாங்கனி ஈசுவரர் என அழைக்கின்றனர். அதாவது காரைக்கால் அம்மையார். கதையை பொருத்தி மாங்கேணீ ஈசுவரரை மாங்கனி ஈசுவரர் என அழைக்கின்றனர். அம்பாளை சௌந்தரநாயகி என்றும் அழைக்கின்றனர். உயரமற்ற ஒரு சுற்று மதிலுக்குள் கருவறை, அர்த்த மண்டபம், இடைக்கட்டு, மகா மண்டபம் என்ற அமைப்பில் கோயில் காணப்படுகிறது.

கட்டட அமைப்பு

தாங்குதளம் என்ற உபானத் தரையோடு வைத்துள்ளனர். அதன் மேல் ஜகதி என்ற நீள வரிசைக்கல், முப்பட்டடைக்குமுதம், கண்டம் மேல் என்ற உள்வாங்கிய அமைப்பு. சுவரின் மேல் புஷ்ப போதிகை. பிரஸ்தரம் கூரை, கூரைக்கு மேல் விமானம் ஆகிய அமைப்பில் கட்டடக்கலை அமைந்துள்ளது. சுவரின் கருவறையின் மூன்று பக்க தேவ தேவகோட்டங்களிலும்; தெய்வ உருவங்கள் இல்லை. புஷ்பபோதிகை பிற்கால அதாவது 13-ஆம் நூற்றாண்டு சேர்ந்த சோழர்காலப் போதிகையாக உள்ளதால் இது பிற்காலச் சோழர் கலைப்பாணி என கூறலாம்.

சுவாமிக்கும் - அம்பாளுக்கும் தனித் தனி இரண்டு கோயில்கள் உள்ளன. பரிவாரத் தேவதைகளாக மூலப்பிள்ளையார் கோயில் ஒரு சிறிய கருவறையுடன் உள்ளது. சுப்பிரமணியர் கோயில் கருவறையோடு, முன் மண்டபம் தூண் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அம்பாள் கோயில் சுவாமி கோயிலின் வடக்கில் கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. சண்டிகேசுவரர் கோயிலும், வடகிழக்கில் உள்ள பைரவர் கோயில் சிறு, சிறு கருவறையோடு அமைந்துள்ளது.

கல்வெட்டுச் செய்திகள்

கோயிலிலின் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் திரிபுவனச் சக்கரவர்த்தியின் கல்வெட்டு. இது காரையூர் ஒல்லையூர் கூற்றத்தின் ஒரு ஊர் என்பதை தெரிவிக்கிறது. தன்னன் தெங்கநான குலோத்துங்க சோழ கடம்பராயன் காரையூர் வயலில் 14 வேலி நிலமும் வரி நீக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தென் பிரகார வெளிச்சுவரில் உள்ள திரிபுவனச் சக்கரவர்த்தியின் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கேரளன் மங்களா தேவனான நிஷதராயர் இக்கோயில் கைலாசபிள்ளையாற்கு அமுது செய்யவும், பணியாரத்திற்கும் செங்குன்ற குடிக்கள் நிலத்தை கொடையாக வழங்கப்பட்தைத் தெரிவிக்கிறது.

கோயில் மேல் பிரகாரம் வெளிச்சுவரிலுள்ள எம்மண்டலமும் கொண்ட குலசேகர தேவரின் கல்வெட்டு காரையூர் ஊரார் மேற்படி சிவன் கோயில் ஷேத்திர பிள்ளையார் என்ற தெய்வத்திற்கு அமுது படைக்கும், காய்கறி உணவிற்கும், உடை அலங்காரத்திற்கும் காரையூர் குளத்து வடகரைக்கு மேற்கு ஆசார வல்லன் குழி என்ற வயல் பரப்பை வரி நீக்கி கொடுத்தமையைத் தெரிவிக்கிறது.

தென்புறம் வாசற்படிக்கு கிழக்கிலுள்ள சோணாடு கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 3வது ஆட்சி யாண்டு கல்வெட்டில் மேற்படி கோயில் சிவபிராமணர் உடையார் நம்பி, உடையான் ஊர் பட்டன் இருவரும் இக்கோயிலுக்கு சந்தியாதீபம் விளக்கு எரிக்க ஒப்புக் கொண்டு இடையர் குன்றனிடம் நான்கு காசுகள் பெற்றதைத் தெரிவிக்கிறது.

தென்பிரகார சுவரிலுள்ள கல்வெட்டில் தேவபாண்டியர் மதுரைக்கு வந்த நாளில், இக்கோயிலின் அமுதுபடிக்கு நீர், நிலம், வயலிலும் செம்பாதி நிலத்தினை காராண் கிழமை வரி நீக்கி கொடுத்தது எனக் கூறப்பட்டுள்ளது. வட பிரகார சுவரிலுள்ள வீரப்பிரதாபராயர் ஆட்சிக்காலத்தில் மேற்படி அரசர் பேரில் ஒரு வேளை பூசை செய்வதற்கு நஞ்சை நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல கல்வெட்டுகள் கூறும் செய்திகளால் இக்கோயில் பெற்ற சிறப்பும், செழுமையையும் நன்கு அறிந்துகொள்ளலாம். இக்கோயிலில் தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுகை.பொ.ஜெயச்சந்திரன்