Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்: ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வாடகை காரில் நான், என் கணவர், தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய நால்வரும் சென்றோம்.

பாதி வழியைக் கடந்து சென்ற வேளையில் திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. பேனட்டைத் திறந்து பரிசோதித்துப் பார்த்த டிரைவர், ‘வண்டியில் என்ன ரிப்பேர்னு தெரியலீங்க. மெக்கானிக் வந்துதான் சரி பண்ணணும்’ என்றார். கார் நின்றிருந்த அந்தப் பகுதியில் கடையோ வீடோ எதுவும் தென்படவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை தவித்தோம். ரோட்டோரத்தில் நின்றபடி, அந்த வழியே செல்லும் பஸ், வேன், கார் என்று வாகனங்களை நிறுத்தச் சொல்லி சைகை செய்தோம். ஆனால், அங்கு எவருமே நிற்கவில்லை. இப்படி சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டே காத்திருக்கும்படி ஆகி விட்டதால், எனக்கு முழங்கால் வலி அதிகரிக்கத் தொடங்கியது.

எவ்வளவு நேரம்தான் நின்றபடியே தவித்துக் கொண்டிருப்பது? வலியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ‘பாபா! நீ இருப்பது உண்மையெனில், எப்படியேனும் எங்களுக்கு வழிகாட்டு’ என்று வேண்டியபடியே நின்றேன். அப்போது அந்த வழியே பியட் கார் ஒன்று வந்தது. நிறுத்தச் சொல்லி கையைக் காட்டினோம். எங்களைக் கடந்து சென்ற அந்த கார், போன வேகத்தில் அப்படியே நின்று, பின் ரிவர்ஸில் எங்களுக்கு அருகே வந்தது. காரில் ஓட்டுநர் இருக்கையில் மட்டும் ஒருவர் இருந்தார். அவரிடம், எங்களின் நிலையைத் தெரிவித்தோம். பின்னர், எங்களை காரில் ஏற்றிக் கொண்டார். அத்துடன் கல்யாணச் சத்திர வாசலிலும் இறக்கி விட்டார்.

அவர் செய்த மறக்க முடியாத உதவியை சுட்டிக்காட்டி, நன்றி தெரிவித்ததுடன் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டோம்; கொடுத்தார். புன்னகைத்தவாறே புறப்பட்டுப் போனார். திருமணத்தில் பங்கேற்ற பின்னர் நாங்கள் ஊர் திரும்பினோம். முதல் நாள் உதவியவரின் நினைவு வர…அவருக்கு போன் போட்டு நன்றி தெரிவிக்க விரும்பினேன். அவரது நம்பரைத் தேடி எடுத்து டயல் செய்தேன் இணைப்பு கிடைக்கவே இல்லை. விசாரித்ததில், ‘இதுபோல் நம்பரே இல்லை’ என்றனர். அன்று நடுரோட்டில் தவித்த எங்களுக்கு உதவியவர், சாட்சாத் பாபாவே என்று எண்ணி சிலிர்த்துப் போனோம். ‘தெய்வம் மனித ரூபமே’ என்பதை பாபா எங்களுக்கு உணர்த்திய சம்பவமாகவே இதை எண்ணுகிறோம்.