Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலம் ஓர் அருட்கொடை

‘காலம் பொன் போன்றது’ என்பது நமக்குத் தெரியும். பொன்னும் மணியும் நம் கையைவிட்டு நழுவிப் போனாலும் கவலையில்லை. பிறகு தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், காலத்தை வீணாக்கி விட்டாலோ, காலத்தை வீணே அழித்துவிட்டாலோ நாம் என்னதான் பிறகு வருந்தி தரையில் உருண்டு புரண்டு தலைதலையாய் அடித்துக் கொண்டாலும் சென்ற காலம் சென்றதுதான்.

‘காலம் அறிந்து கடமையைச் செய்’, ‘பருவத்தே பயிர் செய்’ என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லி வைத்தது வீணுக்காக அல்ல.

காலத்தின் முக்கியத்துவம் கருதி இறைவனே திருமறையில், “காலத்தின் மீது சத்தியமாக” என்று காலத்தின் மீது சத்தியமிட்டு, “மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” எனும் ஒரு செய்தியைக் கூறுகிறான். (குர்ஆன் 103:1)

யோசித்துப் பார்த்தால் மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் எனும் செய்தியைச் சொல்வதற்கு இறைவன் வேறு ஏதேனும் ஒரு பொருளின் மீதுகூட சத்தியமிட்டுச் சொல்லியிருக்கலாம்.

ஆனால், இங்கு காலத்தின் மீது சத்தியம் செய்ததற்கும் மனிதன் நஷ்டத்தில் இருப்பதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காலத்தை வீணாக் கினால் வாழ்க்கையில் இழப்பைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

அது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் - அதாவது இந்த உலகில் மனிதன் உயிரோடு இருக்கும்போதே இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ வேண்டும். அவ்வாறு அடிபணிந்து வாழாமல் ஆயுளை வீணடித்துவிட்டால் இம்மையிலும் நஷ்டம்தான்; மறுமையிலோ பேரிழப்பு.

‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’, ‘நாளை செய்து கொள்ளலாம்’, ‘இப்போ என்ன அவசரம்’ என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலமும் நிச்சயம் தள்ளி வைத்து விடும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்.

*முதுமைக்கு முன் இளமையையும்

*நோய்க்கு முன் உடல்நலத்தையும்

*வறுமைக்கு முன் செல்வத்தையும்

*வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும்

*மரணம் வரும்முன் வாழ்க்கையையும்

அரிதாகிக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.” (நூல்: மிஷ்காத்)

ஆகவே வாழ்வில் தொடர்ந்து முன்னேற வேண்டுமானால் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது: ‘காலம் அழியேல்.’

தொகுப்பு: சிராஜுல் ஹஸன்.

இந்த வார சிந்தனை

“காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார் களோ அவர்களைத் தவிர.”

(குர்ஆன் 103: 1-3)