ஆதிசக்தியான அம்பிகைக்கு சேவகம் செய்யும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை யோகினிகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடியில் இருந்தாலும், இவர்களுள் முக்கியமானவர்களாக கருதப்படுவது அறுபத்தி நான்கு யோகினிகள் ஆவார்கள். இந்த அறுபத்தி நால்வருள், இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு யோகினியான தூம்ரா யோகினியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
தூம்ரம் என்றால் என்ன?
ஒரு பொருள் எரியும் பொழுது அதில் இருந்து புகை கிளம்புகிறது. இந்த புகையை தூம்ரம் என்று அழைக்கிறோம். இந்த உலகம் பிரளய காலத்தில் அழிந்து ஒழியும் போது, அதில் இருந்து தோன்றும் புகையின் வடிவமாக தோன்றியது தூமாவதி என்ற அம்பிகையின் வடிவம். இவள், கைம்பெண் கோலத்தில் காட்சி தருகிறாள். கையில் முறத்தை வைத்துக் கொண்டு ஒரு வயதான பெண்ணின் வடிவில் காட்சி தருகிறாள். உலகமே அழிந்து ஒழிந்த பின், எஞ்சி இருப்பவள் அம்பிகை ஒருத்தியே, (பரமேஸ்வரன் கூட அவளோடு ஐக்கியம் ஆகி இருக்கிறார்) என்பதை காட்டும் கைம்பெண் கோலத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை.
அம்பிகையை வழிபட பத்து முக்கிய வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த பத்து வழிகளில் அம்பிகையை பத்து வகையான ரூபங்களில் வணங்குகிறார்கள். இதற்கு, தச மஹா வித்யா என்று பெயர். இந்த பத்து தேவிகளில் ஒருத்தியாக கருதப்படுகிறாள் தூமாவதி. இந்த தூமாவதியின் அம்சமாக கருதப்படுபவள் இந்த யோகினி.நிலை இல்லாத இந்த வாழ்க்கை, கடைசியில் பிடி சாம்பலுக்கும் பெறாது என்பதையும், அனைத்தும் அழிந்த பின்னும் பிரம்மம் அதாவது இறைவன், என்றும் இருப்பான் என்ற தத்துவத்தையும் இந்த யோகினி நமக்கு காட்டுகிறாள்.
வானரமுகி
அறுபத்தி நான்கு யோகினிகளில் முக்கியமாக கருதப்படும் இவள், வானர முகத்தோடு அதாவது குரங்கின் முகத்தோடு காணப்படுகிறாள். குரங்கானது ஓர் இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் தாவி, இல்லாத அட்டூழியம் செய்கிறது.அதைப்போலவே மனித மனமும் யாருக்கும் அடங்காமல், ஒரு சிந்தனையில் இருந்து வேறு ஒரு சிந்தனைக்கு தாவிக்கொண்டே இருக்கிறது. பலவிதமான கவலையில் உழல்கிறது. இந்த மனித மனதை உருவகப் படுத்துவது போல குரங்கின் முகத்தை கொண்டு இருக்கிறாள், இந்த தேவி.
மனித மனம் பல விதமான சிந்தனைகளை தனக்குள்ளே சிந்தித்து கொண்டு, பல விதமான கவலையில் ஆழ்ந்து போகிறது. அதனால்தான் ஆன்றோர்கள் ‘சிதை’ கொடிதா ‘சிந்தை’ கொடிதா என்று கேட்ட பொழுது சிந்தையே கொடியது என்று சொல்கிறார்கள்.எரியும் சிதையானது அது எரிந்து தனியும் வரைதான் துன்பம் தருகிறது. ஆனால், மனிதனின் சிந்தனையோ நொடிக்கு நொடி துன்பம் தந்து கொண்டே இருக்கிறது. ஆகவே மனிதனின் சிந்தனையை அக்கினி குண்டத்தோடு ஒப்பிடும் வழக்கமும் உண்டு.
இந்த அக்னி குண்டத்தில் அம்பிகையின் சிந்தனை வந்து விட்டால், யாகத்தில் கொடுக்கப்படும் அவிர்பாகம், எப்படி தேவர்களுக்கு கூட மகிழ்ச்சியை தருகிறதோ, அப்படி உயர்ந்த காரியங்களை புரியவல்லதாக, கொடுமையான செயல்களை உடைய இந்த சிந்தனை மாறிவிடும்.அதையே லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும், ‘சிதக்னி குண்ட சம்பூதா தேவ கார்ய சமுத்யகா’ என்ற நாமம் நமக்கு காட்டித் தருகிறது. அதாவது சிந்தனை என்ற அக்னி குண்டத்தில் அம்பிகையின் நினைப்பு வந்து விட்டால் குரங்கை போல அங்கும் இங்கும் தாவி தொல்லை கொடுக்கும் மனது உயர்ந்த காரியங்களை செய்யத் தொடங்கி விடுமாம். இப்படி சங்கடம் தரும் சிந்தனையை அடக்க உதவுபவளே இந்த தூம்ரா யோகினி.
ஆதி சங்கரர் மனம் என்னும் குரங்கை எப்படி அடக்கினார்?
எப்போதும் ஆசை என்ற காட்டில், மலைகளில் தாவி தாவி குதித்து பல விதமான சேஷ்டைகள் செய்கிறது மனது. ஈசன், பிட்சாடனர் வடிவில் கையில் கபாலம் தாங்கி தெருவெங்கும் பிட்சை கேட்டு திரிகிறார்.சாதாரணமாக ஒருவர் பிட்சை கேட்டு வருவதை விட, கூடவே ஒரு கூத்தாடும் குரங்கையும் அழைத்து வந்தால், அந்த பிட்சைக்காரருக்கு அதிக அளவில் பிட்சை கிடைக்கும் இல்லையா?
ஆகவே பிக்ஷாண்டவராக பிட்சை எடுத்து சுற்றும், ‘ஓ மகாதேவா! நீ பிட்சைக்கு செல்லும் போது, என்னுடைய மனம் என்னும் குரங்கையும் சேர்த்து எடுத்துச் செல். அப்படி நீ சென்றால் உனக்கும் பிட்சை நன்றாக கிடைக்கும் எனக்கும் மனம் கட்டுப்பட்டு உன்னோடு இரண்டறக் கலந்தது போல ஆகும்’ என்று ‘சிவானந்த லஹரி’யில் ஆதிசங்கரர் நகைச்சுவையாக சொல்கிறார்.
அதாவது, மனதை அடக்க, அந்த மனதை ஈசனிடம் திருப்பி விடுவதே ஒரே வழி என்று சொல்கிறார்.
காதை மூடிக்கொண்டிருக்கும் யோகினி
இந்த தூம்ரா யோகினி, தனது இரண்டு கையின் ஆள்காட்டி விரலாலும் தனது காதை மூடிக்கொண்டு இருப்பதை போல காட்சி தருகிறாள். ஒரு மனிதன் தனது காதை பொத்திக் கொள்ளும் போது அவனது செவிக்கு உள்ளே கடல் அலை ஒலி கேட்பதை நம்மால் உணர முடியும். உற்று நோக்கினால் இந்த ஒலி ஓம் காரத்தை போல இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.‘ஓம் இதிப் பிரம்ம’ என்ற உபநிஷத் வாக்கு படி, ஓம்கார வடிவில் இருக்கும் பரம்பொருளை, தனக்குள்ளே உணரும் உயர்ந்த யோக நிலையை குறிப்பது போல செவிகளை மூடி, தனக்குள்ளே இருக்கும் இறைவனை தேடுவது போல காட்சி தருகிறாள் இந்த யோகினி. ஆகையால் ஓம் காரவடிவில் தனக்குள்ளே இருக்கும் இறைவனை உணர்வதற்கு தனது உபாசகனுக்கு உதவுகிறாள் என்பதை இது காட்டுகிறது.
நல்லன மட்டும் கேள்
‘பத்ரம் கர்ணேபி: ஷ்ருனுயாம தேவா:’ என்றுதான் வேதம் தொடங்குகிறது. இது அந்த இறைவனை ‘நாங்கள் எப்போதும் நல்ல வார்த்தைகளையே கேட்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்கிறது. இப்படி வேதங்கள் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப, நல்லன மட்டுமே கேட்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீயவை தனது காதில் விழாத படி அதை மூடிக் கொண்டிருக்கிறாள் இந்த யோகினி. தனது அடியாரை சுற்றி எப்போதுமே நல்ல வார்த்தைகளும் நல்ல உபதேசங்களும் நிறைந்திருக்க அருள் செய்கிறாள் இந்த யோகினி. இதை உணர்த்தவே இவள் காதை மூடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஓர் அன்னப்பறவை எப்படி பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பருகி விட்டு நீரை விட்டு விடுமோ அது போல காதில் விழும் பல விதமான வார்த்தைகளில், நல்லது எது? கெட்டது எது என்று இனம் கண்டு கொண்டு, நல்ல வார்த்தைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை அடியார்களுக்கு இவள் கொடுப்பதையும், இவளுடைய திருக்கோலம் நமக்கு உணர்த்துகிறது.
அனுமனும் வானரமுகி யோகினியும்
வானர முகம் கொண்டு இருப்பதால் இந்த யோகினியை வானர முகி என்றும் அழைக்கிறார்கள். அந்த வகையில் இந்த யோகினி பெண் வடிவம் தாங்கிய அனுமனை போல காட்சி தருகிறாள் என்றும் சொல்லலாம். சில ஆராய்ச்சியாளர்கள், அனுமனின் சக்தியின் வடிவமே இந்த யோகினி என்றும் சொல்கிறார்கள். அதை சிலர் மறுக்கவும் செய்கிறார்கள்.
அனுமன், பிறவியால் குரங்கு தான். ஆனால், மனிதர்களாலும் கடக்க முடியாத கடலை கடந்து சென்று, இலங்கையில் சீதையை கண்டு, இலங்கையை தீயிட்டு கொளுத்தி, சீதைக்கு தைரியம் தந்து, சீதை இருக்கும் இடத்தை ராமனுக்கு சொல்லி ராமனுக்கு தைரியம் தந்து, கடலுக்கு நடுவே பாலம் கட்ட உதவி, இந்திரஜித் உடனான போரில் இலக்குவன், மயங்கி கீழே விழுந்த போது, சஞ்சீவி மலையை கொண்டு வந்து பல அற்புத அரிய சாகசங்களை புரிந்தார்.
சாதாரண குரங்கு இங்கும் அங்கும் துள்ளி குதித்து விஷமம் செய்து கொண்டிருக்க, இவர் செயற்கரிய செயல்கள் செய்கிறார். காரணம் என்ன?. அடக்கம். பக்தி. இவை இரண்டும்தான். அவருக்கு இருந்த அடக்கம், ராமபிரான் மீது அவருக்கு இருந்த அபரிமிதமான பக்தி, இவை இரண்டும்தான், அவரை இந்த செயல்களை செய்ய வைத்தது.
அந்த வகையில் அடங்காத நம் மனதில் அடக்கத்தை புகுத்தி, அதில் இறை பக்தியையும் புகுத்தி விட்டால், அதனால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்பதை அனுமனும், வானரமுகி யோகினியும் நமக்கு காட்டுகிறார்கள்.
வானர முகியின் வாகனம்
சிலர் இந்த தேவிக்கு, ஒட்டகம் வாகனமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஒட்டகம், நீர் கிடைக்கும் போது அதை நன்றாக குடித்துவிட்டு, அதை தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்துகிறது. அந்த வகையில் பல கல்வி ஞானத்தை அடைந்து, அதை மனதுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு, அவற்றை தேவைப்படும் போது உபயோகிக்கும் ஆற்றலை கொடுப்பவளாக இந்த யோகினியை நாம் புரிந்து கொள்ளலாம்.
எப்படி பூஜிப்பது?
இந்த யோகினியை பூஜிக்கும் வழி, வேத வைதீக மார்க்கங்களிலும், ஆகம மார்க்கங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த தேவியை வழிபட தாந்த்ரீக மார்க்கம் மட்டுமே உள்ளது. ஆகவே அதை தக்க குருவிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அவர் சொல் படி இந்த தேவியை வழிபடுவது உத்தமம். இல்லையேல், அம்பிகையை ஒருமித்த மனதோடு வழிபட்டு வந்தாலே அனைத்து யோகினிகளின் அருளும் தானே கிடைக்கும்.
ஜி.மகேஷ்