Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தியானம் மேற்கொள்வது எப்படி?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 105 (பகவத்கீதை உரை)

மனித ஆன்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாவதற்கு தனிமையில் தியானம் என்ற பயிற்சி அவசியம் என்று வற்புறுத்துகிறார், கிருஷ்ணன். சுற்றுச் சூழலின் தாக்கத்திலிருந்து புலன்களால் விடுபட முடியாது என்பது, சில சமயம் யோகிகளுக்கே ஏற்பட்டிருக்கும் விசித்திர அனுபவம். அதாவது அவன் இன்னும் யோகித் தன்மையை அடையவில்லை என்று அர்த்தம். அதனால், அந்த நிலையை அடையும்வரை, சுற்றுச் சூழலின் தாக்குதல்களிலிருந்து அவன் விடுபட வேண்டும். அதற்காகவே அவன் அந்தப் பயிற்சியை, தனிமையில், சந்தடி அற்ற பகுதியில் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியால் அவன் பக்குவப்பட்டு விட்டானானால், அதற்குப் பிறகு அவன் சுற்றுச் சூழலால் பாதிக்கப்பட மாட்டான். அப்படியென்றால், அவனுடைய புலன்கள் அவனுக்கு அடிமை செய்து கிடக்கும் என்று அர்த்தம்.

யோகி நிலைக்கு உயர ஒருவன், பரம்பொருளை மனத்தில் இருத்தும் தியானத்தில் ஆழ வேண்டும். அவ்வாறு தியானம் பழக அவன் சில விதிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும் என்கிறார், கிருஷ்ணன்.

``சுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸனமாத்மன

நாத்யுத்ச் ச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகு சோத்தரம்’’ (6:11)

``தத்ரைகாக்ரம் மன க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரிய

உபவிச்யாஸனே யுஞ்ச்யாத யோகமாத்மவிசுத்தயே’’ (6:12)

‘‘தூய்மையான இடத்தில், அதிக உயரமோ, மிகத் தாழ்வோ இல்லாத உறுதியான ஆசனத்தின் மேல் துணி, மான்தோல் விரித்து, அதன்மேல் தர்ப்பையைப் பரப்பி அதில் அமர்ந்து கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி, அதையும், இந்திரியங்களையும் அடக்கி, சித்த, சுத்தியின் பொருட்டு யோகம் பயில்வாயாக.’’ தியானம் பயில்வது அத்தனை எளிதான செயலல்ல என்பதை உள்ளடக்கி உபதேசிக்கிறார் கிருஷ்ணன். பரமாத்மாவுடன் இணைவது என்பது அவ்வளவு சுலபமாக முடியக் கூடியதா என்ன? இப்போதைய பிறவியில் பல துயரங்களுக்குக் காரணமான முற்பிறவிப் பாபங்களைக் கழுவிக் களைவது இலகுவான விஷயமா என்ன? இந்த பிரச்னை, கிருஷ்ணன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

‘அமைதியான சூழலில் தியானம் பழகு’ என்று அவர் அறிவுறுத்துவதிலிருந்து, அந்த நியதியை அந்த காலத்திலேயே அனுசரிக்க வேண்டியிருந்திருக்கிறது என்று தெரிகிறது! அதாவது சுற்றுச் சூழலின் தாக்கம் இருந்திருக்கிறது. தியானப் பயிற்சி நடைமுறைகளை விவரிக்கும்போது, முதலில் அமைதியான சூழலைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார், கிருஷ்ணன். இடத் தூய்மை, மனத் தூய்மைக்கு ஆதாரமாகிறது. இயற்கையின் இனிமை அதற்குத் துணை நிற்கிறது.

சூழ்நிலைக்கும், மனசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர், திடீரென்று உணர்ச்சி வசப்படுகிறார் அல்லது கோபப்படுகிறார் என்றால் அது ஏற்கெனவே அவருடைய மனசின் ஆழத்தில் தேங்கியிருந்ததுதான் என்றாலும், அப்போதைய சூழ்நிலைதான் அந்த உணர்வுகளை வெளியே கொண்டு வருகிறது.

எதிர்ப்பு கோஷம் போட்டுக் கொண்டே ஓர் ஊர்வலம் போகிறது என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட விஷயத்தை எதிர்ப்பதுதான் அந்த ஊர்வலத்தின் நோக்கம் என்பது அதில் பங்கேற்பவர்கள் மனதில் பதிந்திருக்கும். ஆனால், இந்த ஊர்வலத்துக்குப் போட்டியாக வேறு கோஷ்டியினர் எதிரே அணிவகுத்து வந்து கூச்சலிட்டார்கள் என்றால், இவர்கள் உடனே வன்முறையைக் கையாளத் துடிக்கிறார்கள். மனசுக்குள் இருந்த அதே வன்முறை, எந்த எதிர்ப்பும் இல்லாது போனால், செயலாக உருவாகாது. ஆனால், எதிர்க்கப்படும்போது,

தன்னிச்சையாக வெளியே வருகிறது.

அசுத்தமான சூழலில் வாழ்பவர்கள் மற்றும் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைஇல்லாதவர்களின் மனதில் எளிதாக மாசு படிகிறது. ஆகவே மேலான எண்ணங்களைத் தோன்றச் செய்யும் தூய்மையான சூழலே ஒரு யோகிக்கு ஏற்ற இடமாகும். அதோடு அங்கும், இங்கும் அசையாத உறுதியான ஆசனம் அவனுக்கு வேண்டும். தியான நேரத்தில் அவன் ஸ்திரமில்லாத ஆசனத்தால் அசைவை உணர்ந்தான் என்றால், அவனுடைய கவனம் பிறழ்ன்று விடும்.

ஆகவே, உறுதியான இருக்கை வேண்டும். அது இயற்கையான, கொஞ்சமும் அசையாத பாறையாகவும் இருக்கலாம். அல்லது உறுதியாக அமைக்கப்பட்ட மரப்பலகை மேடையாகவும் இருக்கலாம். எந்த ஆசனமும் அதிக உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது. உயரம், அச்சத்தை உருவாக்கலாம். தியான உச்சமான உணர்வற்ற நிலையில் சாய்ந்து விழக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

அதேபோல மிகவும் தாழ்வாக, பூமி மட்டத்திலும் இருத்தலாகாது. பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் பூச்சிகள், புழுக்கள், விஷ ஜந்துகள் ஏதேனும் இந்தத் தாழ்வு ஆசனத்தின் மீது ஏறி வந்து தியானம்பயில்பவரைக் கடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த இருக்கையின் மீது தர்ப்பைப் புல்லைப் பரப்பி வைக்க வேண்டும். அதன் மீது மான் தோல் அல்லது புலித்தோலையும் அதற்கு மேல் சுத்தமான துணியையும் விரித்து வைக்க வேண்டும். மிருதுவான, இதமான ஆசனம் என்றால் அது அமரும் சுகத்தை அனுபவிக்கச் சொல்லும்; அதேபோல கடினமான பரப்பு என்றால் அதனால் இடுப்பில் வலி ஏற்பட்டு தியானத்தில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். ஆகவே மிகவும் மிருதுவாகவோ அல்லது கடினமாகவோ இல்லாத ஆசனம்தான், ஒரு யோகி அமர்ந்து தியானம் இயற்ற சரியான பீடமாகும்.

தியானம் பயில்வதற்குத் தோதான சூழ்நிலை, அமரும் பீடம் இவை பற்றியெல்லாம் கிருஷ்ணன் விவரித்துக் கூறுவது என்ன?

அதிக உயரமோ, தாழ்வோ இல்லாத, மிருகத்தின் தோல் பரப்பிய ஓர் ஆசனத்தில் அமர்ந்து, சித்தத்தை ஒருமுகமாக்கி, இந்திரியங்களின் சலனங்களிலிருந்து விடுதலை பெறுவதோடு, அவற்றை அடக்கி எஜமானனாகிவிட்டால்தான், யோகத்திற்குள் நுழைய முடியும் என்று சொல்லிக் கொடுக்கிறார் கிருஷ்ணன். அதோடு இந்திரியங்களை அத்தனை எளிதாக அடக்கிவிட முடியாது என்பதால், அதற்கு இன்னின்ன முஸ்தீபுகளைப் பண்ணிக்கொள் என்றும் உபதேசிக்கிறார்.

யோகத்தில் ஆழும் பயிற்சியும் அதனால் வல்லமையும் பெற்ற ஒருவர், ‘இந்த ஆசனம், கீசனம் எல்லாம் எதற்கு? கண்களை மூடி, நிதானமான சுவாசத்தால் ஐம்புலன்களையும் கவனித்து வந்தால், தியானம் கைகூடிவிடுமே’ என்று சொல்லக் கூடும். அவர் எந்த வழிமுறையால் தியானம் கைவரப் பெற்றார் என்பது தெரியாவிட்டாலும், அவரைப் பொறுத்தவரை, இப்போதைய தன்னுடைய நிலையிலிருந்து அவர் பேசுகிறார் என்பது புரிய வரும்.

தியான நேரத்தில் பார்க்காமல், கேட்காமல், நுகராமல், பேசாமல் இருந்துவிட முடியும் என்றாலும், ஏதேனும் கொசுவோ அல்லது வேறு பூச்சியோ கடிக்குமானால் அப்போது நமக்கு பரம்பொருளைவிட அற்பக் கொசுதான் பிரதானமாகத் தெரிகிறது. பிற புலன்கள் அடங்கியிருக்க, மேனி ஸ்பரிசம் மட்டும், கொட்டு வலியை அனுபவிக்கவும், உணர்த்தவும் செய்வதைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

எல்லோராலும் ரமண மகரிஷியைப் போல ஆகிவிட முடியுமா என்ன? திருடன் வந்து அவர் காலைக் கட்டையால் தாக்க, அதிலிருந்து குருதி வடிந்தபோதும் சரி, தன் மேனிமேல் எறும்புகள் ஊறும்போதும் சரி, அவரால் அமைதியாக இருக்க முடிந்திருக்கிறது. அப்படியென்றால் அவர் புலன்களை வென்றவர் என்றுதானே அர்த்தம்? அதனால்தான் சீடர்களும், அவரை வழிபடுபவர்களும் ‘பகவான் ரமணர்’ என்றே அவரை அழைக்கிறார்கள்.

கிருஷ்ணன், ‘அதிக உயரமும், அதிகத் தாழ்வும் இல்லாத ஆசனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று யோசனை சொல்கிறார். அதோடு அந்த ஆசனம் சமதளம் கொண்டதாக, கோணல் மாணலாக இல்லாததாக இருக்க வேண்டியதும் அவசியம் என்கிறார். அப்படி இல்லாவிட்டால், அமர்ந்த நிலையிலேயே, ஆசனத் தடுமாற்றத்தால் வெளியே விழ வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார். புவி ஈர்ப்பு விசையைத்தான் இப்படி மறைமுகமாக அவர் குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து நியூட்டனுக்கு முன்னாலிருந்தே, புராண காலத்திலிருந்தே புவி ஈர்ப்பு பற்றிய அறிவு நம்மிடம் இருந்திருக்கிறது என்று புரிகிறது. அவ்வாறு நியூட்டன் அறிந்து கொண்டபிறகுதான், பூமிக்கு அப்படி ஒரு விசை உண்டு என்ற மாயக் கருத்து நிலவி வருகிறது. ‘புவி ஈர்ப்பு விசை’ என்று அவர் பெயரிடுவதற்கு முன்னாலேயே அப்படி ஒரு ஈர்ப்புச் சக்தி பூமிக்கு இருந்து வருவதை கிருஷ்ணன் ஏற்கெனவே கண்டு பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம், இல்லையா?

மான் தோல், புலித்தோல் விஷயமும் புவி ஈர்ப்பைச் சார்ந்ததுதான். அதுபரப்பப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து ஒருவர் தியானத்தில் ஈடுபடுவாரானால், அவருடைய உடலுக்குள் ஒரு சக்தி உருவாகிறது. மின்சாரத்துக்கு ஒப்பாக இந்தச் சக்தியைச் சொல்லலாம். திட, திரவப் பொருட்களை மட்டுமல்ல, மின்சாரம் என்ற கண்ணுக்குத் தெரியாத சக்தியையும் ஈர்க்கக் கூடிய

வல்லமை படைத்தது பூமி. ஆனால் நம் உடலில் உருவாகும் அந்த சக்தியை பூமி உறிஞ்சிக் கொண்டுவிடாதபடி காப்பவைதான் மர ஆசனமும் அதன் மீது பரப்பப்படும் மிருகத் தோல்களும்.

இவை மின்சாரத்தைக் கடத்தாது. ஆகவே தியானப் பயிற்சியாளனுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பாகவும் அமைகின்றன.

ஆழ்நிலை தியானத்தின்போது ஒரு யோகிக்குள் உருவாகக் கூடிய சக்தி அவனுக்குள்ளேயே சேமித்து வைக்கப்பட, இந்த சாதனங்கள் உதவுகின்றன. பொதுவாகவே சந்நியாசிகள் மரப் பாதுகைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், தமக்குள் சேமித்து வைத்திருக்கும் தியான யோக சக்தியை, பூமி ஈர்த்துக் கொண்டு விடாமல் காத்துக் கொள்வதற்காகத்தான். தியானம் மட்டும் என்றில்லாமல், பலவகை யோகாசனங்கள் நம்மிடையே பயிற்சியாகக் கற்பிக்கப்படுகின்றன. இவையெல்லாம், ஆன்மாவை ஆனந்தப்படுத்தும் வழிகளாக அமைகின்றன. கிருஷ்ணன் கீறிய கோட்டைப் பின்பற்றி, பின்னாளில் யோகாசன முறைகள் விரிவடைந்தன என்றே சொல்லலாம். குறிப்பாக, பதஞ்சலி முனிவர்தான் நம் நாட்டில் யோகாசனப் பயிற்சிகளின் முதலாவது ஆசான் என்று சொல்லப்படுகிறது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இவர் எழுதி வைத்த ‘பதஞ்சலி யோக சூத்திரங்கள்’ இன்றைய யோக பயிற்சிகளுக்கு மூலப் புத்தகமாக விளங்கி வருகிறது. நம் பாரதம் மட்டுமன்றி, மேலை நாடுகள் பலவற்றிலும் யோகாசனம் பரவி, இந்தியப் பெருமையை நிலைநாட்டுகின்றன. இதற்கு மூலகாரணம், பகவான் கிருஷ்ணன்தான், இல்லையா?

புத்தர், மகாவீரர் இருவரின் சிலைகளையும் சற்றே உன்னிப்பாக கவனித்தால், அவர்களைச் சுற்றி நுணுக்கமான சிற்பத் திறனை வெளிப்படுத்தும். மெலிதான ஓர் ஒளிவட்டம் தெரியும். அது அவர்களுடைய முதிர்ந்த யோக நிலை. தங்களுக்குள் சேமித்து வைத்திருக்கும் சக்தி வெளியே போய்விடாதபடியும், வெளியேயிருந்து எந்த எதிர்மறை பாதிப்பும் உள்ளே வராதபடியும் அந்த ஒளிக்கோட்டு எல்லை தடுக்கிறது என்று வர்ணிப்பார்கள். அதோடு இந்த ஒளி, அவர்களுடைய இந்திரியங்களைக் கட்டிப் போட்டிருக்கிறது, அதை மீறி அவற்றால் செயல்பட முடியாது என்பதும் புரிய வரும்.

இயற்கையாகவே நம் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த சக்தி, மின்சாரம் போல உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது.இந்திரிய உணர்வுகளால் அதனை விரயமாக்காமல், ஒரு பேட்டரியாக சேமித்து வைத்துக் கொள்ளும் முயற்சிகள்தான் தியானமும், யோகா பயிற்சியும். முந்தைய பிறவிகளில் அடுத்தடுத்து வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட யோகி, தியானப் பயிற்சியால், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுதான் வருகிறான். ஆனாலும், இன்னும் தீர்க்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கத்தான் செய்கிறது! உலகப் பாத்திரத்தில் அவன் நீர்போல வாழ்கிறான். புலனடக்க முயற்சி என்ற கொதிநிலையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகிக் கொண்டு வருகிறான். உஷ்ணத்தின் உச்சமான கொதிநிலையில் அவன் முற்றிலும் நீராவியாகி விடுவான். அதாவது பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து விடுவான்.

(கீதை இசைக்கும்)