12.7.2025 - சனி
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். இந்த திருத்தலம் விருதுநகர் சிவகாசி அருகே அமைந்துள்ளது. திருத்தங்கல் பெருமாள் கோயில் ‘தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம்புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம் புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம். அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை இத்தலத்தில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல புதிய தகவல்களை வழங்கும் ஊராகவும் திருத்தலமாகவும் அமைகிறது. இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது. மூலவர்: நின்ற நாராயணப் பெருமாள், உற்சவர்: திருத்தண் காலப்பன், தாயார்: செங்கமலத் தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன தீர்த்தங்கள். ஆனி பிரமோற்சவத்தில் இன்று 9-ம் நாள் திருத்தேர்.
13.7.2025 - ஞாயிறு
காஞ்சி வரதர் ஜேஷ்டாபிஷேகம்
இன்று ஆனி - ஸ்ரவணம் அதாவது திருவோண விரதம் இருக்க வேண்டிய நாள். இன்று பிரசித்தி பெற்ற காஞ்சி வரதராஜருக்கு “ஜ்யேஷ் டாபிஷேக’’ அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். காலை நித்தியப்படி திருவாராதனம் நடந்த பின் பெருமாள் உத்திரவேதி யினின்றும் திருமலையில் துவாரபாலகர்கள் முன்மண்டபத்திலுள்ள கோலப் படிக்கட்டில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுடைய மேல் உள், ஸ்வர்ண கவசங்கள் களையப்படும். உபய நாச்சிமார்களுடையவும் களையப்பட்டு, தேவஸ்தான அதிகாரி களிடம் பழுது பார்த்து சுத்தம் செய்வதற்கு ஒப்படைக்கப்படும். பெருமாளுக்கு முன் இரண்டு திரைகளிடப்படும். பிறகு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாம்ருதம், சந்தனம், வெட்டிவேர், பரிமளங்கள் சேர்ந்த சுத்த தீர்த்தம் இவைகளால் ஸ்ரீ பெருமா ளுக்கும் நாச்சிமார்களுக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடக்கிறது. வருடத்தில் இம்மாதிரி திருமஞ்ஜனம் நடைபெறுவது ஜ்யேஷ்டா பிஷேக உத்ஸவத்தன்று மட்டுமே. மற்றைய நாட்களில் சந்தனம், தீர்த்தத்தால்தான் திருமஞ்சனம். அதேபோன்று கவசங்களைக் களைந்து நடக்கும் திருமஞ்சனமும் இதே நாளில் தான் (ஆனி-ஸ்ரவணம்). திருமஞ்ஜனமான பின் திருஅபிஷேகத்தை மட்டும் முன்னடியாக சுத்தம் செய்து, போர்வை ஸமர்ப்பித்துக் கொண்டு, பெரிய மணி ஸேவிக்க பிரசாதங்களை அமுது செய்தருள்வார். சாதாரணமாய் இந்த ஜ்யேஷ்டா அபிஷேகத்திலிருந்து ஒரு மண்டல காலம் பெருமாளுக்கு உத்ஸவங்கள் நடக்காது. கவசங்களுக்குப் பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனமும் உள்சாத்து வஸ்திரமும் சமர்ப்பித்திருக்கிறபடியால் அவை நன்றாக உலருவதற்கு இந்த அவகாசம் வேண்டும். ஆனால், திருவாடிப்பூர திருக்கல்யாண உத்ஸவமும், கஜேந்திர மோட்ச கருடோத்ஸவமும் மற்றும் சில ஆழ்வார் ஆச்சார்யர்கள் சாற்றுமுறையும் இந்த காலகட்டத்தின் மத்தியில் நேரும். அத்துடன் கோடை உத்ஸவமும் நடக்கும்படி இருக்கும்.
13.7.2025 - ஞாயிறு
மலையப்ப சுவாமி புறப்பாடு
திருவோணத்தான் என்று பெருமாளைச் சொல்வார்கள். திருவோண நாளை ச்ரவண நாள் என்பார்கள். ஆனி ச்ரவண நாள் விசேஷமானது. இன்று திருமலை மலையப்ப சுவாமி உதய நாச்சிமார்களுடன் மாலை புறப்பாடு நடைபெறும்.
16.7.2025 - புதன், சஷ்டி விரதம்
சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இது மாதந்தோறும் வரும் சஷ்டி திதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. சஷ்டி விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதத்தின் போது, பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு, விரதம் இருந்து, உணவு மற்றும் நீர் அருந்தாமல் இருப்பர். மேலும், முருகனின் மந்திரங்களை ஜபித்து, பாடல்களைப் பாடி, திருப்புகழ், கந்த புராணத்தைப் படிக்கலாம்.
17.7.2025 - வியாழன் சர்வ நதி ரஜஸ் வலை
ஆடி மாதம் முதல் தேதி பஞ்சாங்கத்தில் நதி ரஜஸ்வலை மூன்று நாட்கள் என்று போட்டிருப்பதை காணலாம். நதிகளை பெண்களாக கருதுவது இந்திய மரபு. ஆடி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து முதல் மூன்று நாட்கள் நதிகளுக்கு தீட்டு ஏற்படுகிறது என்கிறது சாஸ்திரம். எனவே ஆடி முதல் மூன்று நாட்கள் புண்ணிய நதிகளான காவிரி தாமிரபரணி நர்மதா முதலிய நதிகளிலும் கிளை நதிகளிலும் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆடிமாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் சூரியன், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களுக்குத் தென்திசையில் பயணிக்கிறார். எனவே இது தட்சிணாயண காலமாகும். ஆடி மாதம் தேவர்களின் இரவு காலத்தின் தொடக்கம் என்பார்கள். பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலம் என்பதால் வழிப்பாட்டில் சிறப்பான இடத்தைப் பெற்ற மாதம்.
திருவெள்ளறை, திருக்குடந்தை முதலிய சில வைணவத் தலங்களில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒவ்வொரு வாசல் வழியே பெருமாளைச் சேவிக்கும் வழக்கமுண்டு. இதை தட்சிணாயண வாசல், உத்தராயண வாசல் என்று சொல்வார்கள். ஆடி மாதம் ஒன்றாம் தேதி வடக்கு பக்கம் உள்ள உத்தராயண வாசலை மூடிவிட்டு சுவாமி தரிசனத்திற்காக தட்சிணாயணவாசலைத் திறந்து வைப்பார்கள். ஆடி மாதம் முதல் நாள் மாலை இந்த வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்வது மிகப் பெரிய சிறப்பு.மழைக்காலத்தொடக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.
“ஆடி செவ்வாய் தேடிக்குளி” என்பார்கள். ஆடியில், செவ்வாய்க் கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை கடைப் பிடிப்பார்கள்.ஆடி மாத பிறப்பன்று வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் நீர் தெளித்து பெரிய கோலமாக போட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து மங்கல விளக்குகளை ஏற்ற வேண்டும். வண்ண மலர்களை பகவானுக்கு சூட்டி பல நிவேதனங்களை படைத்து பூஜை செய்ய வேண்டும். ஆடிப் பால் என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது தேங்காய்ப்பாலை ஆடிப் பால் என்பார்கள். காரணம் தேங்காயை உடைத்து அதை உரலில் இட்டு ஆட்டி எடுப்பதால் அதற்கு ஆடிப் பால் என்று பெயர். பித்தத்தை குறைக்கும் சக்தி உண்டு. அதை வெல்லம் சேர்த்து பெருமாளுக்குப் படைப்பார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு இந்த பாலை கொடுக்கக்கூடிய வைபவமும் ஆடி மாதத்தில் பல குடும்பங்களில் நடக்கும்.
17.7.2025 - வியாழன்
ருத்ராபிஷேகம் - திருவாவடுதுறை
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் மாசிலா மணீஸ்வரர் மற்றும் ஒப்பிலாமுலையம்மைக்கு இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெறும். ருத்ரா பிஷேகம் என்பது ருத்ரனை வழிபடும் ஒரு சிறப்பு அபிஷேக முறையாகும். இதில், சிவலிங்கத்திற்கு ருத்ர மந்திரங்கள் ஓதப்பட்டு பால், தயிர், தேன் போன்ற அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.
18.7.2025 - வெள்ளி
ஆடி முதல் வெள்ளி
ஆடி மாதம் வழிபாட்டுக்கு அதுவும் பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரிய சிறந்த மாதம். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை மிக மிக விசேஷம். சந்திரனும் மகாலட்சுமியும் பாற்கடலில் தோன்றியவர்கள். சந்திர சகோதரி என்று மகாலட்சுமியைச் சொல்வார்கள். சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசிக்கு உரிய மாதம்தான் ஆடி மாதம். சந்திரன் உச்சம் பெறுகின்ற ரிஷப ராசிக்கு உரிய சுக்கிரன்தான் வெள்ளிக்கிழமைக்கு உரியவர். எனவே ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகின்ற நாள். அதிலும் முதல் வெள்ளி மிக விசேஷம் ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர். ஆடிவெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். அத்துடன் கடன் பிரச்னைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக் கியம் மேம்படும். திருமணத்தடை நீங்கி மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். அன்று அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கும். உற்சவருக்கு மாலை நேரத்தில் கண்ணாடி அறை சேவை நடைபெறும். பிராகார புறப்பாடு நடந்து தாயாருக்கும் பெருமாளுக்கும் மாலை மாற்றுதல் நடைபெறும்.
18.7.2025 - வெள்ளி
நீலகண்டாஷ்டமி
சிவபெருமானுக்கும் சிவபெருமானுடைய அம்சமான காலபைரவருக்கும் உகந்த நாட்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள். ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு இந்த அஷ்டமி நாளில் காலையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் காலபைரவரை தரிசனம் செய்வதன் மூலமாக நம்முடைய கஷ்டங்கள் விலகும். ஆடிமாத தேய்பிறை அஷ்டமி நீலகண்ட அஷ்டமி என்று சொல்வார்கள் இந்த அஷ்டமியின் சிறப்பு பலனாக வித்தையில் மேன்மை ஏற்படும்.
மாணவர்கள் கால பைரவரை வணங்கினால் தேர்வுகளில் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். சகல துறைகளிலும் மேன்மை ஏற்படும். பல சிவாலயங்களில் இப்பொழுது பைரவர் சந்நதிகள் ஏற்படுத்தப்பட்டு அஷ்டமி பூஜை விரிவாக செய்யப்படுகின்றன. பைரவருக்கு குளிரக் குளிர அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொள்ளலாம். அபிஷேக சாமான்கள் வாங்கி தரலாம். ஆதிசங்கரர் அருளிய சக்தி வாய்ந்த பைரவாஷ்டகத்தை சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேய்பிறை அஷ்டமியிலும் பாராயணம் செய்யுங்கள். தீராத நோயும் தீரும்.
18.7.2025 - வெள்ளி
காஞ்சி தாயார் ஜேஷ்டாபிஷேகம்
காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்து அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஸ்ரீ பெருந்தேவித் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். காலை நித்தியப்படி ஆனபின், 9 மணி அளவில் கோயில் பரிவாரம் மேளதாளங்களுடன் அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். பொதுவாக ஜேஷ்டாபி ஷேகத்தின்போது கவசங்கள் களையப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு பழுது நீக்கப்படும். ஆனால் தாயாருக்கு உள்வெளி கவசங்கள் இரண்டு கிடையாது. எனவே அதிகமாக பழுது பார்க்க வேண்டிய வேலைகள் இல்லாததால் சாயங்காலம் 4:00 மணி அளவில் கவசங்கள் சுத்தம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும். திருமஞ்சனம் போஜ்யாசனங்கள் நடந்து உற்சவம் பூர்த்தியாகும். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.