14.12.2025 - ஞாயிறு ஆனாய நாயனார் குருபூஜை
சோழ வளநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் வாழும் ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய சிவத்தொண்டில் நின்றவர். முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர். தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைப் புல்வெளியிற் கொண்டு சென்று, புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைப்பார். ஒருநாள், இப்படி பசுக்காக்கச் சென்றவர் அங்கு பூங்கொத்துக்களும், கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றவே அந்த சிவத்தோற்றத்தைக் கண்டு உருகினார்.
மடைதிறந்த நீர்போல் கண்ணீர் பெருகிற்று. அன்பு பொங்கிய நிலையில் குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந் தெழுத்தினை எல்லா உயிர்களும் எலும்புங்கரையும்படி வாசிக்கத் தொடங்கினார். அந்த இசை ஒவ்வொரு உயிரிலும் கலந்து நின்றது.
பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள், பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டு விலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலிர்த்து வந்து சேர்ந்தன. தேவகணங்கள் தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் காரணமும் ஒன்றாயின. ஆனாயர் இசைத்த குழலிசை யானது, சிவனார் திருச்செவியில் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி காட்சி தந்தனர். அக்குழல் வாசித்துக் கொண்டே ஆனாயநாயனார் அரனாரின் திருவடி அணைந்தார். அவர் குருபூஜை இன்று. (கார்த்திகை ஹஸ்தம்)
14.12.2025 - ஞாயிறு ஆதித்ய ஹஸ்தம்
ஆதித்ய ஹஸ்தம் என்பது ஞாயிற்றுக் கிழமையும் ஹஸ்த நட்சத்திரமும் இணைந்து வரும் புனிதமான நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் அதிக பலன் தரும். இந்த நாளில் சூரியனையும், தாய் தெய்வமான சந்திரனையும் வணங்குவது சிறப்பு. சூரிய சந்திர பிரதிநிதிகளான பெற்றோரின் ஆசிகளைப் பெறுவதும் நல்லது. இந்த வழிபாடு மனோபலத்தைத் தரும். சூரியனை வழிபடுவதன் மூலம் தீயவை விலகும்.
14.12.2025 - ஞாயிறு திருவெள்ளறை சகஸ்ர தீபம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவெள்ளறை, திருச்சிராப்பள்ளி அருகே துறையூர் போகும் வழியில் உள்ளது. இங்குள்ள பெருமாளுக்கு புண்டரீகாட்சப்பெருமாள் (செந்தா மரைக்கண்ணன்) என்று பெயர். கையில் பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கிய கோலத்தில் காட்சி தருவார். மூலஸ்தானத்தில் 7 மூலவர்கள் உள்ளனர். சூரியனும் சந்திரனும் இரண்டு பக்கமும் நின்று சாமரம் வீசும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. தாயாருக்கு பங்கயச் செல்வி என்று திருநாமம். இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு சகஸ்ர தீபம் என்று ஆலயம் முழுதும் தீபமேற்றும் நிகழ்ச்சி தொடங்கும். இந்த தீபத்தை கண்டுவிட்டு, பெருமாளையும் தரிசித்தால், மிகுந்த மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். நினைத்தது பலிக்கும்.
15.12.2025 - திங்கள் கடைசி சோமவார விரதம்
கார்த்திகை மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமை. பல சிவாலயங்களில் சோம பிரதோஷ விரதம் நடக்கும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய் வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். சோம பிரதோஷ விரதத்தில் கலந்து கொண்டு சோமசூக்த பிரதட் சணம் செய்வது நன்று. சோம சூக்த பிரதட்சணம் செய்யும் முறை பார்ப்போம்.
முதலில் நந்திகேஸ்வரர் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் சந்நதி வரை சென்று, அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் கோமுகியைக் (நிர்மால்ய தொட்டி) கடக்காமல் தரிசித்து, அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும், நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தை தரிசித்து, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நதி வரை சென்று, அவரை தரிசனம் செய்து, மீண்டும் அப்பிரதட்சணமாக வலம் வந்து, சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் தொட்டியைக் கடக்காமல், அப்படியே வந்த வழியே திரும்பி, மீண்டும் முன் செய்த மாதிரியே செய்து இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே சோம சூக்த பிரதோஷ காலத்தின் முறை. இதைச் செய்வதன் மூலம் பாவம் நீங்கும். மனதில் நிம்மதி வரும்.
15.12.2025 - திங்கள் ஷட்திலா ஏகாதசி
பரமபுருஷ பகவானான கிருஷ்ணருக்கு மிக முக்கியமான மற்றும் விரும்பத்தக்க திதி ஏகாதசி. அதுவும் அவன் விரும்பும் மார்கழியில் வரும் ஏகாதசி. ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள். ஆறு வகையான எள் தானத்தை செய்யும் ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபடுவதும், தானம் செய்வதும், குறிப்பாக எள் தானம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். இந்த விரதத்தின் மூலம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, பாவங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெறலாம்.
16.12.2025 - செவ்வாய் தனுர் மாத (மார்கழி) பிறப்பு
தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதம் மார்கழி. தனுர் மாதத்தைக் குறிப்பது. தனுர் என்பது வில்லை குறிக்கும். சாப மாதம் என்பார்கள். (சாபம் என்றால் வில்) மார்கழிக் குளிரில் உடல்வில் போல் வளையும் என்பதால் சீதோஷ்ண நிலையை அனுசரித்து தனுர் மாதம் என்றார்கள். தனுர் ராசியான குரு பகவானின் வீட்டில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதம். மார்கழி மாதத்தை குறித்து. பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். 12 மாதங்களில் தனக்குப் பிடித்த மாதமாக இந்த மார்கழியைக் குறிப்பிடுகிறார். தேவர்களுக்கு இது காலை சந்தி நேரம் என்பதால் வழிபாட்டுக்குரிய நேரம். காலையில் எழுந்து கடும் பனியைக் குறித்துக் கவலையின்றி, நீராடி, நெற்றியில் திலகம் அணிந்து, வாழ்வாங்கு வாழும் வரம் வேண்டி, தெய்வத்தின் சந்நதியை நாள்தோறும் நாடிச் சென்று, பின் மற்ற வேலையைத் தொடங்கும் மாதம் இந்த தனுர் மாதம்.
இதனை அசுப மாதம் என்று சிலர் தவறாகக் கருதுவார்கள். இறைவழிபாட்டுக்கு என்றே ஒதுக்கப் பட்ட ஒரு மாதம் எப்படி அசுபமாதமாக இருக்கும்? தெய்வத்தை நினைக்கும் வேளையில் சாதாரண உலகியல் விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாதத்தில் திருமண முகூர்த்தங்களை வைத்துக்கொள்வதில்லை.
தமிழகத்தின் தொல் சமயங்களான சைவம் வைணவம் இரண்டுக்குமே உரிய மாதம் இந்த தனுர் மாதம் என்பதால், சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் விடிகாலை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளி யெழுச்சியும் தினசரி வழிபாட்டில் இடம்பெறும்.
17.12.2025 - புதன் பிரதோஷம், குசேலர் தினம்
இன்று பிரதோஷம். இன்னும் ஒரு சிறப்பும் இன்றைய தினத்திற்கு உண்டு. கிருஷ்ணரும் பலராமரும் சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அவர்களுடன் சுதாமர் (குசேலர்) என்னும் பாலகரும் பயின்றார்.
ஒரு நாள் கிருஷ்ணரும் பலராமரும் குருவின் வீட்டில் அடுப்பிற்கு விறகு கொண்டு வருவதற்காக காட்டிற்குச் சென்றார்கள். சற்று நேரத்தில் சுதாமரிடம் அவர்கள் மூவருக்கும் சாப்பிட சிற்றுண்டியாக கடலைப்பருப்பை வறுத்து சாந்தீபினி முனிவரின் மனைவி கொடுத்து அனுப்பினாள். கிருஷ்ணர் விறகு வெட்டியதில் களைப்புற்று சுதாமரின் மடியில் சற்றே ஓய்வாகப் படுத்துக் கொண்டார். அப்போது, அவர்களுக்குத் தெரியாமல் மூவருக்குமான வறுத்த கடலைப் பருப்பை தானே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணரிடம் உண்மையை மறைத்ததால் குசேலர் என்று அழைக்கப்பட்ட சுதாமர் தரித்திரத்தில் உழல வேண்டியதாயிற்று. அவருக்கு 27 குழந்தைகள். ஒரு நாள் மனைவி சுசீலை, உங்கள் பால்ய நண்பர் தானே இப்போது துவாரகையில் அரசராக இருக்கிறார். நீங்கள் ஏன் அவரிடம் சென்று உதவி கேட்கக்கூடாதா என்கிறாள்.
எதாவது அவருக்கு சாப்பிட எடுத்துச் செல்ல வேண்டுமே! அவலை ஒரு சிறு முடிப்பாக தன் கிழிசல் அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு துவாரகைக்குப் போகிறார். அரண்மனை சேவகர்கள் அவரை தடுத்துவிட, கிருஷ்ணரே வாசலுக்கு ஓடி வந்து குசேலரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார். அன்போடு ராஜோ பசாரம் செய்து, தன்னுடைய சிம்மா சனத்தில் உட்காரவைத்து அவருக்குப் பாத பூஜை செய்கிறார்.
ருக்மணி, அவருக்கு சாமரம் வீசுகிறாள். பிறகு, கிருஷ்ணர் ‘‘எனக்கு என்ன கொண்டு வந்தாய்?’’ என்று கேட்க, குசேலர், தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணருக்கு மிகுந்த வெட்கத்துடன் சமர்ப்பிக்கிறார். அதை கிருஷ்ணர் ஆவலோடு உண்ட கணத்தில் குசேலரின் வறுமை முற்றிலுமாக நீங்கி, எல்லா செல்வங்களும் அவரிடம் சென்று சேர்ந்தன. மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை இந்தச் சந்திப்பு ‘குசேலர் தினமாக’ குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. நம் வீடுகளில் குசேலர் கிருஷ்ணருக்கு அளித்தது போல அவலை வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பிரசாதமாகப் படைத்து வழிபட்டால் நமக்கும் பகவான் அருள் தேடி வரும்.
19.12.2025 - வெள்ளி அமாவாசை, அனுமன் ஜெயந்தி
மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமார். வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் சாற்றி அனுமனை வழிபடுவது வழக்கம். அனுமன் ஜெயந்தி அன்று அவருக்கு விருப்பமான ராம நாமம் சொல்லுவது, அவரின் அருளை எளிதில் பெறுவதற்கு வழி செய்யும். அனுமனை வழிபடுவதால் அனுமனின் அருளுடன், ராமரின் அருளும் கிடைக்கும்.
19.12.2025 - வெள்ளி தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரம்
சோழநாட்டில், தஞ்சை மாவட்டத்தில், திருமண்டங்குடி என்ற ஊரில் (கும்பகோணம் அருகில் உள்ளது) மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் அவதரித் தவர் இவர். அழகான பாடல்கள் பாட வல்லவர். பாமாலையோடு பூமாலையும் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்துவரும் தொண்டினை காலம் காலமாகச் செய்து வந்தார். பெருமாளுக்கு அவர்பாடிய திருப்பள்ளியெழுச்சி எனும் பக்திப் பிரபந்தம் அரிய பொருளனைத்தையும் பத்துப் பாடல்களில் விவரிக்கிறது. அரங்கனைத் தவிர வேறு யாரையும் பாடாத அந்த ஆழ்வார் அரங்கனிடத்திலேயே அடைக்கலமானார். அவர் அவதார தினம் இன்று எல்லா பெருமாள் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.


