22-11-2025 - சனி திந்த்ரணி விரதம்
இது கௌரி தேவியை, பார்வதி பரமேஸ்வரர்களுடன் சேர்த்து வணங்கும் விரதங்களில் ஒன்றாகும். கௌரி தேவியின் 108 விதமான ரூபங்களில் மிக முக்கியமான சில ரூபங்களைப் போற்றும் விதமாகவும் கௌரி விரத தினங்கள் அமைகின்றன. பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளைப் பயன்படுத்துதல், அந்தந்த மரக் கிளைகளின் கீழ் கௌரி தேவியின் சிறுவடிவத்திலான சிலையை வைத்துப் பூஜித்தல் அதிக பலன் தரும். “திந்திரிணி” என்பது புளிய மரத்தைக் குறிக்கும். கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் வரும் துவிதியை திதி தினமே திந்த்ரிணீ கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தினமாகும். அன்றைய தினம் விரதமிருந்து, மஞ்சளால் கௌரிதேவி பிரதிமையை அலங்கரித்து ஐந்து வகை பழங்கள், இனிப்பு பொருட்கள், நிவேதனப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து மகிழ மரக் கிளையை அருகில் வைத்து, மகிழம்பூவால் அர்ச்சித்து வழிபட வேண்டும். முதலில் விக்னேஸ்வர பூஜை செய்து, பின்னர், கௌரிதேவி அஷ்டோத்ரம் கூறி அர்ச்சித்து, தூப, தீப ஆராதனை செய்து நிவேதனம் சமர்பிக்க வேண்டும். பின்னர், கற்பூர ஹாரத்தி எடுத்து பிரதட்சிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக புளியோதரை இன்றைய நிவேதனத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். இந்த விரதத்தினால் தம்பதிகளின் ஒற்றுமை அன்யோன்யம் ஓங்கும். குடும்பத்தில் பிரிவு ஏற்படாது. குடும்ப ஒற்றுமையும் குதூகலமும் சிறக்கும். பொதுவாக சுக்கிரன் சில ஜாதகங்களில் கன்னி ராசியில் நீசம் அடைந்திருப்பார். பலமிழந்து அல்லது வேறு ஏதாவது ஒரு ராசியில் பாவ கிரகங்களோடு இணைந்து இருப்பார். அப்படி அமைந்த ஜாதகங்களுக்கு சுபத் தடைகள் இருக்கும். திருமணத் தடைகள் முதலிய தோஷங்கள் நிற்கும். முக்கியமாக சனி தோஷம் விலகும்.
22-11-2025 - சனி திருச்சானூர் கருடசேவை
பொதுவாக பெருமாளுக்குத் தான் கருடசேவை விசேஷம். ஆனால், திருப்பதியில் தாயாருக்கும் கருடசேவை உண்டு. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் கருடசேவை பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் இரவில் நடைபெறும். கருடசேவை உற்சவத்தில் கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருவார். இன்று காலையில் சர்வ பூபால வாகனத்தில் வீதி உலாவும், மாலை தங்கத் தேரோட்டமும் நடைபெறும்.
23-11-2025 - ஞாயிறு ரம்பா திருதியை
ரம்பா திருதியை விரதம் என்பது கார்த்திகை மாத வளர்பிறை திருதியை விரதம் ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெண்களுக்கு அழகும், செல்வமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். தேவலோக ரம்பை, தான் இழந்த அழகையும் ஐஸ்வரியத்தையும் மீண்டும் பெறுவதற்காக அம்பாளை வழிபட்ட நாள் இது. இந்த நாளில் நாம் வரலட்சுமி விரதத்தின் சமயம் எப்படி அம்பாளை அலங்காரம் செய்வோமோ அதேபோல் கலசம் வைத்து அம்பாளின் முகத்தை வைத்து அந்த முகத்திற்கு மேல் மஞ்சள் முழுவதுமாக தடவி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலசத்திற்கு இரண்டு புறங்களிலும் வாழை கன்றுகளை வைக்க வேண்டும். அன்றைய தினம் கண்டிப்பாக முறையில் அதிக அளவில் வாழைப்பழத்தை நெய் வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும்.
23-11-2025 - ஞாயிறு மூர்க்க நாயனார் குரு பூஜை
அடியார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சிவத்தொண்டு புரிந்தவர்கள். அதில் மூர்க்க நாயனார் அடியார்களுக்காக தமது செல்வம் அனைத்தும் இழந்த பிறகும், சூதாடிக் கிடைத்த பணத்தில் சிவனடியார்களைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து திருவமுது செய்வித்து, பின்னரே தாமும் உண்பார். மூர்க்க நாயனார் தொண்டை நாட்டின் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் தோன்றினார். சிவனடியார்களையே சிவனெனத் துதித்தும், திருநீறே மெய்ப்பொருள் என்று கருதியும் வாழ்ந்தார். மூர்க்க நாயனாரின் சிவத்தொண்டு பற்றி அறிந்த சிவனடியார்கள் பலரும் அவரை நாடி வந்து உதவிகள் பெற்றுச் சென்றனர். இதனால் மூர்க்க நாயனாரின் செல்வ வளம் குறையத் தொடங்கியது. இருந்தாலும் தம்மிடம் உள்ள உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தம் திருப்பணியைச் செய்துவந்தார். சிவத் தொண்டிற்குப் பொருள் இல்லாது போயிற்று. அதனால் தான் முன்னமே நன்கு அறிந்திருந்த சூதாடும் தொழில் மூலம் பொருளீட்ட எண்ணினார். சூதாடி அதன்மூலம் பொருளீட்டி, அதைக் கொண்டு அடியவர்களுக்கான திருப்பணிகளைச் செய்தார். சூதில் வென்ற அப்பணத்தைத் தம் கையால் தீண்டாமல், அமுது ஆக்குவோர்களைக் கைக்கொள்ளச் செய்து, அதுகொண்டு பொருட்கள் வாங்கிச் சமைக்கச் செய்து, அங்குள்ள சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பார். இறுதியில் சிவபதம் அடைந்தார்.
24-11-2025 - திங்கள் திருச்சானூர் திருத்தேர்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தினம் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் நாளான இன்று காலை தேர்த் திருவிழா நடக்கிறது. இதில் முத்து கவசத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். பலர் தேரின் மீது நேர்த்திக் கடனுக்காக மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்து வழிபடுவர்.
25-11-2025 - செவ்வாய் சிறப்புலி நாயனார் குருபூஜை
சிறப்புலி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். தரங்கம்பாடி அருகே உள்ள ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். அவ்வூரில் உள்ள ஆக்கூர் தான்தோன்றீஸ்வரருக்கு “ஆயிரத்தில் ஒருவர்” என்ற பெயரும் உண்டு. சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது வழக்கம். ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்து விட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன்தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.
25-11-2025 - செவ்வாய் பஞ்சமி தீர்த்தம்
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தேவி கோயில் குளமான பத்மசரோவரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை வளர்பிறை பஞ்சமி அன்று பஞ்சமி தீர்த்தம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்தான் தாயாரின் அவதார நாள். பத்ம சரோவரத்தில் தங்கத் தாமரையில் பத்மாவதி தேவி தோன்றியதாக தல புராணம் கூறுகிறது. இந்த நாளில் திருமலையிலிருந்து தாயாருக்கு மஞ்சள், குங்குமம், துளசி, மாலை, பட்டுச் சேலைகள் என மங்கள சீதனப் பொருள்கள் யானையின் மீது கொண்டு வரப்படும். உற்சவத் தாயார் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக திருக்குளத்தை அடைவார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருள குளக்கரையில் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், தீர்த்தவாரி நடைபெறும். சக்கரதாழ்வாருக்கு திருக்குளத்தில் புனித நீராட்டம் நடக்க , லட்சக் கணக்கான பக்தர்கள் நீராடுவார்கள்.
26-11-2025 - புதன் சம்பா சஷ்டி
சம்பகாசுரனை கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியில் வதம் செய்ததால், அந்த சஷ்டி “சம்பா சஷ்டி’ என்றழைக்கப்படுகிறது. கார்த்திகையில் பிரத்யேகமாக” சம்பா சஷ்டி விழா’ பைரவருக்கு நடைபெறுகிறது. இரண்யாட்சன் என்ற அசுரனின் புதல்வர்கள் இருவர் அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரன். சிவ பக்தர்களான அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். ஈசன் பைரவரைத் தோற்றுவித்து சம்பகாசுரனை அழித்தார். அந்தகாசுரனை அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கோவலூரில் வதம் செய்தார். பைரவர்கள் அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நால்வராகவும் உள்ளனர். சம்பகாசுரனை கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியில் வதம் செய்ததால், அந்த சஷ்டி ‘‘சம்பா சஷ்டி’ என்றழைக்கப்படுகிறது. பல மாநிலங்களில் இந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் விரதமிருந்து சஷ்டியன்று யோக பைரவரை வழிபட்டு விரதத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தமிழகத்தில் சில தலங்களில் மட்டும் சம்பா சஷ்டி கொண்டாடப் படுகிறது. அவற்றில் ஒன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில். இன்று விரதமிருந்து, பைரவர் சந்நதியில் மிளகு தீபம் ஏற்றி, செவ்வரளி பூ சாற்றினால் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும். சம்பா ஷஷ்டி விரதத்தைக் கடைப்பிடிப்பதால், மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை கிடைக்கும்.
26-11-2025 - புதன் திருச்சானூர் புஷ்ப யாகம்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பிரம்மோற்சவம் நிறைவடைந்ததும், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று புஷ்ப யாகம் நடைபெறுகிறது. புஷ்ப யாகத்தை முன்னிட்டு உற்சவத் தாயார், கோயில் வளாகத்தில் உள்ள கிருஷ்ண முக மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு பஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தின்படி வேத மந்திரங்களை சொல்லி புஷ்பயாகம் செய்வர்.இதற்காக சுமார் 4 டன் மலர்கள் பயன்படுத்தப்படும். தாயாரின் கழுத்தளவு நிறையும் வரை மலர்களை அர்ச்சனை செய்து சமர்ப்பிப்பர். பின்னர் தாயாருக்குத் தீபாராதனை நடைபெறும் .
27-11-2025 - வியாழன் நந்த சப்தமி
இந்நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங் களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கோ பூஜையை முறையாக செய்ய இயலாதவர்கள், பசுவின் கழுத்திலும் தலையிலும் தடவிவிட்டு, பின்புறம் தொட்டு நமஸ்காரம் செய்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள். மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும்.
28-11-2025, வெள்ளி மைதுலாஷ்டமி
மைதுலாஷ்டமி நாளில் பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல். முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து விரதம் இருந்து வழிபடுதல். நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பு.
விஷ்ணுபிரியா


