11.10.2025 - சனி திருநாளைப் போவார் குருபூஜை
சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் நந்தனார். தமிழ் நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூரில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ இருந்தார். சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவர். அவன் திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத் தோல், விசிவார் என்பன கொடுப்பார். சிவ அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். சிவன் மீது கொண்ட பேரன்புப் பெருக்கால் தன்னை மறந்து ஆடுவார். பாடுவார். அவர் ஊருக்கு அருகே திருப்புன்கூர் என்ற சிவத்தலம் உண்டு. அங்கு சென்று வழிபட விரும்பினார். வாயிலினின்று இசைபாடி நின்றார். பெருமானை கண்குளிரக் காணும் ஆசை பெருகியது.
நந்தி மறைத்தது. பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். திருக்கோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அன்றிரவு கண்துயிலாது கழித்தார். விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து போகாது தவித்தார்.
மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே, “நாளைப் போவேன்” என்றுகூறி நாட்களைக் கழித்தார். இவ்வாறு நாள் கழிதல் பொறாதவராய் ஒரு நாள் தில்லைத்திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும் வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார்.
தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதிவலம் வந்தவர் ஏக்கத்துடன் துயில் கொண்டார். நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத் திருவுளங் கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்?’ என்னும் புன் முறுவல் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லை வாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார்.
அந்நிலையில் தில்லை வாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப் போவாரை அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினர்.
தெய்வமறை முனிவர்களும் தென்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். நந்தனார் சரித்திரத்தை தமிழிசைக்காவியமாக இசைப் பாடல்கள் கொண்டு விளக்கும் தொகுப்பாக கோபால கிருஷ்ண பாரதியார் இயற்றினார்.
11.10.2025 - சனி புரட்டாசி கடைசி சனிக்கிழமை
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று. புரட்டாசி மாத சனிக் கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானவை. இந்த நாட்களில் விரதம் இருந்து, தளிகை படைத்து வழிபடலாம். சனி பகவான் அவதரித்த மாதம் புரட்டாசி என்பதால், அவரால் ஏற்படும் கெடுபலன்களைக் குறைத்து, காக்கும் கடவுளான பெருமாளை வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. இரட்டைப் படையில் நான்காவது சனிக்கிழமையாக வரும் இந்தச் சனிக்கிழமையை, இதுவரை விரதம் இருக்காதவர்கள் தவற விடக்கூடாது.
காலையில் குளித்து விரதம் இருக்கத் தொடங்க வேண்டும். ஒரு மணைப் பலகையில் கோலம் போட்டு அதன் மீது குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குத்துவிளக்கின் முகப்பு, ஐந்து முகங்கள், தண்டு, மற்றும் அடி பீடம் என எட்டு இடங்களில் மஞ்சள் குங்குமம், பொட்டு வைக்க வேண்டும். பூமாலை சாற்ற வேண்டும். அன்றைய பூஜையில் துளசி அவசியம் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலமாக அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும். இன்னொரு பலகையில் கோலம் போட்டு, தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் சித்திரான்னங்களைப் படைக்க வேண்டும். அவசியம் உளுந்து வடை செய்ய வேண்டும். ஏழுமலை அப்பனுக்குப் படையல் போடுவதால் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஏழு பட்சணங்களை வைக்க வேண்டும்.
பாயசமும், வெல்ல பானகமும் வைக்கவேண்டும். படைக்கும் பொழுது நாராயண கோபால நாமமும், கோவிந்த நாம சங்கீர்த்தனமும் உரக்கச் சொல்ல வேண்டும். இதனால் சனியாலும், செவ்வாயாலும் ஏற்படும். சுபத் தடைகள் நீங்கும். சனிக்கிழமை பெருமாள் ஆலயங்களுக்கு தலயாத்திரையாகச் செல்லலாம். திருவஹீந்திரபுரம், அண்ணன் கோயில், குணசீலம், உப்பிலியப்பன் கோயில், திருமலை, நவதிருப்பதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், முதலிய திருத்தலங்களுக்குச் சென்று சுவாமியை வணங்குவது சிறப்பு. ஸ்ரீனிவாசன் என்ற திருநாமக் கோயில்கள் அனைத்தும் விசேஷம்.
வேங்கடேசப் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தளியலோடு மாவிளக்கு போட்டு வணங்குவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை என்கிற தலம் ஒன்று உண்டு. அதை தென் திருப்பதி என்றும் சொல்லுவார்கள். அங்குள்ள பெருமாள் கோயிலில் நான்கு சனிக்கிழமையும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். கோவிந்தனை நினைக்க வேண்டிய நாள் இது.
11.10.2025 - சனி மந்தரோகிணி
ரோகிணி நட்சத்திரம், சந்திரன் உச்சம் பெறும் நட்சத்திரம். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக பிரஜாபதி கருதப்படுகிறார். ரோகிணி நட்சத்திரத்தின் ஆற்றல்கள் பிரஜாபதியுடன் தொடர்புடையவை. கற்பனையையும், படைக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்துவது ரோகிணி. செல்வத்தைக் குறிக்கும் சுக்கிரனுடைய ரிஷப ராசியில் இருக்கும் ரோஹிணியில் சந்திரன் உச்சமாகிறார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சனிக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள் மந்த ரோகிணி.
சனிக்கு மந்தன் என்கிற பெயர் உண்டு. இந்த நாளில் செய்யக் கூடிய எந்த வழிபாடும் பல மடங்கு பலன் தரும். சிரமம் வரும்போது, இப்படி குறிப்பிடப்பட்ட சில நாளில், உதாரணமாக திங்கட்கிழமையும் திருவோணமும். புதன்கிழமையும் அனுஷ நட்சத்திரமும், அஸ்வினியும் செவ்வாயும் என்பதுபோல சனிக் கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், ருண விமோசன ஸ்தோத்திரம் சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பஞ்ச சூக்தங்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாம். தயிர்சாதம் நிவேதனம் செய்து படைக்கலாம். இன்றைய தினம் சகலவிதமான பூஜைகள், பிரார்த்தனைகள், அபிஷேக ஆராதனைகள் ஹோமங்கள் செய்யலாம். இதனால் ஜாதக ரீதியாக வருகின்ற தொந்தரவுகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
13.10.2025 - திங்கள் ஈஸ்வராஷ்டமி
இன்று அஷ்டமி தினம். ஈஸ்வராஷ்டமி என்று சொல்வார்கள். சாந்த்ர ஆஸ்வின பகுள அஷ்டமி என்பார்கள். காலை சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பைரவரை வணங்க வேண்டும். இந்த அஷ்டமி தினம், விரதமிருந்து பைரவரை வணங்குபவர்களுக்கு குருதோஷம் விலகும். குருவினுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். சகோதர பகை நீங்கும். வளமான வாழ்வும் வெற்றியும், பதவியும் கிடைக்கும்.
14.10.2025 - செவ்வாய் ராதாஜெயந்தி
அஷ்டமி திதி என்பது கண்ணனுக்கு மட்டும் உரியதல்ல. ராதைக்கும் உரியது. இந்த அஷ்டமியில் வடக்கே உள்ள கிருஷ்ண பக்தர்கள் ராதா ஜெயந்தியை மிக விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். சில பகுதிகளில் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுவதும் உண்டு. ராதைக்கு, இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் சிறப்பான இடம் உண்டு. பிரம்ம வைவர்த புராணம், கார்கா சம்ஹிதா போன்ற நூல்களில் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதைக்கு சிறப்பிடம் உண்டு. ஜெயதேவரின் அஷ்டபதியில் கிருஷ்ணர் ராதையின் தெய்வீகக் காதல் விளக்கப்படுகிறது. பாகவத சம்பிரதாயத்தில் ராதைக்கு ஒரு விசேஷமான இடம் உண்டு. கிருஷ்ண ப்ரேமையை ஒரு வடிவமாகத் திரட்டினால் அதற்கு ராதை என்று பெயர் கொடுக்கலாம்.
ராதையை வணங்காமல் கிருஷ்ண வழிபாடு முழுமையடைவதில்லை என்பார்கள். வடக்கே யாரைப் பார்த்தாலும் “ராதே கிருஷ்ணா” தான். அது ஒரு மங்கல முழக்கமாக, ஒருவரை ஒருவர் பார்க்கும் போது சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லும்போது சகல பாவங்களும் நீங்கிவிடும். ஒரு ஆன்மிக ஆனந்தம் தோன்றும்.
ஆண்டாள் கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், பத்மாவதி கல்யாணம் என்று பல கல்யாணம் இருந்தாலும், அஷ்டபதி பஜனை பாடி ராதா கல்யாணம் செய்வது மிகவும் விசேஷம். இப்பொழுதும் சிலர் திருமண வைபவங்களுக்கு முதல் நாள், ராதா கல்யாணத்தை நடத்துவதன் மூலம் தம்பதிகள் நல்வாழ்க்கை வாழ்வார்கள் என்கின்ற நம்பிக்கையோடு செய்கிறார்கள். ராதையை கிருஷ்ணப்ரியா என்று சொல்வார்கள்.
குழந்தை இல்லாதவர்கள் இந்த ராதா ஜெயந்தியைக் கொண்டாடலாம். ஒரு கலசத்தில் தீர்த்தம் பரிமளம் முதலிய வற்றைச் சேர்த்து, ராதையையும் கிருஷ்ணனையும் ஆவாகனம் செய்து அலங்கரிக்க வேண்டும். வெண்ணெய் மற்றும் பல காரங்களை வைத்து நிவேதனம் செய்யலாம். அந்த கலசத்தை ஒரு பட்டுத் துணியின் மீது தம்பதியர் மடியில் வைத்து மனம் உருகப் பிரார்த்திக்க வேண்டும். பிறகு கலசத்தை பழைய இடத்தில் வைத்துவிட்டு ஆரத்தி எடுக்கவும். ஏதேனும் ஒரு ஏழை குழந்தைக்கு தேவையான பொருட்களை வழங்கவும். இதனால் ராதை கண்ணனின் அருள் கிடைக்கும். வெகு சீக்கிரம் அவர்கள் வீட்டில் குழந்தைச் செல்வம் தவழும்.
17.10.2025 - வெள்ளி இந்திர ஏகாதசி
இந்திர ஏகாதசி இன்று (17.10.2025) கிருஷ்ணபட்ச ஏகாதசி திதியில் வரும் விரதம். மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக் கிழமையில் வரும் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் திவ்ய தம்பதிகளின் அருளை எளிதாகப் பெறலாம். முன்னோர்களின் பாவங்களை நீக்கி, அவர்களை நரகத்தில் இருந்து விடுவித்து மோட்சத்தை அடைய உதவும் விரதம் இந்த ஏகாதசி விரதம். பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரா ஏகாதசியின் முக்கியத்துவம் மற்றும் விரதத்தின் முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம், நரகத்தில் துன்புறும் முன்னோர்கள் விமோசனம் பெறுவார்கள். இந்திர ஏகாதசி அன்று சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வதால் பெருமாளின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இந்திர ஏகாதசியில் அரிசி, கோதுமை அல்லது பருப்பு வகைகள் போன்ற தானியங்கள், உணவுப் பொருட்களை தானம் செய்வது சிறப்பு. இவைகள் ஒருவரின் பசியை போக்கக் கூடியது. ஏழைகளுக்கு இவற்றை வழங்கும் போது முன்னோர்களின் மனம் மகிழ்ந்து, அவர்களின் ஆசி கிடைக்கும்.