Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

4.10.2025 - சனி சனி பிரதோஷம்

மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என்று இரு முறை வரும் திரயோதசி திதியை நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்களை நீக்கி, புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பொதுவாக பிரதோஷமானது அது வரக்கூடிய கிழமைகளைப் பொறுத்து சிறப்பித்து சொல்லப்படுகிறது. திங்கட்கிழமையில் வந்தால் சோம வார பிரதோஷம், செவ்வாய்க் கிழமையில் வந்தால் அங்காரக பிரதோஷம், வியாழக் கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் என்றும் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்ர வார பிரதோஷம் என்றும் சிறப்பித்து சொல்லப்படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் மகா பிர தோஷம் என்று சொல்லப்படுகிறது.

சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் அது ஆயிரம் பிரதோஷ நாட்களில் தொடர்ந்து சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானையும் சிவனின் வாகனமாகிய நந்திதேவரையும் பிரதோஷ வேளையில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்று தரும். பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தன்று ‘ஓம் நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதுடன் மாணிக்கவாசகர் அருளிச் செய்த சிவபுராணத்தையும் படிக்க வேண்டும். இதைத் தவிரவும் கோயிலிலோ அல்லது வீட்டிலோ பிரதோஷ நேரத்தில் ‘ஓம் ஹம் சிவாய நமஹ’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். சிவபெருமானுக்கு பிரதோஷ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்திதேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் யாவும் முடிவுக்கு வரும். பிரதோஷ நேரத்தில் சக்தியோடும், முருகனோடும் சோமாஸ்கந்தராக அருளும் சிவபெருமானை தரிசனம் செய்தால் குடும்ப உறவுகள் பலப்படும். இத்தினத்தில் நடராஜப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

4.10.2025 - சனி மூன்றாவது சனிக்கிழமை

இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை ஒற்றைப்படையில் வருவதால் கடந்த இரண்டு வாரங்கள் தளிகை (நிவேதனம்) போடாத அன்பர்கள் (மஹாளயம் இருந்ததால்) இந்த வாரம் திருவேங்கட முடையானை நினைத்து விரதமிருந்து தளிகை போட்டுப் படைக்கலாம்.

4.10.2025 - சனி நரசிங்க முனைவர் குருபூஜை

நரசிங்க முனையரையர் நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. குருபூஜை விழாவில் நரசிங்க முனையரைய நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெறும். குறுநில மன்னரான நரசிங்கமுனையரைய நாயனார் தம் நாட்டிலிருந்த அனைத்து சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தின் போதும் சிவனுக்குப் பூஜை செய்து, சிவனடியார்களுக்கு உணவும், பட்டாடையும் வழங்குவார். அதனோடு நூறு பொன் காசுகளும் சிவனடியார்களுக்குத் தருவார். ஒரு திருவாதிரைத் திருநாளன்று வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தீராத நோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் திருநீறு அணிந்து இருந்தார். அவருக்கு நூறு பொன் காசுக்குப் பதிலாக அந்த அடியாருக்கு இருநூறு பொன் காசுகள் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்சொல்லி, விடை கொடுத்து அனுப்பி வைத்தார். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை திருநாமநல்லூர் (திருநாவலூர்) கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூஜித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

5.10.2025 - ஞாயிறு வள்ளலார்

ஆன்ம நேய ஒருமைப்பாடு தழைக்கவும், இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிடவும், எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்ற கொள்கையை பரப்ப இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்பட்ட அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார். 1823 ஆம் ஆண்டு அக்டோபர், மாதம் 5ஆம் நாள் சிதம்பரம் அருகே மருதூர் எனும் சிற்றூரில் அவதாரம் செய்தார். அவர் நமக்காக அருளிய அருட்பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகிறது. அவருடைய அவதார தினத்தன்று வடலூரில் காலை முதல் இரவு வரை பல ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். அவருடைய அவதார நாளில் விளக்கு ஏற்றி அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள்.

5.10.2025 - ஞாயிறு நடராஜர் அபிஷேகம்

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், நட்சத்திர நாட்கள் மூன்று, திதி நாட்கள் மூன்று. அதில் புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தசியன்று எல்லாக் கோயில்களிலும் உள்ள நடராஜர் மூர்த்திக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். நடராஜ ஸ்தலமான சிதம்பரத்தில் இந்த அபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜ மூர்த்தியின் அபிஷேகத்தைத் தரிசித்து பரமானந்தத்தை அடையலாம். தூக்கிய திருவடியைச் சரணடைய நம்மைத் தாக்கும் வினைகளெல்லாம் பறந்தோடும்.

6.10.2025 - திங்கள் பௌர்ணமி மதுரை கூடலழகர் 5 கருட சேவை

மதுரையில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான பழமையான கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி அன்று ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த விழாவில் கூடலழகர் பெருமாள், வீரராகவ பெருமாள், மதனகோபாலசாமி பெருமாள் போன்ற ஐந்து திருவுருவங்கள் ஒரே நேரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

6.10.2025 - திங்கள் கோமதி பூஜை

கௌமதி ஜாகர விரதம் இன்று. இரவு முழுவதும் கண்விழித்து லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும். மகாலட்சுமிக்கான பல்வேறு விரதங்களில் ஒன்று இந்த விரதம். இன்று பௌர்ணமியாக இருப்பதால், பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், கிரிவலம் வருபவர்கள், இரவு இந்த விரதத்தையும் இணைத்து இருக்கலாம். இந்த விரதத்தை முறையாக பூர்த்தி செய்பவர்களைத் தேடி வரும் மகாலட்சுமி சகல ஐஸ்வரியங்களையும் வழங்கி அருள்புரிவாள். வறுமைத் துன்பத்தை விரட்டும் விரதம் இது.

6.10.2025 - திங்கள் சந்தான கோபால விரதம்

சந்தான கோபால விரதம் என்பது குழந்தை இல்லாத தம்பதிகள் பகவான் கிருஷ்ணனை வேண்டி மேற்கொள்ளும் ஒரு விரதமாகும். இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் தொடங்கப்பட்டு, குழந்தை பாக்கியம், மன நிம்மதி மற்றும் சகல செல்வங்கள் கிடைக்கப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் சந்தான கோபாலருக்கு விரதமிருப்பது விசேஷம். இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி மேற்கொள்ளப்படுகிறது.

8.10.2025 - புதன் திருமலை சகஸ்ர கலச அபிஷேகம்

திருமலை சகஸ்ர கலச அபிஷேகம் என்பது திருமலையில் உள்ள ஸ்ரீ போக சீனிவாச மூர்த்திக்கு நடத்தப்படும் சிறப்பு திருமஞ்சனமாகும். இந்த அபிஷேகத்தில் ஆயிரம் (சகஸ்ர) புனித நீர் கலசங்களில் (கலசம்) கொண்டு வரப்பட்டு, திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இது தெய்வீக சாந்நித்யத்தையும், பல நலன்களையும் தரும் திருமஞ்சனமாகும்.

8.10.2025 - புதன் ருத்ர பசுபதியார்

ருத்ர பசுபதியார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானின் தீவிர பக்தர். இவர் யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ள ‘ஸ்ரீ ருத்ரம்’ மந்திரத்தை பாராயணம் செய்து இறைவனின் அருள் பெற்று சிவபதம் அடைந்ததால் ‘ருத்ர பசுபதியார்’ என்று அறியப்படுகிறார். இவர் சோழ நாட்டில் உள்ள திருத்தலையூரில் அந்தணக் குலத்திலே பிறந்தவர். உருத்திர பசுபதிக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப் பெற்றவர். அவர் குருபூஜை தினம் இன்று.

9.10.2025 - வியாழன் புஷ்பாங்கி சேவை

திருமலை புஷ்பாங்கி சேவை என்பது, பெருமாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யும் ஒரு சிறப்பு சேவையாகும். இது 1984 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொன்விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையில், பெருமாள் முழுமையாக மலர்களால் அலங்கரிக்கப்படுவார். இது பக்தர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு தரிசனமாகும். இந்த அலங்காரத்திற்காக 108 தங்கத் தாமரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

10.10.2025 - வெள்ளி சங்கடஹர சதுர்த்தி

நட்சத்திரத்தை போலவே திதியும் முக்கியம். சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பௌர்ணமியில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்கும். ஒரு திதி 12 பாகை. சதுர்த்தித் திதி நான்காவது திதியும் 19 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 36 பாகையில் இருந்து 48 பாகை ஆகும். சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகரை வழிபடலாம். சதுர்த்தி விரதம் இருந்து பாராயணம் செய்பவர்களின் மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.

10.10.2025 - வெள்ளி நரசிம்ம சதுர்த்தசி

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே நரசிம்ம அவதாரத்தை போற்றி வணங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் பெரியாழ்வார். வளர்பிறை சதுர்த்தசி திதி நரசிம்மருக்கு உரியது. இந்தத் திதியில் தான் அசுரன் இரணியனை அழித்து உலகில் பக்தியின் சிறப்பினை நிலை நாட்டுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு. வளர்பிறை சதுர்த்தசி திதியில் விரதமிருந்து நரசிம்மரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். ‘‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’’ என்று சொல்வார்கள். உடனடியாக நம்முடைய கோரிக்கைகளை நிறை வேற்றி வைப்பவர் நரசிம்மமூர்த்தி. நரசிம்மருக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பானகம் போன்ற நிவேதனங்களை செய்யலாம். ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைப்பதற்கு நரசிம்ம சதுர்த்தசி விரதம் உதவும். நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும்.

10.10.2025 - வெள்ளி கார்த்திகை விரதம்

சூரியனுக்குரிய கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானின் திரு நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. கார்த்திகை மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத் தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள் அறிவு, செல்வம், ஆயுள், மனைவி, மக்கள் ஆகிய சகல பேறுகளையும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள்.