20.9.25 - சனி ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவண்ணாமலை கருட சேவை
இன்று புரட்டாசி முதல் சனி.எல்லா பெருமாள் கோயில்களிலும் விசேஷம் . ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கிராமத்தில் ‘யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை’ மீது ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள்ளுர் மக்களாலும், அருகிலுள்ள மக்களாலும் திருவண்ணா மலை என்று அழைக்கப் படுகிறது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும். இன்று பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.
20.9.25 - சனி புரட்டாசி முதல் சனிக்கிழமை
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கித் தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவ தும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷமான நாள்கள். புரட்டாசி மாதம் முழுவதும் ஒருபொழுது விரதம் இருப் பவர்கள் உண்டு. அப்படி இல்லாதவர்கள் கூட, சனிக்கிழமை மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது உண்டு. கிராமங்களில் கூட பெருமாளுக்காக புரட்டாசி விரதம் இருந்து புரட்டாசி தளியல் போடுவார்கள். காலம் காலமாக இந்த மரபு இருந்து வருகிறது. அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட, பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதத்தை விலக்கி விடு வார்கள்.தளிகை என்றால் படையல் என்பதாகும்.தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றது. தேங்காய் சாதம், தயிர் சாதம்,சர்க்கரை பொங்கல் ,புளியோதரை போன்ற சாதங்களும், உளுந்துவடை ,சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவை தளிகையில் வைக்கப்படுகின்றது. ஐந்து விதமான சாதங்களை பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழை இலையில் ஐந்து விதமான சாதத்தால் திருமாலின் திரு உருவப்படத்தை வரைந்து தீப தூப ஆராதனை இட்டு கோவிந்தா என கோஷமிட்டு வழிபடுவதாகும். தளிகையின் போது மாவிளக்கு வைத்து வழிபாடுகளை செய்யலாம் அன் றைக்கு யாரேனும் அதிதிகள் வந்தாலோ , விருந்தினர்கள் வந் தாலோ, அவர்களுக்கு விருந்து கொடுத்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.
சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்ய காரியத்தடைகள் விலகும். காரியம் சித்திதரும்.சனி தோஷங்களான அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, கண்டச் சனி, அர்தாஷ்டமச் சனி முதலிய கோசார தோஷங்களும்,சனி திசா புத்தி தீய விளைவுகளும் அகலும். அன்றைய நாளில் நாம் திருவேங்கடமுடையானை மனதார வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளை விண்ணப்பித்தால் கண்டிப்பாக பெருமாள் சகல காரியங்களிலும் நமக்கு வெற்றி அடையச் செய்வார்.
21.9.25 - ஞாயிறு மகாளய அமாவாசை
மஹாளய அமாவாசை என்பது தென்புலத்தார் என்று போற்றப் படும் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள். மறந்தவனுக்கு மகாளயம் என்று சொல்வார்கள். முன்னோர்களுக்கு முறையான வழிபாடுகள் செய்யாதவர்கள், மறந்து போனவர்கள். குறைந்தபட்சம் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். பிதுர்தோஷம் இருந்தால் குடும்பத்தில் பலவிதமான சுபகாரியத் தடைகள் ஏற்படும். அதை நீக்கிக் கொள்வதற்கு தில ஹோமம் செய்ய வேண்டும். அத்தகைய ஹோமம் செய்வதற்கு ஏற்ற நாள்.
21.9.25 - ஞாயிறு அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை
பண்ருட்டிக்கு பக்கத்திலே உள்ள பாடல் பெற்ற தலமான திருத்துறையூரில் ஆதிசைவர் குடும்பத்தில் அவதரித்த இவர் அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர். இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார். பல கலைகளை கற்றுத் தேர்ந்த இவரை அனைவரும் ‘சகலாகம பண்டிதர்’ என்று அழைத்து வந்தனர்.
இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய் திகழ்ந்ததால் இப் பெயர் பெற்றார். மெய்கண்டாருக்கு இவரே குல குரு. குல குரு வான தன்னை வந்து சந்திக்காததை நினைத்து கோபம் கொண்டார். இதனால் மிகுந்த சினம் கொண்ட சகலாகம பண்டிதர், தானே நேரடியாக சென்று மெண்கண்டாரைச் சந்தித்தார். அப்போது மெய்கண்டார் ஆணவம் குறித்து சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட சகலாகம பண்டிதர் “ஆணவத்துக்கு ஒரு வடிவைக் காட்ட இயலுமா?” என்று கேட்டார். அதற்கு மெய்கண்டார், பலகற்றும் பொறாமை உணர்வோடு தன்னை அணுகிய அவரை நோக்கி \”நீங்கள்தான் ஆணவத்தின் வடிவம்” என்று பதிலுரைத்தார். மெய்கண்டாரின் கம்பீரமான பதிலும் ,பார்வையும் இவருடைய அறியாமையை முற்றிலுமாக நீக்கியது. அடுத்த நொடி ஆணவம் நீங்கி, மெய்கண்டாரின் பாதம் பணிந்து தம்மை சீடராக ஏற்கும்படி வேண்டினார். மெய்கண்டாரும், சகலாகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, ‘அருள் நந்தி சிவம்’ என்னும் பெயரிட்டு தன்னுடைய தலைமைச் சீடராக ஏற்றுக்கொண்டார். சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, \”சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். மேலும் பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
22.9.25 - திங்கள் நவராத்திரி ஆரம்பம்
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சொன்னால், அவருக்கு வித்தையும், வீரமும் செல்வமும் அவசியம். இந்த மூன்றும் பெற வேண்டும் என்பதற்காக, முப்பெருந்தேவி யர்களான துர்க்கை, மகாலட்சுமி, கலைமகள் ஆகியோரை, மூன்று மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை. கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்துக் கொண்டாடப்படும் அற்புதமான பண்டிகை இது. குழந் தைகளுக்கும் பெண்களுக்கும் குதூகலம் தரும் பண்டிகை நவராத்திரி. நவராத்திரியின் தொடக்க நாளான இன்று காமதேனு பூஜை செய்வது, மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும். குறைந்தபட்சம் பசுமாடுகளை தொட்டு வணங்கி, அவற்றுக்கு ஏதேனும் பழமோ, புல்லோ, கீரையோ தாருங்கள்.
அம்மா வழி தாத்தாவுக்கு முக்கியத்துவம் தரும் நாள் தௌஹித்ர பிரதிபட் . நவராத்திரியின் முதல் நாள், பெண்வழி பேரன் பேத்திகளை பரிசுப் பொருள் தந்து ஆசீர்வதிப்பதும், பேரன் பேத்திகள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதுமாக இந்த நாளுக்கு உரிய முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். நேரில் சென்று வாழ்த்த முடியாதவர்கள் தொலைபேசி மூலமாவது தங்களுடைய ஆசீர் வாதத்தைத் தெரிவிக்க வேண்டும். பேரன் பேத்திகள், அம்மா வழி தாத்தாவிடம் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
22.9.25 - திங்கள் குலசேகரன் பட்டினம் நவராத்திரி ஆரம்பம்
முத்தாரம்மன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச் செந்தூர் வட்டத்தில் குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும் . திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. மூலவராக அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந் தருளி யுள்ளனர். மதுரையை மீனாட்சி ஆள்வதைப்போல இங்கு அம் பாளின் ஆட்சி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் வடக்கு நோக்கி உள்ளனர். அம்மை நோயினை முத்து போட்டதாகக் கூறுவர். முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச்செய்வர். அவ்வாறு செய்யும்போது முத்து நோய் இறங்கும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் முத்து+ஆற்று+அம்மன் முத்தா(ற்ற)ரம்மன் என்றழைக்கப்படுகிறார்.
தசரா விழா இங்கு விசேஷம். முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன், அகத்திய மாமுனிவரை அவமரியாதை செய்தான். கோபமுற்ற அவர் வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலையும்படி சாபமிட்டார். சாப விமோசனமாக இறைவியின் கையால் அவனது உடல் அழிந்து சாப விமோசனம் கிடைக்கும் என்றார். வரமுனி, மகிசாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனி வர்களும் சிவனிடம் சென்று முறையிட, பார்வதியை நோக்கி தவம் செய்தால், தீர்வு கிடைக்கும் என்று சிவன் கூறினார். தேவர் களும் தவம் புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரணை உருவாக்கினார். வேள்வியில் பிறந்த பெண் குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசூரனை வதம் செய்யப் புறப்பட்டாள். மகிஷாசூரனை அழித்த 10-ஆம் நாள் தசரா பெரும் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.
24.9.25 - புதன் திருமலை பிரம்மோற்சவம் தொடக்கம்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை திருமலையில் பிரசித்தி பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி எந்தெந்த நாட்களில், எந்தெந்த வாகனங்களில் பெருமாள் உலா வருவார் என்பதைப் பார்ப்போம்.
* 24. 9.2025 புதன்கிழமை துவஜாரோகணம்
* 24. 9. 2025 புதன்கிழமை இரவு பெரிய சேஷ வாகனம்
* 25.9.2025 வியாழக்கிழமை பகல் சிறிய சேஷ வாகனம்
* 25.9.2025 வியாழக்கிழமை இரவு ஹம்ச வாகனம்
* 26.9.2025 வெள்ளிக்கிழமை பகல் சிம்மவாகனம்
* 26.9.2025 வெள்ளிக்கிழமை இரவு முத்துப்பந்தல் வாகனம்
* 27.9.2025 சனிக்கிழமை கல்ப விருட்ச வாகனம்
* 27.9.2025 சனிக்கிழமை இரவு சர்வ பூபால வாகனம்
* 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் மோகினி அவதாரம்
* 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு கருட வாகனம்
* 29.9. 2025 திங்கட்கிழமைகாலை அனுமந்த வாகனம்
* 29.9.2025 திங்கட்கிழமை மாலை தங்கத்திருத்தேர் இரவு யானை வாகனம்
* 30.9.2025 செவ்வாய்க்கிழமை காலை சூரிய பிரபை வாகனம்
* 30.9.2025 செவ்வாய்க்கிழமை இரவு சந்திர பிரபை வாகனம்
* 01. 10. 2025 புதன்கிழமை காலை திருத்தேர்
* 01 .10 2025 புதன்கிழமை இரவு குதிரை வாகனம்
* 02.10.2025 வியாழக்கிழமை பகல் சக்கர ஸ்நானம் தொடர்ந்து துவஜா வரோகணம்.
திருமலை பிரம்மோற்சவத்தில் மற்ற நாட்களைவிட கருட சேவை விசேஷமானது. 28.9.25 ஞாயிறு காலை பெருமாள், மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வருவர். இரவு புகழ்பெற்ற கருடசேவை நடக்கிறது. இந்த கருட சேவையைப் பார்ப்பதற்கு லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள்.
25.9.25 - வியாழன் மதுரை கொலு பட்டாபிஷேகம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா களை கட்டி உள்ளது. நாள்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்து வருகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான இன்று கொலு மண்டபத்தில் அம்மன் பட்டாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளிப்பார். கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடர்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச் சாவடியில் கொலுவாக வைத்திருப்பர்.