13.9.2025 - சனி சஷ்டி விராலிமலை திருமுருகன் புறப்பாடு
விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் தலம். இந்த 1500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்குச் செல்ல மலையில் 201 படிகள் ஏற வேண்டும், மேலும் இப்பகுதி ஏராளமான மயில்களால் நிரம்பி உள்ளது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்கள் மரங்களாக விரவி முருகனை வழிபட்டதால், இத்தலம் விராலிமலை என்றழைக்கப்படுகிறது. வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாடவைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இக்கோயிலின் கருவறையில் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இங்கு இன்று சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான் புறப்பாடு நடைபெறும்.
14.9.2025 - ஞாயிறு மத்யாஷ்டமி
மத்யாஷ்டமி என்பது மகாளயபட்ச காலத்தின் நடுவில் வரும் ஒரு புண்ணிய நாள் ஆகும். மகாளயபட்ச காலத்தில் வரும் இந்த அஷ்டமி திதியில், முன்னோர்களை (பித்ருக்களை) வழிபட வேண்டும், தர்ப்பணம் செய்ய வேண்டும், மேலும் காலபைரவரை வணங்க வேண்டும். துர்மரணத்தால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய திலஹோமம் செய்யவும் இந்த நாள் ஏற்றது.
14.9.2025 - ஞாயிறு பெரியவாச்சான் பிள்ளை அவதாரம்
திருக்கண்ணமங்கை என்று ஒரு தலம். வைணவ 108 திவ்யதேசங்களில் ஒன்று. திருவாரூருக்கு அருகில் உள்ளது. அங்கே திருமங்கை ஆழ்வார், பக்தவச்சலப் பெருமாளைப் பாடும்பொழுது, பெருமாளுடைய முகக்குறிப்பைக் கண்டு, ‘‘நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’’ என்று பாடுகின்றார். திருமங்கை ஆழ்வார் பாசுரங்களைக் கேட்ட பகவான், அந்தப் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களையும் கேட்க வேண்டும் என்று எண்ணுவதைப் புரிந்துகொண்ட ஆழ்வார், ‘‘என்னுடைய பாசுரங்களின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், நானும் புதிய பிறவி எடுக்க வேண்டும். நீயும் ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்’’ என்று சொல்ல, அப்படியே பகவானும் ஆழ்வாரும் அவதாரம் எடுத்தனர். திருமங்கையாழ்வார் நம்பிள்ளை என்கின்ற ஆசாரியராக அவதரித்தார். பகவான் பக்தவச்சலப் பெருமாள், கிருஷ்ணர் சூரி என்கின்ற பெயரில் நம்பிள்ளையின் சீடராக அவதாரம் செய்து, பாசுரங்களின் அர்த்தங்களை எல்லாம் கிரகித்து, அந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தானே உரை எழுதித் தந்தார். அந்த கிருஷ்ண சூரிதான் வைணவத்தில் பெரியவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்படுபவர். அவர் அவதரித்த திருநட்சத்திரம் ஆவணி ரோகிணி. இன்று ரோகிணி நன்னாள். அவர் அவதரித்த திருத்தலம் சென்னை கும்பகோணம் சாலையில் கும்பகோணத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சேங்கனூர் என்ற திருத்தலம். வாய்ப்பு உள்ளவர்கள் பெரிய வாச்சான் பிள்ளையின் அவதார நட்சத்திர தினமான இன்று இத்தலங்களைத் தரிசிக்கலாம். அவருடைய பேரருளைப் பெறலாம்.
14.9.2025 - ஞாயிறு நாயனாராச்சான் பிள்ளை அவதாரம்
ஆவணி ரோஹிணியில் அவதரித்த நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்வீகார புத்ரர் (வளர்ப்புப் பிள்ளை) ஆவார். இவருக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (ஸுந்தரவர ராஜாசார்யார்) என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பல நூல்களை எழுதியுள்ளார். பிள்ளை லோகாசார்யார் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர் வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்தார். இவர் அருளிச் செய்தவை எல்லாம் வைணவ ஸம்ப்ரதாயத்தின் தத்துவங்களை வெளிக் கொணர்வதாக அமைந்துள்ளது. இவர் அருளிச் செய்த சரமோபாய நிர்ணயம் எம்பெருமானாரின் பெரும்புகழைக் காட்டுவது. சிறு பிராயத்தில் இருக்கும் பொழுது முக்த போகா வளியை எழுதி, பெரியவாச்சான் பிள்ளையிடம் காண்பித்ததாகவும், முக்த போகாவளியின் ஆழ்ந்த அர்த்தங்களையும் கருத்துக்களையும் கண்ட பெரியவாச்சான் பிள்ளை, அதை மிகவும் புகழ்ந்து மேலும் அவருக்கு விவரமாக வைணவத் தத்துவங்களைக் கற்பித்தார். வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ரங்காசார்யர், பரகால தாஸர் ஆகியோர் பெரிய வாச்சான் பிள்ளையின் சிஷ்யர்களாக இருப்பினும் பகவத் விஷயங்களை நாயனாராச்சான் பிள்ளையிடமிருந்தே கற்றுக் கொண்டனர். நாமும் சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள அவரது திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.
15.9.2025 - திங்கள் அவிதவா நவமி, வியதீபாதம்
நட்சத்திரங்கள் 27. யோகங்களும் 27. இந்த இருபத்தேழு யோகங்களில் வியதீபாதம் என்கின்ற யோகமும் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் இந்த வியதீபாதம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். சாதாரண தர்ப்பணத்தைவிட இந்த நாளில் செய்கின்ற தர்ப்பணம் பத்து மடங்கு அதிகப் பலனைத் தரும். மகாளயபட்சத்தில் இந்த யோகம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு அவசியம் முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன் செய்ய வேண்டும். அந்த நாள் இன்று. தவிர இன்றைய நவமி ‘‘அவிதவா’’ என்று சாஸ்திரம் அழைக்கிறது. சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி என்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
15.9.2025 - திங்கள் ஸ்ரீ பாஞ்சராத்ர ஜெயந்தி
ஆவணி மாதம் அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளை பாஞ்சராத்ர ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். இன்று கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு. வைணவ ஆகமங்கள் இரண்டு. ஸ்ரீ வைகானசம் மற்றும் பாஞ்சராத்ரம். பெருமாள் கோயில்களில் வைகானச முறை பின் பற்றப்படும் கோயில்கள் உண்டு. திருமலைக் கோயில், திருச்சித்ரகூடம் போன்ற கோயில்கள் வைகானச முறை பின்பற்றப்படும் கோயில்கள். ஸ்ரீரங்கம் பாஞ்சராத்ர ஆகமம் பின்பற்றப்படும் கோயில். (14.9.2025) வைகானச ஆகமம் பின்பற்றப்படும் கோயில்களில் ஸ்ரீ ஜெயந்தி திருவிழா அனுசரிக்கப்பட்டது. இன்று பாஞ்சராத்திரம் பின்பற்றப்படும் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா அனுசரிக்கப்படும். பல கோயில்களில் பெருமாள் புறப்பாடு நடந்து ஆங்காங்கே உறியடி உற்சவமும் நடைபெறும்.
16.9.2025 - செவ்வாய் மதுரை நவநீத கிருஷ்ணன் உறியடி விழா
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயில், அழகர்கோயில் அருகே உள்ள கிருஷ்ணர் சந்நதி, தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயில், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன் கோயில்களில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படும். பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படும். மதுரை வடக்கு மாசிவீதி நவநீதகிருஷ்ணன் உறியடி விழா என்பது கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். இந்த விழாவில், கிருஷ்ணர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருவார், பின்பு கோயில் முன்பு வழுக்குமரம் ஏறும் போட்டி மற்றும் உறியடி உற்சவம் நடைபெறும்.
17.9.2025 - புதன் ஷடசீதி புண்ணிய காலம்
வருடத்தில் நான்கு மாதங்கள் ‘ஷடசீதி புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது. அவை ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாத ஒன்றாம் தேதி. ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவசக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள்பெற்று வருவது தனிச் சிறப்பினைத் தரும். பகவான் மகா விஷ்ணுவை ஆராதிப்பதற்காகவே அமைந்த மாதம் புரட்டாசி. இதைக் கன்யா மாதம் என்பார்கள். சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை நாம் மாதப் பிறப்பு என்கிறோம். இந்த நாளில் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
17.9.2025 - புதன் விஸ்வகர்மா ஜெயந்தி
சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம்பெயர்ந்த நாளான கன்யா சங்கராந்தி நாளன்று விஸ்வகர்மா ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்வகர்மாவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. உலகத்தின் பிரதான கட்டடக் கலைஞரும் தெய்வீக தச்சருமான பிரம்மாவின் மகனான விஸ்வகர்மாவை மக்கள் வணங்குகிறார்கள். பக்தர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை வழிபடுகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
17.9.2025 - புதன் சர்வ ஏகாதசி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி அறை சேவை
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா ஏகாதசி’’ என்று பெயர். அஜா என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருவது இந்த ஏகாதசி. ஏகாதசியின் மகிமையை ஏகாதசி மகாத்மியம், ஸ்ரீராமாயணம், மகாபாரதம், மற்றும் பாகவத புராணங்கள் தெரிவிக்கின்றன. சம்சார வாழ்க்கையில் சிக்கித் தவித்து, தடுமாறும் ஏழை மக்கள் உய்வு பெற, எளிய வழியாகக் கொடுக்கப்பட்டிருப்பதுதான் ஏகாதசி விரதம். எளிய மக்களுக்கான சக்தி வாய்ந்த விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதி உபவாசம் இருப்பது. உடல் நன்மைக்காகவும் சுத்திக்காகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்காக நாம சங்கீர்த்தனம், தானம் செய்தல், கோயிலுக்குச் செல்லுதல், பூஜைகள் செய்தல் என்று பல வழிகள் சொல்லப்படுகின்றன. இந்த இரண்டு பகுதிகளும் ஏகாதசிக்கு அங்கங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு ஏகாதசியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி அறை சேவை அற்புதமாக இருக்கும். இன்றும் அதனைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு பெறலாம். ஏகாதசி போலவே துவாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த துவாதசிக்கு “கல்கி துவாதசி” என்று பெயர். சகல மங்கலங்களையும் தரும் துவாதசி அன்று நெல்லிக்காயோடு பாரணை செய்யுங்கள்.
19.9.2025 - வெள்ளி கஜ கௌரி விரதம்
ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கஜகௌரி விரதம் என்பது பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி இருக்கும் பார்வதி தேவியின் வடிவமான ஸ்ரீ கஜகௌரியை வணங்கும் விரதமாகும். இந்த விரதத்தைப் பின்பற்றுவதன் மூலம் சந்தான பாக்கியம் கிட்டும் என்றும், வம்சம் விருத்தியாகும்.
19.9.2025 - வெள்ளி திருவிடைக்கழி முருகன் பாதயாத்திரை தொடக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. திருவிடைக்கழி முருகன் கோயில். திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப் பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். திருவிடைக்கழி பாதயாத்திரை என்பது சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோயிலை சென்றடைகிறது.