6.9.2025 - சனி அனந்த விரதம்
அனந்தன் என்றால் பகவான் மகாவிஷ்ணுவைக் குறிக்கும். அவருடைய ஆதிசேஷப் படுக்கைக்கு அனந்த சயனம் என்று பெயர். மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் இடையிலுள்ள மந்திரம் ``அனந்தாய நம:’’ (மற்றவை அச்சுதாய நம: கோவிந்தாய நம:) ஒவ்வொரு நாளும் ஆசமநீயம் செய்யும் பொழுது இந்த மூன்று மந்திரங்களையும் சொல்வது வழக்கம். ஆனந்தனுக்கு உரிய பிரத்தியேக விரதம் இது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் கடும் துயரத்தில் இருந்தபோது, சாட்சாத் கிருஷ்ண பகவானே அவர்களுக்கு அனந்தபத்மநாப விரதத்தின் சிறப்பைச் சொன்னார். இதை தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டும். சிவப்பு நிற ஆடை அணிந்து செய்வது சிறப்பு. வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜையறையில் பெருமாள் படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும்.
கலசம் வைத்தும் செய்யலாம். நிவேதனம் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். நிவேதனமாக அதிரசம், போளி, பால் பாயசம், சித்ரான்னங்கள் வைத்துப் படைக்கலாம்.
வாழைப்பழம் தாம்பூலம் வைத்தாலும் 14 எண்ணிக் கையில் வைத்து வணங்க வேண்டும். வரலட்சுமி விரதம் போல நோன்புக் கயிறு உண்டு. கயிறு சிவப்பு நிறத்தில் 14 முடிச்சுகள் போட வேண்டும். மகாவிஷ்ணுக்குரிய மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் சொல்லி, தூப தீபம் காட்டி நிவேதிக்க வேண்டும். பிறகு நோன்புக் கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.
அனந்தபத்மநாப பூஜை என்பது சகல துக்கங்களையும் விரட்டுவது. குல விருத்திக்கு உதவுவது. விரதத்தை முறையாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், குறைந்த பட்சம் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய்தீபம் போட்டு துளசி மாலை சாத்தி வணங்கி வரலாம். அருகாமையில் பள்ளி கொண்ட பெருமாள் இல்லை என்று சொன்னால், ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையே பள்ளிகொண்ட பெருமாளாக நினைத்து வணங்கலாம்.
6.9.2025 - சனி கதலி கௌரி விரதம்
கதலி கவுரி விரதம், வாழையடி வாழையாக குலம் தழைக்கும். வாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஷ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல் ஆகும். இந்த விரத நாளில், ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்குக் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம். வாழை இலையை வைத்து, அதன்மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும். 108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர், அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும்.
7.9.2025 - ஞாயிறு பௌர்ணமி, உமாமகேஸ்வர விரதம்
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம். இதில் உமாமகேஸ்வர விரதம் மிக முக்கியமானது. இந்த விரதத்தை முறையாக இருந்துவிட்டால் மற்ற விரதங்கள்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமாமகேஸ்வர விரதம். தம்பதி களின் கருத்து வேறுபாடுகளை நீக்கி, அவர்களை ஒன்றிணைக்கும் விரதம்தான் உமாமகேஸ்வர விரதம். சிவனையும் சக்தியையும் ஒருசேர வழிபட்டு, அவர்கள் நல்லாசிகளைப் பெறுவதுதான் இந்த விரதத்தின் நோக்கம். இந்தப் பூஜையால் தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை நிலவும் பெரியவர்களிடத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அந்தக் குற்றம் நீங்கும்.
இந்த விரதத்தில் 16 முடிச்சு உள்ள சிவப்பு நோன்புக் கயிற்றை பூஜை செய்து கட்டிக் கொள்வார்கள். வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யும் பொழுது இந்தப் பூஜையை மிக விரிவாகச் செய்யலாம். அதற்கான மந்திரங்களும் உண்டு. ஆனால், மிக எளிதாக இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், கணவனும் மனைவியும் இணைந்து வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை அறையில் பார்வதி பரமேஸ்வரர் படத்துக்கு அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி, தூப தீபங்கள் காண்பித்து, நிவேதனங்கள் செய்து, அதோடு சிவப்பு நிற 16 முடிச்சு உள்ள நோன்புக் கயிற்றையும் வைத்து பூஜை முடிவில் அதை கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் உமா மகேஸ்வரர்களின் பேரருள் கிடைக்கும். இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் விடாமல் செய்தால், பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
8.9.2025 - திங்கள் சுவாமி சிவானந்தர் பிறந்த தினம்
சிவானந்த சரஸ்வதி என்று அழைக்கப் படும் சுவாமி சிவானந்தர், ரிசிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக்கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மிக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுப் பயணங்கள் மூலமாகவும் பரப்பினார். சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமி விட்டு சென்ற ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 14 ஜூலை 1963ல் மஹாசமாதி அடைந்தார்.
8.9.2025 - திங்கள் மகாளயபட்சம் ஆரம்பம்
இன்றிலிருந்து மகாளயபட்சம் துவங்குகிறது. தென்புலத்தார் என்று போற்றப்படும், நமது மறைந்த குல முன்னோர்கள், பித்ருக்கள் வாழும் உலகிலிருந்து, நம்மைப் பார்க்கவும், நமக்கு நல்லாசிகள் வழங்கவும், நாம் இருக்கும் இடம் தேடி வருகின்ற காலம்தான் மகாளயபட்சம். இந்த மகாளயபட்ச காலத்தில் நம்மைத் தேடிவரும் நம் முன்னோர்களுக்கு மிகுந்த அன்போடு வரவேற்பு தரவேண்டும். சாஸ்திரப்படி அவர்களது தாகத்தையும் பசியையும் போக்க வேண்டும். அவர்களை வணங்கி நல்லாசிகளைப் பெற வேண்டும். இவர்களைத் திருப்திபடுத்தாமல் தெய்வத்தைத் திருப்திபடுத்த முடியாது. பிதுரர்கள் பூஜையை விட்டுவிட்டு தெய்வ பூஜை செய்தாலும் பலன் கிடைக்காது. இதை தங்கள் அனுபவத்தில் பல பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மகாளய பட்சத்தில் தென்புலத்தார் வழிபாட்டை முறையாகச் செய்ய வேண்டும்.
பொதுவாகவே இறந்தவர்களுக்கு அமாவாசை தர்ப்பணம், வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த திதியில், சிராத்தம் செய்ய வேண்டும். சில குடும்பங்களில் இவற்றையெல்லாம் மறந்து போயிருப்பார்கள். இறந்த திதியும் ஞாபகம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மகாளயபட்சம் என்பது மிக முக்கியமானது. “மறந்தவர்க்கு மஹாளயம்” என்று ஒரு பழமொழியே உண்டு. மகாளய பட்சத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் தருவது சிறப்பு என்றாலும்கூட, முடியாதவர்கள், ஏதேனும் ஒரு நாளில் தங்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.
10.9.2025 - புதன் சங்கடஹர சதுர்த்தி
இன்று விரதமிருந்து விநாயகர் வழிபாடு நடத்த, சகல வினைகளும் போகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். புருகண்டி முனிவர், சங்கட ஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றார். கிருத வீரியன் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.
12.9.2025 - வெள்ளி மகாபரணி
மகாளயபட்சத்தில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு நாள் தர்ப்பணத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. மகாளயபட்சத்தில் வருகின்ற பரணி நட்சத்திர நாள் மகா பரணி எனப்படும். இந்த பரணி நட்சத்திரம் எம தர்மராஜனுக்கு உரிய நட்சத்திரம். யாராக இருந்தாலும் இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றவுடன், சந்திக்க வேண்டிய முதல் நபர் கால தேவனாகிய எமதர்மராஜன். அவருக்கு எமன் என்று மட்டும் பெயர் கிடையாது. தர்மராஜன் என்கிற பெயரும் உண்டு. காரணம், அவர் இன்னார் இனியார் என்று பார்க்காமல், இந்த உலகத்தில் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப, பாவ, புண்ணிய விளைவுகளை அனுபவிக்கும் படியாகச் செய்பவர். எனவே, மகா பரணி நாளில், எமனுடைய ஆளுகைக்கு உட்பட்ட, பிதுரர்கள், சத்கதி பெறுவதற்காக அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யும் பொழுது, எமதர்மராஜன் மகிழ்ந்து, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி தருகின்றார். நமக்கும் நல்லருள் தருகின்றார். குறிப்பாக பரணி, மகம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் இந்த மகாபரணியை அனுஷ்டிக்க வேண்டும். சில ஆலயங்களில் அன்றைய தினம் எம தீபம் ஏற்றுவார்கள். அந்த ஆலயங்களுக்கு இயன்றால் சென்று முன்னோர்களை நினைத்து எம தீபம் ஏற்றலாம்.
12.9.2025 - வெள்ளி கார்த்திகை விரதம்
கார்த்திகை விரதம் இருப்பதன் மூலமாக குருவின் அருளைப் பெறலாம். கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய சூரியன், ஆவணி மாதத்தில் முழு பலத்தோடு தன்னுடைய ஆட்சி வீடாகிய சிம்ம ராசியில் இருக்கிறார். எனவே இந்த மாத கார்த்திகை விரதம் மிகச் சிறப்பான விரதமாகக் கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திர நாளில், பல முருகன் ஆலயங் களிலும், சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து கார்த்திகை விரதம் இருப்பவர்களுக்கு முருகப் பெருமானுடைய பேரருளும் குருவினுடைய ஆசிர்வாதமும், நிச்சயம் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரம், வைணவத்தில் திருமங்கையாழ்வாரின் நட்சத்திரமும்கூட. அவர் அவதரித்த தலமாகிய சீர்காழி பக்கத்தில் உள்ள திருநகரியில், அவருக்கு மிகச் சிறப்பான திருமஞ்சனம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.