Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

30.8.2025 - சனி முக்தாபரண சப்தமி

ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தாபரண சப்தமி முக்கியமாக வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள், திருமணம் நல்ல வரன் அமைய உமா மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இது அமுக்தாபரண சப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. உமா மகேஸ்வரரை வழிபட சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்கிறது பவிஷ்ய புராணம். இன்று பார்வதி பரமேஸ்வரனை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம்.

31.8.2025 - ஞாயிறு ஜேஷ்டாஷ்டமி

மகாலட்சுமியின் மூத்த சகோதரி (மூத்த தேவியான) ஜேஷ்டா தேவிக்கு ஒரு விரதம் உண்டு. அது ஜேஷ்டாவிரதம் என்று வழங்கப்படுகிறது. இந்த தேவியை நாம் மூதேவி என்று அழைக்கிறோம். உண்மையில் அந்தப் பெயர் பொருந்தாது. மூத்த தேவி அதாவது முதல் தேவி என்பதைத்தான் ஜேஷ்டாதேவி என்று சொல்வார்கள். தசமஹா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில் ஒரு தேவி வணங்கப்படுகிறார். ஜேஷ்டா தேவியின் அமைப்பு குறித்து லிங்க புராணத்தில் விவரங்கள் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் ஜேஷ்டாதேவி வழிபாடு பிரமாதமாக இருந்தது. வடமாவட்ட சிவன் கோயில்களில் ஜேஷ்டாதேவி உருவங்களை புடை சிற்பங்களாகக் காணலாம். இந்த வழிபாடு, செல்வ வளத்தைப் பெருக்குவதோடு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் ஜேஷ்டாதேவி, லலிதா பரமேஸ்வரி என்ற பெயரில் காட்சி தருகின்றார். நல்ல நிம்மதியும் தூக்கமும் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், ஜேஷ்டா தேவியை வணங்க வேண்டும். “எங்களை நீ பிடிக்காதே” என்று மூத்த தேவியை வணங்கும் விரதம் இது. பொதுவாகவே அஷ்டமி திதியில் கடைபிடிப்பார்கள்.

31.8.2025 - ஞாயிறு தூர்வாஷ்டமி

இன்று தூர்வாஷ்டமி எனப்படும் தினம். அறுகம்புல்லை (தூர்) பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய, தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.

31.8.2025 - ஞாயிறு குலச்சிறை நாயனார் குருபூஜை

‘‘கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டா’’ என்று சிவனடியார்களைப் பற்றிச் சொல்லுவார்கள். குலச்சிறையார் பாண்டிய நாட்டில் மண மேல்குடி என்ற ஊரில் அவதரித்தவர். சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உபசாரம் செய்து அதுவே சிவத்தொண்டு என்று மன நிறைவு காண்பவர். நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்தார். மன்னன் சமண நெறியில் இருந்தாலும், தான் வழிவழியாகப் பின்பற்றி வந்த சைவ நெறியில் இருந்து வழுவாமல் இருந்தார். சமயம் வருகின்ற பொழுது மன்னனையும் மாற்றவேண்டும் என்று தினசரி ஆலவாய் அண்ணலிடம் பிரார்த்தனை செய்வார். ஒருமுறை திருஞானசம்பந்தர் திருமறைக்காடு என்ற ஊரில் தங்கி இருப்பதை அறிந்த குலச்சிறை நாயனார், அவரைச் சென்று பணிந்து மகிழ்ந்தார். பாண்டிய மன்னனின் துணைவியான பாண்டிமாதேவியிடம் சொல்லி, அவரை பாண்டி நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்று விரும்பினார். அப்படி வந்த பொழுது அவருக்குக் கடுமையான பல சோதனைகள் ஏற்பட்டன. சமணர்கள் எதிர்த்து வாது புரிந்தனர். சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைத்தனர். இத்தனையும் தாண்டி அவர் பாண்டி நாட்டில் மன்னனையும் மாற்றி சைவத்தையும் பரப்பினார். அதற்கு துணை புரிந்தவர் குலச்சிறையார். கடுமையான சோதனைகளுக்கு நடுவிலே பாண்டிய நாட்டில் சைவ நெறியைப் பரப்பியவர் என்பதால், இவருக்கு நாயன்மார் அந்தஸ்து கிடைத்தது. அவருடைய குருபூஜை தினம் ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரம் இன்று.

2.9.2025 - செவ்வாய் குங்கிலிய கலய நாயனார் குருபூஜை

காலசம்ஹார மூர்த்தி அருள் கொடுக்கும் தலம் திருக்கடவூர். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. மறலியை உதைத்து மார்க்கண்டேயனின் ஆயுளைக் காத்த தலம் என்பதால், இத்தலத்தில் ஆயுள் தோஷம் நீங்கவும், அன்னை அபிராமியின் அருள் பெறவும் பலரும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். சாந்தி ஹோமங்கள் செய்து கொள்கின்றனர். அங்கே அவதரித்தவர் குங்கிலியக் கலய நாயனார். எளிமையாக இருந்தாலும் அதை வலிமையாகவும் வைராக்கியத்துடன் செய்வதுதான் சிவத்தொண்டு எனும் அருந்தொண்டு. குங்கிலியம் எனும் நறுமணப் பொருள் கொண்டு தூபம் இடும் திருப்பணியை தினசரி இறைவனுக்கு செய்து வந்ததால், இவருடைய இயற்பெயர் மறைந்து குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்பட்டார். கோயில் முழுக்க வாசனைப் பொருட்களோடு குங்கிலியம் கலந்து தூபமிட்டு வந்ததால், பெரும்பொருள் தேவைப்பட்டது. தன்னுடைய நிலங்களையும் மற்ற பொருட்களையும் விற்று இடைவிடாது திருப்பணியைச் செய்து வந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவருடைய மனைவி தன்னுடைய மாங்கல்யத்தைத் தந்து, இதனை விற்று உணவுப் பொருட்களைக் கொண்டு வருக என்று சொன்னார்.

அப்பொழுது வணிகன் ஒருவன் வாசனையுள்ள குங்கிலிய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தான். இந்த குங்கிலியப் பொதிகளை வாங்கினால் பல நாட்கள் இறைவனுக்குத் தூபம் போடலாமே என்று மகிழ்ந்து, உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வைத்திருந்த தாலிக்கொடியை தந்து, குங்கிலியப் பொதிகளை சுமந்து வீட்டில் சேமித்து வைத்தார். இறைவன் தொண்டு தடைபடவில்லையே என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வயிற்றில் பசி வாட்டியது. ஆயினும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஈரத் துணியை வயிற்றில் போட்டுக் கொண்டு சிவ சிந்தனையுடன் உறங்கினார். இவருடைய வைராக்கியத்தைக் கண்ட இறைவனார், குபேரனை அழைத்து பொற்குவியலை அவருடைய வீட்டில் நிறைக்குமாறு கட்டளையிட்டார். அச்செல்வத்தைக் கொண்டு வறுமை நீங்கி தொடர்ந்து திருப்பணியை செய்து வந்தார். அந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தது. சிவலிங்கம் சாய்ந்ததால் அரசன் மனம் கலங்கினான். தன்னுடைய சகல படைகளையும் வைத்துக்கொண்டு, கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றான். ஆனால் அது நடக்கவில்லை. இதனை அறிந்த குங்கிலியக் கலயனார், தானே நேரில் சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிய கயிற்றை தன் கழுத்தில் கட்டி மிகவும் சிரமப்பட்டு இழுத்தார். அடியாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன், அதற்கு மேலும் சாய்ந்திருக்காமல் நிமிர்ந்தார். இதனைக் கண்டு அரசன் மகிழ்ச்சி அடைந்தான். நாயனார் அங்கேயே சில நாட்கள் தங்கி திருப்பணியாற்றிவிட்டு, திருக்கடவூர் திரும்பினார். நாயனாரின் சிவத்தொண்டு அறிந்து, அப்பரும், ஞானசம்பந்தரும் இத்தலத்திற்கு எழுந்தருளினர். அவர்களை நன்கு உபசரித்தார். இப்படி பலவாறு சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து, நிறைவாக சிவனடி அணைந்தார். அவருடைய குருபூஜை நாள், ஆவணி மாதம் மூல நட்சத்திரம். இன்று.

2.9.2025 - செவ்வாய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பவித்ரோத்சவம்

எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும் போதும், மற்றைய உற்சவங்களிலும், மந்த்ர லோபம் (குறைவு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய சாந்நித்யம் குறைய வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காக பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. பவித்ரோத்ஸவம் என்பது புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும். பெருமாளையே ``பவித்ரன்’’ என அழைப்பார்கள். ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த உற்சவத்தில், உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல், மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பவித்ரோத்சவம் இன்று முதல் 7 நாட்கள் நடைபெறும்.

3.9.2025 - புதன் ஏகாதசி

வாமன அவதாரத்தை ஒட்டி வருகின்ற ஏகாதசி, விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி. இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார் என்பதால், அவசியம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் என்பது மிகவும் எளிமையான விரதம். பிரத்யேகமாக மன் நாராயணனை வழிபடவேண்டிய விரதம். எங்கும் நிறைந்து இருக்கக் கூடிய மஹாவிஷ்ணுவின் பூரணமான அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் கடைபிடிக்கலாம். இதற்கு பத்ம ஏகாதேசி என்றும் ஒரு பெயர் உண்டு. பூராட நட்சத்திரத்தில் வருவதால், அவசியம் மகாலட்சுமித் தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். சகல பாவங்களையும் தோஷங்களையும் தூளாக்கும் ஏகாதசி விரதம் இது. ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, மத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு நிவேதித்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

3.9.2025 - புதன் மதுரை புட்டு திருவிழா

சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றைக் குறிக்கும் மதுரை புட்டு திருவிழா, மிகவும் பிரபலமான திருவிழா ஆகும். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் பூராடம் நட்சத்திரத்தில் இந்த விழா நடைபெறும். உலகங்கள் யாவும் படைத்தவன், தன் தலை மீது வைத்து சுமந்த மண் இந்த மதுரையம்பதி மண்! மதுரை சுந்தரேசுவரர் தலையில் மண் சுமந்து வரும் அழகை காண கண்கள் கோடி வேண்டும்!

3.9.2025 - புதன் திருக்குறுங்குடிநம்பி பவித்ரோத்சவம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் நிழலில் உள்ள வைணவத் தலமான திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயர் கோயிலில் பவித்ரோத்சவம் 7 நாட்கள் நடைபெறுகிறது. கோயி லின் கருவறை மற்றும் பிற சந்நதிகள் சுத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்படும். மேலும், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படும்.

4.9.2025 - வியாழன் வாமன ஜெயந்தி

இன்று வாமன அவதாரம் நிகழ்ந்த நாள். சகல விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நதி இருக்கக்கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். வாமன அவதாரத்தை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும். இழந்த பொருள் எதுவாயினும் திரும்பக்

கிடைக்கும்.

5.9.2025 - வெள்ளி ஓணம், திருவோண விரதம், பிரதோஷம்

``கொல்ல வருஷம்’’ எனப்படும் மலையாள வருடத்தின் தொடக்கம், ஆவணி திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம், ‘அறுவடைத் திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது. சங்ககால ஏடுகளில் வாமனன் அவதரித்ததும், திருவோண நாள் எனக் கூறப்படுகிறது. இன்று திருவோண விரதமும்கூட. மாதந்தோறும் திருவோண விரதம் இருப்பவர்கள், மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறுவார்கள். கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோயிலில் திருவோண நாளில் திருவோண தீபம், பிராகாரமாக வலம் வரும். பல கோயில்களில் திருமாலுக்குச் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். உள் பிராகார புறப்பாடும் உண்டு. இன்று பிரதோஷமும்கூட. பல சிவாலயங்களில் மாலை வேளையான பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும்.

விஷ்ணுபிரியா