Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்த வார விசேஷங்கள்

20.7.2025 - ஞாயிறு ஆடி கிருத்திகை

ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப் பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அந்தக் கார்த்திகை பெண்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறுபேரும் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடிக் கிருத்திகை என்ற இரு நாட்களும் சிறப்பானதாகும். வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்குப் பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்குப் புதியதாகப் பூக்களைச் சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும். முருகப்பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கலை நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து நிவேதனமாக வைக்கலாம். தூப தீராத கஷ்டத்தைத் தீர்த்து வைத்து, சகல செல்வங்களும் அள்ளித்தரும் இந்த ஆடி மாத கார்த்திகை விரதம்.

20.7.2025 - ஞாயிறு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் உற்சவம் ஆரம்பம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் தானே! ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் என்று சொல்வதை விட ஆண்டாள் கோயில் நாச்சியார் கோயில் என்று தான் அப்பகுதி மக்கள் அழைப்பார்கள் அத்தனை ஏற்றம் ஆண்டாளுக்கு. அவள் அவதரித்த மாதம் ஆடி மாதம். நட்சத்திரம் பூர நட்சத்திரம். இதை ஒட்டி ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் உற்சவம், இன்று முதல் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

21.7.2025 - திங்கள்யோகினி ஏகாதசி

பெருமாளுக்கு சனிக்கிழமை, புரட்டாசி மாதம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை, ஏகாதசி போன்ற நாட்கள் உகந்ததாக கருதப்படுகிறது. மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களில் பக்தர்கள் பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்தால் புண்ணியம் என்பது ஐதீகம். இன்றைய ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வணங்குவது, பாவங்களை நீக்கும், அமைதியைக் கொடுக்கும் மற்றும் நல்வாழ்வை மேம் படுத்தும். யோகினி ஏகாதசி விரதத்தை, சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். எண்பத்தெட்டாயிரம் பிராமணர்களுக்கு உணவளிப்பதன் மூலம் ஒருவன் எந்தப் புண்ணியத்தைப் பெறுகிறானோ, அந்தளவு புண்ணியத்தை இந்த யோகினி ஏகாதசியன்று கடுமையான விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைக்கும். ஏகாதசி நாளில் துளசி இலையை பறிக்கக்கூடாது என்பதால் பெருமாளுக்கு துளசி இலையை படைக்க முதல் நாளிலேயே பறித்து வைத்து விட வேண்டும்.

21.7.2025 - திங்கள் மச்சமுனி சித்தர் குருபூஜை

ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வ நாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்தத் தயிரை ஏற்றுக்கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.

23.7.2025 - புதன் கூற்றுவ நாயனார் குருபூஜை

இன்று இரண்டு விசேஷங்கள். ஒன்று தேய்பிறை மாத சிவராத்திரி நன்னாள். இன்று மாலை சிவன் கோயிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. இன்று ஒரு நாயன்மாரின் குருபூஜை விழாவும் இருக்கிறது. அவருடைய பெயர் கூற்றுவ நாயனார். மிகச் சிறந்த போர் வீரர். போர் செய்யும் போது எதிரிப் படைகளுக்கு எமன்போல நிற்பவர் என்பதால் கூற்றுவர். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். களந்தை என்னும் பதியிலே வாழ்ந்தவர். சிவ பெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும், சிவனடியார் பாதம் பணிந்தும், சிவ சிந்தனையோடு வாழ்ந்து வந்தார். தம்முடைய ஆற்றலால் அரசர்களையும் வென்று அவர்களது நாடுகளையெல்லாம் கவர்ந்தார். எல்லாவற்றையும் இணைத்து பேரரசராக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அந்தக் காலத்தில் தானே முடி சூட்டிக் கொள்ள முடியாது. மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லை வாழந்தணர்களைக் கேட்டார். அவர்கள் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி, மற்றவர்களுக்கு முடி சூட்ட மாட்டோம் என்று மறுத்து விட்டனர். அதேநேரம், தங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளாது, தாம் மறுத்துவிட்டதால் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி கேரள தேசத்திற்குச் சென்று விட்டனர். தம்மால் தில்லை நடராஜருக்குத் தொண்டு புரியும் தில்லை அந்தணர்கள் வேறு தேசம் சென்று விட்டதை அறிந்து வருந்தினார் கூற்றுவர். மனம் தளர்ந்தார். இனி தனக்கு முடி சூட்ட வேண்டிய அவசியமில்லை என்று கோயிலுக்குச் சென்று “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டி யருளினார். அவருடைய குரு பூஜை இன்று ஆடி திருவாதிரை.

23.7.2025 புதன்புவனகிரி அழகிய, மணவாள ஏகாங்கி ஸ்வாமிகள் திருநட்சத்திரம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் வைணவ மரபில் அவதரித்தவர் “புவனகிரி அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள்’’. பிறந்த ஆண்டு 1860, ஆடி மாதம் 4-ஆம் தேதி, தேய் பிறை சதுர்த்தசி திதி, திருவாதிரை. இவருடைய இயற்பெயர் அரங்கசாமி. திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் விவசாயமும், பின்னாட்களில் ஜவுளித் தொழிலும் செய்தார். மிகச் சிறந்த குரல் அமைப்பும், கீர்த்தனைகள் தமிழிலும் தெலுங்கிலும் இயற்றிப் பாடும் திறமை இருந்தது. பகவானை நினைத்து சதா சர்வ காலமும் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தார். தனக்கு ஒரு அறை அமைத்துக் கொண்டு, அதில் தம்புரு, மிருதங்கம், ஜால்ரா முதலில் இசைக் கருவிகளோடு அற்புதமாக பஜனை பாடும் இவரோடு, ஊராரும் சேர்ந்து கொண்டனர்.இவருடைய கவி ஆற்றலையும், இலக்கண அறிவையும், வைணவப் புலமையையும் கண்டு, இயற்பெயரான அரங்கசாமி பெயர் மறைந்து அழகிய மணவாளதாசர் என்ற பெயர் பிரசித்தி ஆயிற்று. எப்பொழுதும் பகவான் பெருமையைப் பாடி, பஜனை, சொற்பொழிவு என்று இருந்ததால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல், இவர் செய்து வந்த ஜவுளி வியாபாரத்தில் பற்றாக்குறையும் நஷ்டமும் வந்தது. ‘‘தாம் உலகியலில் இருந்து விலகி முற்றிலும் இறைப்பணியில் ஈடுபடுவதற்காகவே வணிகத்தில் தமக்குபெருமாள் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார். இனி நாம் வேறு வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று நினைத்தார் சுவாமிகள். வைணவ தத்துவ சித்தாந்த அனுஷ்டான நுட்பங்களை எல்லாம் விளக்கி, வினாவிடை அமைப்பில் `வைஷ்ணவ தீபிகை’ என்கிற நூலை எழுதி வெளியிட்டார். அர்த்த பஞ்சகநூலையும் வெளியிட்டார் சுவாமிகள். ஒவ்வொரு வருடமும் திருவரங்கத் திருத்தலத்திற்கு மார்கழி உற்சவத்திற்கு எழுந்தருளுவது வழக்கம். இப்படி பற்பல வகையில் தமிழ்ப்பணி, உபன்யாசப்பணி, பாடல்கள் இயற்றுதல், பற்பல ஊர்களிலும் சீடர் குழாமை உருவாக்கி அவர்களுக்கு போதனைகள் செய்தல், வித்யாசாலை நடத்துதல் எனச் செய்துவந்த `அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகள்’, 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூருக்கு எழுந்தருளி ஒரு மடத்தை ஏற்படுத்தினார். மணவாள மாமுனிகள் மடம் என்ற பெயருள்ள அம்மடத்தில் தங்கியிருந்தார். வைணவ சமயத்தை வளர்த்துக்கொண்டு அங்கு தங்கியிருந்த சுவாமிகள், 1927-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு நாலு மணிக்கு ஏகாதசி அன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவருடைய திருவரசு ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவாதிரை அன்று, அவர் அவதரித்த புவனகிரியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவர் ராமாயணம் சொன்ன பட்டாபிராமர் கோயிலில் அவருடைய திருஉருவச் சிலை அமைந்திருக்கிறது.

24.7.2025 வியாழன் ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசை இன்று சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் கோயில் திருவிழா விசேஷமாக நடக்கும். நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இந்த மலை ‘‘சதுரகிரி’’ என அழைக்கப்படுகிறது. சதுரகிரி மகாலிங்கம் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். சுந்தரமகாலிங்கம் சந்நதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த வனப் பகுதியானது கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்த இடம். இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளது. இங்கு மகாலிங்க சுவாமி சித்தர்களுக்கு காட்சியளித்த நாள் ஆடி அமாவாசை. எனவே ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.

24.7.2025 வியாழன் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஐந்து கருட சேவை

இன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில் 5ஆம் நாள் திருவிழா ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நான்கு வீதிகளிலும் பஜனை பாடல்களோடு பாகவதர்கள் எழுப்பும் நாம சங்கீர்த் தனம் விண்ணைத் தொடும். காலை திருவாடிப் பூர பந்தலிலே பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்வார். ஸ்ரீ பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ னிவாச பெருமாள், திருத்தங்காலப்பன், ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னர் அனைவரும் இணைந்து இரவு கருட சேவையாக வீதி வலம் வருவார்கள். இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வலம் வரும் காட்சி அதி அற்புதமாக இருக்கும்.

25.7.2025 வெள்ளி ஆடி இரண்டாம் வெள்ளி

“கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம்” போல் ஒருமாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. வாரக்கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு.

விஷ்ணுபிரியா