Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்த வார விசேஷங்கள்

28.6.2025 - சனி ஆவுடையார் கோயில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உலா

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினை கொண்டது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பதுபோல கொடிமரம் இல்லை. பலி பீடம் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் ஜோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை. இங்கு ஆண்டுப் பெருவிழா அற்புதமாக நடந்து வருகின்றது. அவ்விழாவில் இன்று குருத்தோலை சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உலா காணும் காட்சி.

29.6.2025 - ஞாயிறு மாணிக்கவாசகர் குருபூஜை

வான்கலந்த மாணிக்கவாசக!

நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

என்பது திருஅருட்பிரகாச வள்ளலார் பாடல். மணிவாசகரின் பக்தியின் சிறப்பையும், திருவாசகத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் பாடல். பக்திச்சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்களை சிவபெருமானே ஒரு வேதியர் வேடத்தில் வந்து எழுதிக் கொண்டாராம். நிறைவாக திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்ட, மாணிக்கவாசகரும் பாடி முடித் தார். பாடி முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் ‘மாணிக்க வாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவா சகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. இவருடைய பெருமையை உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் மணிவாசகரின் பாடல்களைப் போற்றுகின்றனர். ஒருநாள், திருவாசகத்தின் சாரமான பொருள் எது? என்று மணிவாசகரிடம் கேட்க, மணிவாசகர் சற்றும் தயங்காது, “இதோ அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றானே அவன் தான்” என்று சொல்லி, பஞ்சாட்சர படிகளைத் தாண்டி, உள்ளே நுழைந்து, சிவபெருமானோடு ஜோதியில் கலந்தார் என்பது வரலாறு. தில்லை பாதி; திருவாசகம் பாதி அல்லவா! ‘‘நரியைக் குதிரைசெய்’’ எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படு கிறது. ஞான வாழ்வு வாழ்ந்த இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார். அவர் குருபூஜை இன்று.

29.6.2025 - ஞாயிறு மெலட்டூர் விநாயகர் புறப்பாடு

மெலட்டூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருகாவூர் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டரில் உள்ள ஒரு கிராமம். பாகவத மேளா நடன நாடகங்களுக்குப் பெயர் பெற்றது. திருமண வரம் அருள்வார் உன்னத புர விநாயகர் கோயில் இங்குள்ளது. உன்னதபுரம் என்பதுதான் இந்தத் திருத்தலத்தின் முதற் பெயராகும். மெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி புறப்பாடாக விநாயகர் ஊர்வலமாக வருவார். இந்தப் புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

30.6.2025 - திங்கள் ஸ்கந்த பஞ்சமி

இன்று பஞ்சமி திதி மஹாலஷ்மிக்குரிய பூர நட்சத்திரம். சந்திரனுக்குரிய திங்கள்கிழமை. பஞ்சமி திதியும் சஷ்டி திதியும் இணைந்திருக்கும்.சஷ்டி திதி முருகனுக்கு உரியது. எனவே, அந்த சஷ்டியை முருகன் பெயரோடு இணைத்து ‘‘ஸ்கந்த சஷ்டி’’ என்று சொல்லுவார்கள். ஒரு நாளில் சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்குள் பஞ்சமி திதி முடிந்து, சஷ்டி திதி ஆரம்பித்து விட்டால், பஞ்சமியிலேயே சஷ்டி விரதத்தைத் தொடங்கி விடுவார்கள். முருகனை எண்ணி பஞ்சமி விரதத்தையும் தொடர்ந்து சஷ்டி விரதத்தையும் மேற்கொள்பவர்களுக்கு இகபரசுகங்களும், இல்வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் கிடைக்கும். பஞ்சமி திதியில் தொடங்கி சஷ்டி திதியிலும் முருகனை நினைந்து அவன் பெயரை உச்சரித்து திரும்பத் திரும்ப ஜபம் செய்பவர்களுக்கு மரண பயமே வராது.

30.6.2025 - திங்கள் ஆவுடையார் கோயில் திருத்தேர்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால், இந்த ஆவுடையார் கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இன்று ஆவுடையார் கோயில் தேர்த் திருவிழா

30.6.2025 - திங்கள் குமார சஷ்டி

ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறை குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர். பக்தர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை முழு ஈடுபாட்டுடன் வழிபட வேண்டும். இறைவனுக்கு சந்தனம், குங்குமம், தூபம், பூ, பழங்கள் என சிறப்பு பிரசாதம் படைக்க வேண்டும். ‘ஸ்கந்த ஷஷ்டி கவசம்’, ‘சுப்ரமணிய புஜங்கம்’ அல்லது ‘சுப்ரமணிய புராணம்’ ஆகியவற்றைப் பாராயணம் செய்வது மிகவும் மங்களகரமானது. இந்த விரதம் அனைத்து அசுர குணங்களிலிருந்தும் விடுவிக்கும். மனரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.

1.7.2025 - செவ்வாய்சிதம்பரம் தேர்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேர்த் திருவிழா ஆனிப் பெருவிழா உற்சவங்களில் முக்கியமான திருவிழா இன்று நடை பெறுகிறது. இதில், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளிய தேர்கள் ராஜ (தேர்) வீதிகளில் வலம் வரும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தைக் கண்டு களிப்பர். நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருள்வார்கள்.

1.7.2025 - செவ்வாய் அமர்நீதி நாயனார் குருபூஜை

அமர்நீதி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டிலே பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்க்குப் பணிசெய்வதையே, தனது ஆத்மா கடைத் தேறும் வழியாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு உணவு அளித்தல், ஆடை அளித்தல் ஆகிய திருத்தொண்டு களைச் செய்துவந்தார். இறைவர், திருநல்லூரில் பொருந்திய அம்மையப் பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். தலைசிறந்த சிவனடியார்களில் ஒருவரான அமர்நீதியார் குரு பூசைநாள் இன்று, ஆனி பூரம்.

1.7.2025 - 2.7.2025 ஆனித் திருமஞ்சனம்

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். பொதுவாக, ஆலயங்கள் பலவற்றிலும் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் ஒருநாளில் ஆறு பூஜை செய்வதற்கு இணையாக நாம் ஆண்டில் ஆறு அபிஷேகம் நடத்துகிறோம். மற்ற இடங்களை விட சிதம்பரத்தில் விசேஷம் பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா நடக்கும். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். நடராஜ மூர்த்தியே தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவார். தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புதக் காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

3.7.2025 - வியாழன் திருக்கோளக்குடி திருக்கல்யாணம்

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சைவ சமயப் பேரெழுச்சிக்காக ஏழாம் நூற்றாண்டில் பல இடங்களில் உள்ள திருக் கோயில்களை பாடல் பெற்ற திருத்தலங்களாக மாற்றினார்கள். இந்த எழுச்சியின் காரணமாக சில இடங்களில் சிவபெருமானுக்கு குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசுவரர் ஆலயம். இங்கே பெரிய சிறிய கோளப் பாறைகளை சுமந்தபடி ஒரு அழகான குன்று இருக்கிறது அதன் நடுவில் உள்ள மலைக் கோயிலாக உள்ளது. அகத்தியர், புலத்தியர் போன்ற ரிஷிகள் வழிபட்ட இத்தலம் திருப்பத்தூருக்கு அருகில் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வைகாசிப் பெருவிழாவில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

3.7.2025 - வியாழன்மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராமர் உற்சவம் ஆரம்பம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 24 கி.மீ தொலை விலும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் உள்ளது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடிகொண்ட கோதண்டராமரிடம் வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத் திலிருந்து காக்கப்பட்டதாகவும் அது முதல் அக்கோயிலுக்கு ஏரி காத்த ராமர் கோயில் என்று பெயராயிற்று. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம் மோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.

4.7.2025 - வெள்ளி விவேகானந்தர் நினைவு நாள்

வீரத்துறவி விவேகானந்தரின் 123 வது நினைவு நாள் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியவர் சுவாமி விவேகானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. ‘‘செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. விழித்துக் கொள்ள எழு ‘‘எனும் தாரக மந்திரத்தை இளைஞர்களிடையே பரப்பியவர். மானுடர்களுக்குச் செய்யும் சேவை ஒன்றே இறைவனை அடையும் எளிய வழி’’ என்று காட்டியவர்.

4.7.2025 - வெள்ளி சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,  சுதர்சன ஜெயந்தி உற்சவமாகக் கொண்டாடப்படும். கடன் தொல்லை நீங்க சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறப்பானதாகும். சுதர்சனாரை வழிபடுபவர்களுக்கு எந்த விதமான மந்திர சக்தியாலும் தந்திர சக்தியினாலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் சுதர்சன வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது. தோஷங்கள் இருந்தாலும் நிவர்த்தி செய்யக் கூடியவர் சுதர்சனர். இன்று அவரை வணங்குங்கள்.

4.7.2025 - வெள்ளி திருத்தங்கல் உற்சவம் தொடக்கம்

108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடைவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். மேலும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவர். இங்கு வருடம் தோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். 10 நாள் உற்சவமான இந்தப் பெருவிழா இன்று துவங்குகிறது. ஐந்தாம் நாள் கருட சேவையும் ஒன்பதாம் நாள்

தேரோட்டமும் விசேஷமானவை.

விஷ்ணுபிரியா