23.8.2025 - சனி
இளையான்குடி மாற நாயனார் குருபூஜை
இளையான்குடியில் பிறந்த மாறனார், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் கொண்டு திகழ்ந்தார். தம் இல்லத்திற்கு சிவனடியார் வந்தால், எதிரே சென்று கை கூப்பி வணங்கி, வரவேற்று, அவர் களுக்கு உணவளிப்பார். ஒருநாள் நல்ல மழை. உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகு நேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப் பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவில் சிவபெருமான், அடியார் கோலங்கொண்டு கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்றார். உணவளிக்க வீட்டில் ஏது மில்லையே என வருத்தம் மிகுந்தது. பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதல மடைந்த கூரையிலிருந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது துணைவியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார். அவர் குரு பூஜை நாள் இன்று.
23.8.2025 - சனி
திருச்செந்தூர் முருகன் தேர்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். திருச்செந்தூரில் முருகன் தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். வங்கக் கடலோரம் 2ஆம் படை வீடான அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும். ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டின் திருத்தேர் உற்சவம் இன்று நடைபெறும்.
24.8.2025 - ஞாயிறு
ஆவணி ஞாயிறு
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆவணி ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபடுவது சிறந்தது என்று கருதப்படுகிறது. குறிப்பாக திருமண மாகாத பெண்கள் நல்ல கணவருக்காகவும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியத்திற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. புற்றுக்கு பால் ஊற்றலாம்.
24.8.2025 - ஞாயிறு
கல்கி ஜெயந்தி
யுகங்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. இவை நான்கும் சேர்ந்தது சதுர் யுகம். மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் ஒவ்வொரு யுகங்களிலும் இந்த அவதாரங்கள் உண்டு அதில் பத்தாவது அவதாரம் கல்கி அவதாரம். பல சதுர் யுகங்கள் உள்ளதால், ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றுவதற்காக கல்கி, பல முறை அவதாரம் எடுத்து உள்ளார். அந்த கல்கி ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. கல்கி ஜெயந்தி அன்று காலையில் எழுந்து புனித நீராட வேண்டும். திருமால் ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்முடைய பாவ கர்மங்களை நீக்கி புண்ணியங்கள் தரும்படி பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். அதர்மம் மிஞ்சுகின்ற பொழுது தோன்றுகின்ற அவதாரம் என்பதினால் எக்காரணத்தை முன்னிட்டும் அதர்மம் செய்யாமல் இருக்க வேண்டும். அன்றைக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை முதலியவைகளை பாராயணம் செய்யலாம்.
25.8.2025 - திங்கள்
திருவாரூர் மடப்புரம்
தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
திருவாரூரில் ஸ்ரீதியாகராஜர் சுவாமி கோயில் தேரும் கமலாலய குளமும் புகழ் பெற்றவை. ஆனால் திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் சித்தர் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதிமடம். இது திருவாரூர் நகரின் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பிறந்த ஊர் திருச்சி அருகே கீழாலத்தூர். பெற்றோர் சிவ சிதம்பரம் பிள்ளை - மீனாம்பிகை. சுவாமிகள் திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்த மையால் ‘அருணாசலம்’ என்றே பெயர் சூட்டினர்.அருணாசலத்திடம் குழந்தைகளுக்கே உண்டான எந்த குணங்களும் இல்லை. பல நேரங்களில் பத்மாசனம் அமர்ந்து நிஷ்டையில் மூழ்கி விடுவார். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை! இதை குறித்து பெற்றோர் மிகவும் கவலை கொண்டனர்.
ஒருநாள் அவர்களது வீட்டுக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் பெற்றோர் தங்கள் கவலையை தெரிவித்தனர். முற்றும் உணர்ந்த அந்தத் துறவி, தவத்தில் ஆழ்ந்திருந்த சிறுவன் அருணாசலத்தை நோக்கி பெற்றோரை பேசச் சொல்கிறார். அவர்களும், ‘மகனே! ஏன் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறாய்?’ என கேட்டனர். சிறுவன் அருணாச்சலம் முதல் முதலாக வாய் திறந்து, ‘சும்மா இருக்கிறேன்!’ என்றான்.இப்பொழுது துறவி, ‘சும்மா இருக்கின்ற நீ யார்?’ என்று கேட்க, ‘நானே நீ! நீயே நான்!’ என்று பதிலளித்தான். வியந்துபோன பெற்றோரிடம் துறவி, ‘இவன் ஊமை அல்ல! உலகை உய்விக்க வந்த மகான்!!’ என்று கூறி விடைபெற்றார். சித்தரான சுவாமிகள் எண்ணற்ற செயல்களைச் செய்தார்.1835 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12 ம் நாள் உத்திரம் நட்சத்திரம் புதன்கிழமை குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அன்பர்களிடம், ‘முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!!’ என்று கூறி அகண்ட பரிபூரண சச்சிதானந்த இறைவனுடன் கலந்தார்.
25.8.2025 - திங்கள்
வாரியார் பிறந்தநாள்
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் பகுதியில் 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தார். இவர் தனது 8 வயதில் கவிபாடும் ஆற்றலைப் பெற்றார். தனது 12-வது வயதில் பதினாறாயிரம் பண்களைக் கற்று 18-வது வயதில்சொற்பொழிவாற்றும் திறன் பெற்றார். தனியாக புராணப் பிரசங்கங்களைச் செய்யத் தொடங்கினார். இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டி அமைந்ததால் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், பாமர மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் எழுதியுள்ளார். தவிர 150 நூல்களை இவர் எழுதியுள்ளார். சிறந்த முருக பக்தரான கிருபானந்த வாரியார், தினந்தோறும் பல்வேறு ஆன்மிகச் சொற் பொழிவு நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத் திறன், எழுத்துத் திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற வாரியார் ‘‘அருள்மொழி அரசு’’, ‘‘திருப்புகழ் ஜோதி’’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
26.8.2025 - செவ்வாய்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா
சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறுகிறது. 2. நாரைக்கு மோட்சம் அளித்தல், 3. மாணிக்கம் விற்றல், 4. தருமிக்கு பொற்கிழி அருளியது, 5. உலவாக்கோட்டை அருளியது, 6. பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 7. வளையல் விற்றல், 8. நரியை பரியாக்கியது, 9. பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10. விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இன்று காலை: 9 மணி - தங்க சப்பரம். கருண்குருவிக்கு உபதேசம் அளித்த லீலை நடைபெறும். இரவு: 7 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர், வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா நடைபெறும்.
27.8.2025 - புதன்
விநாயகர் சதுர்த்தி
ஆவணி மாதம் வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அது இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி, ஆவணி மாதம் 11 ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. காலை சந்திரனுக்குரிய ஹஸ்தம் முடிந்து செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரம் வருகிறது. சதுர்த்தியில் அங்காரகனுக்கு சிறப்பு உண்டு. காரணம் செவ்வாய்க்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர் விநாயகர் என்று ஒரு வரலாறு உண்டு. அதைப் போலவே இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரை வழிபட்டால் ராகு கேதுவால் வரும் தோஷம் நீங்கும்.
28.8.2025 - வியாழன்
ரிஷி பஞ்சமி
பஞ்சமி திதி மிக உயர்வானது. விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும். அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷி களையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும். இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இதில் நிவேதனமாக தேன்- பசும்பாலுடன் அனைத்து வகை கனிகளையும் படைப்பது சாலச்சிறந்தது. ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்தரிஷி விரத பூஜை என்பார்கள்.
29.8.2025 - வெள்ளி
சஷ்டி
முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் சஷ்டிப் பெருவிழா முருகனுக்கு உகப்பைத் தருவது. சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு நல்ல வரங்களைத் தருவது. திதிகளில் ஆறாவது திதியாக வரும் சஷ்டி ஆறுமுகனுக்கு உகந்த திதியாகும் சஷ்டித் திருநாளில், முருகனை மனம் உருகி வழி பட்டால் ஒன்பது கோள்களும் துன்பப்படுத்தாது நன்மையைத் தரும். கணவனும் மனைவியும் சேர்ந்து முருகப்பெருமானை சஷ்டியில் விரதம் இருந்து துதிக்க நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் பிறந்த குழந்தைகள் உயர்வாக வாழ்வார்கள் முனிவர்களும் தேவர்களும் கடைப்பிடித்த விரதம் சஷ்டி விரதம் இந்த சஷ்டி விரதத்தில் அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வணங்குவதும், பூஜை அறையில் கந்த சஷ்டி படிப்பதும் நன்மையைப் பெற்றுத் தரும்.