Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவக்கரை-வக்ரகாளி

திருவக்கரை-வக்ரகாளி

ஆதித்ய சோழரும், பராந்தகரும், கண்டராதித்தரும், செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து அமைத்த கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதிஉக்கிரமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கி தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள். வக்ராசுரனையும், அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர். வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அமர்ந்தாள். இன்றும் அந்த திருவெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவும், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதி நெருங்கும்போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம் - விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

புன்னைநல்லூர் - மாரியம்மன்

திக்குகளையே ஆடையாக அணிந்து ஞானத்தின் உச்சியில் தோய்ந்திருந்த ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திரரின் திருக்கரங்களால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் இவள். துளஜா மன்னனின் மகளுக்கு அம்மை நோயினால் கண் பார்வை பாதிக்கப்பட்டது. அரச மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அரசரின் கனவில் தோன்றி பாலகியாய் சிரித்தாள். தனிக்கோயில் எழுப்பும்படி அருளாணையிட்டாள். புற்றுருவாக இருந்தவளை உருவமாக்கத்தான் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திரர் சென்றார். அங்கேயே சக்ர பிரதிஷ்டையும் செய்தார். மாரியம்மன் அருளை மழையாகப் பொழிந்தாள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பில் நனைகிறாள். அம்மை நோய் கண்டவர்களுக்காக அம்மை நோய் மண்டபம் உள்ளது. இங்கு மாவிளக்கு மாவு பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். பார்வை குறைபாடு உடையவர்கள் இவளை தரிசிக்க விரைவில் நலமடைகிறார்கள். தஞ்சையிலிருது 9 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

உளுந்தாண்டார்கோயில் - துர்க்கை

இலுப்பை காடான இத்தலத்தில் சேரன் செங்கூட்டுவன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் இந்த துர்க்கையை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோயிலின் வலப்புறத்தில் யாக மண்டபத்தைக் காணலாம். இங்குதான் சதுரக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அஷ்டதசபுஜ துர்க்கையாக அழகோடும் கம்பீரத்தோடும் காட்சி தருகிறாள். அகத்தியர் வணங்கிய அன்னை இவள். ஞாயிற்றுக் கிழமை நாலரை மணிமுதல் ஆறு மணி வரையிலான ராகுகால நேரத்தில் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. தோல்வியில் துவண்டோரை தூக்கி நிறுத்தும் தயாபரி. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

கீவளூர்-அஞ்சுவட்டத்தம்மன்

இறைவனே ஆனாலும் சரிதான், வதம் செய்தால் அதுவும் பாவம்தான். அப்படித்தான் சூரபத்மனை அழித்து வேறொரு உருவில் அவனைப் பெற்றாலும், ஏனோ ஒரு தவிப்பும் அமைதியின்மையும் கந்தனுக்குள் கொதித்தபடி இருந்தது. கீவளூர் எனும் இத்தலத்தைச் சுற்றிலுமுள்ள ஐந்து தலங்களிலும் பஞ்சலிங்க மூர்த்திகளை பூஜித்து விட்டு, இறுதியில் இத்தலத்திலுள்ள கேடிலியப்பரை பூஜிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பார்வதி அன்னை காளியின் அம்சத்தோடு அஞ்சேல் என்று வானம் முழுவதும் அடைத்துக் கொண்டு ஆசீர்வதித்தாள். குழம்பிப் போயிருந்த கந்தனின் நெஞ்சம் அன்னையின் தரிசனத்தில் தெளிந்தது. அன்றுமுதல் இந்த அம்மனை அஞ்சுவட்டத்தம்மன் என்றழைத்தனர். கலங்கி நின்றோரை கரையேற்றும் முக்திதேவி இவள். நிம்மதி வேண்டும் என்பவர்கள் இத்தலத்தில் நின்று சென்றாலே போதும். திருவாரூர் - நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.