Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

பகுதி 6

கடற்கரையில் அமைந்துள்ள திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய திருப்புகழ்த் திருத்தலங்களைத் தொடர்ந்து நாம் காணவிருப்பது, கடலை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் தலமாகிய திருப்பாதிரிப்புலியூர். பாடலீஸ்வரர் பிரஹன்நாயகியுடன் குடிகொண்டுள்ள திருத்தலம். இது கடைஞாழல் எனப்பட்ட கடலூரின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

இறைவி, பாதிரி [Trumpet Flower] மரத்தடியில் சிவனைப் பூஜித்த காரணத்தாலும், அன்றலர்ந்த புஷ்பங்களை மரம் ஏறிப் பறிப்பதற்காகத் தவமிருந்து புலிக்கால்களைப் பெற்ற புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) பூஜித்த காரணத்தினாலும், இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது. பாதிரி என்பது வடமொழியில் ‘பாடலி’ எனப்படுவதால், இறைவன் பாடலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

[பாடல் பெற்ற தலத்து இறைவன் என்பதால் பாடலீஸ்வரர் எனக் குறிப்பிடப்படுகிறார் என்று சிலர் கூறுவது, முற்றிலும் தவறான கருத்து]. பீஹார் தலைநகரமாகிய பாட்னா, பாடலி மலர்கள் நிறைந்த வனமாக இருந்த காரணத்தினால், முற்காலத்தில், பாடலிபுத்ரா என்றும் பாடலிக்ராமா என்றும் அழைக்கப்பட்டு வந்தது.சம்பந்தர், அப்பர், அருணகிரியார் ஆகியோரால் பாடப் பெற்ற தலம்; அருணகிரிநாதர், ‘பாடல வளநகர்’ என்று அழகாகக் குறிப்பிடுகிறார். வடமொழியிலும், இத்தலத்திற்கான புராணம் உள்ளது.

திருப்பாதிரிப்புலியூர் சிவனார் திருநாமங்கள் - கரையேற்றும் பிரான், கன்னிவனநாதன், சிவக்கொழுந்து, தோன்றாத்துணை முதலியன. ‘கரையேற்றும் பிரான்’ என்பது ‘கரையேறவிட்டவர்’ எனவும் வழங்கப்படுகிறது. சைவ மதத்தைச் சேர்ந்த நாவுக்கரசர் சமண மதத்தைத் தழுவினார். சூலை நோய் அவரைப் பீடித்த போது, தமக்கை கூறியதற்கு இணங்கி, திருவதிகை வீரட்டானேஸ்வரரை வணங்கி, நோய் நீங்கப் பெற்றார். சமணத் துறவிகளால் தூண்டப்பெற்று, பல்லவ மன்னன் மகேந்திரன் அவரைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினான். நீற்றறையில் இட்டான்; கல்லோடு சேர்த்துக் கட்டி, கடலில் எறிந்தான்.

“சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே”

என்று பாடினார். கல்லானது தெப்பமாக மிதந்து திருப்பாதிரிப்புலியூரை அடுத்துள்ள ஒரு குப்பத்தில் கரை சேர்ந்தது. இன்று அவ்விடம், “கரையேறிய குப்பம்” என்றும் “வண்டிப்பாளையம்” என்றும் அழைக்கப்படுகிறது. நாவுக்கரசர் பல ஆண்டுகள் வாழ்ந்த தலம் திருப்பாதிரிப்புலியூர். சித்திரை அனுஷம் அன்று இறைவன் பாடலீஸ்வரர் வண்டிப்பாளையத்திற்கு எழுந்தருளுகிறார்.கிழக்கு நோக்கிய கோயில்; ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் மற்றும் நந்தியைத் தரிசிக்கலாம். துவார விநாயகர், துவார சுப்பிரமணியரைத் தொழுது, வாயிலைக் கடந்து இடப்புறம் திரும்பினால் உள் சுற்றில் திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும், அடுத்து மூல மூர்த்தமும் தனித்தனிச் சந்நதிகளாக உள்ளன. அப்பர் கை கூப்பி உழவாரத்துடன் காட்சி தருகிறார்.

கருவறையில் பாடலீஸ்வரர் வெள்ளிக் கவசத்துடன் நாகாபரணம் பூண்டு, வெண்ணீற்றுப் பட்டையுடன் காட்சி அளிக்கிறார். மற்ற கோயில்களைப் போல் இல்லாமல் இங்கு மட்டும் பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. நாள்தோறும் பள்ளியறைக்கு அம்பிகையே எழுந்தருளுகிறாள்.வடக்கு வாயில் வழியாக அம்பிகையின் கோயிலை அடையலாம். உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், உற்சவ அம்பாள் சந்நதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம்.

பிரஹன்நாயகி, பெரிய நாயகி, தோகை நாயகி என்று பல நாமங்களைக் கொண்டவள். பாதிரி மரத்தடியில் அமர்ந்து சிவனைப் பூஜித்ததால், “வாகினி” என்ற பெயரும் அமைந்தது. ஒரு சாபத்தின் காரணமாக முயலாகத் திரிந்த முனிவர் ஒருவரது திருமேனி, அம்பிகை தவம் புரிந்து வந்த பாதிரி மரத்தின் கிளை மீது பட, அவர் சாப விமோசனம் பெற்றார் என்கிறது தல புராணம். ஆதி பாதிரி மரம் கவசமிட்டுக் காப்பாற்றப்பட்டு வருகிறது. பாதிரி மரத்தடியில் பீடம் மட்டும் உள்ளது. அன்னையும் அவருக்கு உதவியாக வந்த விநாயகரும் மரத்தில் அரூபமாக உறைகிறார்கள் என்பது நம்பிக்கை.

“பவன ரூபி பவனம் அயின்றந்தப்

பவன மென்னும் பவனத்தின் மன்னியே

பவனப் போலிகள் நீங்க, சரவண

பவனும் தேட நின்றாள் அப் பவானியே”

- திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

[அன்னை பவானியானவள் காற்றின் உருவம் கொண்டு, வாயுவையே பட்சணமாக உட்கொண்டு, வாயுலோகம் எனும் உலகத்தில் தங்கிப் பாவனை செய்யும் போலிகள் நீங்க, தன் குமாரனான முருகனும் தேடிக்காண இயலாதவாறு வாயுவாய் நின்றாள்].இறைவன் பிரகார வலம் வரும்போது, அறுபத்துமூவரைத் தரிசித்து, தல விநாயகராகிய, “சொன்னவாராஹிவிநாயக”ப் பெருமானைத் தரிசிக்கலாம். அம்பிகை தவம் செய்ய உதவி செய்ததால், பாசாங்குசத்திற்குப் பதிலாக, விநாயகர், பாதிரிமலர்க் கொத்துடன் காட்சி அளிக்கிறார். காட்சி தந்த லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் இவர்களை வணங்கி, முருகப் பெருமான் சந்நதியை அடைகிறோம். கருத்துச் செறிவு மிக்க திருப்பாதிரிப்புலியூர் திருப்புகழை இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

நிணமொடு குருதி நரம்பு மாறிய

தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை

நிரை நிரை செறியும் உடம்பு நோய்படு முதுகாயம்

[மாமிசம், ரத்தம், நரம்பு, சதை, குடல், எலும்பு, தோல் இவை நெருங்கியுள்ள இவ்வுடம்பு, நோய் உண்டாகும் உடம்பாகும்.]

நிலை நிலை உருவ மலங்களாவது

நவ தொளை உடைய குரம்பையாம் இதில்

நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும்

[வயதுக்கேற்றபடி உருவ வேறுபாடும், மாசுகளும் உண்டாவதும், ஒன்பது தொளைகளை உடையதுமான சிறிய குடிசையாகிய இந்த உடலில் உயிரானது ஒட்டிக்கொண்டிருக்கும் போதே, வேண்டிய முயற்சிகளைச் செய்து, சிறந்த தவங்களை மேற்கொள்வதற்கான…]

உணர்விலி, ஜெபமுதல் ஒன்று தானிலி,

நிறையிலி, முறையிலி, அன்புதான் இலி,

உயர்விலி எனினும் என் நெஞ்சுதான் நினைவழியாமுன்

[உணர்ச்சி ஏதும் இல்லாதவன் (நான்); ஜபங்களை மேற்கொள்ளாதவன்; தீயவற்றை ஒதுக்கும் நற்குணமற்றவன்; நீதி, நெறி முறைமை சிறிதும் இல்லாதவன்; அன்பு செலுத்தாதவன்; உயரிய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்கும் லட்சியமற்றவன்; இத்தகைய பல குறைபாடுகள் இருப்பினும், என் அறிவு மயங்கி, ஞாபக சக்தி

அழியாமுன்…]

ஒரு திரு மரகத துங்க மாமிசை

அறுமுகம் ஒளிவிட வந்து நான்மறை

உபநிடமதனை விளங்க நீ அருள் புரிவாயே

[ஒப்பற்ற, அழகிய, பச்சை நிறம் கொண்ட, பரிசுத்தமான மயிலில் வந்து, உன் அழகிய ஆறுமுகங்களும் ஒளிவீச, என் முன்னே தோன்றி, நான்கு வேதங்கள், அவற்றின் முடிவான உபநிடதங்கள் இவற்றின் உட்பொருளை எனக்கு உபதேசிக்க வேண்டும்.]

பாடலின் பிற்பகுதியில் அழகிய ராமாயணக் குறிப்பை அளித்துள்ளார்.

“புணரியில் விரவி எழுந்த ஞாயிறு

விலகிய புரிசை இலங்கை வாழ்பதி

பொலமணி மகுட சிரங்கள் தாம் ஒருபது மாறி

புவியிடை உருள முனிந்து கூர்கணை

உறுசிலை வளைய வலிந்து நாடிய

புயலதி விறலர விண்டு மால் திரு

மருகோனே

[கடலில் படிந்து உதிக்கும் சூரியன் நேரே மேலாகப் போவதற்கு அஞ்சி, தாழ்வாகத் தாண்டிச் செல்லும் மதில்கள் கொண்ட இலங்கையின் அரசனான ராவணனின் பொன்மயமான மணிகள் உடைய மகுடங்களைத் தரித்திருக்கும் பத்துச் சிரங்களும், நிலைகுலைந்து பூமியில் உருளும்படி கோபித்து, கூரிய அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து முயற்சியுடன் வென்ற மேக நிறத்தவனாம் தீரன் ஹரி, விஷ்ணு எனப்படும் மாலோன் மருகனே!]

அணிதரு கயிலை நடுங்க ஓர் எழு

குலகிரி அடைய இடிந்து தூளெழ

அலையெறி உததி குழம்ப வேல்விடு முருகோனே

அமலை முன் அரிய தவம் செய் பாடல

வளநகர் மருவி அமர்ந்த தேசிக

அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே

[அழகிய கயிலை மலை நடுக்கமுற்று அசைய, எட்டுத் திக்கிலுள்ள மலைகளனைத்தும் தூளாக, அலை வீசும் கடல் கலங்க, வேலாயுதத்தைச் செலுத்திய முருகோனே!

உமையவள் பாதிரி மர நிழலில் அரிய தவம் செய்து, அருந்தவநாயகி என்று பெயர் பெற்ற பாடல வள நகர் எனப்படும் திருப்பாதிரிப்புலியூர் வீற்றிருக்கும் குருநாதா! அறுமுகவா! வள்ளி மணாளா! பெரும் தவசீலர்களின் இறைவனே!]

நான்மறை உபநிடமதனை விளங்க நீ அருள் புரிவாயே என்று முருகனை வேண்டுகிறார்.பாடல வள நகர் மேவு பாடலீஸ்வரரையும், அருந்தவநாயகியையும், குறமகள் அன்பனையும் வணங்கி வெளியே வருகிறோம்.

சித்ரா மூர்த்தி