பகுதி 13
குன்றாகவும், முப்புரங்களில் கடல் சூழப்பட்டும் விலங்குவது, ஈழ நாட்டின் கிழக்குக் கடற்கரையிலுள்ள திருப்புகழ்த் திருத்தலமான திருக்கோணமலை. அருணகிரியாரால் ‘திருக்கொணாமலை’ என்றும் சம்பந்தப் பெருமானால் ‘கோணமாமலை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் இது. மலையானது முக்கோண வடிவில் கடலினுள் நீண்டு கிடப்பதால், ‘திரிகோணமலை’ என்றும் பெயர் பெற்றது. [கன்யாகுமரி என்ற அழகிய பெயரை ‘கேப்கொமரின்’ என்று சிதைத்த ஆங்கிலேயர்கள், இத்தலத்தை ‘ட்ரின்கோமலி’ என்று அழைத்தனர்]. வெகு காலத்திற்கு முன்னரே, குன்றின் உச்சியிலும், நடுவிலும், அடிவாரத்திலுமாக மூன்று கோயில்கள் அமைந்திருந்ததால் தலம் கோணேஸ்வரம் எனப்படுகிறது.
வாயுவுக்கும் ஆதி சேடனுக்கும் நடந்த பலப்போட்டியில் ஆதி சேடன், தனது படத்தால், மூடியிருந்த கயிலைக் கொடுமுடிகளுள் மூன்று சிகரங்களை வாயு அடித்துத் தள்ளிற்று. அவைதாம் - திருக்காளத்தி, திரிசிராமலை, திருக்கோணமலை. இவை மூன்று தட்சிண கயிலாயம் எனப்படும்.
“முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியா மொழிவர்
பின்னார் வீழ்ந்தது திரிசிராமலையெனும் பிறங்கல்
அன்னதின் பிறகமைந்தது கோணமா அசலம்
இன்ன மூன்றையும் தட்சிண கயிலையென் றிசைப்பார்”
[செவ்வந்திப் புராணம்]
கோணமாமலை இறைவர் கோணேசுவரர். இறைவி மாதுமையம்மை. மனுமாணிக்க ராஜா எனும் அரசன் கி.மு. 1300 ஆம் ஆண்டிற்கு முன்னரே கோணேசருக்கு கோயில் அமைத்தான். அங்கு ஆயிரம் கால் மண்டபமும் கட்டினான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் கிட்டியுள்ளன. கி.பி. 1624 ஆம் ஆண்டு இத்திருக்கோயிலைப் போர்த்துகீசியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி ஒரு கோட்டையையும் கட்டிவிட்டனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தப் பெருமானும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் அருணகிரியாரும் இதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த கோயிலைத் தான் பாடியுள்ளனர் என்பது உறுதி.
‘திருக்கொணாமலை தலத்தாரு கோபுர நிலை’ என்று அருணகிரியார் போற்றித் துதித்த கோபுரத்தின் அழகைப் போர்த்துகீசியத் தளபதியும் கண்டு மகிழ்ந்திருப்பான் போலும்; தன் படையிலிருந்த ஓவிய வல்லான் ஒருவனைக் கொண்டு அதன் அழகை வரைந்து எடுத்துக்கொண்ட பின்னரே கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கினான். கோபுரத்து அழகைக் காட்ட அந்த ஓவியம் இன்றும் லிஸ்பன் நகரிலுள்ளது என்கின்றனர். [ஆதாரம் - புலவர் பு.மா.ஜயசெந்தில்நாதன் எழுதியுள்ள ‘திருமுறைத் திருத்தலங்கள்’ எனும் நூல்]. போர்த்துகீசியரால் அழிக்கப்பட்ட போதிலும், இந்துக்கள் அவ்வெற்றிடத்தை சிவ வழிபாட்டுத் தலமாக மதித்து வணங்கி வந்தனர்.
கோயில் இடிக்கப்பட்டபோது, பல தீவிர சிவ பக்தர்கள், கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அருகிலுள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பாதுகாப்பிற்காக இட்டார்கள். ஒரு திருவுருவத்தை, அருகிலுள்ள தம்பலகாமம் எனும் மருதவனம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து ரகசிய வழிபாடு செய்தனர். அவ்விடத்தை “ஆதி கோண நாயகர் கோயில்” என வழங்கினார்கள்.இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது, கோணேசர் மலையை நோக்கி, குண்டுகள் வீசப்பட்ட போதிலும், ஒன்றேனும் மலை மீது விழவில்லை.
இதிலிருந்து கோயிலின் தெய்விகத் தன்மையை உணரலாம். சுதந்திரம் பெற்ற பின் 1950 ஆம் ஆண்டில் பக்தர்கள் கோணேசருக்காக ஆலயம் அமைக்க எண்ணி, காசியிலிருந்து லிங்கம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர். அக்காலத்தில் நகரத்தார் கிணறு தோண்ட எண்ணி, மூன்றடி ஆழம் தோண்டிய போது, சிவனருளால் மாதுமையாள் சமேத கோணேசர், சந்திர சேகரர், பார்வதி பிள்ளையார், அஸ்த்ர தேவர் முதலான தெய்வத் திருவுருவங்கள் கிட்டின. இவையனைத்தையும் புதிய கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்தனர். 1963ஆம் ஆண்டு, முதல் கும்பாபிஷேகமும், 1981 ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்ற பின், கோயிலின் புனிதமும் சாந்நித்யமும் முழுவதுமாக வெளிப்பட்டன.
ராமேல்வரத்தில் இறைவனைப் போற்றிப் பதிகம் பாடிய பின்னர், சம்பந்தப் பெருமான் அங்கிருந்தவாறே ஞான திருஷ்டியில் கோணேசரைத் தரிசித்துப் பதிகம் பாடினார். ஒவ்வொரு பாடலிலும் கடலைக் குறிப்பிட்டு, தல வளத்தைப் பாடி, பின் கோணமாமலை அமர்ந்தாரே என்று நிறைவு செய்துள்ளார்.
“…வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒரு பால் மெல்லியலொடும் உடனாகி,
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி,
குன்றும், ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே”
- என்பது அவர் வாக்கு.
“நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமை உடையவர்; மெல்லியலாள் உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டவர்; கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்க, கடலலைகள் அடிப்பாகத்தில் வந்து மோதுகின்றன; கடற்சோலைகளின் மணம் வீசும் திருக்கோணமாமலையில் சிவனார் வீற்றிருந்தருளுகிறார்” என்பது கருத்து.திருக்கோணமலையிலிருந்து கற்களை எடுத்துச் சென்று ராமேஸ்வரம் கோயிலின் கருவறை கட்டப்பட்டது என்னும் செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கது!இன்றைய கோணேசர் ஆலயம், ஆகம விதிகளுக்கேற்ப அமைந்துள்ளது. ஆடலரசர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சூரியன், சந்திரன், நாகர், பைரவர், சண்டேசர் ஆகிய தெய்வத் திருவுருவங்களைக் காணலாம்.
இலங்கையை ஆண்ட ராவணன் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவன் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில், திருக்கோணேசர் கோயிலோடு அவன் கொண்ட தொடர்பினை, திருக்கோணேமலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு விளக்குகின்றது.அருணகிரிநாதர் இத்தலத்தில், ‘நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமானாகிய முருகனைப் போற்றிப் பாடிய அழகிய திருப்புகழ் ஒன்று நமக்குக் கிடைத்துள்ளது.
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்குமாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வருமுருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்தும் ஏழ்பவ கடற் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடித்தூளதா எறி
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே
குறிஞ்சி நாயகனே! சிவகாமியின் நாயகராம் சிவபிரானது அழகிய குமாரனே! ஆறுமுகங்கள் கொண்ட குருநாதனே! பேரழகுடைய குறப்பெண்ணாம் வள்ளி நாயகிக்கு மகிழ்வளிப்பவனே! வசிஷ்டர், காசிபர், தவத்தில் சிறந்த பல யோகியர்கள், அகஸ்திய முனிவர், இடைக்காடர் (சித்தர்), நக்கீரர் இவர்கள் அமைத்த பாடல்களின் உட்பொருளாய் வரும் முருகோனே!என்றும் அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் வாழும் திருக்கொணாமலை எனும் தலத்தில் விளங்கும் கோயிலின் கோபுர நிலைவாயிலில் கிளிகள் வீற்றிருக்கும் ‘கிளிப்பாடு பூதி’ எனும் இடத்தில் எழுந்தருளியிருப்பவனே!
நமது ஏழு வகைப் பிறப்பு எனும் சமுத்திரம் சூறைப்பட்டழியும்படி, தனது திருக்கரத்தில் எடுத்த வேலை, பகைவர்கள் பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்திய பெருமாளே! நினைத்த காரியங்களனைத்தும் அனுகூலமாக நிறைவேறும்படி அருளும் பெருமாளே!பாடலின் இடையில் வரும் பிரார்த்தனையும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்.
கலக்க மாகவெ மலக்கூடிலே மிகு
பிணிக்குளாகியெ தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே
கதிக்கு நாதன் நி உனைத் தேடியே புகழ்
உரைக்கு நாயெனை அருட்பார்வையாகவெ
கழற்குளாகவெ சிறப்பானதாய் அருள்தர வேணும்
கலக்கங்கள் மிக்க நெஞ்சை உடையனவாய், ஆணவம் - கன்மம் - மாயை எனும் மும்மலக் கூடாகிய இவ்வுடல், பல நோய்களுக்கு ஆளாகித் தவிக்காமல், உன்னைப் பாட்டில் அமைத்துப் பாடி, வாழ்வில் கடைத்தேற அருளும் ஒப்பற்ற செல்வமே!நீதான் எனக்கு நற்கதி அருளுபவன்; உன்னைத் தேடி வந்து உன் புகழைப் பாடும் சிறியனாகிய எனக்கு உனது அருட்பார்வையால் உன் திருவடியை வந்தடைவதற்கான சிறந்த வழியை அருள்வாயாக!என்று இறைஞ்சுகிறார்.
கோணேசர் ஆலயத்தில் நடக்கும் பெருவிழாக்களுள் ஒன்று ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு கோணேசர் எழுந்தருளும் போது, நகரிலுள்ள மற்ற ஆலய மூர்த்திகளும் எழுந்தருளுவார்கள். பங்குனித் தெப்பத் திருவிழாவில், சுவாமி தெப்பம் ஏறிக் கடற்கரையில் காட்சி கொடுப்பது கண் கொள்ளாக் காட்சியாகும் என்பர். சிவராத்திரி விழா, இறைவன் - இறைவியரின் நகர்வலத்துடன் மிகக் கோலாகலமாக நடத்தப்படுகிறது. அப்போது நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி, திருக்கோணமலை வரலாற்றில் புதிய திருப்பமிக்க நாளாகும். கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துகீசியரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டன. அதற்குப்பிறகு பழம்பெருமை மிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்களால் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்மை சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களுக்குக் காட்சியளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அருக்கொணாமலை [கீரிமலை]
இலங்கையில் அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ள மற்றொரு கடற்கரைத் தலம், அருக்கொணாமலை, இன்று கீரி மலை என்ற பெயராலேயே அறியப்படுகிறது. எந்தக் கோயிலில் இப்பாடல் குறிப்பாகப் பாடப் பெற்றது என்பதற்கான விவரம் நமக்குக் கிட்டவில்லை.“தொடுத்த வாளென” எனத் தொடங்கும் அருக்கொணாமலைப் பாடலின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
“வெடுத்த தாடகை சினத்தை ஓர்கணை
விடுத்து யாகமும் நடத்தியே ஒரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன்
மருகோனே”
- எனும் அடிகளில் ஒரு அழகிய ராமாயணக் குறிப்பைப் பாடியுள்ளார்.
கோபத்தால் படபடப்புடன் வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பு விடுத்து அடக்கியும், யாகத்தை நடத்தியும் ஒப்பற்ற விசேஷமான நீண்ட வில்லை முறித்தவரான திருமாலின் மருகனே! [விசுவாமித்திரர் கேட்டுக்கொண்டபடி, அவரது யாகத்தைக் காக்க ராம லட்சுமணர்கள் முனிவருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் போன வழியில், தாடகைஸ்ரீ ராமரை எதிர்க்க, அவள் அவரது பாணத்தால் மாண்டாள். சுபாகுவைக் கொன்றனர்; மாரீசனை அப்புறப்படுத்தினர். இங்ஙனம் முனிவரது வேள்வியை ராட்சதர்களிடமிருந்து காத்தனர். பின்னர் முனிவருடன் மிதிலைக்குச் சென்று நீண்ட சிவதனுசை முறித்து, ஜனகர் மகள் சீதையை மணந்தார் ராமர்.]
“விதித்து ஞால மதளித்த வேதனை
அதிர்த்து ஓர்முடி கரத்து உலா அனல்
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா”
இப்பூமியைப் படைத்தளித்த பிரமனைக் கலங்க வைத்து அவனுடைய சிரத்தை கையால் கிள்ளி அறுத்து, பின் நெருப்புக் கண்ணை விழித்து மன்மதனை எரித்த தந்தையாம் சிவனுக்குக் குருநாதனாகவும் விளங்கியவனே!
“அடுத்த ஆயிர விடப்பணாமுடி
நடுக்க மாமலை பிளக்கவே கவ
டரக்கர் மாமுடி பதைக்கவே பொரு மயில்வீரா”
வரிசையாயுள்ள ஆயிரம் விடம் நிறைந்த பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடன் நடுக்கமுறவும், கிரௌஞ்ச மலைபிளவுபட்டுத் தூள்படவும், வஞ்சக அரக்கர்களின் தலைகள் அறும்படியும் போர்புரிந்த மயில் வீரனே!
“அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு
முகத்தினோடணி குறத்தி யானையொ(டு)
அருக்கொணாமலை தருக்குலாவிய பெருமாளே”
முப்பத்திரண்டு அறங்களை வளர்த்து வாழ்ந்த தேவி மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்கள் விளங்க, வள்ளி தெய்வயானையுடன் அருக்கொணாமலை எனும் தலத்தில்
களிப்புடன் உலாவும் பெருமையனே!
நகுலேசுவரம் என்பது கீரிமலையில் உள்ள முக்கிய சிவாலயம் என்று தெரிய வருகிறது. இது தவிரவும் சித்தி விநாயகர் கோயில் ஒன்றும், சுப்பிரமணியர் ஆலயம் ஒன்றும் இருந்ததாக இணையதளச் செய்திகள் மூலம் அறிகிறோம்.அருணகிரிநாதர் இத்தலங்களுக்கெல்லாம் நேரில் சென்றிருக்க முடியுமா என்ற கேள்வி எழலாம். சுந்தரரும் திருஞானசம்பந்தரும் ராமேஸ்வரத்திலிருந்தவாறே திருக்கேதீச்சரம் எனும் ஈழநாட்டுத் தலத்தைப் பாடியுள்ளனர். சம்பந்தப் பெருமான் ராமேஸ்வரத்தைப் பதிகம் பாடி வணங்கிய பின்னர் அங்கிருந்தவாறே திருக்கோணமலையையும் தரிசித்துப் பாடினார் என்று பார்த்தோம்.
“தெழித்து முன் அரற்றும் செழுங்கடல் தரளம்
செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து வன் திரைகள் கரையிடைச் சேர்க்கும்
கோணமாமலை அமர்ந்தாரே”
- சம்பந்தர் தேவாரம்
இது போலவே, அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அருணகிரிநாதரும் இலங்கைத் தலங்களை ஞான த்ருஷ்டியால் பாடியிருப்பார் என்று கொள்ளலாம்.நாமும் வாழ்வில் ஒரு முறையாவது ‘நினைத்த காரியம் அநுக்கூலமே புரி’ முருகப்பெருமான் அருளால் மேற்குறிப்பிட்ட திருக்கொணாமலை, அருக்கொணாமலை தலங்களுக்குச் சென்று அவனைத் தரிசித்து வருவோமாக!
- தொடரும்
சித்ரா மூர்த்தி

