சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்.
காலம்: 10 ஆம் நூற்றாண்டு, சோழர் காலம்.
அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பூஜித்ததால், அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து, காட்சி தந்த தலமாதலால் இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்ற பெயருடன் வணங்கப்படுகிறார்.
இறைவி பெயர்: கருந்தார் குழலி
63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனார் பிறந்த தலம் திருப்புகலூர். முருக நாயனாருக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர், காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது
சிவத் தலமாகும்.
‘எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே’
- என்று தொடங்கும் பதிகம் பாடி ‘அப்பர்’ என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர் இறைவனுடன் கலந்தது இத்தலத்தில்தான்.
கருவறையின் வெளிப்புறக் கோஷ்டங்களில் கணேசர், நடராஜர், பிரம்மா, அகத்தியர், லிங்கோத்பவர், துர்க்கை, பிட்சாடனர், ஆலிங்கன கல்யாண சுந்தரர் ஆகியோர் எழிலுற வடிக்கப்பட்டுள்ளனர்.
இக்கோவிலில் உத்தம சோழன் (பொ.ஆ. 970-985) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் ராஜேந்திர சோழன் ( பொ.ஆ.1012-1044) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜராஜனின் துணைவியார்களில் ஒருவரான பஞ்சவன் மகாதேவியாரால் ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு திருவிழாக்கள் நடத்துவதற்கு அளிக்கப்பட்ட பல்வேறு கொடைகளை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இராஜராஜ சோழனின் சதய நட்சத்திரப் பிறப்பு பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது மற்றொரு சிறப்பு.இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதால், புதியதாக வீடு கட்டுபவர்கள், இக்கோயிலில் செங்கல் வைத்து வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.
மது ஜெகதீஷ்

