Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள் பகுதி-11

வேதங்களே இறைவனைப் பூசித்த பெருமையைப் பெற்ற கடற்கரைத் திருத்தலம் வேதாரண்யம். தேவார மூவராலும் அருணகிரியாராலும் பாடப்பெற்ற அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் குடிகொண்டிருக்கும் தலம். [வேதம் - மறைகள்; ஆரண்யம் - காடு]. தமிழில் திருமறைக்காடு எனப்படுகிறது. அருணகிரியார் வேதவனம் என்றழைக்கிறார். இறைவன் மறைக்காட்டீசுரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இறைவி வேத நாயகி, வீணாவாத விதூஷிணி என்றும் யாழைப் பழித்த மொழியம்மை என்றும் அழைக்கப்படுகிறாள்.

எதிரில் உள்ள கடல், புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் ஏராளமானோர் இங்கு நீராட வருகின்றனர். ராவணாதியர்களைக் கொன்ற பாவம் நீங்க ராமன் இங்கு நீராடிச் சென்றார். கோயிலுக்குள் இருக்கும் குளமும் புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுகிறது. முதற் பிராகாரத்திலுள்ள மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்ர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம், திருக்கோடி தீர்த்தம் ஆகியவை சுவாமி அபிஷேகத்திற்குரியவை என்கிறார் உ.வே.சா அவர்கள்.

[இவை யாவும் கிணறுகள்].கோயிலைத் தரிசிக்க ஐந்து நிலை ராஜ கோபுரங்களுடன் கூடிய கிழக்கு மேற்கு வாயில்கள் உள்ளன. இறைவி இறைவன் இருவருக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியே நுழையும் போது, கொடிமரம், பலிபீடம், நந்தி, பிள்ளையார் மண்டபம், தலவிருட்சமான வன்னி இவற்றைக் காணலாம். ராமர் தனது பாவம் தீரப் பூஜை செய்த வீரஹத்தி விநாயகரையும், குமாரப் பெருமானையும் மேற்கு வாயிலில் காணலாம். தெற்குப் பிராகாரத்தில் வேதவன விநாயகர் எனப்படும் முக்குறுணிப் பிள்ளையார் உள்ளார்.

மூலவர் மறைக்காட்டீசுவரர் அழகிய லிங்கத் திருமேனி. அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய மணாளர் பின்னால் காட்சி அளிக்கிறார். இவருக்கு ஆண்டுக்கொருமுறை சந்தனக் காப்பு இடப்படுகிறது. வருடம் முழுவதும் இக்காப்புடனேயே காட்சி தருகிறார். கோயிலிலுள்ள சோழர் காலக் கல்வெட்டுகளில் இறைவன் வேதவனமுடையார் எனக் குறிப்பிடப்

பட்டுள்ளார்.முன்னொரு காலம் வேதங்கள் இங்கு வந்து வணங்கிவிட்டுக் கதவுகளை மூடிச் சென்றன.

அப்பரும் ஞானசம்பந்தரும் இங்கு வந்த போது, வேதங்கள் மூடிச் சென்ற கதவுகளைத் திறக்க முடியாதிருந்ததால் பக்தர்கள் மாற்று வழியே சென்று இறைவனைத் தரிசித்து வந்ததைக் கண்டனர். “அப்பர் பெருமானே! திருமறைக்காட்டீசர் முன்னுள்ள திருவாயிலைத் திறந்து உள்ளே சென்று நாம் ஈசனை வணங்க வேண்டும். இக்கதவின் திருக்காப்பு நீங்கும்படி தாங்களே மெய்ப்பொருள் கொண்ட வண்டமிழ் பாடி அருள்வீராக” என்று கேட்டுக்கொண்டார் சம்பந்தர்.

“பண்ணின் நேர் மொழியாள்” எனத் தொடங்கும் பத்துப் பாடல்களைப் பாடிய பின்னும் கதவுகள் திறக்காததைக் கண்டு வருந்திய அப்பர் பெருமான்,

கடைக்காப்பில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானீரே

சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ

சரக்க இக்கதவம் திறப்பிம்மினே”

என்று நிறைவு செய்ய, கதவுகள் திறந்தன. இருவரும் இவ்வழியே சென்று இறைவனை வணங்கி மகிழ்ந்தனர். பின்னர் சம்பந்தப் பெருமான்,

“சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்தா

இது நன்கிறை வைத்தருள் செய்த எனக்குன்

கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே”

என்று பாட, மீண்டும் கதவுகள் மூடிக் கொண்டன.

இவ்வாறு உலகோரனைவருக்குமாகத் தினந்தோறும் திருக்கதவுகளை திறக்கவும் மூடவும் செய்த பெருமை, தமிழ் மறையாகிய தேவாரத்திற்கே உரித்தாயிற்று எனலாம். அர்த்த மண்டபத்தின் வடகிழக்குப்புறம் இக்கதவுகள் உள்ள திருவாயில் உள்ளது. வாயிலின் தென்புறம் இவ்விரு சமயக்குரவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.வேதாரண்யத்தில் அப்பரும் சம்பந்தரும் தங்கியிருந்த போதுதான் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் அவர்களை மதுரைக்கு வருமாறு அழைத்தனர்.

ஆனால் அப்பர் பெருமானோ, “சமணர்களின் வஞ்சனைச் செயல்களுக்கு ஓரளவில்லை; மேலும் கிரக நிலைகளும் தீமை பயப்பனவாயுள்ளன; எனவே மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறிச் சம்பந்தரைத் தடுத்தார். “சிவனார் கழல்களை உறுதியாகப் பற்றிப் போற்றுவார்க்கு எவ்வித துன்பமும் ஏற்படாது” என்று மறுத்துக் கூறிவிட்டு, இன்றளவும் பிரபலமாய் விளங்கும் ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடியருளினார் சம்பந்தப் பெருமான். அவர், ‘ஆணை நமதே’ என அறுதியிட்டுக் கூறியுள்ள நான்கு பதிகங்களுள் இதுவும் ஒன்று.கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, வேத விநாயகர் ஆகியோரைத் தரிசித்து வருகையில், தனிச் சந்நதியில் தேவியருடன் வீற்றிருக்கும் முருகப் பெருமானைக் கண்டு வணங்குகிறோம். அருணகிரியார் இத்தலத்தில் ராமாயணக் குறிப்புகள் அடங்கிய மூன்று திருப்புகழ்ப் பாக்களைப் பாடியுள்ளார்.

1.சூழும் வினைக்கள்

சூழும் வினைக்கள் துன்ப நெடும் பிணி கழி காமம்

சோரமிதற்குச் சிந்தை நினைந்து உறுதுணை யாதே

ஏழையென் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ

ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே

ஆழி அடைத்துத் தம் கை இலங்கையை எழுநாளே

ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் மருகோனே

வேழமுகற்கு தம்பியெனும் திருமுருகோனே

வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே

என்னைச் சூழ்ந்துள்ள வினை காரணமாக வருகின்ற துன்பம், நீண்ட நோய், அதிக காமம், களவு, வஞ்சனை இவற்றையே மனத்தில் கொண்டிருந்தால் எனக்கு உற்ற துணை என்ன இருக்கமுடியும்? ஏழையாகிய நான், இத்தகைய துக்கங்களுடன் தினமும் அலைச்சலுறுவேனோ? இக்குற்றத்தை நீக்கி, உனது செம்மையான திருவடியைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக.

சமுத்திரத்தை அணையால் அடைத்து, தமது ஆண்மையைச் செலுத்தி இலங்கையைக் கைக்கொண்ட கரிய மேக நிறத்துத் திருமாலின் மருகனே!. கரிமுகக் கடவுளின் இளையோன் எனப்படும் அழகிய குமரனே! வேதவனத்தில் வீற்றிருக்கும் சிவனார் தந்தருளிய பெருமை மிக்கவனே!

2. சேலை உடுத்து

பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று

பார மலைக்குள் அகன்று கணையால் ஏழ்

பார மரத்திரள் மங்க வாலி உரத்தை இடந்து

பால் வருணத் தலைவன் சொல் வழியாலே

வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை

வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து

வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே

வால ரவிக் கிரணங்களாமென உற்ற பதங்கள்

மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய்

இங்கு ஏழு ராமாயணக் குறிப்புகளை அளிக்கிறார் அருணகிரியார்.

ஸ்ரீராமர்,

1. பாலைவனத்தில் நடந்து கரிய நிறமுடைய தாடகையாம் அரக்கியை வதைத்து வென்றார்

2. பெரிய சித்ரகூட மலையைக் கடந்தார்

3. அம்பு கொண்டு ஏழு மரா மரங்களை அட்டார்

4. வாலியின் மார்பைப் பிளந்தார்

5. வருணன் சொன்ன வழியில் சமுத்திரத்தில் அணை கட்டினார்

6. அரக்கர்கள் இருப்பிடங்களை அழித்தார்

7. இலங்காபுரியின் ஆட்சியை விபீஷணருக்கு அளித்தார்.

இத்தகு பெருமை வாய்ந்த ராமபிரானின் மருமகனே! இளஞ்சூரியனுடையை கிரணங்கள் எனும்படியான ஒளிவீசும் உனது திருவடிகள் எனது மயக்க அறிவைத் தொலைக்கும் விதமாக திரு அருளைத் தந்தருள்வாயாக!

3. நூலினை ஒத்தவால இளம்பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை

வாசுகியைப் புனை நம்பர் தரு சேயே

மாவலியைச் சிறை மண்ட ஓரடி ஒட்டி அளந்து

வாளி பரப்பி இலங்கை அரசானோன்

மேல் முடி பத்தும் அரிந்து தோள் இருபத்தும் அரிந்து

வீர மிகுத்த முகுந்தன் மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து

வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே

தேறு தவத்தை இழந்து திரிவேனோ?

பாலசந்திரன், தும்பை, கங்கை, கொன்றை, திருநீற்றுப் பச்சை எனும் கரந்தை, வாசுகி எனும் பாம்பு இவற்றை அணிந்துள்ள சிவனார் தந்த குழந்தையே!

ஓரடி வைக்க இடமின்றி, அதை மகாபலிச் சக்ரவர்த்தியின் தலை மீது வைத்து, அவனை பாதாளத்தில் அழுத்தியவனும், இலங்கை அரசனான ராவணன் மேல் அம்பைச் செலுத்தி, அவன் பத்துத் தலைகளையும், இருபது தோள்களையும் அரிந்தவனுமாகிய மாலோன் மருகனே! விரும்பத்தக்க தணிகை, செந்தூர், பெரிய பழநி இம்மூன்று தலங்களிலும் மற்றும் வேதாரண்யத்திலும் ஆசையுடன் அமர்ந்திருக்கும் பெருமாளே!

தேர்ந்து அடையத்தக்க தவநிலையை இழந்து அலைச்சலுறுவேனோ?

பசியால் வாடிய எலி ஒன்று இறைவனின் கருவறையில் உள்ள நெய்யை உண்ண முயன்றது. அதன் மூக்கின் நுனி பட்டதால் அணையும் தறுவாயிலிருந்த திரி, தூண்டப்பட்டு விளக்கு சுடர் விட்டு எரிந்தது. இந்த எலியே மகாபலியாய்ப் பிறந்து இறைவன் பாதத்தால் அழுத்தப்பட்டு பாதாள உலகிற்கு சக்ரவர்த்தியாய் மாறியது என்பது புராணம். [இதனால் தான் அருணகிரியார் பாடலின் நடுவில் மாபலியைப் பற்றிய குறிப்பை வைத்துள்ளார் போலும்!]

பிராகாரத்தில் ஜுரஹரேஸ்வரர், சனைச்சரர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரைத் தரிசிக்கலாம். இங்கு சரஸ்வதி கையில் வீணையின்றிக் காட்சி அளிக்கிறாள். ஒரு போட்டியின் போது அன்னை வேதநாயகியின் குரல் வீணையின் நாதத்தைக் காட்டிலும் இனிமையாக இருந்ததால் சரஸ்வதி தேவி வீணையைக் கீழே வைத்துவிட்டாள். எனவே அம்பிகை, “வீணா வாத விதூஷிணி” என்றும் “யாழைப் பழித்த மொழியாள்” என்றும் பெயர் பெற்றாள். சுந்தரர், “யாழைப் பழித்தன்ன மொழி மங்கை” என்று பாடுகிறார். அன்னையின் தனிக் கோயில், வெளிச்சுற்றில் உள்ளது.

[“தேனென்று பாகென்று உவமிக்கொணா மொழி தெய்வ வள்ளி” எனும் அருணகிரியாரின் கந்தர் அலங்காரச் செய்யுள் அடி இங்கு நினைவுக்கு வருகிறது.]முசுகுந்த சக்ரவர்த்தியால் பூமிக்குக் கொண்டுவரப்பட்ட சப்த விடங்கத் தியாகராஜர் திருவுருவங்களுள் ஒன்று வேதாரண்யத்தில் நிறுவப்பட்டது. இவர் தேவி நீலோற்பலாம்பாளுடன் பத்ம சிம்மாசன, ஹம்ஸ நடன, புவனி விடங்கராய்க் காட்சி அளிக்கிறார். திருவாரூர் போலவே இங்கும் இவர் சந்நதிக்கு எதிராக சுந்தரரும் பரவை நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர்.

வீதி உலாவில் தியாகேசர் புறப்படாத நாட்களில் சந்திரசேகரர் எழுந்தருளுகிறார். தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை “சந்திர சேகர் பட்டம்” என்பர். “பட்டம் கட்டிய சென்னிப் பரமர்” என்கிறது தேவாரம்.ஏழு திருமுறைகளிலும், அருணகிரியாரின் மூன்று திருப்புகழ்ப் பாக்களிலும் இடம் பெற்ற வேதாரண்யம் திருத்தலத்தை மனமார வணங்குவோம்.

சித்ரா மூர்த்தி