75 நாட்கள் கொண்டாட்டம்
சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜகதல்பூரில் தண்டேஸ்வரி மாயி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து தசரா பண்டிகையை 75 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த பகுதியிலுள்ள பழங்குடியினர் தத்தமது பிரிவினர் வணங்கும் தெய்வசிலைகளைக் கொண்டு வருவர். பின்னர் அதை தண்டேஸ்வரி மாயி அம்மன் முன் வைத்து தசரா விழாவைத் துவங்குகின்றனர். இந்த விழா தொடர்ந்து 75 நாட்கள் நடைபெறும். இவ்வளவு நீண்ட தசரா கொண்டாட்டம் வேறு எங்குமே நடைபெறுவதில்லை.
கல்வியும் கற்றலும்
கல்லுதல் என்றால் தேவையற்ற புல் பூண்டுகளை வேரோடு பறித்து எடுத்தல் என்று பொருள். மனத்தில் உண்டாகும் குற்றங்களை வேறோடு பிடுங்கி எறிவதற்கு பயன்படுவதே கல்வி. கல்வி என்பதும் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் மட்டுமே எண்ணக் கூடாது. சமுதாயத்தை நன்கு மதித்து மக்கட் பண்புகளோடு நடந்து கொள்வதே கல்வி கற்றலின் பயனாகும். அவை உலகியல் வாழ்விற்கு உபயோகம் ஆகுமேயன்றி நல்ல மனநிறைவான வாழ்விற்குத் துணையாகாது. கல்வியில் மனித மனம் மேம் படுகிறது. நல்ல உயர்ந்த உள்ளம் கிட்டுகிறது. தெய்வத்தின் பால் மனம் செலுத்தப்படுகிறது. வள்ளுவர் கற்றதானால் ஆய பயன் என் வால் அறிவன் நற்றாள் தொழார் எனின் என்கிறார். உயர்ந்த சமயக் கல்வி மோட்சத்திற்கு வழியாகிறது.
அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி
பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அதைக்கொண்டு அவன் உலக மக்களின் பசிப் பிணியைத் தீர்த்ததாகவும் தமிழ்க் காப்பியமான மணிமேகலை கூறுகிறது. சரஸ்வதியின் ஆலயத்தைக் கலைநியமம் என்பர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலுள்ள சரஸ்வதி சந்நதி கலைநியமம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்தாதேவி எனும் பெயரில் வீற்றிருக்கும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்து அருள்பாலித்தவள் ஆவாள்.
திருக்கண்டியூர்
அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான கண்டியூர் சிவதலம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திருவையாறு தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலத்தில்தான் பிரம்ம தேவனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகக் கூறப் படுகிறது. அதன் காரணமாக இத்தலத்தீசர் பிரம்மசிர கண்டீசர் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு பக்கத்தில் பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள பிரம்மதேவர் வலப்புறம் அமர்ந்துள்ள சரஸ்வதி தேவி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகிறாள்.
ஹைதராபாத்
ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் அருகில் மகபூப் மாவட்டத்தில் உள்ள அலம்பூரில் உள்ள கோட்டைக்குள் பால பிரம்மா, குமார பிரம்மா, அர்க்க பிரம்மா, வீர பிரம்மா, விஸ்வ பிரம்மா, தாரகா பிரம்மா, கருட பிரம்மா, சுவர்க்கப் பிரம்மா, பத்ம பிரம்மா ஆகிய ஒன்பது பிரம்மாக்களின் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது பிரம்மாக்களுக்கும் தனியாக சரஸ்வதி சந்நதிகள் கிடையாது. ஒரே சரஸ்வதி சந்நதியே அமைந்துள்ளது.