Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

நாகப்பட்டினம்

பகுதி 10

சென்ற இதழின் தொடர்ச்சி…

கோயிலில் அதிபத்த நாயனார் திருவுருவம் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த இவர், தீவிர சிவபக்தராக விளங்கினார். தினமும் தான் பிடிக்கும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென திரும்ப கடலிலேயே விட்டுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இறைவன் அவரைச் சோதிக்க எண்ணினார் போலும்! தொடர்ந்து சில நாட்கள் வலையில் ஒரு மீன் மட்டுமே சிக்கி வந்தது. அதிபத்தர் அதையும் சிவனுக்கெனவே விட்டுவிட்டு வறுமையில் வாடலானார்.

இறைவனது சோதனை தொடர்ந்தது. ஒரு நாள் விலைமதிப்பற்ற நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன் மீன் ஒன்று அதிபத்தர் வலையில் சிக்கியது; உடன் இருந்த மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்; தங்கள் வறுமை நீங்கி விடும் என்று உற்சாகமுற்றனர். ஆனால் அந்த பொன் மீனையும் அது ஒரே ஒரு மீனாக வந்ததால் சிவனுக்கென நீரில் விட்டுவிட்டார் அதிபத்தர். அவரது பக்தியை மெச்சிய இறைவன், ரிஷபாரூடராகக் காட்சி அளித்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகும்படி சிவப்பேறு கிட்டச் செய்தார். அதிபத்தர், படவர் எனும் பரதவர் குலத்தில் பிறந்தவர்; பின்னாளில் சிவன் படவர் எனப்பட்டார். அதுவே செம்படவர் என்றாயிற்று, இன்றளவும் கடற்கரையில் ஆவணி ஆயில்யத்தன்று பொன்மீன் நிகழ்ச்சி ஐதிக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அதிபத்த நாயனாரின் வம்சாவளியில் வந்த எவரேனும் சிவலோகப்ராப்தி அடைந்தால், அவரது உடலை, கோயில் கோபுரத்திற்கு முன்னால் கிடத்தி, இறைவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையும் வஸ்திரமும் சாத்தப்பட்டு, பின்னரே இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. அதிபத்தரை, “விரிதிரை சூழ் கடல் நாகை அதிபத்தர்க்கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடுகிறார்.

நாகையிலிருந்த பன்னிரண்டு சிவாலயங்களுள் ஒன்று கார்முகீஸ்வரர் கோயிலாகும். காலப்போக்கில் இக்கோயில் பூமிக்குள் புதையுண்டது. இங்கிருந்த முருகப்பெருமான், தன் பக்தரான ஆனந்தரங்கம் பிள்ளையின் கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தை உணர்த்தினான். முருகன் கேட்டுக்கொண்டபடி, இவ்வாலயத்தில் மெய்கண்ட மூர்த்தி எனும் பெயரில் மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, ‘குமரக் கோயில்’ என்றும் கூறப்படுகிறது. அழகமுத்து எனும் அன்பர், ‘மெய்கண்ட வேலாயுத சதகம்’ எனும் நூலை இம்முருகன் மேல் இயற்றியுள்ளார்.

காசிக்கு நிகரான முத்தி மண்டபம் நாகை நீலாயதாட்சி கோயிலில் உள்ளது.

காஞ்சி மஹா பெரியவா, 1940 ஆம் ஆண்டு இங்கு தங்கி சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தார். அக்காலத்தில் மழையே இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது நாகை. அவ்வமயம் ஆடிப்பூர உற்சவமும் நெருங்கி வர, போதிய நீர் வசதி இன்றி உற்சவத்தை எவ்வாறு நடத்துவது என்ற கவலையுடன் மஹாபெரியவாளை அணுகினர் பக்தர்கள். ஆனால் உற்சவத்தைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லத் தயங்கி, அவரைத் தரிசித்துத் திரும்பினர். பெரியவாளும் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

அன்று மதியம் உச்சி வெயிலில் புறப்பட்டுச் சென்று, கோயில் குளத்தில் இறங்கினார் பெரியவா. நீரின்றி, குளத்து நிலம், காலில் கொப்புளம் வருமளவு காய்ந்து கிடந்தது. அந்நிலத்தில் ஓரிடத்தில் பெரியவா, தம் கட்டை விரலால் மண்ணைக் கீற அங்கிருந்து சிறிது நீர் கசிந்தது. பின்னர், சற்று நேரம் நின்று வானத்தை உற்று நோக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அன்று மாலை வெண்மேகங்கள் கார்மேகங்களாக மாறின. கனமழை பொழிந்தது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, நான்கு நாட்கள் மழை பொழிந்து, குளத்தில் நீர் நிரம்பியது. மகிழ்ச்சியுடன் பெரியவாளைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களைக் கண்டதும், “ஜோன்னு மழை பெஞ்சுடுத்து; இனி ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்திடலாம் இல்லையோ” என்று அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தனர். நடந்தது என்ன என்று பெரியவாளுக்கும் நீலாயதாட்சிக்கும் மட்டுமே தெரியும்!

மஹா பெரியவா, வள்ளாலார் ஆகியோர் அமர்ந்து தியானம் செய்த முத்தி மண்டபம் சிதிலமடைந்து விட்டதால், அதைப் புதுப்பிக்கும் பணியையும் குளத்தைத் தூர்வாரும் பணியையும் அறநிலையத் துறையும் ஆன்மிக அன்பர்களும் ஏற்று நடத்திச் சிறப்புற நிறைவேற்றினர். கடந்த 10-02-2025 அன்று கோயில் கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்தேறியது.

“வாலை துர்க்கை சக்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்

மாது பெற்றெடுத்துகந்த சிறியோனே!

நாலு திக்கும் வெற்றிகொண்ட சூரபத்மனைக் களைந்த

நாகபட்டினத்தமர்ந்த பெருமாளே!

கோபமற்று மற்றும் அந்த மோகமற்று உனைப் பணிந்து

கூடுதற்கு முக்தி என்று தருவாயே!”

- என்று முருகனைப் போற்றி நம் பிரார்த்தனையைச் சமர்ப்பித்து,

கோயிலைவிட்டு வெளியே வருகிறோம்.

(தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி