Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

நாகப்பட்டினம்

பகுதி 10

அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ள கடற்கரைத் தலங்களுள் அடுத்ததாக நாம் காணவிருப்பது நாகை எனப்படும் நாகப்பட்டினம். சென்னையிலிருந்து 300 கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும் திருத்தலம். கடலை ஒட்டிய பகுதி பட்டினம் எனப்படுகிறது. (உ-ம்) காவிரிப்பூம்பட்டினம், காயல் பட்டினம், குலசேகரப்பட்டினம், பட்டினப்பாக்கம் என்பன. நாகர்கள் எனும் வகுப்பினர் கடற்கரையை ஒட்டிக் குடியேறியதால் நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது. காயாரோகண சுவாமி சமேத நீலாயதாட்சி கோயிலை அடைகிறோம்.

புண்டரீக முனிவர், கண்வ முநியின் ஆலோசனைப்படி முத்தி கிட்டுவதற்காக நாகையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான், முநிவரைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு முத்தி அளித்தார். சாதாரணமாக முத்தி அடைபவரின் ஆன்மா மட்டுமே இறைவனிடம் சென்று சேரும். ஆனால் இங்கோ, இறைவன் புண்டரீகரின்

உடலையும் (காயம்) தன்னுடன் ஆரோகணித்து (சேர்த்துக்கொண்டு) முத்தி அளித்தமையால் இறைவன் காயாரோகணேச்வரர் என்று அழைக்கப்படுகிறார். காயாரோகணம் என்பது மருவி காரோணம் என்றாகிவிட்டது. (உ.ம்.) குடந்தைக்காரோணம், கச்சிக் காரோணம்.

மஹா சங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டான் என்பதாலும் இப்பெயர் உண்டாயிற்று என்ற புராணக் குறிப்பும் நிலவுகிறது. [ஆதாரம் - உ.வே.சா அவர்களின் ‘திருத்தலங்கள் வரலாறு’ நூல்]புண்டரீகர் சிவனை வழிபட்ட போது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது; தீர்த்தக் கரையில் பைரவர் சிம்ம வாகனத்துடன் காட்சி அளிக்கிறார். கால சம்ஹார மூர்த்தியான சிவனே இங்கு பைரவர் வடிவில் எழுந்தருளியுள்ளார் என்பர்.

கோயில் முகப்பில் நாகாபரண விநாயகர் வீற்றிருக்கிறார். உடலில் ஆபரணமாக ஒரு நாகமும், தலைக்கு மேல் குடையாக மற்றொரு நாகமும் உள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்கின்றனர்.உள்ளே செல்லும் முன் பழநி ஆண்டவர், இடும்பன் சந்நதிகளைத் தரிசிக்கிறோம்.

“பரகிரி உலாவு செந்தி மலையினுடனே இடும்பன்

பழநி தனிலே இருந்த குமரேசா”

எனும் கதிர்காமத் திருப்புகழ் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

கோயிலில் கோரக்க சித்தரின் சீடரான அழகணிச் சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. யோக சாதனை குறித்து ஏராளமான கண்ணிகள் அழகு நடை ததும்ப பாடியுள்ளார் என்பதால் இவருக்கு அழகு + அணி = அழகணிச் சித்தர் என்ற பெயர் அமைந்தது. ஆனால் கோயிலிலேயே தங்கி அன்னையின் சந்நதியில், அழுது அடம்பிடிக்கும் குழந்தை போன்று நின்று, அழுகைச் சுவை மிக்க பாடல்களைப் பாடி, மோட்ச பிராப்தி வேண்டிப் பெற்றார் என்பதனால் இவரை ‘அழுகுணிச் சித்தர்’ என்று அழைக்கலாயினர்.

“யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்,

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”

எனும் மணிவாசகர் வாக்கை இங்கு நினைவுகூரலாம்.

பாரதியாருக்கு முன் ‘கண்ணம்மா’ என்று விளித்துப் பாடியவர் அழகணிச் சித்தர் மட்டுமே.

“புல்லரிடத்தில் போய் பொருள் தனக்குக் கையேந்தி

பல்லை மிகக் காட்டி பரக்க விழிக்கிறேண்டி;

பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்

புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா

பொருள் எனக்குத் தாராயோ”

“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்

ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா

உன் பாதம் சேரேனோ?”

என்பன போன்ற அழகிய பாடல்களைப் பாடியிருக்கிறார் அழகணிச் சித்தர்.

கோயிலுள்ளே சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். பெரிய பாணத்துடன் விளங்குகிறார். கருவறையில் புடைப்புச் சிற்பமாக சோமாஸ்கந்தர் காட்சி அளிக்கிறார். பிரதோஷ வழிபாட்டில் சிவனும் அம்பிகையும் மோஹினி அவதார விஷ்ணுவும் எழுந்தருளி வலம் வருகின்றனர்.மூலவர் சந்நதிக்கருகில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. சிவபெருமான் தியாகராஜராகக் காட்சி அளிக்கும் ‘சப்த விடங்க’த் தலங்களுள் ஒன்று நாகை.

[சப்த = ஏழு; விடங்கர் = உளியால் செதுக்கப்படாத திருமேனி]. ஒருமுறை அரக்கர்களை வீழ்த்த இந்திரனுக்குப் பேருதவி புரிந்தான் பெரும் சிவபக்தனான முசுகுந்த சக்ரவர்த்தி. ‘கைம்மாறாக என்ன வேண்டும்?’ என்று இந்திரன் கேட்க, திருமாலால் ஆராதிக்கப்பட்டு, அவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட தியாகராஜரது விடங்கத் திருமேனியைத் தனக்குத் தருமாறு கூறினான் முசுகுந்தன். இது இந்திரனுக்கு அதிர்ச்சியை அளித்தது. முசுகுந்தனை மறுநாள் வரும்படிக் கேட்டுக்கொண்டான்.

விசுவகர்மா உதவியால் திருமால் தனக்கு அளித்த விடங்கரைப் போலவே ஆறு திருவுருவங்களைச் செய்து வைத்தான் இந்திரன். சிறந்த சிவபக்தனான முசுகுந்தன் அசல் விடங்கரைக் கண்டறிந்துவிட்டான். வியந்து போன இந்திரன், ஏழு விடங்கர்களையுமே முசுகுந்தனுக்கு அளித்துவிட்டான். மூல விடங்கரைத் திருவாரூரிலும், மற்ற ஆறு திருவுருவங்களை நாகை, திருக்காறாயில், திருநள்ளாறு, திருக்கோளிலி, வேதாரண்யம் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் முசுகுந்தன்.

நாகையில் தியாகராஜப் பெருமான், சுந்தர விடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடுவது பாராவார தரங்க நடனம் [கடல் அலைகள் அசைவது போன்ற நடனம்]. கடற்கரைத் தலம் ஆதலால் இவ்வாறு அழைப்பதும் மிகப் பொருத்தமாக உள்ளது. இவருடன் இருக்கும் அம்பிகை நிமிஷாம்பாள் என்றும் நீலோத்பலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.

மூலவர் கருவறைக்கும் தியாகராஜர் சந்நதிக்கும் இடைப்பட்ட குறுகலான சந்தில் தட்சிணாமூர்த்தியின் எழிலுருவைத் தரிசிக்கலாம். இவரை வணங்கி வந்த வழியில் திரும்பி பிராகாரத்தை அடைந்து வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருக்கும் சுப்ரமண்யரைத் தரிசிக்கலாம்.நாகையில் அருணகிரிநாதர் பாடியுள்ள மூன்று திருப்புகழ்ப் பாக்களை இனி பார்ப்போம்.

“ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த

ஊர்மு கிற்ற ருக்க ளொன்றும் அவராரென்று

ஊம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்

ஊன ரைப்ர புக்க ளென்றும் அறியாமல்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்(கு) உரைத்(து) அநந்த

கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன்

கோபமற்று மற்றும் அந்த மோகமற்றுனைப் பணிந்து

கூடுதற்கு முத்தி என்று தருவாயே”

“ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை (கடல்)” என்று பாடல் தொடங்குகிறது. கடற்கரையில் அமைந்த தலம் ஆதலால் இவ்வாறு தொடங்குகிறார் போலும்! தன்னுள் மாமரமாக மறைந்திருந்த சூரனைக் கொல்ல எழுந்த முருகப்பெருமானின் வேல் வருவது கண்டு ஓலமிட்டு, பயந்து, இறைஞ்சிய கடல் என்றும், கடல் அலைகள் திரண்டு இரைச்சலுடன் வருவது போல, நாமும் பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் சென்று ஓலமிட்டு இறைஞ்சுகிறோம் என்றும் இரு பொருள்பட வந்துள்ளது எனலாம்.

ஓலமிடும் கடலால் சூழப்பட்ட இப்பூமியில் மேகம் போன்றும், கற்பக விருட்சம் போன்றும் கைம்மாறு கருதாது கொடையளிக்கும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப் போய், பேசக்கூட இயலாதவரை பிரசித்தி மிக்கவர் என்றும் அறிவிலிகளைச் சமர்த்தர் இவர் என்றும், மனத்தால் குற்றமுள்ளவரை இவர் பிரபு என்றும் போற்றுகிறேன். அழகிய முத்தமிழ்ப் பிரபந்தங்களை உலகாயுத கலைகளில் மட்டுமே ஆசை கொண்டவர்களிடம் சொல்லி நின்றும் என் எண்ணற்ற விருப்பங்களைத் தெரிவித்தும் இவ்வாறாக வீணே திரிகின்றேன். கோபத்தையும் ஆசையையும் ஒழித்து உன் திருவடிகளில் பணிந்து கூடுவதற்கான முத்தி இன்பத்தை என்று எனக்குத் தந்தருள்வாய்?

“வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்

மாது பெற்றெடுத்துகந்த சிறியோனே!”

நாகை, சக்தி பீடங்களுள் ஒன்று. எனவே அம்பிகையைப் போற்றி - “என்றும் இளையவள், துர்கை, சக்தி, அம்பிகை, உலக கர்த்தர் ஆகிய பித்தராம் சிவனாரது இடப்பாகத்திலுள்ள உமையாள்” - என்று பாடி, “அவர் பெற்றெடுத்து மகிழ்ந்த சிறியோனே!” என்று முருகனை விளிக்கிறார்.

“வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த

வாகை மற்புய ப்ரசண்ட மயில்வீரா”

கடல் வற்றிப் போகவும், கிரௌஞ்ச கிரி தூள்படும்படியும் நெடிய வேலைச் செலுத்திய வலிமை மிக்க புயங்களை உடைய மயில் வீரனே!

“ஞால வட்ட முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற

நாரணற்கருள் சுரந்த மருகோனே!

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனைக் களைந்த

நாகபட்டினத்தமர்ந்த பெருமாளே”

பூமண்டலம் முழுவதையும் உண்டு ஆதிசேஷனாம் நாக மெத்தையில் உறங்கிய நாரணனுக்கு அருள் புரிந்த மருகனே! சூரபத்மனை அடக்கி ஒடுக்கிய பெருமையனே! நாகபட்டினத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளே!

“மார்புரம்பின்” எனத் தொடங்கும் இரண்டாவது நாகைத் திருப்புகழில், மாமனும் மருகனும் நடனம் ஆடிய சம்பவங்கள் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.

“வீர வெண்டைய முழங்க, வரி சங்கு

முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரரும்

வேத விஞ்சையருடன் குமுற வெந்து கவடர்ந்த சூரன்

வீறடங்க முகிலும் கமற நஞ்சுடைய

ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே

கொளுந்த பல சிரந்தனை எறிந்து நடனங்கொள் வேலா!”

முருகனது துடிக் கூத்து, குடைக்கூத்து இவை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பு வருகிறது.

“மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து

நிகர்த்து முன் நின்ற சூர்த்திறங் கடந்தோன்

ஆடிய துடியும்…

படை வீழ்த்தவுணர் பையுள் எய்தக்

குடைவீழ்த்தவர் முன் ஆடிய குடையும்…”

“செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே!” [செந்தூர்த் திருப்புகழ்]

நாரசிங்க வடிவங்கொடு ப்ரசண்ட இரணியோன்

நடுங்க நடனஞ் செய்து இலங்கை வலி

ராவணன் குலமடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல

ஞான மங்கை அமுதஞ் சொருபி என்றன் ஒரு

தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய

நாகையம்பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே!”

நரசிம்ம அவதாரம் எடுத்து கொடிய

இரணியனை நடுங்க வைத்து நடனம் செய்தவரே! என்று மாமனாம் திருமால் நடனம் ஆடியது பற்றியும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

“விழுதாதெனவே” எனத் தொடங்கும் மூன்றாவது திருப்புகழில், மிக உன்னதமான வேண்டுதலை முருகன் முன் வைக்கிறார் அருணகிரியார்.

“தொழுதார் வினை வேரடியோடறவே

துகள் தீர் பரமே தரு தேவா,

சுரர் பூபதியே! கருணாலயனே!

சுகிர்தா! அடியார் பெருவாழ்வே!

எழுதா மறை மா முடிவே! வடிவேல்

இறைவா எனை ஆளுடையோனே!

இறைவா! எது தா அது தா!”

என்கிறார்.

[“எனக்கு என்று விருப்பு வெறுப்பு ஏதுமில்லை; எனக்கு எதைத் தரவேண்டுமென்று நீ நினைக்கிறாயோ அதை மட்டுமே தந்தால் போதும்” என்பது உட்கருத்து]‘நாகப்பட்டினத்திற்கு நிகரான திருத்தலம் நாகையேதான்’ எனும் பொருளில் “தனையே இணை நாகை” என்று பாடியுள்ளார்.

மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி வரிசையில் இக்கோயிலின் அம்பிகை நீலாயதாட்சியும் வைத்து வணங்கப்படுகிறாள்.இத்தலத்தில் திருமணப் பருவத்திற்கு முந்தைய கன்னியாக யௌவனப் பருவக் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அம்பிகை பெயராலேயே ஸ்ரீ காயாரோகண சுவாமி சமேத நீலாயதாட்சி கோயில் என்றே கோயிலும் அழைக்கப்படுகிறது.

கன்னிப் பருவ அம்பிகைக்குக் காவலாக இருக்குமாறு ஈசன் நந்திதேவரைப் பணித்தார். ஆனால் ஈசனைப் பார்க்காமலிருப்பது தன்னால் இயலாத காரியம் என்று நந்திதேவர் கூற, ஈசன் அவரைத் தேவிக்குக் காவலாக அவள் முன் இருந்து கொண்டு, சற்று திரும்பி, தன்னையும் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று அனுக்ரஹித்தார். அம்பிகைக்கு எதிரிலுள்ள நந்தி, கழுத்தைச் சற்று திருப்பி வலது கண்ணால் அம்பிகையையும், இடது கண்ணால் சிவனாரையும் பார்த்தபடி உள்ளது. எனவே, ‘இரட்டைப் பார்வை நந்தி’ என்று அழைக்கப்படுகிறது. அம்பிகைக்குரிய ஆடிப்பூரம் உற்சவம் கோயிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது.

சித்ரா மூர்த்தி