Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

பகுதி 9

சென்ற இதழின் தொடர்ச்சி...

இலை விபூதி

கர்நாடகாவில் குடிகொண்டுள்ள கோகர்ணேஸ்வரரின் அருளாணைப்படி, தன்னை வருத்திக்கொண்டிருந்த நோய் நீங்க திருச்செந்தூர் வந்து சேர்ந்த ஆதி சங்கரர், கருவறைக்குள் ஒரு பாம்பு நுழைவதைக் கண்டு புஜங்க (பாம்பு) நடையில் ஒரு நூலை இயற்றினார். அதுவே சுப்ரமண்ய புஜங்கம் எனப்படுகிறது. செந்தூரில் தரப்படும் இலை விபூதி பற்றிப் பின் வருமாறு இருபத்தைந்தாவது செய்யுளில் பாடியுள்ளார்.

``அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ

ஜ்வரோன்மாத குல்மாதி ரோஹான் மஹாந்த:

பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்

விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே’’

“தாரகாசுரனை வதம் செய்தவனே! தீராத வியாதிகளான வலிப்பு, தீமை மிகு காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம் இன்னபிற நோய்களனைத்தும் பன்னீரிலையில் மடித்துத் தரப்படும் உன் விபூதியைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்திடுமே”

[பத்ரம் - இலை; பூதி - விபூதி]

அருணகிரிநாதர், பாலன் தேவராயன் போன்றோர் நோய் களைப் பட்டியலிடுவதற்கும் அவை நீங்க முருகனது அருளை நாடுவதற்கும் முன்னோடியாக இருந்தவர் ஆதிசங்கரரே என்று கூறத் தோன்றுகிறது.“நேயர்கள் பூசு மெய்த்திரு நீறிடா இரு வினையேனை (திருநீறு) பூசி, மெய்ப்பதமான சேவடி காண வைத்தருள் ஞானமாகிய போதகத்தினை ஏயுமாறருள்புரிவாயே” என்று காசித் திருப்பு கழில் கூறுகிறார். நீறு பூசி வழுதி கூன் நிமிர்த்தினார் ஞானசம்பந்தர்.

திருச்செந்தூரில் தரப்படும் பத்ர பூதியின் சிறப்பு என்ன? அங்கு பன்னீர் மரத்து இலையின் நடுவில் திருநீற்றினை வைத்து இலை முதுகு வசமாக இரண்டாக மடித்து முருகன் திருவடியில் அடுக்கி வைத்திருப்பார்கள். அதன் மணமே தனியானது. முன்பு பக்தர்கள் அனைவருக்கும் இதுவே தரப்பட்டது. [காலப்போக்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டதாலும் இலை விபூதியின் மகிமை பலராலும் எடுத்துரைக்கப்பட்டு அதன் தேவைப்பாடு பெருகிவிட்டதாலும் இப்போது எல்லோர்க்கும் சுலபமாகக் கிட்டுவதில்லை].

பன்னீர் இலையின் உட்புறத்தில் நரம்புகள் தெரியும். நடுவிலுள்ள நரம்பே முருகன் திருத்தோள்கள். இதன் வலப்புறம் உள்ள ஆறு நரம்புகளும் இடப்புறம் உள்ள ஆறு நரம்புகளும் முருகனின் பன்னிரு கைகள். இதனால் செந்திலாண்டவனே இப் பத்ரபூதியை தமது பன்னிரு கரங்களால் தருவதாக நம்பப்படுகிறது. ‘இதைப் பார்த்த மாத்திரத்திலேயே நோய்கள் பறந்துவிடும்’ என்று அவர் கூறுவது இச் செய்யுளிலுள்ள சிறப்புக் கருத்து.

மஹரிஷி விசுவாமித்திரருக்கு ஏற்பட்ட குன்ம நோய் நீங்க, “இப் பத்ரபூதியை நோயுள்ள இடத்தில் தடவிக்கொண்டு உள்ளேயும் சிறிது உட்கொண்டால் உன் நோய் குணமாகி

விடும்” என்று ஒரு கிழவர் வேஷத்தில் வந்து முருகன் சொல்லிச்செல்ல, மஹரிஷியின் நோயும் விரைவில் குணமாயிற்று என்று கூறுகிறது ஜெயந்திபுர மஹாத்மியம்.

கோயிலில் நவக்கிரஹங்கள் இல்லை. செந்திலாண்டவனே அனைத்துக் கிரஹங்களுக்கும் அதிபதியாய் விளங்கி வருகின்றார். சனைச்சரர் சிலை மட்டும் உள்ளது. அது பிற்காலத்தில் யாராவது நிறுவியிருக்கலாம். இங்கு அருணகிரிநாதரின் அழகிய கந்தர் அந்தாதிச் செய்யுள் நமக்கு நினைவிற்கு வருகிறது.

“சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில்

சேய! வன்பு உந்து இகல் நிசாசராந்தகா! சேந்த!”

என்னில்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே

[“வள்ளியை மணந்த செந்தில் குமரனே! அசுரர்கள் குலாந்தகனே! சேந்தனே!” என்று முருகப்பெருமானைத் துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், வியாழன், சூரியன், அவன் மகனான சனைச்சரன் ஆகிய கிரஹங்களால் ஏற்படும் தீமை நம்மை அணூகாது. (ராகு, கேது ஆகியவை சாயா கிரஹங்கள் என்பதால் அவை குறிப்பிடப்படவில்லை.)]

திருச்செந்தூர்த் தலபுராணம்

[ஆசிரியர் - வென்றிமாலைக் கவிராயர்; இயற்பெயர் தெரியவில்லை]

செந்திலாண்டவனுக்குப் பூஜை செய்யும் உரிமை உடையவர்கள் திரிசுதந்திரர்கள். அவர்களுள் ஒருவருடைய மகன் ஐந்து வயதான பின்னும் படிப்பில் நாட்டம் ஏதுமின்றி இருந்ததைப் பார்த்து தந்தையார் அவனைக் கோயில் மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். வயது ஏற ஏற அக்குழந்தையின் மனம் முழுவதையும் செந்திலாண்டவனே ஆக்ரமித்து நின்றான்.

ஒரு நாள் தியானம் நெடுநேரம் நீடித்தது. சுவாமிக்கான நைவேத்தியம் கொண்டு வைக்கும் நேரம் கடந்துவிட்டது. இளைஞனைக் கை கால்களில் கிட்டி கட்டி அடித்தனர். அத்துடன், வேலையிலிருந்தும் நீக்கிவிட்டனர் அதிகாரிகள்.

உடல் உபாதை பொறுக்க முடியாமல், இரவு கடலில் வீழ்ந்து இறக்க முடிவு செய்தான். ‘நில் நில்’ என்று பின்னாலிருந்து கேட்ட குரலையும் பொருட் படுத்தாமல் கடலில் குதித்தான். பெருகி எழுந்த பேரலை அவனை வாரி கரையில் ஒதுக்கியது. ‘இறக்கக்கூடச் சுதந்திரம் இல்லையே” என்று குமுறி அழுதான். “செந்தில் புராணத்தைத் தமிழில் பாடு” என்று ஒரு அசரீரி கேட்டது.

செவலூர் சாஸ்திரிகளின் கனவில் தோன்றிய முருகன், “உன்னிடம் வரவிருக்கும் பக்தனுக்கு வடமொழியில் இருக்கும் திருச்செந்தூரின் மஹாத்மியத்தை மொழிபெயர்த்துச் சொல்” என்று அறிவுறுத்தினான். தன்னைத் தேடி வந்த இளைஞனைப் பீடத்திலமர்த்தி வடமொழி நூலை விளக்கிக் கூறினார் சாஸ்திரிகள்.

வந்தவனும் மடைதிறந்த வெள்ளம் போல் சுலோகங்களைத் தமிழ்ச் செய்யுட்களாகப் பாடினான். [18 சருக்கம் - 899 பாடல்கள்]. “அன்பனே! இன்று முதல் உன் பெயர் வென்றிமாலைக் கவிராயர் என்று விளங்கட்டும்” என்று கூறி ஆசீர்வதித்தார் செவலூர் சாஸ்திரிகள்.எழுதிய செய்யுட்களை எடுத்துச் சென்று கோயில் அதிகாரிகளிடம் காட்டிய போது அவர்கள் நகைத்தனர். “நேற்று வரை சமையல் வேலையைக் கூட ஒழுங்காகச் செய்ய இயலாத நீ புராணம் இயற்றினாயா?” என்று எள்ளி நகையாடினர். மனம் நொந்து போய் தான் எழுதிய பாடல்கள் அடங்கிய ஏடுகளைக் கடலில் வீசிவிட்டார் கவிராயர். சிவயோகத்தில் ஆழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

சம்பந்தப் பெருமான் வைகையில் இட்ட ஏடுகள் நீரை எதிர்த்துச் சென்றன. அது போல் கவிராயர் வீசிய ஏடுகள் ஈழ நாட்டுக் கடற்கரையில் ஒதுங்கின. [இன்றும் அந்த இடம் பனைமுறி என்று வழங்கப்பட்டு வருகிறது.]முருக பக்தர் ஒருவர், கரை ஒதுங்கிய ஏடுகளை உரிய மரியாதைகளுடன் எடுத்துப் பல்லக்கில் ஏற்றி, தம் மாளிகையில் வைத்து தினமும் பாராயணம் செய்தார். “சக்கரசுவாசம்” எனும் ஒரு வித விஷக்காற்று அவ்வூரில் பரவிய போது, ஏடுகள் இருந்த வீதியை மட்டும் அது அண்டவில்லை. அனைவர் கனவிலும் புராணத்தின் மகிமையை முருகப்பெருமான் உணர்த்தியதன் காரணமாக அதைப் பல பிரதிகள் எடுத்துத் தத்தம் வீட்டில் வைத்துக் கொண்டனர்.

பேராபத்திலிருந்து பிழைத்தனர்.செந்தூர்த் தீர்த்தங்கள் பற்றிய ஒரு அரிய குறிப்பை இந்நூலில் காண்கிறோம். “காயத்ரி தேவியானவள், ‘என்னுடைய எழுத்துகள் இருபத்து நான்கும், வானவர் வணங்கி வழிபடும் திருவடிகளை உடைய குமாரப் பெருமான் திரு முன் புண்ணிய உருவாகி, ஒவ்வொரு எழுத்தும் புண்ணியம் எண்ணி மூழ்கப்பண்ணும் ஒவ்வொரு தீர்த்தமாகி கடலின் கரை ஓரத்தில் சிறப்பும் தகுதியுமுடைய வேறு வேறு பெயர் கொண்டு இருத்தலை யான் விரும்பினேன்’ என்று முருகப் பெருமானிடம் கூற, அது கேட்டு மகிழ்ந்த பெருமான், அப்படியே என்றும் நிலைபெறும்படி அருளினான்” என்று கூறுகிறார் கவிராயர்.

[ஆதாரம் - வென்றிமாலைக் கவிராயர் அருளிய திருச்செந்தூர்த் தலபுராணம் - திருச்செந்தூர் தேவஸ்தான வெளியீடு 1998]இன்று செந்தூர்ப் புராணம் நம் கைகளில் தவழக் காரணமான வென்றிமாலைக் கவிராயரையும் ஈழத்து முருக பக்தர்களையும் வணங்குவோம்.கோயில் விட்டு வெளியே வந்து மூன்றாம் பிராகாரத்தின் வடபுறம் கடலை நோக்கி இறங்கினால் வள்ளி குகையைக் காணலாம். கல் தூண்களாலான 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் பின்புறம் உள்ள பாறையில் வள்ளி குகை உள்ளது. வள்ளி சிலை சுவரை ஒட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுத்து வரும் போது நம்பிராஜன் முருகனைத் துரத்தியதாகவும், முருகன், வள்ளியை இக் குகையில் ஒளிந்திருக்கச் சொல்லிப் பிள்ளையாரைக் காவல் வைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறுகின்றார் ஆராய்ச்சியாளர் திரு. ராமானந்த சாஸ்திரிகள்.

சுந்தர ஞான மென்குற மாது

தன் திரு மார்பில் அணைவோனே

சுந்தரமான செந்திலில் மேவு

கந்த சுரேசர் பெருமாளே

- என்று பாடுகிறார் அல்லவா அருணகிரியார்!

சுந்தரமான செந்திலின் இயற்கை அழகைப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். ஒரு சில உதாரணங்கள் இதோ!

1. “வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்

இடைவிடாது நெருங்கிய மங்கல

மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே”

2. “பைம்பொன் சிந்தின் துறை தங்கிய

குன்றெங்கும் சங்கு வலம்புரி

பம்பும் தென் செந்திலில் வந்தருள் பெருமாளே”

3. “சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில்

நிறக்கும் சூல்வளை பால்மணி வீசிய

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே”

4. “சங்கம் கஞ்சம் கயல் சூழ்தடம்

எங்கெங்கும் பொங்க மகா புநிதம்

தங்கும் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே”

5. “சந்து அடர்ந்தெழுந்து அரும்பு

மந்தரம் செழும் கரும்பு

கந்து அரம்பை செண்பதம் கொள் செந்தில்வாழ்வே”

சுந்தரமான செந்திலில் வாழும்

சுந்தரனைக் கண்டு வணங்கி மகிழ்வோம்.