Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருநாங்கூர் திருப்பதி

இந்த 108 திருத்தலங்களிலும் இழையோடும் சில அழகான செய்திகளைப் பார்க்கலாம். சில திவ்ய தேசங்கள் இரண்டு இடத்தில் இருக்கும். ஆனால் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும். சில இடங்களில் அருகாமையில் உள்ள கோயில்கள் அனைத்தும் சேர்த்து ஒரு தொகுப்பாகக் கருதுவார்கள். திருநெல்வேலியில் ஆழ்வார்திருநகரியைச் சுற்றி இருக்கக் கூடிய 9 திருத்தலங்களை ஒன்றாகச் சேர்ந்து “நவதிருப்பதி” என்று அழைப்பார்கள். அதைப் போலவே சீர்காழியில் திருநாங்கூர் என்கின்ற பகுதியைச் சுற்றி இருக்கக்கூடிய 11 திவ்ய தேசங்களை இணைத்து “திருநாங்கூர் திருப்பதி” என்பார்கள். இந்த பதினோரு தலங்களையும் இணைத்த கருடசேவைதான் திருநாங்கூர் கருடசேவை.

திருமணிமாடக் கோயில்

திருநாங்கூர் திவ்ய தேசங்களில் ஒன்று. சீர்காழியில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்று அமர்ந்த கோலத்தில் இருப்பதால் மூலவருக்கு நாராயணன் என்று பெயர். வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளைகளில், பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. அணையா (நந்தா) விளக்கு என்றும் இவருக்கு பெயர் உண்டு. ``நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்!

நர நாரணனே! கருமாமுகில் போல் எந்தாய், எமக்கே அருளாய்’’ என்பது பாசுரம். பக்தர் களின் அறியாமை இருளைப் போக்குகிறார். தாயாருக்கு புண்டரீக வல்லி தாயார் என்று திருநாமம். இந்த மணிமாடக் கோயிலில்தான் கருட சேவை உற்சவம் நடைபெறும். எதிரில் இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி என்று அழகிய புஷ்கரணி உண்டு. சிவபெருமான் இக்கோயில் எதிரில் மதங்கீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனி கோயிலில் அருள்பாலிக்கிறார்.

திருக்காவளம்பாடி

கண்ணன், நரகாசுரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்களுக்கே கொடுத்தான். ஒருநாள் இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க, கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன், அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். பிறகுதான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு. மூலவருக்கு ராஜகோபாலன், கோபாலகிருஷ்ணன் என்ற திருநாமம்.

ருக்மணி சத்யபாமாவுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயாருக்கு மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் என்று பெயர். தனி நாச்சியார் சந்நதி இல்லை. திருமங்கையாழ்வார் அவதாரம் செய்த திருக்குறையலூர், வைணவர்களுக்கு ததியாராதனம் செய்த திருமங்கைமடம் இரண்டும் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது. திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இத்தலத்தைப் பாடி இருக்கின்றார்.

ஜி.ராகவேந்திரன்