Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண வரம் அருள்வான் திருமுருகன்!

திருப்பம் தரும் திருப்புகழ்! 10

‘கலியுகவரதன்’ என்று பக்தர்களால் போற்றப் பெறும் வடிவேலன், தன்னை உளமார்ந்த அன்புடனும், நம்பிக்கையோடும்வணங்கும் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி அவர்கள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி வைக்கின்றான்.

‘அடியவர் இச்சையில்

எவை எவை உற்றன

அவை தருவித்து அருள்பெருமாளே!

‘வேண்டிய போது அடியவர்

வேண்டிய போகம் அது

வேண்ட வெறாது உதவும் பெருமாளே!’

என உத்தரவாதம் அளிக்கின்றது மகாமந்திரத் திருப்புகழ்! ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று அடைமொழி கொடுத்து, அழைக்கப்படும் திருமணம், ஆண் - பெண் என இருபாலார் வாழ்விலும் முக்கியமான திருப்புமுனையாக விளங்குகிறது.சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம், ஒவ்வொருவர் வாழ்விலும் தொடர்ந்து சொர்க்க போகமாக வேதிகழ இறைவன் திருவருள் இன்றியமையாதது.குறுந்தொகை, சங்க இலக்கியம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

`இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாதியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே!’

ஆண்டாளின் திருப்பாவை அருமையாக மொழிகின்றது.

`எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன் தன்னோடு உற்றோமே ஆவோம்!

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் இன்பம் இந்த இன்பம் அம்மா!’

என்பதனால்தான் கல்யாணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்றே அழைக்கின்றார்கள். அத்தகைய திருமண வரத்தை ஆண் - பெண் இருபாலார்க்கும் அளிக்கின்றது. திருச்செந்தூரில் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற இந்த மகாமந்திரத் திருப்புகழ்.

`விறல் மாரன் ஐந்து மலர்வாளி சிந்த

மிகவானில் இந்து வெயில் காய

மிதவாடை வந்து தழல் போல ஒன்ற

வினை மாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறை பேதை கொண்

கொடிதான துன்ப மயல் தீர

குளிர்மாலையின் கண் அணிமாலை தந்து

குறை தீரவந்து குறுகாயோ!’

ஸ்ரீரமண பகவான், வள்ளிமலை சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், வாரியார் முதலானோர் தம்மிடம் ‘என் மகள், மகனுக்கு திருமணம் கைகூட வேண்டும். அதற்கு ஏற்ற பரிகாரம் என்ன’ என்று கேட்ட பக்தர்களுக்கு, மேற்கண்ட திருச்செந்தூர் திருப்புகழை தினசரி மனம் உருகிப் பாடச் சொல்லுங்கள். அது போதும், விவாகம் சுபமாக நடந்தேறும்’ என்றே அருள் வாக்கு புகன்றுள்ளார்கள் என்று அவர்களின் வரலாற்றிலிருந்து தெரிய வருகின்றது. கல்யாணம் செய்துக் கொண்டு, குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டிய உரிய வயதை எட்டிய பின்பும், ஆண் - பெண் இரு பாலர்க்கும் பலபேர்க்கு ஏற்ற வரன் கைகூடி வருவதில்லை. தனிமையில் தவிக்கும் அவர்களுக்கு;

`குளிர் நிலவில் கதிர்களும் அனலை அள்ளி வீசுகின்றது

மலர்களும் முள்ளாய்க் குத்துகின்றன.

வாடைக் காற்றும் கோடைக் காற்றாய் வாட்டுகின்றது.

தனிமை அவர்களைச் சுட்டெரிகின்றது

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய்க் கொதிக்கின்றது! - அந்த

மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது?’

என்று விரகதாபம் மீதூற உடல் மெலிந்து, மனம் நலிந்து வாழ்க்கைத் துணையோடு வாழ வேண்டிய காலத்தை வறிதே கழிக்கிறார்கள். மன்மதன் மலர்களை வீச, வட்ட நிலவு பட்டப் பகல்போல சுட்டெரிக்க, காற்று கனலாக வருத்த, பலரும் பழிகூற தனிமையில் தவிக்கும் எனக்குத் தக்க துணையை முருகா நீதான் தந்தருள வேண்டும். இறைவன் மட்டுமே ஆண். நாம் அனைவருமே பெண்கள்தான். நாயகன் ஆண்டவன். ஆண் - பெண், இருபாலாரும் நாயகிதான். ‘நான்’ என்று மார்தட்டும் பெருமாளே!’ என்கிறார் அருணகிரியார். ஆன்மிகம் வரையறுத்துள்ள இவ்வடிப்படையில்தான் அனைத்து அடியார்களும் பாடுகின்றனர். மேலும் ஒரு திருப்புகழ்ப் பாடலும் இதை உறுதிப்படுத்துகின்றது.

`நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே

நீ வந்த வாழ்வைக் கண்டு அதனாலே

மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும்

மார்தங்கு தாரைத் தந்து அருள்வாயே!

வேல் கொண்டு வேலைப் பண்டு எறிவோனே!

வீரங்கொள் சூரர்க்குக் குலகாலா

நாலந்த வேதத்தின் பொருளோனே!

‘நான்’ என்று மார்தட்டும் பெருமாளே!’

பரமாத்மாவின் மீது வேட்கை கொண்ட ஜீவாத்மா, அந்த ஆசை தீர ஆண்டவனின் மார்பில் அசையும் மாலையைதான் பெற விரும்புகிறது என்பதே பாடலின் கருத்து.

`சிவனார் மனங்குளிர உபதேசம் செய்த செல்வரே!

சிரௌஞ்ச மலையும், அரக்கன் சூரபத் மனும்

அழிய வடிவேல் வீசிய முருகப் பெருமானே!

மெய்யறிவு தலைப்பட உன் இருபாத கமலங்களை

பக்தியுடன் வழிபடும் அன்பர்களின் வாழ்வை

அற்புதப் பலன்களால் சிறக்க வைப்பவரே!

செம்பொன் மயில்ஏறி செந்தூரில் தரிசனம் தரும் செல்வேளே!

திருமணவரத்தை உரிய காலத்தில் தந்து மண்ணில்

நல்லவண்ணம் வாழ அருள் புரிக!”

மேற்கண்ட வேண்டுதலுடன் பாடலின் நிறைவுப் பகுதி விளங்குகின்றது.

‘மாறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து

வழிபாடு தந்த மதியாளா!

மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

வடிவேல் எறிந்த அதிதீரா!

அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்

அடியார் இடைஞ்சல் களைவோனே!

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாய் உகந்த பெருமாளே!’

திருமணம் கைகூட, சொந்த வீடு பெற, நோய் நீங்க, செய்யும் தொழில் வளர்ச்சி அடைய, குடும்பம் மேன்மை அடைய, புகழ் பெற்றுத் திகழ என பல வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருகிறது அருணகிரிநாதர் அருளிய மகா மந்திரத்திருப்புகழ்! இதன் காரணமாகவே ‘வாக்கிற்கு அருணகிரி! வாழ்க்கைக்குத் திருப்புகழ்’ என பக்தி உலகம் பாராட்டி மகிழ்கிறது.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்