சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: அருள்மிகு கோகிலேஸ் வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.
சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் 35ஆவது சிவத்தலமான இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடையது.
தேவாரப்பதிகம்:
``நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே’’.
- திருஞானசம்பந்தர்
இறைவன்: கோழம்பநாதர். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் `கோகிலேசுவரர்’ என்று வணங்கப்படுகிறார்.
இறைவி: சௌந்தரநாயகி.
1100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் கற்றளியாக மாற்றப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதவி அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும். உத்தமசோழன், முதலாம் ராஜாதிராஜர், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆகியோரின் திருப்பணி, நிவந்தங்கள் குறித்த கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
மகர, பத்ர, சித்ர தோரணங்களுடன் கூடிய கருவறை கோஷ்டங்களில் விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், அற்புத வடிவுடன் அர்த்தநாரீஸ்வரர், நவகண்ட வீரனுடன் மஹிஷாசூர மர்த்தினி, பேரழகு பிட்சாடனர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். எழில்மிகு சிற்பச் சிறப்புகளுடன் கூடிய இவ்வாலயம், ஒவ்வொரு சிற்பக்கலை ஆர்வலரையும் கவர்ந்திழுப்பதில் வியப்பில்லை.
தொகுப்பு: மது ஜெகதீஷ்