Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

எந்த ஒரு ஆலயத்திற்கு செல்வதாக இருந்தாலும் அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் தான் நம்மால் அந்த ஆலயத்திற்கு செல்ல முடியும். பலருக்கும் பல பிரபலமான ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான முயற்சிகளை செய்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் அல்லது தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் பலரும் ஆசைப்படக்கூடிய ஒரு கோவிலாக திகழ்வதுதான் திருச்செந்தூர். இந்த திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்பவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதால் பலரும் முருகப்பெருமானை திருச்செந்தூர் சென்று தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி சென்று தரிசிக்கும் பொழுது செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருச்செந்தூர் முருகன் வழிபாடு

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழக்கூடியது தான் திருச்செந்தூர் முருகன் கோவில். அசுரனை வதம் செய்த இடமாக தான் இந்த திருச்செந்தூர் திகழ்கிறது. மேலும் இது குரு ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாக இந்த தலம் திகழ்கிறது. அதனால் தான் வேறு எந்த முருகப்பெருமானிடமும் இல்லாத ஒரு சிறப்பாக இந்த முருகனின் கையில் மலர்கள் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த முருகப்பெருமானின் ஆலயத்திற்கு செல்லும் பொழுது எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அதனால் பலரும் செவ்வாய்க்கிழமை சென்று வழிபட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் எந்த தவறும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் இது குரு ஸ்தலம் என்பதால் வியாழக்கிழமை முருகப்பெருமானை தரிசிப்பது என்பது மிகவும் சிறப்பு. புதன்கிழமை அன்று ஆலயத்திற்கு சென்று இரவு தங்கி வியாழக்கிழமை காலையில் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

விசேஷகரமான நாட்களாக கருதப்படும் சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் கூட்டங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு கூட்டம் இல்லாத நாட்களாக சென்று தரிசனம் செய்வது சிறப்பு. விடியற்காலையில் எழுந்து அங்கு இருக்கக்கூடிய நாளி கிணற்றில் நீராடி விட்டு கடலில் மூழ்கி எந்திரிக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானை தரிசிப்பதற்கு முன்பாக கடைவீதியில் இருக்கக்கூடிய விநாயகருக்கு சிதறு தேங்காயை உடைத்து விட்டு அவரிடம் மனதார வேண்டிக்கொண்டு பிறகு முருகப்பெருமானை தரிசிக்க செல்ல வேண்டும்.

இவ்வாறு முருகப்பெருமானை தரிசிக்க செல்லும் பொழுது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லாமல் நம்மால் இயன்ற அளவு மலர்களை வாங்கிக் கொண்டு போய் முருகப்பெருமானுக்கு கொடுக்க வேண்டும். நம்முடைய வேண்டுதலை நாம் கூறும் பொழுது கண்களை திறந்து முருகப்பெருமானை பார்த்தவாறு கூற வேண்டுமே தவிர்த்து கண்களை மூடி கூறக்கூடாது. அப்படி அந்த நேரத்தில் முருகப்பெருமானை வேண்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து கோவிலுக்குள் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து வேண்டுதலை கூறலாம்.

கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்த பிறகு எந்த தெய்வத்தை நீங்கள் வழிபடுகிறீர்களோ இல்லையோ கண்டிப்பான முறையில் குரு பகவானை சென்று வழிபட வேண்டும். முடிந்தால் அவருக்கு இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டுவிட்டு வரவேண்டும். பிறகு அங்கு அசுரனை வதம் செய்த சூரசம்கார மூர்த்தி இருப்பார். அவரையும் வழிபாடு செய்ய வேண்டும். இவரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய எதிரிகளின் தொல்லையிலிருந்து நாம் விடுபடுவோம். இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றி நாம் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளை நம்மால் பெற முடியும்.