Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

முத்துக்கள் முப்பது-சாமி சரணம் ஐயப்பா! சத்தியம் நீ மெய்யப்பா!!

1. முன்னுரை

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. விடியல் காலை வேளையில் எங்கெங்கு பார்த்தாலும் பெரும்பாலும் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, உற்சாகமாக விண்ணைப் பிளக்கும் வண்ணம் ஐயப்ப சரண கோஷம் எழுப்பும் அற்புதக் காட்சியை நாம் காண முடியும். ஆண்டுக்கு ஒருமுறை வைராக்கியத்தோடு கடுமையான விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி என்ன ஐயப்பனுக்கு மகிமை? என்பதைத் தெரிந்து கொள்ள இந்த இதழின் முத்துக்கள் முப்பது பகுதிக்குள் நுழைவோம்.வாருங்கள்.

2. மாதப்பிறப்பின் சிறப்பு

தமிழ் மாதத்தின் முதல் நாள் மாதப் பிறப்பை தவறாமல் கொண்டாடுபவர்கள் உண்டு. பெரும்பாலும் அன்றைய தினம் விரதம் இருப்பார்கள். முன்னோர்களுக்கு மாத தர்ப்பணம் செய்வார்கள். சமய மரபில் 12 மாதங்களையும் மூன்று பகுதிகளாகப் பிரித்து நான்கு மாதங்களை மகா விஷ்ணுவுக்கும், நான்கு மாதங்களை சிவபெருமானுக்கும், நான்கு மாதங் களை நான்முகக் கடவுளுக்கும் தந்திருக்கிறார்கள். நான்முகனுக்கு தந்த நான்கு மாதங்களை விஷூ புண்யகாலம் என்ற பெயரிலும், சிவ பெருமானுக்குத் தந்த நான்கு மாதங்களை ஷடசீதி புண்யகாலம் என்றும், மகாவிஷ்ணுவுக்குத் தந்த நான்கு மாதங்களை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் கார்த்திகை மாதம் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலமாக வருகிறது.

3. விரத மாலை போடும் நாள்

ஒவ்வொரு மாதப் பிறப்பும் விசேஷம் என்றாலும் சில மாதத்தின் பிறப்பு நாட்கள் மிகச்சிறந்த விழா நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாள் வருஷப் பிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் முதல் நாள் துலாஸ்நான நாளாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

அதைப்போல கார்த்திகை மாதத்தின் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுக்க காவிரி ஆற்றில் நீராடும் மாதமாகவும் கார்த்திகை மாதம் முழுக்க ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் மாதமாகவும் மார்கழி மாதம் முழுக்க சிவ பக்தர்களும் விஷ்ணு பக்தர்களும் தனுர் மாத வழிபாட்டைச் செய்யும் மாதமாகவும் அமைந்திருக்கிறது.

4. ஏன் கார்த்திகை மாதம்?

ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் சரத்ருது என்று அழைக்கப்படுகின்றன. அக்னியின் வடிவமான சூரிய பகவான் ஐப்பசி மாதத்தில் வெப்பம் குறைந்து நீசம் பெறுகிறார். வெப்பம் குறைவதால் மழை பெய்யத் தொடங்கும். ஐப்பசி மாதத்தில் அடைமழை என்றும், கார்த்திகை மாதத்தில் கடும் மழை என்றும் கூறுவார்கள். இந்த மாதத்தில் தான் திருக்கார்த்திகை தீபம் எனும் மிகப்பெரிய விழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

சோம வார விரதம் கடைபிடிக்கப் படுகிறது. ரம்பா திருதியை, முடவன் முழுக்கு, சம்பா சஷ்டி, நந்த சப்தமி, கைசிக ஏகாதசி, பரசுராம ஜெயந்தி என்று பற்பல உற்சவங்களும் விரதங்களும் வரும் மாதம் கார்த்திகை மாதம் . இத்தனை சிறப்பு மிகுந்த ,சரத் ருது காலமான கார்த்திகை மாதத்தை ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் மாதமாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

5.அனைவரும் பங்கு கொள்ளும் விரதம்

எளிய மக்களும் சாதி போன்ற வேறுபாடுகளின்றி கடைபிடிக்கும் அற்புதமான விரதம்தான் ஐயப்ப சுவாமி விரதம். ஐயப்ப சுவாமி விரத வழிபாடும், சாஸ்திர விதிகளும், சடங்குகளும், மாலை அணிந்து பூஜை செய்தலும், மனதையும் உடலையும் உறுதியாக்குகிறது. எளியோரை வசப்படுத்தும் குழந்தை தெய்வம் ஐயப்பன் இரும்பான இதயத்தையும் கரும்பாக்கி வாழ்வை இனிமையாக்கும் தெய்வம். அவன் பெருமை சொல்லில் அடங்காது.சொல்லவும் முடியாதது.

6. எத்தனை பெயர்கள்?

சபரிமலை சாஸ்தா, மணிகண்டன், ஹரிஹர சுதன், ஜோதிஸ் வரூபன், சத்குருநாதன், சாந்தசீலன். சத்குண போதன்.சச்சிதானந்த சொரூபன், பதினெட்டாம் படிநாதன், வில்லாளி வீரன், பொன்னம்பல வாசன், மோஹன ரூபன் என எத்தனை பெயர்கள் ஐயப்பனுக்கு. அத்தனையும் அன்புடன் இடப்பட்ட காரணப் பெயர்கள். ஐயப்பன் பலருக்கும் மெய்யப்பன். நம்பியவர்களை கைவிடாத அருளப்பன். மருள் நீக்கி தெருள் தந்து ஞான ஒளியிலே அழுத்துபவன். யாரெல்லாம் தேடுகின்றார்களோ அவர்கள் கண்களுக்கு ஓடி வருபவன். தினசரி ஏற்றும் திரு விளக்கின் ஒளியினிலே ஜோதியாய் திகழ்பவன். வாடுகின்ற ஏழைகளின் வறுமையைத் தீர்த்து நல்வாழ்வு அளிப்பவன். வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் தெய்வமவன்.

7. நம்பினார் கெடுவதில்லை

‘‘நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு, நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு” என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகத்தான் லட்ஷக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி விரதமிருக்கிறார்கள். மற்ற விரதங்களும் ஐயப்ப சுவாமி விரதத்திற்கும் வேறுபாடு உண்டு. மண்டல விரதம் என மிக நீண்ட விரதம் ஐயப்ப விரதம். இந்த விரதம் கடுமையானது.

வருடம் ஒருமுறை இப்படி விரதம் இருந்து பழகியவர்க்கு, வருடத்தின் மற்ற நாட்களில் மனத் துன்பமோ உடல் துன்பமோ வருவதில்லை. வந்தாலும் அதனை உறுதியாக எதிர்கொள்ளும் திறனும் குணமும் இயல்பாகவே மலர்ந்து விடுகிறது. எனவே சமய நம்பிக்கையிலான இந்த விரதம் ஒரு மனிதனின் வாழ்வியல் நம்பிக்கைகளையும் மேம்படுத்துகிறது. உடலும் உள்ளமும் பக்குவப்பட்டு உற்சாகமடைந்து, நல்ல முறையில் செயல்படும் ஆற்றலைப் பெறுகிறது. அதைத் தருகிறான் ஐயப்பன்.

8.எப்படி விரதம் இருக்க வேண்டும்?

கார்த்திகை மாதம் முதல் நாளிலோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ மாலை அணிந்து விரதம் தொடங்க வேண்டும். 54 அல்லது 108 மணிகள் கொண்ட மாலையை, ஐயப்பன் டாலருடன், ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்து அல்லது குருசாமியின் கைகளால் அணிந்து கொள்ளலாம். விரதம் குறைந்தபட்சம் 41 நாட்கள் கடைபிடிக்க வேண்டும். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்தால் நாள் பார்க்கத் தேவையில்லை; அதற்குப் பிறகு அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து அணிய வேண்டும்.

விரதத்தின்போது அன்பு, பொறுமை, தியாகம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும்,பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

9. எல்லோரும் ஸ்வாமிதான் எல்லோரும் ஐயப்பன்தான்

நாம் தினசரி வழிபாட்டின்போது ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்று ஒரு வார்த்தையைச் சொல்லுவோம். இதற்கு என்ன பொருள்? உலகத்தில் உள்ள எல்லாம் விஷ்ணு தான். ‘‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரண ஆனந்தமே” என்றார் தாயுமானவர். இதைச் செயலில் காட்டுபவர்கள்தான் பக்தர்கள். எல்லா பக்தர்களும் இதைக் கடைபிடித்தாலும், மிகச் சிறப்பாக ஐயப்ப பக்தர்கள் கடைபிடிப்பார்கள்.

அது அவர்களுக்கு விரதத்தின் ஒரு அங்கமாகச் சொல்லித் தரப்படுகிறது. ஐயப்பசுவாமி விரதத்தின் அடிப்படை. நாடு, மொழி, செல்வநிலை, வயது, பதவி, பட்டம் என அனைத்தும் ஐயப்பனுக்கு முன் சமநிலை பெற வேண்டும். அவர்கள் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வதில்லை. எல்லோரும் ஸ்வாமிதான். அனைத்து வேறுபாடுகளையும் ஐயப்பசாமி விரதம் களைந்து அனை வரையும் ஒன்றுபடுத்துகின்ற அதிசயத்தைச் செய்கிறது. மாலை அணிந்து மண்டல விரதம் இருந்து, விரதத்தை கடைபிடிக்கும் ஒவ்வொருவருமே ஐயப்பனின் வடிவங்கள்தான்.

10. ஐயப்பனின் அவதார வைபவம்

சுவாமி ஐயப்பனின் அவதாரச் சிறப்பையும் கவனிக்க வேண்டும். ஒரே தெய்வத்தின் முப்பெரும் சக்திகள் தான் ஹரியும் ஹரனும் சக்தியும். பார் வதியை தங்கையாக்கி, பகவான் விஷ்ணுவை அண்ணனாக்கி, சிவபெருமானை தங்கை பார்வதியை மணந்த உறவாக்கி, தெய்வங்களிடம் பேதங்களை நீக்கி அபேதத்தைக் காட்டியது நமது தர்மம். ஆனால் இந்த அபேதங்களின் இணைப்பாக ஒரு உன்னத வடிவம் கிடைக்க வேண்டுமே, அப்படி சிவ விஷ்ணு ஐக்கியத்தில் அமைந்த அவதாரம்தான் ஐயப்பனின் அவதாரம். சிவனுக்கு முருகன், பிள்ளையார் என்று பிள்ளைகள் உண்டு. பகவான் விஷ்ணுவுக்கும் பிள்ளைகள் உண்டு. ஆனால் பகவான் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிள்ளை சபரிமலை ஐயப்பன்.

11. மகிஷி அரக்கர்களின் தொடர்ச்சியாக

அரக்கர்களும், அவதாரங்களின் தொடர்ச்சியாக அவதாரங்களும் மண்ணில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. ஐயப்ப சுவாமியின் அவதாரம், அம்பாள் பார்வதிதேவி எடுத்த அவதாரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. மகிஷாசுரன் ஆண். அந்த அசுரனை அன்னை பார்வதிதேவி சாமுண்டீஸ்வரியாக தோன்றி அழித்தாள் . மகிஷாசுரனின் தங்கை மகிஷி, பெண். அவளை அழிக்க ஐயப்பசுவாமி ஆண் குழந்தையாகத் தோன்றினார். பார்வதிதேவி நவராத்திரி நாயகியாக மகிஷாசுரமர்த்தினியாக அவதாரமெடுத்து மகிஷாசுரனை அழித்தாள். மகிஷாசுரனின் தங்கையான மகிஷி என்ற அரக்கியை அழிப்பதற்கு, அவளுடைய வரத்தின்படி, எடுத்த அவதாரம்தான் ஐயப்ப சுவாமியின் அவதாரம்.

12. ஐயப்பனின் கதை

பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜசேகரன். பந்தள நாட்டை ஆண்டு வந்தான்.அவனுடைய மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் ஆராதனை செய்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. ஒரு நாள் பம்பை நதியோரம் அரசன் உலாவச் செல்லும் பொழுது ஓர் அழகான ஆண்குழந்தையைக் கண்டெடுத்தான். குழந்தையின் அழகும் தெய்வீகமும் வசீகரமும் கவர்ந்து இழுத்தது. பிள்ளையில்லா குறை தனக்குத் தீர்ந்து போனதாக பெருமகிழ்ச்சி கொண்டான்.

குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்ற பெயரை வைத்தான். குழந்தையின் மீது அரசனும் அரசியும் பாசத்தைப் பொழிந்தார்கள். மணிகண்டன் வந்த நேரமோ என்னவோ கோப்பெருந்தேவி கருவுற்றாள். ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ராஜராஜன் என்று பெயர் வைத்தார்கள். நாள் செல்லச் செல்ல அரசிக்கு தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் மீது பாசம் அதிகரித்தது.

13. அரசியல் சூழ்ச்சி

குழந்தை மணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது. அரசிக்கு தீர்க்க முடியாத தலைவலி வந்தது. எந்த வைத்தியத்திலும் அந்த நோய் தீரவில்லை. மூத்த மகன் மணிகண்டனுக்கு முடிசூட்டி விட அரசன் நினைத்தான். இந்தச் சந்தர்ப்பத்தை பந்தள நாட்டின் அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த நினைத்தனர். அரசியல் சூழ்ச்சிகளும் அதற்கேற்றவாறு அரங் கேற்றம் செய்தன. அரசியின் நோய் தீர்க்க புலிப்பால் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று சில மருத்துவர்களை கையில் வைத்துக்கொண்டு வினோதமான வைத்தியம் சொல்லி மந்திரிகள் சூழ்ச்சி செய்தனர். தாயின் நோயைத் தீர்க்க தானே சென்று புலிப்பால் கொண்டுவருவதாக 12 வயது பாலகன் மணிகண்டன் புறப்பட்டான். மகிஷாசுரமர்த்தினியாக அம்பாள் சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்தது போல, மகிசியை அழித்த மணிகண்டன் புலியின் மீது ஆரோகணித்து வந்தான். தெய்வமாய் நின்றான்.

14. கார்த்திகை விரதம்

கார்த்திகை மாதம் என்பது ஒளி மாதம். கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில்தான் சிவபெருமான் ஜோதியாக எழுந்தார். எனவே இந்த மாதத்தின் முதல் நாளில் சபரிமலை விரதத்தை தொடங்க வேண்டும். அன்று முதல் 41 நாட்கள் ‘‘மண்டல விரதம்” இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் அருகில் ஓடும் நதியிலோ, புண்ணிய குளங்களிலோ,தூய்மையான குளிர்ந்த நீரிலோ நீராட வேண்டும். (வெந்நீரில் நீராடக்கூடாது) ஒவ்வொரு நாளும் தவறாது கோயில்களுக்குச் செல்ல வேண்டும். மாலையில் தீபம் ஏற்ற வேண்டும். சபரி மலைக்குப் போய் வந்து மாலையை கழட்டி விட்டாலும் கூட, மகரஜோதி நாள் (தை முதல் தேதி)வரைக்கும் விரதத்தைத் தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

15. சபரிமலைக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

சபரிமலைக்கு மாலை போடும் போது மிகவும் பக்தியுடன் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மந்திரம் என்றாலே சொல்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதில் குருவையும் சுவாமியையும் இணைத்து வணங்குகின்றோம். குரு என்றால் தெளிவைத் தருபவர். மனதின் இருட்டை விலக்குபவர். நல்வழி காட்டுபவர். கைப்பிடித்து இறைவனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவர் என்று பொருள். இதில் இறைவனையும் இறைவனைக் காட்டிக் கொடுத்த குருவையும் வணங்கு கின்றோம். விரதத்தின் பல்வேறு கூறுகளைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றோம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்

சாந்த முத்ராம் சத்ய

முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்

சபர் யாச்ரச சத்யேன

முத்ராம் பாது சதாபிமோ

குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

விரதம் முடிந்து மாலையைக் கழட்டும்போது

அபூர்வ சால ரோஹ திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ தேகிமே விரத விமோசனம்

என்ற மந்திரத்தைச் சொல்லி மாலையைக் கழட்ட வேண்டும்.

16. இருமுடி கட்டுதல்

ஒரு காலத்தில் நீண்ட காட்டு வழியே (பெருவழிப்பாதை 75 கி.மீ.) சபரிமலையை தரிசிக்கச் செல்ல வேண்டும். வழியில் உணவும் பொருளும் கிடைக்காது. பூஜை பொருள்கள் கிடைக்காது.எனவே ஒரு துணிப்பையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக்கு தேவையான பூஜை பொருட்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசிய பொருட்களையும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக்கொண்டு யாத்திரை செல்வார்கள்.

அதற்கு முன் யாத்ரா தானம் உண்டு. யாத்திரை புறப்பட்டு விட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ யாத்திரையில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் வைக்க வேண்டிய பொருட்கள்: மலை நடை பகவதி மஞ்சமாதாவுக்காகமஞ்சள்பொடி, சந்தனம், குங்குமம், நெய் தேங்காய், பசுநெய், விடலைத் தேங்காய்கள், கற்பூரம், பச்சரிசி. இன்னொரு பகுதியில் சமையலுக்கு தேவையான பொருட்கள் மிகக் குறைந்த அளவு கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். நெய் தேங்காயை அபிஷேகத்திற்கும் விடலைத் தேங்காயை படி ஏறும் முன்பும் ,தரிசனம் செய்து வந்து விட்ட பின்பும் சூரைத்தேங்காய் விடுவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

17.சபரிமலை பூஜைகள்

சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் பூஜை உண்டு. ஆங்கில புதுவருட நாளுக்கு முன் தினம் மகரவிளக்கு பூஜை தொடங்கும். தை மாதம் ஒன்றாம் தேதி மகர விளக்கு. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து நாட்கள் மாத பூஜைகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் நடந்து ஆராட்டு விழா நடைபெறும். சித்திரை மாத முக்கியமான விழா சித்திரை விஷு .வைகாசி மாதத்தில் வைகாசி மாத பூஜையும் பிரதிஷ்டை தின விழாவும் நடைபெறும்.

ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மாத பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதத்தில் திருவோணம் பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம், ஐப்பசி மாத பூஜை நடந்து சித்திரை ஆட்டத் திருநாள் விழா இரண்டு நாள் நடைபெறும். மிக நீண்ட நாள் நடை திறந்து இருப்பது கார்த்திகை மாத மண்டல பூஜையின்போது தான். சாதாரணமாக சபரி மலை பூஜை நேரங்கள்: காலைநேரப் பூஜை. கோயில் நடை திறப்பு நிர்மால்யம் அபிஷேகம். காலை 3.00 மணி. உஷ பூஜை: காலை 7.30 மணி முதல் நடைபெறும். உச்சிக்கால பூஜை: மதியம்-12.30 மணி; அத்தாழ பூஜை: இரவு 9.30 மணி.

18. கன்னி பூஜை

சபரிமலை யாத்திரைக்கு செல்லும் புதிய சாமிகளை கன்னி சாமி என்பர். அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று மதிப்போடு சொல்லும் வழக்கம் உண்டு. முதல்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை செல்வார்கள். இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் 11-ஆம் தேதிக்குள் இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்தவேண்டும்.

வீட்டில்தான் இதனைச் செய்யவேண்டும். ஒரு தனி பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகைபுரத்து அம்மன், கருப்பஸ்வாமி, கடுத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, வெற்றிலை பாக்கு, சித்திரானங்களை வைத்து பூஜை செய்யவேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். ஒருவர் 18 ஆண்டுகள் தொடர்ந்து சபரி மலைக்கு தடையின்றிச் சென்று வந்து விட்டால் அவர் குருசாமி என்று அழைக்கப்படும் மரபு உண்டு.

19. எங்கே இருக்கிறது சபரிமலை ஐயப்பன் கோயில்

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் 1535 அடி உயரத்தில் உள்ளது. கோயில் சிறியது. ஆனால் அழகானது.இயற்கை சூழலில் அமைந்தது. ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ந்தது போல் இருக்கும்.

இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோயிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோயில் நம் கண்ணில் தென்படும்.18 படிகள் உண்டு. விரதம் இருப்பவர்கள் மட்டும் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம்.இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோயில் பழமையானது அல்ல. பழமையான கோயில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோயிலாகும்.

20. பம்பை நதி

சபரிமலை செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று பெரும்பாதை என்ற எரிமேலியில் தொடங்கி பம்பை வரை அடர்ந்த காட்டின் இடையே கல்லும் முள்ளும் நிறைந்த நீண்ட பாதை. அடுத்து கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், திருவல்லா, ஆலப்புழா, புனலூர் முதலிய இடங்களிலிருந்து பம்பை நதிக்கு வரும் எளிய பாதை. இரண்டு பாதையும் சந்திக்கும் இடம் பம்பை நதி. இந்தப் பகுதிக்கு மேலுள்ள மலைதான் சபரி மலை என்று சொல்வார்கள். இங்கிருந்து சபரிமலை ஏழு கிலோமீட்டர். இங்கே நீராடிவிட்டு தான் சபரிமலைக்குச் செல்லவேண்டும்.

ராமாயணத்தில் ராமனுக்காக காத்திருந்த வேடர் குலத்தில் பிறந்த பெண்ணான சபரி தான் பம்பை நதியாக இருப்பதாகச் சொல்வர். இது மிகப் புனிதமான நதி. இங்கேயும் ஒரு திரிவேணி சங்கமம் உண்டு. கல்லாறு, கக்காட்டாறு என்ற இரண்டு நதிகள் பம்பையில் கலக்கும் இடத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறந்தது. இங்கு ஆஞ்சநேயர் கோயிலும், கணபதி, ராமர் சந்நதிகளும் உண்டு. மகர விளக்கு பூஜைக்கு முன்னால் பம்பா உற்சவம் என்ற உற்சவம் இந்த நதியில் நடக்கும். விளக்கு உற்சவம் என்பார்கள். பெரிய இலைகளில் நெய்விளக்கு ஏற்றி ஜெகஜோதியாக ஆற்றில் மிதக்க விடப்படும்.

21. மகரவிளக்கு

மகரம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்.உத்தராயண புண்ய காலம் என்பார்கள். உத்தராயணத்தில் முதல் தேதியை மகர சங்கராந்தி என்பார்கள். அன்றைக்கு மாலை சபரி மலைக்கு நேர் எதிர்மலையான பொன்னம்பலமேடு, (கண்டமாலா முடுக்கு) என்ற இடத்தில் மூன்று முறை வானத்தில் பிரகாசமான ஜோதி தெரியும். அதனை மகர ஜோதி தரிசனம் என்று சொல்லுகின்றார்கள். இது குறித்து பல கருத்துக்கள் உண்டு என்றாலும் கூட, ஐயப்ப பக்தர்களால் அது ஒரு அதிசய நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இரண்டாவதாக சபரிமலை கார்த்திகை மண்டல பூஜைவிரதத்தின் நிறைவு நிகழ்ச்சியாக மகரவிளக்கு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த மகரஜோதி பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

22. 61 நாட்கள் நீடிக்கும் விரதம்

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மகரஜோதி தரிசனம் தெரியும் தை மாதம் ஒன்றாம் தேதி வரை 61 நாட்கள் நீடிக்கும் மகத்தான ஐயப்ப சுவாமியின் விரதம் துவங்குகிறது. இரண்டு மாதம் உடலுக்கும் உள்ளத்துக்கும் கொடுக்கும் ஆன்மிக பயிற்சியில், எஞ்சிய பத்து மாதங்கள், எதையும் தாங்கி வாழ்வை எதிர்கொள்ளும் ஆளுமைத் திறனும், ஆன்மீக விழிப்புணர்வும் வளர்கிறது. ஐயப்பனுக்கு “அன்னதான பிரபு” என்றொரு நாமம் உண்டு. அன்னதானத்தில் மகிழ்பவன். அன்னதானம் செய்வோரை வாழச் செய்பவன்அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி அன்னதானம் செய்யலாம். ஐயப்பனை தினமும் பூஜை செய்துவிட்டு வெளியில் செல்லும்போது தினமும் உங்களால் முடிந்த அளவு ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லி உணவு வழங்குங்கள். இது ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும்.

23. மாளிகைபுரத்து அம்மன்

ஐயப்பனோடு ஆர்ப்பரித்து சண்டை செய்த மகிசி என்னும் அரக்கி ஐயப்பனின் அம்புக்கு அடிபட்டு விழுந்த இடம் அழுதா நதி என்று சொல்வார்கள். அவள் தன்னுடைய அரக்கி வடிவத்திலிருந்து அழகிய பெண்ணாக மாறினாள். லீலா என்று அவளுக்கு பெயர். தன் எதிரே நின்ற ஐயப்பனைப் பார்த்து, அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். ஆனால் ஐயப்பன், ‘‘தான் இந்த பிறவியில் பிரம்மச் சரிய விரதம் அனுஷ்டிப்பதால் மணந்துகொள்ள முடியாது” என்றும் சொல்கிறார்.

ஆனாலும் அவள் வற்புறுத்தவே, ‘‘இதோ பார், நீ எனக்காக காத்திரு. என்றைக்கு என் சந்நதிக்கு ஒரு கன்னி சாமியும் வராமல் இருக்கிறாரோ, அன்றைக்கு உன்னை மணந்துகொள்ளுகின்றேன்” என்று தன் கோயிலுக்கு அருகாமையிலேயே அவளுக்கும் ஒரு இடம் தந்தார். அங்கே மாளிகைபுரத்து அம்மன், மஞ்சள் மாதாவாக எழுந்தருளி ஐயப்ப பக்தர்களுக்கு அருள் செய்கிறார். சபரிமலை ஐயப்பனை தரிசிப்பவர்கள் மாளிகைபுரத்து அம்மனை தரிசிக்காமல் திரும்புவதில்லை மஞ்சமாதாவுக்கு என்று தனியாக மஞ்சள் பொடியை இருமுடியில் வைத்துக் கொள்வார்கள்.

24. பதினெட்டாம் படி தத்துவம்

சபரிமலை என்றாலே பதினெட்டாம்படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வது தான் முறையான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறையான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்ய முடியாது. பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது.

புராணங்கள் பதினெட்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. மகாபாரதப் போர் நடந்த தினம் 18. மகாபாரத பருவங்கள் 18. சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18.பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும், அன்னமயகோசம் முதலான ஐந்து கோசங்களையும் , சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து உள்ளுறையும் ஆத் மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.

25. ஸ்வாமியாக இருந்தாலும் தந்தைக்கு மரியாதை

சபரிமலையில், சற்று உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த திருக்கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போலவே காட்சி தருவார். சபரிமலையில், சின்முத்திரையை வலது கரத்தில் காட்டி இடது கையை முழங்கால் மீது வைத்து. இரு கால்களையும் குத்திட்டு அமர்ந்த கோலத்தில் சபரிநாதனை தரிசிக்கலாம். இரு கால்களையும் துணியால் கட்டியிருப்பது போன்ற பட்டை பதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம். ஐயப்பனை தரிசிக்க பந்தள மகாராஜா ஒரு முறை வந்தபோது, ஐயப்பன், தந்தை என்று எண்ணி எழுந்திருக்க முயல, இறைவன் தனக்கு மரியாதை செய்யக் கூடாது என்று கருதிய மன்னன் தன் தோளில் போட்டிருந்த பட்டு வஸ்திரத்தை ஐயப்பனை நோக்கித் தூக்கிப் போட்டபோது அந்த அங்க வஸ்த்திரம் ஐயப்பனின் கால்களை சுற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

26. இந்த ஆண்டு மண்டல பூஜை ஆரம்பிக்கும் நாள்

சபரிமலை யாத்திரை என்பது கார்த்திகை மாதம் தவிர ஆண்டு முழுவதும் சில குறிப்பிட்ட நாட்களில் சென்று வருகின்றார்கள். மகரவிளக்கு விழா தவிர, ஆலயத்தில் மற்ற உற்சவங்களும் நடைபெறுகின்றன. வருடம் முழுக்க உற்சவம் நடந்து கொண்டே இருக்கின்றன. மகர விளக்குக்கு மிக அதிகமானவர்கள் செல்கிறார்கள். மாதா மாதம் தவறாமல் சபரிமலைக்குச் சென்று வருபவர்களும் உண்டு. சபரிமலை பக்தர்களின் வசதிக்காக 2026-ம் ஆண்டிற்கான சபரிமலை சன்னிதானம் நடைதிறக்கும் அடைக்கும் நாட்கள் அட்டவணை கொடுத்திருக்கிறோம்.

* மண்டல பூஜை மஹோத்சவம்

கோயில் நடை திறப்பு- 16-11-2025

கோயில் நடை அடைப்பு- 27-12-2025

* மண்டல பூஜை மஹோத்சவம்

நாள் -27-12-2025

*மகர விளக்கு திருவிழா

30-12-2025 முதல் 20-01-2026 வரை

* மகர விளக்கு மஹோத்சவம் தினம்

14-1-2026

* மாதாந்திர பூஜை (மாசி)

12-2-2026 முதல் 17-2-2026 வரை

* மாதாந்திர பூஜை (பங்குனி)

14-3-2026 முதல் 19-3-2026 வரை

27. சபரிமலை

பள்ளிவேட்டை உற்சவம்

* சபரிமலை உற்சவம்

22-3-2026 முதல் 1-4-2026

* கொடியேற்றம் - 23-3-2026

* பள்ளிவேட்டை- 31-3-2026

* பங்குனி உத்திரம் மற்றும்

ஆராட்டு விழா

1-4-2026

*விஷு திருவிழா (மாதாந்திர

பூஜை - சித்திரை)

10-4-2026

*விஷு பூஜை நாள்

15-4-2026 முதல் 18-4-2026

*மாதாந்திர பூஜை (வைகாசி)

14-5-2026 முதல் 19-5-2026

28. சபரிமலை சிலை

பிரதிஷ்டை நாள்

*சிலை பிரதிஷ்டை நாள் (சிலை

பிரதிஷ்டா தினம்)

25-5-2026 மற்றும் 26-5-2026

* மாதாந்திர பூஜை (ஆனி)

14-6-2026 முதல் 19-6-2026 வரை

* மாதாந்திர பூஜை (ஆடி)

16-7-2026 முதல் 21-7-2026

* மாதாந்திர பூஜை (ஆவணி)

16-8-2026 முதல் 21-8-2026

* ஓணம் பண்டிகை பூஜை நாள்

24-8-2026 முதல் 28-8-2026வரை

* ஓணம் பண்டிகை -26-8-2026

* மாதாந்திர பூஜை (புரட்டாசி)

16-9-2026 முதல் 21-9-2026வரை

* மாதாந்திர பூஜை (ஐப்பசி)

17-10-2026 முதல் 22-10-2026வரை

*  சித்ர ஆட்ட திருநாள்

6-11-2026 - 7-11-2026 வரை

*மண்டல பூஜை மஹோத்சவம்

16-11-2026 முதல் 27-12-2026 வரை

மண்டல பூஜை மஹோத்சவம் நாள்

27-12-2026 முதல் 30-12-2026 வரை

* திருநடை திறப்பு -

மகரவிளக்கு திருவிழா

30-12-2026 முதல் 20-1-2027 வரை.

29.ஐயப்பனின் அறுபடை வீடுகள்

நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம். பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் மூலாதாரம். தொப்புளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம். ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார். அச்சன் கோயில் சுவாதிஷ்டானம் .நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர்.

அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன். ஆரியங்காவு-மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான இருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது. ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தளம் - விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது. ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

30. அபிஷேகம்

கார்த்திகை மாதம் மற்றும் மண்டல காலங்களில் பக்தர்கள் பல்வேறு அபிஷேகங்களைச் செய்வார்கள். நெய் தவிர இளநீர், பால், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். சபரிமலை ஐயப்பன் திருவுருவம் 1800ம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட ‘தாரு சிலை’ ஆக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய் அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. நேரடியாக ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.இப்போதும் கூட பழைய முறையைப் பின்பற்றக் கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யாமல், நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதமாக கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. ஐயப்பனை எங்கிருந்து நினைத்தாலும் நம் மனம் நெய்யைப்போல் உருக வேண்டும். சாமி சரணம் ஐயப்பா ,சரணம் சரணம் ஐயப்பா!

எஸ். கோகுலாச்சாரி