Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்?

?அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்?

- சஞ்சீவன், கடலூர்.

பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்து, அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும் பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’’ என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள், பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள். நாம் அளிக்கும் எள், தண்ணீரை உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

?வீட்டில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும் என்கிறார்களே, உண்மையா?

- வாசுதேவன், ரெய்ச்சூர்.

உண்மைதான். தண்ணீர் என்பது மகாலட்சுமியின் அம்சம். தண்ணீரை ஆப என்றும், அப்பு என்றும் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் அப்பு என்ற வார்த்தைக்கு கடன் என்று பொருள். ஆக தண்ணீரை அளவுக்கதிகமாக செலவழித்தால் பொருட்செலவு என்பதும் அதிகமாகி வீட்டில் தரித்திரம் என்பது தாண்டவமாடத் தொடங்கிவிடும். எக்காலத்திலும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வீணாக்குபவர்கள் இல்லத்தில் தரித்திரம் வந்து சேரும் என்ற கருத்து உண்மைதான்.

?சுகங்களைத் தருவது பகவானின் கருணை என்றால் துக்கங்கள் வருவது?

- ஸ்ரீராம், ஸ்ரீ வில்லிப்புத்தூர்.

அதுவும் பகவானின் கருணைதான் என்று பெரியவர்கள் சொல்கின்றார்கள். சாஸ்திரங்களில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி துக்கங்களை கருணையுள்ள கடவுள் தருவார் என்றால், அதற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. சுகங்களை அடுத்தடுத்து அனுபவிக்கும் ஒருவன் அதிலேயே மூழ்கி இறைவனை மறந்துவிடுகின்றான். அதனால் ஆன்ம உயர்வு பெறுவதற்கு வழி இல்லாமலேயே போய்விடுகிறது. ஆனால், துக்கங்களின் போது, அவனுக்கு விரக்தி ஏற்படுகிறது. வைராக்கியம் ஏற்படுகிறது. இந்த வைராக்கியத்தால், பகவான் மீது அசஞ்சலமான பக்தி ஏற்படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் பகவான் மட்டுமே குறி என்கிற உணர்வோடு இருக்கின்ற பொழுது, பகவானின் தரிசனம் எளிமையாகிவிடுகிறது.

இதற்கு ஒரு அழகான சான்றும் உண்டு. குந்திதேவி, பாண்டவர்கள் ஜெயித்து பட்டாபிஷேகம் கிடைத்த பிறகு கண்ணனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறாள். ‘‘கண்ணா, எங்களுக்குத் துன்பங்களைக் கொடு’’ அப்பொழுது கண்ணன் கேட்கிறான். இத்தனை காலம் பட்ட துன்பம் போதாதா? ‘‘இன்னுமா இப்படிக் கேட்பது?’’ அப்போது குந்திதேவி சொல்கின்றாள்.

‘‘ராஜ்ஜியம் இல்லாமல் காட்டில் அலைந்தபோது நீ கூட இருந்தாய். ஆனால், எங்களுக்கு ராஜ்ஜியத்தை தந்துவிட்டு இப்போது நான் விடைபெற்றுக் கொண்டு போகிறேன் என்று போகிறாயே. எனவேதான் மறுபடியும் துன்பப்பட விரும்புகிறேன். காரணம் நீ கூட இருப்பாய் அல்லவா?’’ என்று கேட்கிறாள். இந்தத் தத்துவத்தை உணர்ந்து கொண்டால்தான் துக்கம்கூட சில சமயங்களில் இறைவன் கருணை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

?வாஸ்து சாஸ்திரம் கோயில்களுக்கும் பொருந்துமா?

- சாருமதி, கோவை.

கோயில்களில் இருந்து பிறந்ததுதானே வாஸ்து சாஸ்திரம் என்பதே. சிற்பக்கலையின் ஒரு பாகம்தான் வாஸ்து சாஸ்திரம் என்பது. ஒரு ஆலயத்தை எழுப்பும்போது கருவறை இந்த இடத்தில் அமைய வேண்டும், அதன் நீள அகல அளவுகள் இவ்வாறு இருக்க வேண்டும், மூலஸ்தானம் தவிர்த்து இதர தெய்வங்களின் சந்நதிகள், அபிஷேக அலங்கார உற்சவ மண்டபங்கள், தீர்த்தக்குளம், தெப்பக்குளம் போன்றவை எங்கு அமைய வேண்டும், எந்த அளவில் அமைய வேண்டும் என்று தீர்மானிப்பதே வாஸ்து சாஸ்திரம். அவ்வாறு கோயில்களை அமைக்கும்போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளின் வழியேதான் முதன் முதலில் வாஸ்து சாஸ்திரம் என்பது சாமானிய மக்களுக்கும் புரியத் தொடங்கியது. ஆனால் கோயில்களுக்கான வாஸ்து சாஸ்திரம் என்பது வேறு, குடியிருப்புப் பகுதிகளுக்கான வாஸ்து சாஸ்திரம் என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

?கர்மவினை என்றால் போன ஜென்மத்தில் செய்த செயல்களின் விளைவா?

- மாரியப்பன், மயிலாடுதுறை.

இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். இந்த ஜென்மத்தில் செய்த செயல்களுக்கு இந்த ஜென்மத்திலேயேகூட எதிர் விளைவு நேரலாம். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதுதான் கர்மவினை. முற்பகல் என்பது போன ஜென்மமாகவும் இருக்கலாம். இந்த ஜென்மத்தில் நம் ஆயுளின் முற்பகுதியாகவும் இருக்கலாம்.

?சிராத்த தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் இலை போடுவதைப் போல மகாவிஷ்ணுவுக்கும் இலை போடுகிறார்களே, என்ன காரணம்?

- லாவண்யா ராஜகோபாலன், சென்னை.

எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து அந்தந்த விஷயத்தை அவரவர்கள் மூலமாக நடத்துவதற்குக் காரணமாக இருப்பவன் மகாவிஷ்ணு. இதை திருமழிசையாழ்வார்,

``இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை

இனியறிந்தேன் காரணன் நீ, கற்றவை நீ,

கற்பவை நீ நற்கிரிசை நாரணன்நீ

நன்கறிந்தேன் நான்!

(நான்முகன் திருவந்தாதி-96)

- என்று பாசுரத்தில் விளக்குகின்றார்.

யாகங்களைக் காப்பவர் மகாவிஷ்ணு என்பதால், யாக சம்ரக்சனன் என்று அவரை அழைப்பர். அதைப்போல சிரார்த்தத்தை முறையாகக் காப்பாற்றித் தருபவர் என்பதால், சிராத்த சம்ரக்சனன் என்று அழைப்பர். அதனால் பிதுருக்களுக்கு தெற்கு நுனியாக இலை போட்டால், பெருமாளுக்கு வடக்கு நுனியாக இலை போடுவார்கள். பித்ருக்களின் இலையில் திலத்தை (எள்) போட்டால், மகாவிஷ்ணுவின் இலையில் அட்சதையைப் போடுவார்கள். பித்ருக்

களின் இலையில் ஒரு மடங்கு உபச்சாரம் (வெற்றிலைப்பாக்கு, பழம், தட்சனை) வைத்தால், மகாவிஷ்ணுவின் இலையில் இரண்டு மடங்கு உபசாரம் வைப்பார்கள். அங்கு அப்பிரதட்சணமாகச் சுற்றினால், மகாவிஷ்ணுவின் இலையை பிரதட்சணமாகச் சுற்றுவார்கள், இவைகளையெல்லாம் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.