Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாராதனையின் தத்துவங்கள்

வாலயங்களை யோகவித்தையின் ரகசியங்களை விளக்கும் மையங்களாகவும்; மானுடயாக்கையின் தத்துவங்களை விளக்கும் தத்துவக் கூடங்களாகவும் அமைந்திருப்பதைப் போலவே இறைவனுக்கு முன்பாக செய்யப்படும் தீபாராதனையைஉலகம் பரவெளியிலிருந்து உற்பத்தியாகி இறுதியில் அதனுள்ளேயே ஒடுங்குவதைக் குறிக்கும் தத்துவ விளக்கமாக அமைத்துள்ளனர். உலகம் எல்லையற்ற அகண்ட வெட்டவெளியிலிருந்து படிப்படியாக உற்பத்தியாகி, முழுமை பெற்று சிறப்புடன் வாழ்ந்த பின் ஒரு காலத்தில் யாவும் எங்கிருந்து உண்டானதோ, அந்தவெளியிலேயே கலந்து ஒடுங்கி விடுகிறதென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன.

லிங்கம் என்ற சொல்லுக்குத் தோன்றி நிலைபெற்று ஒடுங்குவது என்பது பொருள். இவ்வாறு தோன்றி ஒடுங்கும் நிலையைவிளக்குவதாக ஆலயங்களில் நடத்தப்படும் தீபாராதனை அமைகிறது. தீபாராதனையின் போது இறைவனுக்கு முன்புறம் பெரிய திரைதொங்கவிடப்பட்டுள்ளது. அது உட்புறம் சிவப்பாகவும் வெளிப்புறம் நீலநிறத்துடனும் இருக்குமாறு அமைந்திருக்கிறது. நீலநிறம் அகண்ட வெளியைக் குறிப்பதாகும். இதன் பின்புறத்திலிருந்து முதலில் மணி ஒலிக்கப்படுகிறது. இது நாதத்தத்துவம் ஆகும். அகண்ட வெளியிலிருந்து பெரிய ஒலியுடன் உலகப் படைப்புக்கான ஆரம்பம் நிகழ்வதைக் குறிக்கிறது.

புலன்களுக்கு எட்டாத ஒலியிருந்து மந்திரங்களும் மொழிகளும் உண்டாயின என்று புராணங்கள் கூறுகின்றன. ஒலியை, அடுத்துப் புகை மண்டலமான தூபம் காட்டப்படப்படுகிறது. இது உலக உற்பத்திக்கான அணுத்துகள்கள் உற்பத்தியாவதைக் குறிக்கின்றன. இதையடுத்து ஒற்றைத்தீபம் காட்டப்படுகிறது. இது உலகைப் படைக்க ஜோதி வடிவம் கொண்ட இறைவனின் இச்சை வெளிப்படுவதைக் குறிக்கின்றது. திரை விலகியதுடன் அடுக்கு தீபம் காட்டப்படுகிறது. இது உச்சியில் ஒற்றை தீபத்தையும் அதன் கீழ் சிறிய வட்டத்தில் ஐந்து தீபம், அதன் கீழ் வட்டத்தில் ஏழு தீபம் என்று படிப்படியாக அறுபத்து நான்கு தீபங்கள் வரைகொண்டதாகும்.

இது அனேக உயிர்கள் உலகில் பல்வேறு நிலைகளில் தோன்றியதைக் குறிக்கிறது. பூ மண்டலத்திற்கு வந்த உயிர்கள் பல்வேறு உடல்களைப் பெற்று அத்தன்மைக்கேற்ப இயங்குவதைக் குறிக்கும் வகையில் தொடர்ந்து மத்ஸ தீபம், கூர்ம தீபம், நாக தீபம், ரிஷப தீபம், அம்சதீபம், மயூரதீபம், புருஷாதீபம், கஜதீபம், அஸ்வதீபம், ரிஷி தீபம் என்று பல்வேறு உருவங்களுடன் கூடிய தீபங்கள் சுழற்றிக் காட்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ஒன்று முதல் பத்து எண்ணிக்கைவரையுள்ள பத்து தீபங்கள் வரிசையாகக் காட்டப்படுகின்றன.

இவை உலக உயிர்கள் பெற்றுள்ள பல்வேறு அறிவு நிலைகளைக் குறிக்கிறது என்பர். இதில் ஆறுவரை உள்ளதீபங்கள் ஓர் அறிவு முதல் ஆறறிவுகொண்ட மனிதன் வரையுள்ள உயிர்களின் நிலையைக் குறிப்பதாகும். ஏழாவது ஞானத்தை அறிதலையும் எட்டாவது அதில் திளைத்தலையும் ஒன்பதாவது அதிலிருந்து விடுதலை அடைதலையும், பத்தாவது இறைவனோடு இரண்டறக் கலந்து விடுதலையும் குறிக்கின்றன என்பர். இதையடுத்து, கண்ணாடி, ஆலவட்டம், சூரியன், சந்திரன், குடை, வெண்கவரி,வத்சம், விசிறி ஆகியவற்றைக்காட்டி உபசாரம் செய்யப்படுகிறது. இவை உயிர்கள் சகல போகங்களையும் பெற்றுச் சுகமுடன் வாழ்வதைக் குறிக்கின்றன.

இதையெடுத்து மந்திரபுஷ்பம் ஓதுதல், பல்வேறு தேசங்களில் இருந்து வந்த பொருட்களைச் சமர்ப்பித்தல், முதலியன நடைபெறும். இது உயிர்கள் நாடு, மொழி, இனம் என்று பலவாறாக விரிந்து மேன்மையுடன் புகழ் பெற்று விளங்குவதைக் குறிக்கும் என்பர். இறுதியில் கற்பூரக்கிளை எனப்படும் ஏழு அல்லது ஒன்பது கிளைகளைக் கொண்டஅமைப்பில் கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கப்படும். கற்பூரம் காட்டப்பட்டதும் அதன்மீது விபூதியிடுவது போல் மடலிருந்து மூன்று முறை விபூதியை எடுத்துக் காட்டுவர். இதற்கு ரட்சை சாத்துதல் என்பது பெயர். இது உலக உயிர்கள் இறைவனின்அருட்கவசத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.

ஜி.ராகவேந்திரன்