?கோயிலுக்குப் போனால் நம் பிரச்னைகள் நிச்சயமாகத் தீருமா?
- ரா.வைரமுத்து, சென்னை.
இப்படிச் சந்தேகமாக கேட்டால் எப்படித் தீரும்? நிச்சயமாகத் தீரும் என்கிற நம்பிக்கையிலேதான் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். தங்கள் பிரச்னைகளை பகவானிடத்தில் சொல்லுகின்றார்கள். குறைந்தபட்சம் அந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெறுகிறார்கள். இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். ‘‘வேதத்தை நம்பு, அது உன்னைக் காப்பாற்றும்’’ என்று குரு சொல்லிக் கொடுத்தார். சீடனும் கற்றுக் கொண்டான். எந்த ஆபத்திலும் வேதம் தன்னைக் காப்பாற்றுமா என்று பரிசோதனை செய்ய முயன்றான். அதற்காக உயரமான ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு வேதம் சத்தியமானால் என்னைக் காப்பாற்றட்டும்’’ என்று சொல்லிக் குதித்தான். கீழே விழுந்து அடிபட்டான். ஆனால் உயிர் போகவில்லை. குருவிடம் சென்று ‘‘வேதம் ஒருவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் என்று சொன்னீர்கள். ஆனால் எனக்கு அடிபட்டு விட்டதே’’ என்று கேட்கும் போது, ‘‘நீ என்ன சொல்லிக் குதித்தாய்?’’ என்று கேட்டார். “வேதம் சத்தியமானால் என்னைக் காப்பாற்றட்டும் என்று சொல்லிக் குதித்தேன்’’ என்றான் சீடன். குரு சொன்னார். எப்பொழுது வேதம் சத்தியமானால் என்று உன் வாயில் இருந்து வந்ததோ அப்பொழுதே நீ வேதத்தை முழுமையாக நம்பவில்லை என்பது தெரிகிறது. பிறகு எப்படி உன்னை வேதம் காப்பாற்றும். இதேதான் கோயிலுக்குப் போய் வழிபடுவதிலும் உள்ளது. நம்பிக்கை இல்லாமல் கோயிலுக்குப் போவதை விட அல்லது சோதித்துப் பார்ப்பதற்காக கோயிலுக்குப் போவதை விட போகாமல் இருப்பது கூட நல்லது தான்.
?விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பெண்கள் செய்யலாமா?
- சொஸ்திகா, கொச்சின்.
மகாபாரதத்தின் ஒரு பகுதியாக விஷ்ணு சஹஸ்ரநாமம் வருகிறது. விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது இறைவனின் ஆயிரம் நாமங்கள். ஆண்டாள் பெரியாழ்வாரின் பெண்பிள்ளை. ஆனாலும் அவள் இறைவனின் திருநாமத்தைப் பாட வேண்டும் என்று சொல்லுகின்றாள். ‘‘தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பு’’ என்பது அவளுடைய வாக்கு. பாவங்கள் போவதற்கு பகவானின் நாமங்கள் தான் ஆத்மாவுக்குத் துணை. அதனால் பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம். பல ஊர்களில் பெண்கள் ஒரு குழுவாக அமைத்துக் கொண்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து வருகின்றார்கள். சிதம்பரத்தில் ஒரு பெண் குழந்தை எதையும் பார்க்காமல் 22 நிமிடங்கள் கடகடவென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கிறது. சிலர் குழுவாக திவ்யதேசங்கள் தோறும் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கின்றார்கள். வீடுகளுக்குச் சென்று பாராயணம் செய்து கொடுக்கின்றார்கள். அங்கெல்லாம் மங்களகரமான செயல்கள் நடக்கின்றன. விளைவும் நன்றாக இருக்கிறது. இதற்குமேல் இது பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நல்ல விஷயத்தை செய்ய வைப்பது கடினம். தடுப்பது எளிது. ஏற்கனவே மக்களுக்கு நல்ல விஷயங்கள் எதையாவது செய்ய வைக்க வேண்டும் என்று சொன்னால் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வார்த்தை சொன்னால் போதும் ‘‘அடடா, நான் தப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்று செய்து வந்த நல்ல விஷயங்களை நிறுத்தி விடுவதற்கு தயாராக இருப்பார்கள்.
?எல்லா கோயில்களிலும் சுப்ரபாதம் கௌசல்யா சுப்ரஜா என்று ஆரம்பிக்கிறது என்ன காரணம்?
- தினேஷ், நெல்லை.
கௌசல்யா சுப்ரஜா என்ற ஸ்லோகம் ராமாயணத்தில் உள்ளது. ராம லட்சுமணனை அழைத்துக் கொண்டு விசுவாமித்திர முனிவர் காட்டிற்குச் செல்லுகின்றார். அங்கே ராமரும் லட்சுமணரும் நதிக்கரை ஓரத்தில் புல்லணையின் மீது தூங்குகின்றார்கள் அவர்களை அதிகாலை எழுப்புவதற்காக வருகிறார் விஸ்வாமித்திரர். ‘‘சந்தியா வந்தன நேரம் வந்துவிட்டது. நீ காலைக் கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும் கௌசல்யா புதல்வனே, ராமா, எழ வேண்டும்’’ என்ற அர்த்தத்தில் விசுவாமித்திரர் பாடினார். முதல் சுப்ரபாதம் இப்படி அமைந்து விட்டதால், பெரும்பாலும் எந்தக் கோயிலுக்கு சுப்ரபாதம் எழுதினாலும், இந்த ஒரு ஸ்லோகத்தை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு, அந்தந்த கோயிலுக்குரிய மற்ற விஷயங்களை இணைத்து சுப்ரபாதம் இயற்றும் வழக்கம் வந்து விட்டது.
?சிலர் எந்த செயலைச் செய்தாலும் தோல்வி அடைந்து விடுகிறார்களே?
- பாலாஜி, சைதாப்பேட்டை.
இந்தக் கேள்வியிலேயே பதில் இருக்கிறது எந்தச் செயலை செய்தாலும் அவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், எந்தச் செயலையுமே அவர்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யவில்லை என்றுதான் பொருள் ஒன்றைச் செய்துவிட்டு அது வெற்றியடையவில்லை என்று அவர்களுக்குத் தோன்றினால் அதை அப்படியே போட்டு விட்டு அடுத்த செயலுக்குச் சென்று விடுவார்கள். உலகப் புகழ் பெற்ற சதுரங்க வீரர் ஒரு கருத்து சொல்லுகின்றார். “10 ஆண்டுகள் தொடர்ந்து அயராமல் முயல்பவர்கள் நிச்சயம் அந்த துறையில் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுவார்கள் இதில் அதிசயம் எதுவும் இல்லை நான் பத்து ஆண்டுகளாக சதுரங்கம் ஆடியதில் 500 வகையான தாக்குதல்கள் இருக்க முடியும் என்பது தெரிந்தது இனி என்னை ஒருவர் வெல்ல வேண்டும் என்று சொன்னால்,51வது வகையான தாக்குதலைத் தெரிந்த ஆள் வந்தால் தான் முடியும்” என்றார். எல்லா வெற்றிக்கும் இதையே காரணமாகச் சொல்லலாம். உலகியலுக்கு பொருந்தும் இந்த பயிற்சி ஆன்மிகத்துக்கும் பொருந்துமா என்று கேட்கலாம் நாமாகத்தான் இது உலகியல் இது ஆன்மிகம் என்று பிரித்துப் பார்க்கிறோம் இரண்டும் ஒன்றுதான். திருப்பாணாழ்வார் வாழ்நாள் முழுக்க காவிரிக் கரையில் நின்று ஸ்ரீரங்கநாதனை மட்டும் தியானித்துப்பாடுகிறார். ஒருநாள் இரண்டு நாளல்ல பல நாள்கள் இதை மட்டுமே ஊக்கத்தோடு செய்கிறார். செயலும் நோக்கமும் ஒரே கோட்டில் செல்கிறது. அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று அவரை நோக்கியே தவமிருந்தார் பாடினார் ஆடினார். ஒருநாள் அரங்கனே அவரை தனது புரோகிதரின் (லோக சாரங்க முனிவர்) தோளின் மீது எழுந்தருளச் செய்து தன்னுடைய அங்கங்களையும் (அவயவ சோபை) முழுமையான வடிவத்தையும் (சமுதாய சோபை) காட்டி ஆட்கொண்டான் என் ஒன்றே செய், நன்றே செய் இன்றே செய் தோல்வியே வராது.
?நாம் மனிதர்களாக இருப்பதற்கு என்ன அடையாளம் ?
- சிவா, சைதை.
இது அற்புதமான கேள்வி. ஆன்மிகத்தில் மிகச்சிறந்த விடை இதற்கு உண்டு .எவன் ஒருவன் பிறருடைய துன்பத்தை, தன் னுடைய துன்பமாகக் கருதி, அந்தத் துன்பத்தை நீக்குவதற்கு முயல்கின்றானோ அவன் தான் உத்தமன் என்று சொல்கின்றது ஆன்மிகம். டால்ஸ்டாய் இதை வேறு விதமாகச் சொல்லுவார். உங்கள் வலியை நீங்கள் உணர்ந்தால் உயிரோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பிறர் படும் வலியை நீங்கள் உணர முடிந்தால் மனிதர்களாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்பார்.
?குலதெய்வம் தெரியவில்லை, எப்படிக் கண்டுபிடிப்பது?
- கார்த்திக், மதுரை.
பூஜை செய்யும் பொழுது, ‘‘என் குலதெய்வம் யாரோ, அவர்களுக்கு இந்த வழிபாடு செல்லட்டும்” என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடியை பூஜை அறையில் வைத்து மஞ்சள் குங்குமம் பூசி அதையே குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள். ஒருநாள் குலதெய்வத்தின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு குலதெய்வத்தை யார் என்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் குலதெய்வத்துக்கு நீங்கள் யார் என்பது தெரியும். ஆகையினால் ‘‘என் குலதெய்வத்துக்கு இந்த வழிபாடு சேரட்டும்”என்று நினைத்துச் செய்யும் எந்த வழிபாடும், உங்கள் குலதெய்வத்தை தேடிச் சென்று அடைந்து விடும். குலதெய்வத்தின் ஆசியும் உங்களுக்கு கிடைத்துவிடும்.