Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுஓம்

?பலிபீடம் என்றால் என்ன?

- பாலாம்பிகை, மெலட்டூர் - தஞ்சை.

பலியைக் கொடுக்கும் பீடம் பலிபீடம். இங்கே எதை பலி கொடுக்க வேண்டும்? நம்முடைய ஆணவம் அகம்பாவம், பதவி, செல்வம் என்று நாம் எதெல்லாம் நமக்கு பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோமோ அவற்றை எல்லாம் பலி கொடுத்துவிட்டு, ``இறைவா, நான் உன் முன் ஒன்றும் இல்லை எண்ணத்தைக் கொடுப் பதுதான் (I am nothing. you are everything) பலிபீடம். அதனால் அங்கே நாமும் கீழே விழுகிறோம். (எண்சாண் உடம்பும் கீழே விழுந்து நமஸ்காரம் செய்கிறோம்) நம்முடைய தீய எண்ணங்களும் பலி கொடுக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்கக் கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலிபீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

?அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளும் வாழ்க்கைத் தரமும் கல்வியறிவும் மேம்பட்டதாகக் கருதப்படும் காலத்தில் தற்கொலை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது என்ன காரணம்?

- சுரேஷ்குமார், மண்லி - வேலூர்.

``அதிகம் படித்து பட்டம் வாங்கியவர்கள், அறிவாளிகளாகத் தான் இருக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை’’ என்று ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது. பொருள் சார்ந்த படிப்பு ஆன்ம தைரியத்தைத் தரவில்லை. “நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” அன்று சொல்லும் துணிவை, கல்வி என்னும் இன்றைய படிப்பு கொடுக்கவில்லை. இதைத்தான் விவேகானந்தர் சொன்னார்; உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனமே பகுத்தறிவு பெற்ற இனமாகக் கருதப்படுகிறது.

இந்த மனித இனத்தில் தான் கொலையும் தற்கொலையும் அன்றாட உலகில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், ஒரு பறவையோ மற்ற விலங்குகளோ தற்கொலை செய்து கொள்வதில்லை. கடந்த பத்தாண்டுகளில், விஞ்ஞான பொருளாதார வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்ததைப் போலவே தற்கொலை விகிதமும் அதிகரிக்கிறது. இதிலும் ஒரு முக்கியமான விஷயம் என்ன என்று சொன்னால், படிக்காத மக்கள் நிறைந்ததாக கருதப்படும் இடங்களைவிட, படிப்பறிவு மிக்க இடங்களில் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பொருளாதாரம் கல்வி வளர்ச்சி அதிகம் நிறைந்த ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் தற்கொலை விகிதம் அதிகமாக இருக்கிறது. பகுத்தறிவு என்பது ஆத்ம பலத்தை தர வேண்டும். எதையும் சமாளித்து முன்னேறும் ஆற்றலைத் தர வேண்டும். இது எல்லாவற்றையும்விட வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரவேண்டும். அதற்கு வெறும் ஏட்டறிவு மட்டும் போதாது.

ஆன்மிக பலம் முக்கியம்.

?ராகு காலத்தையும் எம கண்டத்தையும் காலண்டரில் போட்டபடிதான் பார்க்க வேண்டுமா?

- கலைச்செல்வி, பல்லிக்கோட்டை - திருநெல்வேலி.

அது தோராயமான கணக்கு. உண்மையில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் எப்பொழுது நிகழ்கின்றது என்பதைப் பார்த்துத்தான், ராகு காலத்தையும் எமகண்டத்தையும் கணக்கிட வேண்டும். எல்லா நாட்களும் மிகச் சரியாக 6:00 மணிக்கு சூரிய உதயம் நிகழ்வதில்லை. சில நாட்களில் ஐந்தே முக்காலுக்கு சூரிய உதயம் நிகழ்ந்தால் அன்று ராகு காலம் ஆறு முதல் ஏழரை மணி வரை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 5:45 லிருந்து 7:15 வரை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதைப் போலவே சில நாள் சூரியன் 6:15தான் உதயமாகும். அப்பொழுது 6:00 மணிக்கு ராகு காலம் துவங்கிவிட்டதாகக் கணக்கு கிடையாது. 6:15 முதல் ஏழே முக்கால் வரை என்று கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஊருக்கு ஊர் சூரிய உதயம் சற்று மாறும். இந்த கணக்குகள் புரியாவிட்டால் ஒரு 20 நிமிடம் முன்னும் பின்னும் தள்ளி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

?கோயிலில் நடைபெறும் உற்சவங்களை எந்தப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நடத்துகின்றார்கள்?

- ஜி.விக்ரம், உடுமலைபேட்டை.

கோயில் உற்சவங்கள் நடத்துவதற்கு திருக்கணித பஞ்சாங்கங்களைப் பயன் படுத்துவதில்லை. வாக்கியக் கணித பஞ்சாங்கப்படிதான் நடத்துகின்றார்கள். விரதங்களுக்கும் அப்படித்தான். ஆனால், தனி மனிதர்கள் ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது, கிரக சாரங்களை திருக்கணிதத்தின் அடிப்படையில் பெரும்பாலோர் கவனித்துப் பலன் சொல்லுகின்றனர். அதிலும், ஒரு சிலர் வாக்கிய பஞ்சாங்கத்தை மட்டுமே நம்புகின்றனர்.

?ராவணன் சூரபத்மன் போன்ற அரக்கர்களை உடனே வதம் செய்யாமல் ஏன் நீண்ட நாட்கள் விட்டு வைத்து வதம் செய்கிறார் இறைவன்? உடனே காப்பாற்றக்கூடாதா?

- அருணாச்சலம், மதுரை.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சூரபத்மன், ராவணன் தங்கள் சக்தியைப் பெறுவதற்கு தவம் செய்திருக்கிறார்கள். அந்த தவத்திற்கு உரிய வரங்களைப் பெற்றிருக்கிறார்கள். தவத்தின் பலன் என்பது இறைவனே நிர்ணயித்த படியால் ஒரு செயலுக்கான பலனை தராமல் இருக்க முடியாது. அதை அவர்கள் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறைவன் அவர்களைக் காப்பாற்றுகிறான் அல்லது அழிக்கிறான். அந்த வரபலம் குறையும் வரை அல்லது அதற்கான காலம் வரை அவன் காத்திருக்கின்றான்.

அதே நேரத்திலே ஆக்க சக்திகள் எனப்படும் தெய்வீக சக்திகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் இவைகளெல்லாம் குறையும் போதுதான் அரக்க சக்திகள் உரம் பெறுகின்றன. எனவே வரம் கொடுத்த தேவர்களும், வழிபாட்டினை மறந்தவர்களும் மறுபடியும் இந்த இரண்டின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில காலம் பகவான் காத்திருக்கின்றான்.

உடனுக்குடன் பலன் தந்துவிட்டால், ஏன் கஷ்டப்படுகிறோம் எதற்காக கஷ்டப்படுகிறோம் என்பதை உணர மாட்டார்கள். மூன்றாவதாக தவம் செய்து வரம் பெற்றவர்கள் அந்த வரபலத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலும் அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் அல்லவா. அதற்காகவும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. எனவேதான் புராணங்களில் எந்த அசுர வதமும் உடனே நடந்து விடுவதில்லை.

?கலி காலம் என்று சொல்லுகின்றார்கள் உண்மையில் கலி காலம் என்றால் என்ன பொருள்?

- தேவிபிரியா, நெல்லூர் - ஆந்திரா.

கலிகாலத்தில் இருந்து கொண்டே கலி காலத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள். சதுர் யுகங்களில் நான்காவது யுகம் கலியுகம். இந்த யுகத்திலே அறம் குறையும். அதர்மம் அதிகரிக்கும். பிறர் நலம் நாடு வார் குறைவர். தன் நலம் வேண்டுவார் அதிகரிப்பார்கள். இதுகுறித்து விஷ்ணு புராணம் முதலிய நூல்களில் நிறைய விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. கலி என்றாலே வலிமையானது, இருட்டானது, என்று பொருள். கலி முற்றும் போது பிரளயம் தோன்றி புது உலகம் பிறக்கும். கலி எங்கெல்லாம் இருக்கும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

கலி வசிக்கும் இடங்களாக சில இடங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சூதாடும் இடம், மதுபருகும் இடம், பெண்கள் அவமானப்படுத்தப்படும் இடம், பிராணிகளை வதை செய்யும் இடம், பொய் சொல்லும் இடம், ஆணவம் நிறைந்த இடம், பேராசை நிறைந்த இடம், கோபம் உள்ள இடம், பகை உள்ள இடம் என்று வரிசையாக கலிபுருஷன் இருக்கும் இடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

பொதுவாக ஒரு இடத்தில் இருட்டு இருந்தால் நாம் அந்த இடத்திலே செல்ல மாட்டோம். அதைப் போல, கலிபுருஷன் இருக்கக்கூடிய மேற்கண்ட இடங்களிலே நாம் செல்லாமல் இருந்துவிட்டால் நமக்கு கலிதோஷம் ஏற்படாது.

?ஞானிகளின் தோற்றத்தில் எது அழகு?

- சு.வடிவேல், நாமக்கல்.

கண்கள்தான் அழகு. எந்த ஞானியாக இருக்கட்டும், அது சிலையோ படமோ அந்தக் கண்களை மட்டும் உற்றுப் பாருங்கள். உங்களை வசீகரிக்கும். உங்கள் கண்களும் அந்தக் கண்களும் முறையான அலை வரிசையில் தொடர்புகொண்டுவிட்டால் ஞானியின் தீட்சை உங்களுக்குக் கிடைத்துவிட்டது என்று பொருள். சுவாமி விவேகானந்தர் உயரம் 5 அடி, 8.5 அங்குலம். அவரது நிறம் சாதாரண சிவப்பு. சுவாமிஜியின் தோற்றத்தில் யாரையும் சுண்டி இழுப்பவை அவரது விசாலமான கண்கள்.

``சுவாமிஜியின் கண்களைக் கண்டு தான் நான் அவருக்கு அடிமையானேன்’’ என்று அவரது முதல் துறவிச் சீடர் சதானந்தர் கூறுவார். தேவேந்திரநாத் தாகூர், சுவாமிஜியின் கண்களை, `யோகியின் கண்கள்’ என்று கூறியிருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணர், அந்தக் கண்களைத் தாமரை மலருக்கு ஒப்பிட்டு `கமலாக்ஷன்’ என்று கூறுவார்.

``அந்தக் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப் போல் அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன” என்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதுண்டு. ரமண மகரிஷியை சிலர் பார்க்கச் சென்றனர் சிலர் அவரிடம் பல விஷயங்கள் கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அங்கு அமைதியாக அவரைப் பார்க்கிறார்கள் அவரும் இவர்களைப் பார்க்கிறார். கடைசியில் இவர்கள் எந்த கேள்வியும் அவரிடத்தில் கேட்கவில்லை அதற்கான அவசியமும் எழவில்லை. அந்தப் பார்வையிலேயே பதில் கிடைத்து விட்டதாக திருப்தி அடைந்து திரும்புகிறார்கள். ஞானிகளின் கண்களின் ஏற்றம் என்பது இதுதான்.

?தானத்திலேயே சிறந்த தானம் எது?

- முனியப்பன், சென்னை.

சந்தேகமில்லாமல் அன்னதானம்தான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பார்கள். புண்ணிய பூமியான நாட்டில் தொன்று தொட்டு ஆங்காங்கே கோயில்

களிலும், சத்திரங்களிலும் நடத்தப்படும் அன்னதானம் நம் தேசத்திற்கே ஒரு தன்னேற்றம்.

``ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோராதனம் பரம்!

தஸ்மாத் பரதரம் ப்ரோக்தாம் ததீயாராதனம் ந்ருப’’

தெய்வங்களுக்குள் விஷ்ணுவிற்கு செய்யும் ஆராதனை மேம்பட்டது. அதைவிட மிக மேம்பட்டது ததீயாராதனையே ஆகும் என்று அன்னதானத்தின் பெருமையைப் பேசுகிறது இந்த சுலோகம். பவிஷ்யோத்தர புராணம் அன்னதானத்தை ``சதா விரதம்’’ என்று குறிப்பிடுகிறது. எப்பொழுதும் எல்லாக் காலங்களிலும் மேற்கொள்ள வேண்டிய விரதம் சதாவிரதம். மற்ற விரதங்கள் நைமித்திக விரதங்கள்.

?சாஸ்திரம், மனிதர்களுக்கு ஆயுள் நூறு என்று சொன்னாலும் பலரும் நூறு வயது வாழ்வதில்லை ஏன்?

- ஆர். பரத் சுந்தரம், கரூர்.

“ஸதமானம் பவதி சதாயுஷ்ப்ருஷ:

ஸதேந்ரிய ஆயுஷ் வேதேந்ரியே ப்ரதிஷ்ட்டதி”

- என்பது வேத ஆசீர்வாத மந்திரம். மிகப் பழமையான ரிக்வேத மந்திரம் இது. பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தைக் கேட்டிருக்கலாம். ஆழ்வாரும் வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் என்று வேதம் மனிதர்களுக்கு 100 வயது விதித்து இருப்பதை உறுதி செய்கிறார். ஆனால், தீர்க்காயுள் என்று சொல்லப்படுகின்ற முழுமையான பிராயத்தை யாராலும் வாழ முடியவில்லையே ஏன்? இந்தச் சந்தேகம் மகாபாரதத்திலும் வருகிறது.

ஒருசமயம் திருதராஷ்டிரன் விதுரரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார், ``மன்னா, மனிதர்கள் ஆறுவாள்களால் தங்கள் ஆயுளைத் தாங்களே அறுத்துவிடுவதுதான்

அதற்குக் காரணம்!’’ என்றார், விதுரர்.

``நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்’’ - திருக்குறள் 334.

புரியாத திருதராஷ்டிரர் விளக்கம் கேட்க, சொல்லத் தொடங்கினார், விதுரர். முதலாவது வாள், கர்வம் இரண்டாவது வாள், வீண்பேச்சு மூன்றாவது வாள், அதீத ஆசை. நான்காவது வாள், கோபம். கோபத்துக்கு ஆட்படுபவனுக்கு தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

ஐந்தாவது வாள், சுயநலம். பெரும்பாலான தீமைகளுக்குக் காரணம் சுயநலம் ஆறாவது வாள், துரோகம் தன்னை நம்புகிறவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் இந்த ஆறு வாள்களும் தன் ஆயுளைக் குறைக்காதவாறு பார்த்துக் கொள்பவன் நிச்சயம் நூற்றாண்டை நிறைவு செய்வான் சொல்லி முடித்தார் விதுரர்.

தேஜஸ்வி