ஸ்ரீஓஜ்மானி தேவி
யோகினிகள் என்றால் அபூர்வமான சக்திகள் பல உள்ள பெண் தேவதைகள் என்று பொருள். இவர்கள் எண்ணிக்கையில் பலப்பல கோடிகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அம்பிகையை பூஜித்து அவளது அருளாலேயே இந்த சக்திகளைப் பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த யோகினிகளின் வழிபாடு சுமார் ஆறாம் நூற்றாண்டில் இருந்து வளர்ந்து வந்தது என்று வரலாற்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்த யோகினிகளில் மிகவும் முக்கியமான ஒரு யோகினியாக கருதப்படுபவள் தான் ஸ்ரீ ஓஜ்மானி தேவி. அந்த யோகினியைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம் வாருங்கள்.
ஸ்ரீ ஓஜ்மானி தேவியின் தோற்றம்
இந்த யோகினி மிகவும் அழகானவள். மென்மையானவள், நீண்ட காதுகளைக் கொண்ட குறுமுயலின் முகத்தை உடையவள். ஆக்க சக்தியின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் இருப்பவள். தெய்வீக உணர்வுகளை சாதகனின் மனத்தில் அலை அலையாகப் பரவச் செய்பவள். அவள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து அதைச் சரியாகச் செயல்படுத்தும்
ஆற்றலைத் தருபவள்.
ஸ்ரீ ஓஜ்மானி தேவியின் வழிபாட்டின் பலன்
இவளை யோகசாதனை செய்து வழிபடுவோருக்கு மேற்சொன்ன ஆற்றலைத் தந்து வெற்றியை அளிப்பவள். முயல் வேகமாக ஓடுவது போல, உபாசகனுக்கு ஆன்மிக சாதனையில் வேகமான முன்னேற்றத்தைக் கொடுப்பவள். இதை உணர்த்தவே இவள் ஒரு முயலின் முகத்தைக் கொண்டு இருக்கிறாள்.உபாசகனின் ஆழ்மனதில் தோன்றும் ஆழ்ந்த அமைதியில் இவள் குடிகொண்டு இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
அந்த ஆழ்மனதில் இருந்து கொண்டு, உபாசகனுக்கு, யாருக்கும் எளிதில் தோன்றாத, எளிதில் நினைக்க முடியாத கருத்துக்களை உற்பத்தி செய்கிறாள். இதனால் இந்த யோகினியின் உபாசகன் பெரும் கற்பனை வளத்தோடு இருக்கிறான். திறமையாக கவி பாடுவதிலும், கலைகளிலும், வல்லவனாக இருக்கிறான். கலைகளில், தனது கற்பனா சக்தியால் புரட்சி செய்பவனாக இருக்கிறான். இப்படி, ஆக்க பூர்வமான சிந்தனைகளுக்கு வலிமையை, வேகத்தை அளிப்பதில் ஓஜ்மானி யோகினி மிகச் சிறந்தவளாகக் கருதப்படுகிறாள்.
அமுத கலசமும் குள்ளநரித் தோலும்
இவள் தனது இடது கரத்தில் அமுத கலசம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறாள். உபாசகனுக்கு, மரணத்தை வென்ற பெருவாழ்வு, அதாவது முக்தி இன்பம் கிடைக்க அருள் செய்கிறாள் இந்த யோகினி என்பதை, இது குறிப்பால் உணர்த்துகிறது.மேலும் இந்த யோகினி குள்ளநரித் தோலின் மீது அமர்ந்திருக்கிறாள். அது, இந்த யோகினியின் அருளைப் பெற்ற பக்தனைக் கெடுக்க, குள்ளநரித் தனமாக திட்டம் தீட்டும் தீயவர்களை, இந்த யோகினி அழித்து ஒழிக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.
அது போலவே, இந்த யோகினியின் மார்பகங்கள், கவர்ச்சி மிக்கனவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகில் அடுத்த சந்ததி உருவாகவும், உருவான சந்ததியை பேணி காக்கவும் வழிவகை செய்வது ஒரு தாயின் முலைகள். ஆகவே இந்த யோகினி உலகைப் படைத்து, அதை தாயை போல காக்கிறாள் என்பதையும் இது காட்டுகிறது.இந்த யோகினியின் குவிந்த மார்பகங்கள் யோகநிலையைக் குறிக்கிறது. இது, சாதகருக்கு யோக வித்தைகளில் ஆர்வமும் கவர்ச்சியும் ஏற்பட, இந்த தேவி உதவுகிறாள் என்பதை காட்டுகிறது. சாதகன் உபாசனையில் தேர்ச்சி பெறும் நிலையில் யோகப்பாலாகிய ஞானத்தைக் கலசத்தில் இருந்து கொடுத்து அவனைப் பேரின்ப நிலைக்கு அனுப்புகிறாள்.
ஓஜ்மானி தேவியும் குறுமுயலும்
யோகினியின் அருகே குறுமுயல் ஒன்று துணிவோடு அமர்ந்திருக்கிறது. இது, தீயதையும் நல்லதையும், இணைவாக வைக்கும் ஆற்றல், இவளை வணங்கினால் ஏற்படும் என்பதை குறிக்கிறது. நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் அவைகளை கடவுளின் அருட்பிரசாதமாக, நாம் வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இப்படி அனைத்தையும், இறைவன் அருளாக எண்ணி ஏற்கும் போது, நல்லவை மற்றும் தீயவைகளால், நமது மனம் ஒரு தாக்கமும் இல்லாமல், திடமாக இருக்கிறது. இந்த மன நிலையைத் தான் ஞானிகளின் மன நிலை என சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த ஞான நிலையைத் தான் அடியாருக்கு விரைவில் கிட்ட உதவுகிறாள் இந்த யோகினி.
குள்ளநரித் தோலும் குறு முயலும்
வைராக்கியம் மிகுந்த துறவிகள், பற்றுக்களை விட்டு பிட்சை எடுத்து வாழ்க்கை நடத்துவார்கள். அவர்கள் செல்லும் பாதையில் பொன்காசு கிடந்தால்கூட அவைகளைத் தங்கள் கைகளால் தொடாமல், கையில் உள்ள குச்சியால் தள்ளிவிட்டு, விலகிச் செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கீழே கிடக்கும் மண் ஓடுகளும், பொன்காசும் ஒன்றுதான். இவ்வாறு இரண்டையும் ஒன்றாகக் காணும் உயர்ந்த நோக்கம் ஏற்பட்டுவிடுமானால் வாழ்க்கையில் ஆசையினால் உண்டாகும் அல்லல்கள் ஒழிந்து விடும்.
இதை விளக்குவதற்காகத்தான் இந்த யோகினி, முயல் முகம் கொண்டவளாக இருந்து, அதற்குப் பகையான குள்ளநரியின் தோலின் மீது அமர்ந்து தியானம் செய்கிறாள். இங்கே நட்போ பகையோ எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறாள். அனைத்தும் இறைவன் தான் என்ற உயர்ந்த நிலையை உணர்த்துகிறாள். அந்த உயர்ந்த நிலைக்கு சாதகர்களை அழைத்துச் செல்கிறாள். இதன் மூலம் அவர்கள் பிறப்பு இறப்பு என்ற இரட்டைகளைக் கடந்து, முக்தியை நோக்கிச் செல்ல வழி ஏற்படுகிறது.
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே, என்று அபிராமி பட்டர் சொல்கிறார். அதாவது அம்பிகையை வணங்குபவர், மரணம் பிறவி என்ற இரண்டையும் கடந்த பெருவாழ்வை அடைகிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி பக்தர்கள் அம்பிகையை வணங்கி, பார்க்கும் இடம் எங்குமே அவளையே கண்டு, நல்லவை தீயவை என இரண்டையும் அவள் வடிவாக கண்டு, இரண்டுக்குள்ளும் பாரபட்சம் பார்க்காத ஞான நிலையை, அம்பிகையின் அடியார்கள் அடைய இந்த யோகினி வழிவகை செய்கிறாள்.
எப்படி வழிபடுவது?
யோகினிகளை வழிபடும் முறையை தேர்ந்த குருவிடம் கற்றுத் தெரிந்துகொள்வதே சரி. சிலர் யோகினிகளை வழிபாடு செய்வது கூடாது என்றும் சொல்கிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு யோகினியும், ஞானத்தை அடைவதற்கான ஒரு படி. ஒரே ஒரு படியை மட்டும் பற்றிக் கொண்டு இருந்தால், மனிதனால் அதனைத் தாண்டி முன்னேற முடியாது என்பதால், இந்த விதி எழுந்ததாக சொல்வார்கள். ஆனால், இவர்களது அருளை அடைய ஒரு எளிய வழியும் உண்டு. அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகையை உள்ளம் உருகி வழிபட்டாலே, இந்த யோகினிகள் மனம் மகிழ்ந்து நமக்கு அருள் செய்கிறார்கள். ஆகவே அம்பிகையை மனமார வழிபட்டாலே, அனைத்து விதமான சுகங்களையும் அடையலாம்.
ஜி.மகேஷ்