Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்ணின் சம்மதம் முக்கியம்!

கல்யாண மந்திரங்களில் உள்ள அமைப்பை கவனிக்கும் பொழுது, ஒன்றைச் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக ராமாயணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜனகருக்கு பெண் இருப்பதும் அந்தப் பெண்ணை இராமருக்கு மணமுடித்தால் சரியாக இருக்கும் என்பதையும் தசரதன் அதாவது ராமனின் தந்தை தீர்மானிக்கவில்லை.

ராம, லட்சுமணர்களை அழைத்துக்கொண்டு விசுவாமித்திரர் காட்டிற்குப் போகிறார். அந்த யாகம் முடிந்தவுடன் விசுவாமித்திரர் மிதிலைக்குப் போகின்றார்.

இதுபற்றி ராமரின் தந்தையான தசரதனுக்கு எந்தத் தகவலும் தந்ததாக கதையில் இல்லை. ஏன் ராமனிடம் கூட, ‘‘உனக்குப் பெண் பார்க்க மிதிலை போகிறோம்’’ என்று சொல்லவில்லை. ஜனகனின் மிதிலைக்குப் புறப்படுவோம் என்கிறார்.

விரியும் வார்புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமான்

புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார். (கம்பன்)

இதற்குக் காரணம், அந்தக் காலத்தில் பெரியவர்கள், சான்றோர்கள் நல்ல பையனுக்கு தாங்களே முன் நின்று பெண்ணைக் கேட்பது வழக்கமாக இருந்தது. தானே தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று நேரடியாக கேட்பதோ மாப்பிளைக்கு பெண் கேட்பதோ அந்த காலத்தில் வழக்கத்தில் இல்லை. இதை விளக்கும் மந்திரப் பிரயோகம் வருகிறது. பெண்ணின் தந்தையிடம் சென்று பின்வருமாறு கேட்க வேண்டும்.

‘‘ஐயன்மீர், இந்த கோத்திரத்தில் பிறந்த, இந்த ஊரில் பிறந்த, இன்னாருடைய, இந்த பெயருடைய பையன் கல்யாணத்துக்குத் தயாராக இருக்கிறான். அவன் திறமை படிப்பு இதற்கு நாங்கள் பொறுப்பு. இந்த கோத்திரத்தில் பிறந்த இன்ன பெயருடைய தங்கள் பெண்ணை, தாங்கள் உலகத்திற்காக, தர்மத்தின் பொருட்டு, கன்யா தானம் தருமாறு நாங்கள் உங்களை வேண்டுகிறோம்’’ என்று கேட்க வேண்டும். பெண்ணின் தந்தையும் மனப்பூர்வமாகச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

அதற்குப் பிறகு அந்தப் பெரியவர்கள் பெண்ணின்சம்மதத்தை மணமகனின் அப்பாவிடம் தெரிவிப்பார்கள். இதற்கு வரப்ரேஷனம் என்று பெயர். இங்கு ஒரு சந்தேகம் வரும். பெண்ணின் தந்தை நேரே சம்மதம் தெரிவிப்பாரா? பெண்ணைக் கேட்டு சம்மதம் தெரிவிப்பாரா? பெண்ணைக் கேட்டுச் சொல்லலாம். பெண் தனக்குக் கட்டுப்பட்டவள், ஒரு நல்ல வாழ்க்கையை தன்னுடைய பெண்ணுக்கு அமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் தந்தை தானே சம்மதிப்பதும் உண்டு.

இரண்டு சிறிய வரலாறுகளைச் சொன்னால் பெண்ணின் சம்மதம் முக்கியம் என்பது நமக்குத் தெரியும். குமுதவல்லி நாச்சியாரை மணம் செய்து கொள்ள விரும்புகிறார் திருமங்கை ஆழ்வார். அவளுடைய தந்தையிடம் திருமங்கை ஆழ்வார் என்கின்ற மன்னனின் பெருமைகளைச் சொல்லி பெண் கேட்கிறார்கள் அப்போது அவர் நேரடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பெண்ணிடம் கேட்டுச் சம்மதம் தெரிவிப்பதாகச் சொல்லுகின்றார். அதற்கு பிறகு குமுத வல்லியும் சில நிபந்தனைகளை விதித்து “இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் திருமணம் செய்து கொள்ளுகிறேன்” என்று சில நிபந்தனைகளை விதிக்கிறாள் என்பதைப் பார்க்கின்றோம்.

அதேபோல ஆண்டாள் கதையிலும் நடக்கிறது.

“அம்மா, நீ யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்?” என்று தந்தை பெரியாழ்வார் கேட்க, ‘‘நான் பெருமாளை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன்’’ என்று சொல்லுகின்றாள்.

``வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்த அவி,

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே’’

- என்ற பாசுரம் இதனை விளக்கும்.

இது கதையாக இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய செய்தியை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொடுப்பது இல்லை என்கிற வழக்கம் அக்காலத்தில் இருந்தது.