Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வியாசர் காட்டும் வழி

காக்கையும் அன்னமும் கடற்கரையில் வசித்து வந்த ஒரு வியாபாரியிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்தின் பயன், அதை அடுத்தவர்க்குக் கொடுப்பதே என்பதை உணர்ந்திருந்த வியாபாரி, தான - தர்மங்களை அதிக அளவில் செய்து வந்தார். அத்துடன் யாகங்களும் செய்து வந்த அவரை, ‘‘சுத்தமான மனுஷன்யா இந்த ஆளு!’’ என ஊரே புகழ்ந்தது. ஆனால் அந்தப் புகழ்ச்சி எள்ளளவுகூட, வியாபாரியைப் பாதிக்க வில்லை. மாறாக எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கத்துடன் இருந்தார் அவர்.

பணக்காரரான அந்த வியாபாரிக்குப் பல குழந்தைகள் இருந்தார்கள். தந்தையின் அன்பைப் பரிபூர்ணமாக அனுபவித்த அக்குழந்தைகள், தினந்தோறும் தாங்கள் சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாதம், தயிர், பால், பாயசம், நெய், மாமிசம் ஆகியவற்றை ஒரு காக்கைக்குக் கொடுத்து வந்தார்கள். குழந்தைகள் வழக்கமாகத் தந்த அந்த உணவினால், காக்கைக்கு அகம்பாவம் அதிமானது; ‘‘நான்சாப்பிட்ட உணவு வகைகளைப் போல, யார் சாப்பிட்டிருக்கிறீர்கள்?’’

என்றுகூறி, மற்ற பறவைகளை அவமதித்தது அது. வலிமையும் அழகும் மிகுந்த கருடன் முதலான உயர்ந்த பறவைகள்கூட, அக்காக்கையால் இழிவாகப் பேசப்பட்டன. ஒரு சமயம், வியாபாரியின் குழந்தைகள் கடற்கரை ஓரமாக உலாவிக் கொண்டிருந்தார்கள். கர்வம் மிகுந்த காக்கையும் அவர்களுடன் இருந்தது. அப்போது ஆகாயத்தில் மிகுந்த உயரத்தில், சில அன்னப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த வியாபாரியின் குழந்தைகள், ‘‘காக்கையே! பறவை இனங்களிலேயே மிகவும் உயர்ந்ததான நீ, அந்த அன்னப்பறவைகளைப் போல, உயரமாகப் பறக்க வேண்டாமா? பார் அவைகளை! ம்...! நீயும் பற!’’ என்று கூறிச் செய்தார்கள். குழந்தைகளின் கேலிப்பேச்சைப் புரிந்து கொள்ளாதவாறு, காக்கையின் கண்களைக் கர்வம் மறைத்தது;

‘‘ஹும்! அந்த அன்னப் பறவைகளைக் காட்டிலும் நான் உயரமாகப் பறப்பேனாக்கும். பாருங்கள் இப்போது!’’ என்று சொல்லிவிட்டு ஆகாயத்தை நோக்கித் தாவியது காகம். சற்று நேரத்தில் அக்காகம், அன்னப்பறவைகளை நெருங்கியது. அன்னப் பறவைகளுக்கு இணையாகப் பறந்து கொண்டிருந்த காகம், ஓர் அன்னத்துடன் பேச்சுக்கொடுக்கத் தொடங்கியது.

காகம்: வாருங்கள் என்னுடன்! இன்னும் உயரமாகப் பறந்து போகலாம்.

அன்னம்: உன் பேச்சைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. மானச தடாகத்தில் வாழும் நாங்கள், நீண்...ட தூரம் பறக்கும் சக்தி வாய்ந்தவர்கள். அதன் காரணமாகவே எங்களை, எல்லோரும் வெகுவாக மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்களைப்போய், உன்னுடன் இணையாகப் பறக்கக் கூப்பிடுகிறாய். எங்களுடன் சரிக்கு சமமாக, நீ எப்படிப் பறப்பாய்? சொல்!

காகம்: வெள்ளைவெளேர் என்று இருப்பதால், உங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள்? என்னைப் போல் பறக்க முடியுமா உங்களால்? பலவிதமான வகைகளில் பறக்கக் கூடியவன் நான். டீனம், உட்டீனம், அவடீனம் முதலானவைகளும்; சமுதீபம், சம்பாதம் முதலானவைகளும் எனக்குத் தெரியும். இந்த வகைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும் எல்லாம். இவற்றில் எந்த வகையில் பறக்க வேண்டும் சொல்லுங்கள் பறக்கிறேன். முடிந்தால் தைரியமாக என்னுடன் பறந்து வாருங்கள் பார்க்கலாம்!

அன்னம்: நீ சொல்லும் முறையெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எல்லாப் பறவைகளும் சாதாரணமாகப்பறக்கும், அந்த ஒரு முறைதான் தெரியும்.

காகம்: ப்ச்! இவ்வளவு தானா உங்கள் திறமை? சரி! சரி! போகட்டும். உனக்குத்தெரிந்த விதத்திலேயே வேகமாகப் பற! பார்க்கலாம்.

அன்னம்: அடாடா! காகமே! பறக்கும் முறைகள் எல்லாம் தெரிந்த உன்னைப் போய், என்னால் ஜெயிக்க முடியுமா? எல்லாப் பறவைகளையும் நீ ஜெயித்து விடுவாயே! அதைக் கேட்டதும் மற்ற அன்னப் பறவைகளும் காக்கையைப் பரிகாசம் செய்தபடி, இன்னும் உயரமாகப் பறக்கத் தொடங்கின. விவேகம் இல்லாமல் வீரம் பேசிய காக்கையும் விடவில்லை. அன்னங்களுக்கும் மேலாக உயரத்தில் பறந்தது. சீராகப் பறந்து கொண்டிருந்த அன்னங்களைத் தாண்டிப் போனது. கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து, ‘‘பார்த்தீர்களா?’’ என்றது; தன்னுடன் பேசிய அன்னத்திற்கு இடமும் வலமுமாகப் பறந்து, அதைக் கொத்திக் கேலி செய்தது. தன் திறமைகளை எல்லாம் காண்பித்தது.

அதைப் பார்த்த மற்ற காக்கைகளுக்குக் குஷி தாங்கவில்லை. அதனால் அவை, ‘‘ஆகா! நம்ம ஆள் எப்படிப் பறக்கிறான் பார்!’’ என்று கத்தி ஆதரவு கூச்சல் எழுப்பின. அன்னங்களும் சும்மா இருக்கவில்லை.காகத்தால் கொத்தித்தொல்லைபடுத்தப்பட்ட அன்னத்தை நோக்கி, உற்சாக வார்த்தைகள் கூறி ஊக்கப் படுத்தின. அந்த அன்னமும் சிறகுகளை உதறிக்கொண்டு இன்னும் உயரத்தில் பறந்தது.

ஆத்திரமும் அவசரமும் கொண்ட காகத்தினால், அன்னத்திற்கு இணையாகப் பறக்க முடியவில்லை. சக்தியை இழந்த அது, ‘‘கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க எங்காவது இடம் இருக்குமா?’’ என்று, எல்லாப் பக்கங்களிலும் சுற்றிப் பார்த்தது. கண்ணுக்கு எட்டிய வரை கடலாகவே இருந்ததால், காகத்தைப் பயம் பிடித்துக் கொள்ள, அது கடலில் விழுவதும் எழுவதுமாக இருந்தது. கடலில் விழுந்து எழும் காகத்தின் உடலை, அவ்வப்போது உப்புத் தண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தது.

அந்நேரத்தில் நிதானமாக முன்னால் பறந்து கொண்டிருந்த அன்னம், காகத்தின் நிலையைப் பார்த்தது. இரக்கத்தோடு அருகில் வந்து, ‘‘காகமே! என்னை விட்டால் யாருமில்லை; பறக்கும் முறைகள் அனைத்தும் எனக்குத் தெரியும் என்று கூறிய நீ, தண்ணீரில் விழுவதும் எழுவதுமாக இருக்கிறாயே! பறக்கும் முறைகளில் இதுவும் ஒன்றா? ம்... போகட்டும் வா! நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்’’ என்றது அன்னம்.

உடல் பலத்தை இழந்து, மன வருத்தத்துடன் உயிர் பயத்தாலும் பீடிக்கப் பட்டிருந்த காகம், ‘அன்னமே! என்னை மன்னித்து விடு! எச்சிலை உண்டு, உடல் கொழுப்பும் கர்வமும் கொண்டிருந்த நான், கருடனை விட உயர்வாக என்னை எண்ணிக்கொண்டு விட்டேன். என்னைக் காப்பாற்று! இனிமேல் என் வாழ்நாளில் யாரையுமே இழிவாகப் பேச மாட்டேன்’’ என்று சொல்லி, நினைவிழந்து நீரிலே விழுந்தது. அதே விநாடியில் தன் கால்களால் காகத்தைப்பற்றி எடுத்துக் கொண்ட அன்னம், காகத்தைக் கரையில் கொண்டு வந்து சேர்த்தது. நினைவு தெளிந்த காகம், தன் கண்களாலேயே அன்னத்திற்கு நன்றியைத் தெரிவித்தது. அப்போது அதனிடம் கர்வம் இல்லை. கர்வம் வேண்டாம் என்பதை விளக்க வியாசர் சொன்ன கதை இது.

தொகுப்பு: V.R.சுந்தரி