பகுதி 10
சோழப் பேரரசு என்றுமே வீரத்தையும் விவேகத்தையும் மதிக்கும். சோழமண்டலத்தை எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுவந்த மன்னன் தன்னுடைய படைத் தளபதி நீலனின் ஆற்றலை நேரில் கண்டு வியந்தான்.அரசவையில் நீலனை அழைத்து வெகுமானங்கள் அளித்து மகிழ்ந்தான்.“நீலன் இன்று முதல் திருமங்கை நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படுகிறான்” என்று கூறி, புலி இலச்சினை பொறித்த கிரீடத்தை அணிவித்தான்.நீலன், “என் தந்தை ஆலிநாடுடையாருக்கும், என் தாய் வல்லித்திரு அம்மைக்கும் மிக்க நன்றி. என் நான்கு நண்பர்கள் என் வெற்றிக்குக் காரணமானவர்கள். வித்தியாசமானவர்களும் கூட. முதலாமவன் நீர்மேல் நடப்பான் - தரைமீது நாம் நடப்பதுபோல நீரின் மேல் நடப்பவன்.
இரண்டாமவன் நிழலில் ஒதுங்குவான் - பின் தொடர்ந்து செல்வதில் வல்லவன்.மூன்றாமவன் தாழ் ஊதுவான் - எந்த தாழ்ப்பாளையும் திறக்கும் திறன் பெற்றவன்.நான்காமவன் தோழா வழக்கான் - எப்படிப்பட்டவர்கள் வாதம் புரிந்தாலும் வெல்லக் கூடியவன்.என் வெற்றிக்குப் பின்னால் இந்த நால்வருடன் என் குதிரை ஆடல் மாவிற்கும் என் யானை அமரிற் கடமா களியானைமிக்க பங்குண்டு.’நண்பர்களில் முதலாமவன் எழுந்தான். நீலனைத் தழுவி உச்சந் தலையில் முத்தமிட்டான்.
‘நீலனுக்கு உள்ள மாபெரும் சக்தி எது தெரியுமா? அவன் இலக்கு ஒன்றை அடையவேண்டும் என்று தீர்மானம் செய்வான். அந்த இலக்கு ஒன்றே எப்பொழுதும் அவன் சிந்தனையிலிருக்கும். உண்ணும்போதும், உறங்கும்போதும், எண்ணம் முழுதும் அதுவே நிறைந்திருக்கும். அவன் பேச்சு, செயல் என எல்லாமும் அந்த இலக்கை அடைவதைப் பற்றியதாகவே அமைந்து விடும். நினைத்ததை முடிப்பவன்.’கூட்டம் மொத்தமும் கைதட்டி மகிழ்ந்தது. அந்நிகழ்ச்சிக்குப் பின், நீலன் நண்பர்களுடன் திருமங்கை நாட்டை நோக்கித் திரும்பலானான். நண்பர்களின் பேச்சு நீலனின் வாழ்வு முறையைப்பற்றி திரும்பியது.
‘நீலனே! நீ தளபதியாக இருந்த காலம் முடிந்து விட்டது. இன்று நீ ஒரு மன்னன். அப்படி, இப்படியென்று இருந்ததை மறந்து விடு! இனி ஒரு பெண். அவளே உன் வாழ்வு என்பதாக அமையட்டும்.’‘இனி புதிதாக நீலனுக்கு என்று பிறக்கப் போவதில்லை. அவள் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து கொண்டிருப்பாள். அவள்...’பேச்சை இரண்டாம் நண்பன் முடிக்கும் முன்பே நீலன், குடத்தை சுமந்தபடி நடந்து செல்லும் அந்த யுவதியைப் பார்த்தான். ஒரு கணம், அந்த ஒரு கணத்தில் இருவர் பார்வைகளும் சந்தித்தன. நீலனின் குதிரை எதோ புரிந்தது போல மெல்லக் கனைத்தது. நீலன், பெண்ணைப் பார்த்தபடி கடிவாளத்தை இழுக்க, பதற்றத்தில் குடத்தை அந்தப் பெண் நழுவ விட்டாள். மெல்லிய கலவரம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது. ஓட்டத்துடன் அவள் வீட்டிற்குள் சென்று விட்டாள்.
நீலனுக்கு, அவன் இதயம் அடித்துக் கொள்வது அவன் காதிற்கே கேட்டது. அந்தப் பெண் நினைவிலேயே நின்றிருந்தான். இது ஒரு புது அனுபவமாகவே நீலனுக்குப் பட்டது. இது காமம் என்றோ காதல் என்றோ அவனால் இனம் பிரிக்க முடியவில்லை. எத்தனையோ பெண்கள் அவன் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள். அந்த யுவதி மட்டும் ஒரு பெரிய விதிவிலக்காக அவனுக்குப் பட்டது. முதன் முறையாக அவனுக்கு இறைவனின் நினைவு வந்து போனது. இதுவரை வாழ்வில் சோழப் பேரரசுக்காக போரிட வேண்டும் என்பதைத் தவிர, பெரிய நோக்கம் என்று ஒன்றையும் கொண்டதில்லை, தனக்கு ஏன் இந்த அரசாட்சி அமைந்திருக்கிறது? தான் என்ன செய்யவேண்டும் என்று ஒரு தெளிவின்றி இருப்பது அவனுக்கு வெறுமையாக
இருந்தது.
அவன் எதிர்பாராமல் சந்தித்த அந்த யுவதி, தன் வாழ்வில் ஏதோ ஒரு முக்கிய பங்கு வகிக்கப் போவதாக அவன் உள்ளுணர்வு சொல்லியது. அதே பின்னிரவு நேரத்தில் அந்த யுவதியும் தான் சந்தித்த அந்த வீரனை நினைத்தபடி தோட்டத்தில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தாள். பின், முல்லைப் பூக்களின் பந்தலின் கீழ் அமர்ந்தாள். வானத்தில் முழு நிலவைப் பார்த்தாள். இதேபோன்று முன்னொரு பெளர்ணமி நாளில், நிகழ்ந்த நிகழ்வு மனதில் வந்தது. பலமுறை மனதில் தோன்றியவைதான் என்றாலும், இன்று அதற்கு ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றியது.
திருமாமகள் இதுதான் அவள் இயற்பெயர். அவள் ஒரு அப்ஸரஸ். அழகிய தேவதை. தோழிகளுடன் அவ்வப்பொழுது பறந்து செல்வதும், நீரோடைகளில் விளையாடுவதும், மலர்வனங்களில் திரிவதும் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு பெளர்ணமி நாளில் இமயமலைச்சாரலில் தோழிகளுடன் வானில் உலா வந்தபடி இருந்தாள். அதே நேரம் இமயமலை அடிவாரத்தில் கபில முனிவர், சில சித்தர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்ணுற்றாள். அந்தச் சித்தர்களில் ஒருவர் அவலட்சணமான முகத்தைக் கொண்டிருந்தார். அவர் மந்திரம் சொல்லும் முறையும், தலையாட்டிய விதமும் கொஞ்சம் வினோதமாக இருந்தது.
திருமாமகளுக்குத் தோழிகளின் முன்பாக, தான் பெரிய ஞானி என்று காட்டிக்கொள்ளும் விதமாக அந்தச் சித்தரைப்போலவே தலையாட்டி வினோதமான ஒலியில் மந்திரம் சொல்வது போல பரிகசித்தாள். தோழிகளுக்கு அந்த வேடிக்கை பிடித்துப்போக மீண்டும் மீண்டும் அவளை அது போன்றே செய்யச் சொன்னார்கள்., திருமாமகள் தன்னை மறந்தாள். சூழல் மாறிப்போனது. ஒருவரை உருவக்கேலி செய்வது மிகமிக இழிவான செயல். அந்த இழிசெயலுக்கு ஒரு எதிர்வினை இருந்துதானே தீரும். அந்தச் சித்தர் மனம் நொந்து கண்ணீர் சிந்தினார். கபில முனிவருக்கு, தன்னிடம் கற்றுக் கொள்ளும் சீடனின் கண்ணீர் சுட்டது. கமண்டலத்திருந்து நீரை எடுத்தார். அவள் மேல் எறிந்து சாபமிட்டார்.
‘தேவதை என்பதினால்தானே உனக்கு இந்த அகம்பாவமும் அலட்சியமும்! இப்பொழுதே நீ ஒரு மானிடப்பெண்ணாகப் பிறக்கக் கடவாய்’.விளையாட்டு வினையானது. தோழியர் கூட்டம் மொத்தமும் கலைந்து சிதறியது. இவள் மட்டும் அவ்விடத்திலேயே, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கதறினாள்.‘என் அறிவின்மை. தோழிகளின் முன் சித்த புருஷரை கேலி செய்து, என்னைத் தலைவியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்கிற முட்டாள்தனத்தை செய்து விட்டேன். ஆயிரம் முறை உங்கள் எல்லோரையும் நமஸ்கரிக்கிறேன். மண்ணுலகில் ஒரு பெண்ணாகப் பிறக்க வேண்டியிருப்பது வேதனை. அதைவிட பெரிய வேதனை இப்படி ஒரு மாபெரும் பாவச்செயலை நான் செய்தது. உங்கள் முன் நான் கூனிக் குறுகி நிற்கிறேன்’ என்று சொல்லி பாதம் பணிந்தாள்.
கபிலமுனிவர், தவறுக்கு வருந்தும் அவளை நோக்கி, ‘உன்னை நாங்கள் மன்னித்தோம். நீ மனித குலத்தில் பெண்ணாகப் பிறக்கப்போகிறாய். நீ செய்து முடிக்கவேண்டிய ஒரு மாபெரும் பணி உள்ளது. பரகாலன் எனும் ஒருவனை நீ சந்திக்கப்போகிறாய். நீ தான் அவனை வைணவனாக மாற்றப்போகிறாய். இது அந்த நாராயணின் அருளுடன் நடக்கவிருக்கிறது. எங்கள் எல்லோரின்
ஆசிகள் உனக்கு என்றுமுண்டு.’ நடந்து முடிந்த அத்துணையும் அவள் மனதில் காட்சிகளாய் வந்தது.
அதன்பின் திருநாங்கூர் திருவெள்ளக்குளத்தின் கரையில், தான் குமுத மலருடன் நின்றதையும், அங்கே வந்த மருத்துவர் தன்னை அழைத்து வந்தததையும், இன்றுவரை தன் மகளாகவே பராமரிப்பதையும் நினைத்து அவள் மனது நன்றியில் நெகிழ்ந்தது. குமுதவல்லி எனும் தன் புதிய பெயரும் அவளுக்குப் பிடித்துப்போனது. ‘குமுதா’ என்று தன்னைத்தானே ஒரு முறை கூப்பிட்டு மகிழ்ந்தாள். தான் சந்தித்த அந்த வீரன் நிச்சயம் பரகாலனாக இருக்க வேண்டும் என்று மனது ஏங்கத் துவங்கியது. அவன் தன் வீடு தேடி வருவான் என்று நம்பினாள். அடுத்த நாள் உடனே வந்து விடாதா என்று எண்ணியபடி கண்ணயர்ந்தாள்.
மறுநாள், நீலன் சீராக உடுத்திக்கொண்டு, தன் ஆடல்மா குதிரையில் குமுதவல்லியின் வீட்டை அடைந்தான். குமுதவல்லியின் தாய் தந்தையரை வணங்கினான்.
‘என் பெயர் நீலன். அடிப்படையில் ஒரு போர்வீரன். பரகாலன் என்று எனக்கு மற்றொரு பெயர் உண்டு.’ பரகாலன் என்ற பெயரைக் கேட்டதும் குமுதவல்லிக்கு மனது துள்ளியது.
நீலன் தொடர்ந்தான். ‘சோழப்பேரரசரால் திருமங்கை நாட்டின் குறு நில மன்னன் ஆக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளை மணம் புரிய விழைகிறேன். என் உயிரைவிட மேலாக அவளைக் காப்பேன். நான் நான்காம் வர்ணமான கள்ளர் குலத்தில் பிறந்தவன்.’குமுதவல்லியின் தந்தை, ‘குமுதவல்லி எங்களுக்கு இறை அளித்த கொடை.
அவளின் விருப்பமே எங்களின் விருப்பம்.’அந்த வார்த்தைகளுக்குக் காத்திருந்தது போல குமுதவல்லி நீலனைக் கைகூப்பி வணங்கினாள்.“தாங்கள் என்னுடைய விருப்பத்தை செவிமடுப்பீர்கள் என நம்புகிறேன். நான் தோன்றிய நாள் முதல் என் மனதில் என்று முள்ள எண்ணம் ஒரு வைணவனுக்கே நான் துணைவி ஆகவேண்டும் என்பதுதான். உங்கள் குலம் எதுவாக இருப்பினும், வைணவனாக நீங்கள் ஆகவேண்டும். இது என் உறுதியான நிலைப்பாடு. நான் எந்தவொரு அகந்தையிலும் இதைக் கூறவில்லை. நீங்கள் வைணவனானபின் மற்றவைகளைப் பற்றிப் பேசுவதுதான் நன்றாக இருக்கும் எனப்படுகிறது.’ நீலன் ஒரு நொடி கூட தாமதமின்றி பதில் அளித்தான்.
“நான், என் வலது தோளில் சக்கர முத்திரையும், இடது தோளில் சங்கு முத்திரையும் பதித்து, பேச்சில், செயலில், உடலில், உணர்வில், உயிரில் ஒரு வைணவனாக வருவேன். உன்னைக் கரம் பிடிப்பேன். வெறும் புற அழகில் மயங்கி நான் இந்த முடிவை எடுக்கவில்லை. நான் சொல்வது சத்தியமான வார்த்தை. நம்மை வழி நடத்தும் தகுதி பெற்றவர்கள் எப்பொழுதுமே நம் குருமார்கள்தான். உன்னை, எனக்கு நல்வழி சொல்லிக்கொடுக்கும் குருவாகவே பார்க்கிறேன். குருவென்பவர் எப்பொழுதும் காஷாயம் கட்டி, கமண்டலம் ஏந்தி, ஜடாமுடியுடனும், தாடியுடனும் இருக்க வேண்டும் என்ற நியதியில்லை. குமுதவல்லி, நீ என் ப்ரியமானவள், என் சஹியாக இருந்து வழி நடத்து. எல்லாமும் இனிதே நடக்க, குமுதவல்லி! உன் பிரார்த்தனை மட்டுமே எனக்குத் துணை நிற்கும்.”குமுதவல்லி கண்களால் வாழ்த்துச் சொல்லி விடை கொடுத்தாள்.
நீலன், வைணவப் பெரியோர்கள் பலரைச் சந்தித்தான். தன்னை வைணவனாக மாற்றும் சடங்குகளைச் செய்யச்சொல்லி வேண்டினான். யாரும் அதற்கு முன் வரவில்லை. கடைசியில் ஒரு முதிய அந்தணரைச் சந்தித்து எல்லோரும் தன்னை வைணவனாக்கத் தயங்குவதன் காரணம் கேட்டான்.“நீ ஒரு நாட்டின் மன்னன். முன்பு படைத்தளபதி. உன் மேல் உள்ள பயம்தான் காரணம். மேலும் இது போன்று வேற்று வர்ணத்தாருக்கு செய்வது தகுமா? முறையாகுமா? என்ற அச்சம். இது போல் யாராவது வைணவனாக ஆகியிருக்கிறார்களா? என்கிற சந்தேகம். என் நினைவுக்கு எட்டிய வரையில் அப்படியொன்று நிகழ்ந்ததில்லை. இதற்கு ஒரே தீர்வு, நீ அந்த ஸ்ரீமந் நாராயணனை நாடுவது மட்டுமே!. அவர் ஒருவர் தான் உனக்கு வழிகாட்ட முடியும். நம்பிக்கையுடன் செல்”
அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்தான்.
‘நம்பிக்கை’ என்று அந்தணர் சொல்லிய சொல்லே நீலனுக்கு வழிகாட்டியது. திருநரையூர் எனும் நாச்சியார் கோயிலுக்குச் சென்றான். நம்பிக்கை நாச்சியாரை வணங்கினான். நீலன், நாச்சியார்
அருகில் நின்றிருந்த வெங்கடேசப் பெருமானைக் கைகூப்பி வேண்டிக் கொண்டான். இந்தத் தருணத்திற்குக் காத்திருந்த பெருமாள், நீலனை நோக்கிக் கண்ணசைத்தார். நீலனை அருகில் வரப் பணித்தார். வேங்கடேசப் பெருமாளே நீலனின் வலது தோளில் சக்கரத்தையும் இடது தோளில் சங்கையும் பொறித்தார். கனவா அன்றி நனவா என்ன இது! என்று உணர முடியாமல் பிரமித்தான். தனக்கு நடப்பதைத் தானே மூன்றாம் மனிதனாகப் பார்த்துக் கொண்டான். கண்ணீர் மல்கியது. விழுந்து தொழுதான்.
அங்கிருந்து விரைந்து சென்று குமுதவல்லியைச் சந்தித்தான். குமுதவல்லி நீலனின் புதிய தோற்றத்தைக் கண்டாள்.பஞ்சகச்சமாகக் கட்டிய உடை. வலது மற்றும் இடது தோள்களில் சிவந்த நிறத்தில் தோன்றிய சக்கர, சங்கு முத்திரைகள், நெற்றி உள்ளிட்ட பன்னிரண்டு இடங்களில் மிளிர்ந்த திருமண்காப்பு, கண்களில் தீட்சண்யம், முகத்தில் கூடியிருக்கும் பொலிவு எல்லாமும் குமுதவல்லிக்கு பரவசத்தை அளித்தது.‘நீ வைணவனாகி விட்டாயா? யார் உனக்கு பஞ்சசம்ஸ்காரத்தை செய்து வைத்தார்கள்? உன் மனத்தளவிலும் நீ வைணவனாக உணர்கிறாயா?’ அவன் பதிலுக்குக் காத்திராமல் கேள்விகளால் துளைத்தாள்.
‘பொறுமை! பொறுமை! ஒவ்வொன்றாய் நான் விளக்குகிறேன். நான் வைணவனாகிவிட்டேன்.’ இதைக் கேட்டவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்டபடி, ‘நீங்கள் ... தாங்கள் ..... ‘ வார்த்தைகள் வராமல் கைகூப்பினாள்.‘எனக்கு அந்தப் பெருமாளே பஞ்சசம்ஸ்காரத்தை செய்வித்தார்! இதோ என் தோள்களைப் பார். என்னில் அவரின் வாசனையை நீ உணர்வாய். நாச்சியாரின் அருளும் பரிபூரணமாக நமக்கு உண்டு.’குமுதவல்லி எப்படி தன் மகிழ்வைப் பகிர்ந்துகொள்வது என்று அறியாமல் திணறினாள்.நீலனின் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டாள். நீலன் அவளைத் தொட்டு தோளில் சாய்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுதே அவள், அவனை நமஸ்கரித்து நிமிர்ந்தாள். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது.
(அடுத்த இதழில்...)
கோதண்டராமன்


