Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆழ்வார் பிரான் ஆன கதை!!

வையத்து வாழ்வீர்காள்: பகுதி-5

நாட்கள் நகர்ந்தன. நம்மவருக்கு திருக்குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. உடுத்தியிருந்த ஆடையுடன் புறப்பட்டார். பாசுரங்களைப் பாடியபடியே பயணித்தார்.இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவியில் அவன் அவதாரத்தைச் சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பமாக இருந்தது. ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ எனச் சொன்னவர் நம் திருமழிசை ஆழ்வார்.

‘செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்

புவிக்கும் புவியதுவே கண்டீர் - கவிக்கு

நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன்

பார்க்கில் மறைப்பொருளும் அத்தனையே தான்’

என்று கவிபாடியவர் அல்லவா!

அவ்வாறு செல்லும் வழியில், பெரும்புலியூர் என்னும் கிராமத்தில், ஆழ்வார் ஒரு இல்லத்தின் திண்ணையில் இளைப்பாற அமர்ந்தார். அங்கே சில வேதியர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். இவரின் கந்தல் உடையையும் புழுதிபடிந்த கோலத்தையும் அவரின் திருவுருவத்தையும் கண்டு தாழ்வாக நினைத்தனர். வேதம் ஓதுவதை நிறுத்தினர். பின்பு மறுபடியும் தொடங்க முயற்சிக்கும் பொழுது, தாங்கள் எந்த இடத்தில் நிறுத்தினோம் என நினைவுக்கு வராமல் தவித்தனர், ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லை எடுத்து நகத்தால் பிளந்து, யஜுர் வேதத்தைச் சேர்ந்த “க்ருஷ்ணாநாம் வ்ரீஹிநாம் நகநிர்ப்பிந்நம்” என்னும் வாக்கியத்தை உணர்த்தினார்.

ஆழ்வாரின் பெருமையை உணர்ந்த வேதியர்கள் தங்களின் நடத்தைக்கு மன்னிப்புக் கோரினர்.பின்பு, அவ்வூர் கோயிலில் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமாளை தரிசிக்கும் முன்பாக கோவிலை வலம் வந்தார். அவர் கோவிலைச் சுற்றி வருகையில், அவர் நகர்கிற இடம் நோக்கி நம்பெருமாள் திரும்பிய வண்ணம் இருந்தார். அதைப் பார்த்த சந்நதி அர்ச்சகர்கள் வியந்தார்கள். அவரின் பெருமை உணர்ந்தார்கள்.கோவிலின் அருகில் பெருவேள்வியொன்று இயற்றிக்கொண்டிருந்த பெரும்புலியூரடிகளிடம் இவ்வதிசயத்தைக் கூறினார்கள்.

அடிகளாரும் ஆழ்வாரை அழைத்து வேள்வியில் ஆழ்வாருக்கு முதல் பூஜை செய்து கௌரவித்தார். அங்குள்ளவர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அடிகளார் மனம் நொந்தார். அடிகளார் வருத்தம் கண்டு ஆழ்வாரின் மனம் வருந்தியது. தன்னுடைய மேன்மையை உணரச் செய்வதைவிட, பக்தி ஒன்றே மேலானது என்பதைப் புரிய வைக்க எண்ணினார். எல்லோரும் காணும் வண்ணம், தன் இதயத்தை பிளந்து, அங்கே பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசிக்க வைத்தார். யாவரும் நம்மவரின் பக்தியை உணர்ந்து சிலிர்த்தனர்.

‘குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும்

பிறந்திலேன்

கலங்களாய நற்கலைகள் நாலிலும்

நவின்றிலேன்

புலன்களைந்தும்

வென்றிலேன், பொறியிலேன், புனித! நின்

இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம்

ஈசனே!’

- எனும் திருச்சங்க விருத்த பாசுரத்தை பாடினார்.

மேற்குலங்களில் பிறந்தாலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை. உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.இறுதியாக நம்மவர் திருக்குடந்தையை அடைந்தார். நேராக, நீண்ட நாள் காணாத தாயைப் பார்க்கின்ற குழந்தையைப் போல ஆராவமுதன் என்கிற சாரங்கபாணி பெருமாளின் தரிசனத்திற்காகச் சந்நதியை அடைந்தார். உச்சி கால பூஜை நேரமது. திரை போடப்பட்டிருந்தது. உள்ளே பட்டர், சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யத் தயாரானார். வெளியே பசியுடனும் தளர்வுடனும் நம்மவர் நின்றிருப்பது, உள்ளே ஆராவமுதனுக்குத் தெரியாமலா போய்விடும்.

ஆராவமுதன் பட்டரை அழைத்தார்.“அங்கே என் திருமழிசை ஆழ்வார் நிற்கிறான். அவனுடைய பசி எனக்கு உணர்கிறது. அவனுக்கு முதலில் இந்தச் சக்கரைப்பொங்கலை அளியுங்கள். அவன் பசியாறட்டும். அவன் உண்ட மிச்சத்தைக் கொணருங்கள். அதை நான் புசிப்பேன்” என்று கூறினார்.பட்டர் ஆச்சரியம் பொங்க, வெளியில் நின்றுகொண்டிருக்கும் நம்மவரிடம் ஒடோடி வந்தார். பொங்கலை அளித்தார். நம்மவர், “நிவேதனம் ஆகிவிட்டதா? மணியோசையை நான் கேட்கவில்லையே?” என்று வினவினார்.

பட்டர், “சுவாமி! நீர் பசியுடன் நிற்கிறீராம். உன்னைக் காக்க வைக்காமல் உனக்கு முதலில் அளிக்கச்சொன்னார். உங்கள் பசியை அவரால் தாங்க முடியவில்லையாம். ” என பதிலளித்தார்.

கையில் நிவேதனத்தைப் பெற்றுக் கொண்டு, கண்களில் நீர் பொங்க, “என்ன! எனக்கு முதலில் அளிக்கப் பணித்தாரா! என் மீது நான் பிறந்தது முதலே, தனி பாசமும் பரிவும் மிக மிக உண்டு. என் தாய் தந்தையரை நான் பார்த்தது இல்லை. எனக்கு தாயாக பிராட்டியும் தந்தையாக நம் பெருமாளும்தான். என் குரு பேயாழ்வாரின் ஆசிர்வாதத்தால் எனக்கு இந்த பாக்கியம். என் பிறப்பு முதலே என்னைக் காப்பவர் அவர்தானே! தன்யனானேன்.” கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர் சர்க்கரைப்பொங்கலில் விழுந்தது. இன்னும் சுவை கூடிற்று. உண்ணத் துவங்கினார்.

நம்மவர் உண்ட மிச்சத்தைப் பெருமாளுக்கு பட்டர் படைத்தார். அவரும் மிகுந்த உவகையுடன் புசித்தார். இது போன்ற சுவையான சர்க்கரைப்பொங்கலை இது வரையில் சாப்பிடாதது போல ஒரு ஆனந்தம் பெருமாளின் முகத்தில் தெரிந்தது. திரை விலகியது. பட்டர் தீபாராதனை செய்வித்தார். நம் பெருமாளுக்கு நம்மவரைப் பார்த்ததில் உண்டான சந்தோஷம், நம்மவர் நம் பெருமாளைத் தரிசித்ததில் அடைந்த சந்தோஷத்தைவிட அதிகமாக இருந்ததை உணர முடிந்தது.பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார். பரவசம் கொண்டார். பாசுரம் பாடத் துவங்கினார்.

‘நடந்த கால்கள் நொந்தவோ?

நடுங்க ஞான மேனமாய்

இடந்தமெய் குலுங்கவோ?

இலங்குமால் வரைச்சுரம்

கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்

கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!’

‘ஐயனே, நீ ராமனாக அவதாரம் செய்தபொழுது, சீதாவைத் தேடித்தேடி பல தூரம் காட்டில் நடந்த போது உமது கால்கள் வலிக்கவில்லையா?

வராக அவதாரம் எடுக்கையில், பூமியைத் தாங்கியபோது உமது உடல் நடுங்கவில்லையா?

வழித்தடைகளான, பெருமை வாய்ந்த மலைகளையும் பாலை நிலங்களையும் தாண்டிப் பாய்ந்தும், அகலமான வாய்க்கால்களாகப் பொங்கி வழிந்தும் வருகிற காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள திருக்குடந்தை நகரில் கிடந்த திருக்கோலத்திலிருப்பது அழகுதான். ஆனாலும் எனக்கு அமுது கொடுத்தால் மட்டும் போதுமா? சற்றே எழுந்து என்னிடம் பேசு! வாழி கேசனே ! ஏன் இப்படி சயனித்தபடியே இருக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்வதற்காவது எழுந்திரும்!”, உரிமையில் ஒரு செல்ல அதட்டல், அவரிடமிருந்து பாசுரமாய் வெளிப்பட்டது.

‘எழுந்திரும்’ என்ற வார்த்தையைக் கேட்ட அக்கணமே, ஆணையை ஏற்கும் வண்ணம் ஆராவமுத பெருமாள் எழ முயற்சித்தாராம். பக்தனின் சொல்லை மீற விரும்பாத அவர் எழுந்து நிற்க எத்தனிக்கையில், நம்மவருக்கு முந்தைய நிகழ்வு மனதில் மின்னலடித்தது. திருவெஃகாவில் இப்படித்தான் சயனித்திருந்த பெருமாளை பாய் சுருட்டவும், சுருட்டிய பாயைத் தலையில் சுமந்து பின்தொடரவும், பின் முடிவை மாற்றி பாய் விரிக்கவும், மீண்டும் சயனிக்க வைத்ததும் நினைவுக்கு வருகிறது. எவ்வளவு பெரிய மனது நம் பெருமாளுக்கு! சொன்ன வண்ணம் கேட்கின்ற பெருமாளை நான் மிகவும் படுத்துகின்றேனோ? எனப் பதறினார். “நீர் சிரமப் படவேண்டாம். நீங்கள் எழுந்திருக்க வேண்டாம். சயனத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்.

பெருமாளுக்கு நம்மவர் முதலில் சொல்லிய வண்ணம் சயனித்த நிலையிலிருந்து எழுந்தார். முழுவதுமாக எழுந்திருக்கும் முன்பாக சயனித்து இருக்குமாறு அடுத்து சொன்னதால், பாதி எழுந்து பாதி சயனித்த கோலத்தில் தோன்றினார். கிடந்த கோலப் பெருமாள் சற்றே எழுந்தவாறு மீதி கிடந்தவாறு இருக்கும் அந்த உத்தான சயனம் என்றுமே அவரது

தோற்றமானது.

உண்மையான பக்திக்கு பெரிய அங்கீகாரத்தை பெருமாள் அளித்தார் என்பது எல்லோருக்கும் நிரூபணமானது. அன்று முதல் ஆழ்வாராயிருந்த திருமழிசை ஆழ்வார் ‘திருமழிசை பிரான்’ ஆனார். பிரானாக இருந்த ஆராவமுத பிரான் அன்று முதல் ‘ஆராவமுத ஆழ்வார்’ ஆனார்.

மெய் மறந்த நம்பிரான் நாதழுதழுக்க,

‘அன்று நான் பிறந்திலேன்;

பிறந்த பின் மறந்திலேன்;

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சிலே!!’

பக்தியின் உச்சம்தான் திருமழிசை பிரான். சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வாழ்ந்து திருத்தொண்டு புரிந்தார். பிரான் இறுதியில் பேயாழ்வாரின் மலரடி சேர்ந்தார்.”

பின்பழகிய பெருமாள் ஜீயர் சொல்லி முடித்தவுடன் கூட்டம் மொத்தமும் விம்மியது.

கோதண்டராமன்