Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயர்ந்த வாழ்வருளும் ஸ்ரீ ராமனின் திருத்தலங்கள்

ராமேஸ்வரம் அருகில் உள்ளது ராமர்பாதம். இங்கு ராமபிரான் தன் ஜாதகப்படி செவ்வாய் மற்றும் ராகு தோஷங்கள் நீங்க நாகப்பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் தோஷங்கள் நீங்கப்பெற்றார். இத்தலத்தில் ராமபிரானின் பாதங்களைக் குளத்தினருகில் தரிசிக்கலாம்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பாதையில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா இரண்டுக்கும் மத்தியிலுள்ள தீவில் கோதண்டராமரை தரிசிக்கலாம். பொதுவாக ராமரின் காலடியில் அனுமனிருப்பார்; இங்கு விபீஷணன் காணப்படுகிறார். இத்தல அனுமன் ‘பரிந்துரைத்த அனுமன்’ என போற்றப்படுகிறார். ராமரிடம், விபீஷணரை ஏற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரை!

காஞ்சிபுரத்திற்கு அருகே, திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாளாக ராமபிரான் அருள்கிறார். இத்தல கீல்குதிரை வாகனம் சிறப்பு பெற்றது. இத்தல தாயார் மரகதவல்லி, மழலை வரம் அருள்வதில் நிகரற்றவள். வறுத்த பயறு முளைக்கும் அதிசயம் நடக்கும் ஆலயம் இது.

சேலம், அயோத்யாபட்டணத்தில் கோதண்டபாணியாக ராமர் அருள்கிறார். கலை எழில் கொஞ்சும் சிற்பங்கள் நிறைந்த இத்திருக்கோயிலில் அயோத்தி செல்லும் முன், காலதாமதம் கருதி, ராமபிரான் தன் பட்டாபிஷேகத்தை இங்கே மேற்கொண்டார் என்றும், பிறகு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டார் என்பார்கள்.

விபாண்டக மகரிஷியின் பிரார்த்தனைக்கு இணங்கி தன் திருக்கல்யாணக் கோலத்தை ராமபிரான் காட்டியருளிய தலம் மதுராந்தகம். ராமானுஜர் தன் ஆச்சாரியரான பெரியநம்பிகளிடம் வைணவத்திற்குரிய பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்றதும் இங்குதான்.

செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூருக்கு அருகில் பொன்பதர்கூடத்தில் சதுர்புஜகோதண்ட ராமர் தரிசனம் தருகிறார். திருமாலாகத் தனக்கு காட்சி தர வேண்டிய தேவராஜ மகரிஷிக்காக, நான்கு கரங்களுடன் சங்கு&சக்கரம் ஏந்தி, ராமர் காட்சி தந்த திருத்தலம் இது. இவரது திருமார்பில் மகாலக்ஷ்மி இடம் பெற்றிருப்பது சிறப்பான அம்சமாகும்.

திருநின்றவூரில் ஏரிகாத்தராமரை தரிசிக்கலாம். பெரிய திருமேனி உடைய இந்த ராமரோடு சந்நதியின் வெளிப்புறத்தில் தன் தோள்களில் ராம லட்சுமணரை சுமந்த நிலையில் ராமபக்தரான அனுமனையும் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், திருப்புள்ளம்பூதங்குடியில் வல்வில் ராமன், சயனதிருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றிய தலமாக இது கருதப்படுகிறது.

கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் ராமாயண நிகழ்வுகள் முழுவதும் சித்திரமாக தீட்டப்பட்டிருக்கின்றன. அன்னையும் அண்ணலும் திருமணத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தலமிது. இத்தலத்தில் வீணை மீட்டும் கோலத்தில் அனுமனைத் தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையை அடுத்த நெடுங்குன்றத்தில் ராமச்சந்திர பெருமாளை தரிசிக்கலாம். வில் அம்பு இல்லாத ராமன் இவர்! அனுமனுக்கு ராமபிரான் முக்திகோபநிஷத் எனும் உபநிஷத்தை உபதேசித்த தலம் இது. ராமநவமி வைபவத்தின் ஏழாம் நாள் தேரும், பத்தாம் நாள் இந்திரவிமானத் திருவிழாவும் இத்தல விசேஷம்.

திருவாரூர், முடிகொண்டானில் கோதண்டராமர் அருள்கிறார். இங்கு, ராமர் தன்னை விட்டுவிட்டு விருந்து சாப்பிட்டதால் கோபம் கொண்டு ஆலயத்திற்கு வெளியே தனி சந்நதியில் தங்கிவிட்ட அனுமனை தரிசிக்கலாம். பரத்வாஜ முனிவர் ராமபிரானின் ஆராதனைக்காக பிரதிஷ்டை செய்த ரங்கநாதரும் இத்தலத்தில் அருள்கிறார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள அயோத்தியில், ராமபிரான் அன்னை சீதாதேவியுடன் அருள்கிறார். கருவறையில் ராமசகோதர்களுடன் அனுமனையும் கருடனையும் தரிசிக்கலாம். இத்தல தீர்த்தமான சரயுநதியில் நீராடுவது மிகவும்

புண்ணியமானது.

சென்னை மடிப்பாக்கம், ராம்நகரில் ஒப்பிலியப்பன் ஆலயத்தில் ராமபிரான் பட்டாபிஷேக ராமராக சீதை, பரதன், சத்ருக்னன், லட்சுமணனோடு அமர்ந்த திருக்கோலத்தில் திருவருள்பாலிக்கிறார்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவனாக ராமபிரான் அருள்கிறார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரை தரிசித்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடுகின்றன. ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக நேர்ந்து கொண்டால் சரும உபாதைகள்

மறைகின்றன.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் தொன்மையான ராமர் ஆலயம் உள்ளது. அனுமன், நரசிம்மர், ஹயக்ரீவர், தும்பிக்கை ஆழ்வார், அரசமரத்தடி நாகர்கள், ராகு-கேது ஆகியோரும் இங்கே அருள்கின்றனர். இங்கு அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை வடைகள் சென்னைக் கோயில்களிலேயே பெரியவை!

தஞ்சாவூருக்கு அருகே திருவெள்ளியங்குடியில் கோலவில்லிராமர் மூலவராகவும், சிருங்காரசுந்தரர் உற்சவராகவும் ராமரையும் தரிசிக்கலாம். இங்கு கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தியிருக்கிறார். கருங்கல் தரையில் செவ்வாழை முளைத்து வாழையடி வாழையாக வளரும் அற்புதத் தலம் இது. கண் நோய்களை இந்த ராமர் தீர்த்தருள்கிறார்.

சென்னை - நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமனுக்கு எதிரில் ராமர், சீதை, லட்சுமணர் சந்நதி உள்ளது. இந்த ஹனுமானை பிரதிஷ்டை செய்யும்முன் வால் தலைக்கு மேலிருக்கும்படியாக திருவுரு அமையவிருந்தது. எதிரில் ராமர் இருக்கும் போது அவ்வாறு இருக்கக்கூடாது என சிருங்கேரி ஸ்வாமிகளின் கடிதம் வந்த அன்று தலைக்கு மேலே செதுக்கப்பட இருந்த வாலுக்கான கல் பகுதி மட்டும் தானே பெயர்ந்து விழுந்த அற்புதம் நிகழ்ந்தது.