Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கர்மயோக ரகசியம்!

பகவத் கீதையின் பல அத்தியாயங்களை படிக்கும்போது தேறிய பொருளாக சில விஷயங்கள் மனதில் எழுந்தன. எதிர்வருவதை எதிர்கொள் அதில் முக்கியமானது. ஏனெனில், இந்தப் பிறப்பெடுக்கும்போதே சிலவற்றை பிராரப்த கர்மா என்கிற வினையூழை மூட்டையாக சுமந்து வருகின்றோம். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் நீங்கள் தவிர்க்க முடியாததில் இன்பங்களும் துன்பங்களும் அடக்கம். அதனால் எதையுமே ஏற்றுக் கொள்ளுதல் மிகப்பெரிய நிம்மதியையும் வாழ்க்கை பற்றிய புரிதலையும் கொடுக்கும்.

‘‘எங்கிட்ட பணம் மட்டும் இருந்தா போதும். எல்லா பிரச்னையையும் சுலபமா சாதிச்சுடுவேன்’’ என்று பலர் சொல்வார்கள். ஆனால், பணம் இருப்பவரிடம் சென்று பேசிப் பாருங்கள். பணத்தால் தீர்க்க முடியாத அல்லது நிறைவுறாத மனோநிலையில் பணத்தை விடமுடியாமலும், பணத்தால் பல பிரச்னைகளை தீர்க்க முடியாமலும் இருப்பதை உணர்வீர்கள்.

பணம் வருவதற்கு முன்பு மனம் பணம் இருந்தால் போதும் என்று நினைக்கும். பிறகு, தொழிலிலோ, நட்பு வட்டத்திலோ, குடும்பத்திலோ, குழந்தைகளுக்கோ, உடல்நிலை கோளாறாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக பிரச்னைகள் வரும். வரவேண்டும் என்று கிடையாது. ஆனால், ஏதேனும் ரூபத்தில் வந்தபடியே இருக்கும். அல்லது இப்படி யோசிப்போம்.

இந்த ஒரு பிரச்னை மட்டும்தான் சார் என் வாழ்க்கைல… இது மட்டும் தீர்ந்துடுச்சுன்னா போதும் என்று தினமும் அந்தப் பிரச்னை குறித்து யோசித்தபடி இருப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. மனம் ஒன்றன்பின் ஒன்றாக இதுபோனால் நிம்மதி... இது வந்தால் நிம்மதி என்று கணக்கு போட்டு குழப்பும். எனவே, என்ன பிரச்னை இருக்கின்றதோ அது இருக்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எல்லோருக்கும் ஏதேனும் பிரச்னையை தருவது போன்று, சந்தோஷத்தை தருவது போன்று, செல்வத்தை தருவது போன்று, ஏழ்மையை தருவதுபோன்று தந்திருக்கின்றது. இவையெல்லாமுமே காலக்கிரமத்தில் மாறக் கூடியவை. அதனால் எது வருகின்றதோ எதுவாக இப்போது இருக்கின்றீர்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அதை அலசி ஆராயுங்கள். அதன் வலிகளையும் சவால்களையும் அலசுங்கள். அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதுவாகவே தீரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். தீர்க்க முடியும் என்று உங்களுக்கு நீங்களே உறுதியாக இருங்கள். உங்களுக்கு மட்டும்தான் இத்தனை பிரச்னை என்று மனம் மிரட்டும்போது சூ… சும்மாயிரு என்று அதட்டி வையுங்கள். மனதின் பலவீனத்தை அதிகப்படுத்தாதீர்கள். பல்வேறு தீர்வுகளை நோக்கி நகருங்கள். அப்படி நகரும்போதே உங்களால் பிரச்னைகள் குறித்து தெளிவாக யோசிக்க முடிவதை அறிந்து வியப்பீர்கள்.

இல்லையெனில், மனம் உங்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட பிரச்னைகள் என்றும், இந்த ஜென்மமே பாவப்பட்ட ஜென்மம் என்று பயமுறுத்தியபடி இருக்கும். எனவே எதுவரினும் வா… என்று அழையுங்கள். பதட்டப்படாது அமர் என்று ஓரிடத்தில் அதை அமர்த்துங்கள். பிரச்னைகளை நோக்கி பேசத் தொடங்குங்கள். அந்தக் கணத்திலேயே பெரும் பலம் உங்களை சூழ்வதை உணர்வீர்கள்.