பகுதி 10
ஸ்வர்ணமயமாக தங்கமயமாக இருக்கக் கூடிய பாதுகையில் பல விதமான ரத்தினங்கள் மேலும் சேர்ந்து கொண்டு பாதுகையின் அழகிற்கு மேன்மேலும் அழகூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. பத்மராகம் என்கிற உயர்ந்த வகையான கல் பாதுகையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த பத்மராகம் பாதுகையை அழகாக அலங்கரிக்கும் விதத்தை தனது ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 17வது பத்ததியான “பத்மராக பத்ததியில்” வர்ணிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
பத்ம என்றால் தாமரைப்பூ என்றும் ராக என்றால் சிகப்பு நிறம் என்பதும் பொருள். தாமரை மலர் போலவே சிவந்து இருக்கக் கூடிய கல் என்பதாலேயே அதற்கு
“பத்மராக” என்றே பெயர்.
“ப்ரபத்யே ரங்கநாதஸ்ய பாதுகாம் பத்ம ராகிணீம்
பதைக நியதாம் தஸ்ய பத்மவாஸா மிவாபராம்’’
பத்மராக கல்லோடு சேர்ந்து இருக்கக் கூடிய பாதுகையை நான் சரணடைகிறேன். அந்த பாதுகையானவள், பத்மராகிணீயாக, பத்ம வாசினியாக, மஹாலட்சுமி தாயார் போலவே இருக்கிறாள் என்று இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தில் சாதிக்கும் ஸ்வாமி தேசிகன், தாமரை மலரை இருப்பிடமாக கொண்டவள் மஹாலட்சுமி தாயார் அதனால் அவள் பத்மவாசினியாக இருக்கிறாள் என்றால், பாதுகா தேவியும் பத்ம வாசினியாக தான் இருக்கிறாளாம்.
எப்படி தெரியுமா? பெருமாளின் திருவடி என்பதே தாமரை தானே? தாமரை திருவடி என்று தானே திருமாலின் திருவடியை நாம் கொண்டாடுவோம்? அப்படிப்பட்ட திருவடியில் நித்யம் வாசம் செய்வதால் பாதுகா தேவியும் பத்ம வாசினியாகவும், சிவந்த திருமேனி கொண்டு மஹாலட்சுமியானவள் பத்மராகிணீயாக இருக்கிறாள் அப்படி பாதுகா தேவியும் சிவந்த நிறத்தாலான ரத்ன கற்கள் பதிக்கப்பட்டு அவளும் பத்ம ராகிணீயாகவே இருக்கிறாள் என்கிறார்.
மங்கள தேவதையாக இருந்து கொண்டு பக்தர்களாகிய நமக்கு சகல விதமான மங்களங்களையும் அருளி கொண்டிருக்கிறாள் பாதுகா தேவி என்பதை “மங்கள தேவதாம் த்வாம்” என்றே அருளும் ஸ்வாமி தேசிகன், பாதுகையை பார்க்கும் போது ஹோமத்தில் இருக்கும் அக்னியை போல உனது பத்மராக கற்கள் இருக்கின்றன. திருவரங்கன் உற்சவ காலங்களில் புறப்பாடு கண்டருளும் போது, அப்பெருமானின் திருவடி நகங்கள் புனித கங்கையை போல வெள்ளை நிறத்தில் காணப்படுகிறதாம். இதை பார்க்கும் போது, ஹோமத்தில் சேர்க்கப்படும் பால் போல இருக்கிறது என்றே தானும் வியந்து நம்மையும் வியக்க வைக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் அப்பெருமாளின் திருவடியை அனுதினமும் அலங்கரிக்கும் பாதுகை, தன்னுடைய சிவந்த நிறத்தாலும், வேத வாசனையாலும், நம்மிடம் உள்ள அறியாமை எனும் இருளை நீக்குவதாலும் சூரியன் போலவே பிரகாசமாய் விளங்குகின்றன என இந்த பத்ததியில் வித விதமாய் பத்மராக ரத்தின கல் பாதுகைக்கு அழகு சேர்க்கும் விதத்தை கொண்டாடும் ஸ்வாமி தேசிகன், இனி அடுத்த “முக்தா பத்ததி” பாதுகையில் உள்ள முத்துக்களை கொண்டாட நம்மை அழைக்கிறார். முக்தா என்றால் முக்தி பெற்ற ஆத்மாக்கள் என்றும் எடுத்து கொள்ளலாம். பாதுகையை சரணாகதி செய்து வணங்குபவர்கள் அனைவருமே முக்தி பெற்றே தீருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படிப்பட்ட முக்தர்கள், முக்தி அடைந்தவர்கள், தாங்கள் மோட்சத்திற்கு செல்லும் போது தங்களிடம் உள்ள வெண்மை நிறம் பொருந்திய புண்யங்களை தங்களது நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்து விட்டு செல்கிறார்களாம். முக்தனுக்கு மிகவும் பிடித்த நண்பர் என்கிற ஸ்தானத்தில் பாதுகா தேவி இருப்பதால், அவளிடமே அந்த முக்தன் செய்த புண்யங்கள் சென்றடைந்துவிட, அதனாலேயே அந்த பாதுகை மேலும் வெண்ணிறம் பெற்றவளாக இருக்கிறாளாம். பாதுகையின் மேல் இருக்கும் முத்துக்கள் என்பது முக்தர்கள் கொடுத்துவிட்டு சென்ற புண்ணியங்கள் போல் இருக்கிறது என்று ஸ்வாமி தேசிகன் வியந்திருப்பதை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கற்பனைகள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு வந்து பாதுகையை வர்ணிப்பதில் வரிசை கட்டி நின்றிருக்கிறது.
திருவரங்கனின் திருவடியில் பிரகாசிக்கும் பாதுகையின் ஒளி என்பது பகல் நேரத்திலும் சந்திரன் பிரகாசிப்பதை போலவே இருக்கிறதாம். இதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் தெரியுமா ஸ்வாமி தேசிகன்… தேவ லோகத்து தேவர்கள் அனைவரும் எப்பொழுதும் பாதுகையை நோக்கி கை குவித்த படியே நிற்கிறார்களாம். அப்படி அவர்கள் கை குவித்திருப்பது மலராத தாமரை மொட்டுக்கள் போலவே இருக்கிறதாம்.
அந்த தாமரை மொட்டுக்கள் என்பது சந்திரன் இருந்து கொண்டே இருப்பதால் அப்படியே பிரியாமல் மொட்டுக்களாகவே இருக்கின்றதாம். பாதுகையே.. அனைத்து உலகங்களையும் திருவரங்கனின் திருவடித்தாமரைகளே தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய அவனது திருவடித்தாமரைகளை நீ தாங்கி கொண்டிருக்கிறாய். மூன்று உலகங்களோடு அரங்கனையும் நீ தாங்கி நிற்பதால், உனக்கு களைப்பு ஏற்பட்டு அதனால் வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன. இவையே உன் மீது முத்துக்கள் போல அழகாக தோன்றுகிறதோ என்னவோ!
முத்துக்கற்கள் பொருந்திய பாதுகையின் ஒளியானது, கங்கையில் வீசும் அலைகள் போலவே காணப்படுகிறதாம். ஒரு கேள்வியை வேடிக்கையாக முன் வைக்கிறார் ஸ்வாமி தேசிகன். பாதுகையே, உன்னுடைய வெண்மை நிறமானது, உன்னை வணங்கும் தேவர் களின் தலையில் விழுவதால், அவர்களது தலைகள் எப்பொழுதும் வெண்மை நிறம் கொண்டவையாய் நரைத்திருப்பதை போல இருக்கின்றனவே.. இப்படி இருந்தும் அவர்கள் மூப்பு மற்றும் மரணம் அடையாமல் உன்னால் எப்படி செய்யப்படுகின்றனர்? என்று கேட்கிறார்.
சத்சங்கத்தில் அதாவது பகவானை பற்றிய ஸ்மரணையில் எப்போதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் மூப்பு என்பதோ நோய் என்பதோ அல்லது மரணம் என்பதோ ஏற்படாது என்பது நாம் பொது வாழ்க்கையிலும் பார்க்கிறோம் அல்லவா?
இந்த “முக்தாபத்ததி” யின் கடைசி ஸ்லோகத்தில், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடி களைக்காப்பாற்றும் பாதுகையே என்று அந்த பாதுகையை அழைத்து, ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன் அழகாய் விண்ணபிப்பது என்னவென்று தெரியுமா? நீ எனக்கு அழிவற்ற வெண்மையை அதாவது ஸ்திரமான சுத்தியை, நல்லெண்ணத்தை, பாவங்கள் அற்ற தன்மை, ஞானத்தை உண்டாக்கிட வேண்டும் என்றுதான்.
ஸ்ரீரங்கம் வெண்மையாய் இருக்க காரணம் என்ன தெரியுமா என்று கேட்கும் ஸ்வாமி தேசிகன், பாதுகையே உன்னுடைய முத்துக்களின் அந்த வெண் ஒளியால் அல்லவா காவிரியால் சூழப்பட்ட ஸ்ரீரங்கம் என்ற தீவானது, ஸ்வேத தீபம் போன்று வெண்மையாக உள்ளது?நமக்குள் என்றுமே நல்லெண்ணங்களையும், நம் வாக்கில் என்றுமே நல்வார்த்தை களையும் நம் அனைவருக்குமே என்றுமே நல் வாழ்க்கையை மட்டுமே அருள காத்திருக்கும் பாதுகையின் பெருமையை மேலும் அறிய அடுத்த பகுதிக்கு காத்திருப்போம்..
பாதுகையின் பெருமை தொடரும்...
நளினி சம்பத்குமார்
