நமக்காக வலிய திருமாலிடம் சென்று நாம் படும் வலிகளையும் வேதனைகளையும் குறைக்க செய்து திருமாலின் திருவருள் எனும் வலிமையை நம்மிடம் கொண்டு சேர்ப்பவள் பாதுகா தேவியே. திருமாலின் திருவடிக்கோ அல்லது திருமகளின் திருவடிக்கோ எந்த விதத்திலும் வலி என்பதோ சிறு காயம் என்பதோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ராமபிரான் வனவாசத்திற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்ட போது, அவரது திருவடியில் இருக்கக் கூடிய அந்த பாதுகையானவள், திருமாலுக்கு முன் புறப்பட்டு அவர் காட்டிற்கு செல்லும் வழியில் கற்களோ, முட்களோ இருந்தால் அவற்றை எல்லாம் தானே பாதுகையாலேயே அகற்றி விடுகிறேன் என்றபடி புறப்பட்டாளாம். பெருமாள் எப்படி நடந்து சேவை சாதிக்கிறார் என்பதை பற்றி சொல்லுவதே “சஞ்சார பத்ததி”.
வால்மீகி ராமாயணத்தில் “அயோத்யா காண்டத்தில்”, சீதா தேவி ராமரை பார்த்து, பாதுகா சஹஸ்ரத்தின் “ஸஞ்சார பத்ததி”யில் முதல் ஸ்லோகத்தில் வரக்கூடிய “அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நந்தீ குஶகண்டகாந்” என்று கூறுகிறாள். ராமர் சீதையிடம் வனவாசம் என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அங்கே கற்கள், முட்கள் எல்லாம் நிரம்பவே இருக்குமே என்று சொன்ன போது அதற்காக தான் உங்களுக்கு முன்பே நான் செல்கிறேன். என் அடியை பின்பற்றி நீங்கள் நடந்து வாருங்கள். அந்த பாதையில் இருக்கும் முட்களை எல்லாம் நான் அகற்றி விடுகிறேன் என்றாளாம். பாதுகா தேவி செய்யக்கூடிய கைங்கர்யத்தை தான் செய்ய ஆசை பட்டாளாம் சீதா பிராட்டி.
“ஶரத: ஶதமம்ப!பாதுகே!ஸ்யாம்
ஸமயாஹூத பிதாமஹ ஸ்துதாநி|
மணிமண்டபிகாஸு ரங்கபர்து:
த்வததீநாநி கதாகதாநி பஶ்யந்||”
என்று ஸ்வாமி தேசிகன் பாதுகா தேவியிடம் தனக்கு நூறு ஆண்டு வாழும் வரத்தை கொடு என்கிறார்.
“ நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரில் மாறன் மறை வாழ……..தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றாண்டிரும்”
என்று பொதுவாக வைணவ அடியார்கள் சொல்வதுண்டு. சுவாமி தேசிகனோ பாதுகையிடம்,எதற்காக நூறு ஆண்டு கால ஆயுசு வேண்டுகிறேன் என்று தெரியுமா ரங்க நாதா? பாதுகையை சாற்றிக்கொண்டு மணி மண்டபத்தில் நீ எழுந்தருள்வாயே. அப்போதெல்லாம் உன் நடை அழகை அடியேன் சேவித்து கொண்டே இருக்க வேண்டும். “ கதாகதாநி பஶ்யந்” என்கிறார்.
“ஸ்ரீரங்க நடை அழகு, காஞ்சி குடை அழகு, திருப்பதி வடை அழகு, மேல்கோட்டை முடி அழகு” என்று சொல்வார்கள். அப்படி ஸ்ரீரங்க நாதனின் அழகுக்கு அழகு சேர்ப்பது அந்த அரங்கன் தன் பாதுகைகளை சார்த்தி கொண்டு கம்பீரமாக போட்டு கொண்டு வரும் சிம்ம கதி (சிங்கார சிங்க நடை), சர்ப்ப கதி (பாம்பை போன்ற நடை), போன்றவைகள் தானே?
திருவரங்கம் சென்று நம்பெருமாளின் நடை அழகை கண்குளிர காண்போருக்கு மறு பிறவி என்பதே கிடையாது நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்பதை “சஞ்சார பத்ததியில்”, 9 வது ஸ்லோகத்தில் தெரிவித்து நம்மை எல்லாம் தெளிவிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
நம்முடைய பாவங்களை நீக்கி, தீய எண்ணங்களை களைந்து, நம்மை தூய்மையானவாக மாற்றிவிடக்கூடியது பெருமாளின் நடை அழகு என்றாலும் ரங்கநாதா நான் அதற்காக மட்டுமே உன்னுடைய நடை அழகை தரிசனம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை. “ ரஸிகாஸ்வாதமத: பரம் ந வித்ம:” ஒரு ரசிகனாய் கேட்கிறேன். ஒரு ரசிகனுக்கு உன் நடை அழகை ரசிப்பதை விட சிறந்த விஷயம் என்ற ஒன்று இருக்க முடியுமா என்ன? பாதுகையே நம்பெருமாள் உன்னை தன் திருவடிகளில் அணிந்து குதித்தவண்ணம் எழுந்தருளுவது என்பது நாட்டியம் போல மிகமிக அழகாக இருக்கிறது. கண்களுக்கு இதை விட வேறு விருந்து என்பதே கிடையாதே என்கிறார்.
உபநிஷத்களுக்கு பூஷணமாக இருப்பது (அலங்கார பொருளாக) பாதுகையே தான். வேதங்கள் தங்கள் தலையில் பாதுகையை தான் தாங்கி கொண்டு இருக்கின்றன. வேதங்களின் திருமுடிக்கு அழகு சேர்ப்பவளாகவும், திருமாலின் திருவடிக்கு அழகு சேர்ப்பவளாகவும் இருப்பவள் பாதுகா தேவியே. “மதுவைரி பாதரக்ஷே” மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீ ரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! என்று அழைக்கும் ஸ்வாமி தேசிகன், “ திருமாலின் மென்மையான மேன்மையான திருவடி என்பது கரடுமுரடாக இருக்கக் கூடிய அடியவர்களின் மனதில் நடக்க வேண்டும் என்பதற்காகவே, நீ என்ன செய்கிறாய் தெரியுமா? அப்பெருமாளின் திருவடிக்கு முன்னோட்டமாக, பாதுகையே, நீ திருவடியை தேவர்களின் மணிமகுடத்தின் மீது ஏறி நடக்கும் படி செய்கிறாய். அங்கே அந்த தேவர்களின் மணிமகுடத்தில் இருக்கக் கூடிய ரத்தின கற்கள் சற்றே கரடு முரடாக, இருப்பதால் திருமால் அடியவர்களின் மனதில் பின்னாளில் நடப்பதற்கு, சஞ்சரிப்பதற்கு எளிதாகி விடும் அல்லவா?
ரங்கநாதன் கிருஷ்ணனாக திருஅவதாரம் செய்த போது எத்தனை எத்தனையோ எண்ணிலடங்காத லீலைகளை எல்லாம் செய்தான் அல்லவா? தன்னுடைய மென்மையான பாதம் கொண்டு அந்த குட்டி கிருஷ்ணன் எவ்வாறு சகடாசுரனை உதைத்திருப்பான்? அவனுடைய அந்த திருப்பாதங்களுக்கு பாதுகா தேவியே தானே வலிமை சேர்த்திருக்க வேண்டும்?
திருமால் ரங்கநாதனாக சயனித்து கொண்டிருக்கும் போதும், பரவாசுதேவனாக நிற்கும் போதும் அவனது பாதங்கள் சற்றே பெரியதாக இருக்கும். அந்த பெரிய பெருமாளுக்கு ஏற்றபடி அவனது திருவடிகளில் தங்கி தாங்கி கொண்டிருக்கும் பாதுகை தான் பெருமாள் நம்பெருமாளாக, உற்சவ மூர்த்தியாக திருவீதி உலா வரும் போது, அவனது திருவடிகள் என்பது சிறியதாக இருக்கும் போது அத்திருவடிகளுக்கு ஏற்றபடி சிறியதாக மாறி பெருமாளின் திருவடிகளுக்கு பொருந்தியவளாய் மாற்றி கொள்கிறாய். “மந்தேஷு மஹத்ஸ்வபி த்வம்” மந்தேஷு என்றால் சிறிய, மஹத்ஸ்வபி என்றால், பெரிய. திருவடிகளுக்கு ஏற்றபடி தன்னை மாற்றி கொள்வது என்பது பாதுகா தேவியின் சுபாவமாக இருக்கிறது.
பாதுகையின் இன்னொரு பெருமைமிகு சுபாவமாக சுவாமி தேசிகன் கொண்டாடுவதை எதை பற்றி தெரியுமா? “பாதுகையே, துன்பம் கொண்டவர்களின் துயரம் நீங்கும்படி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் நடந்து வருகிறார். அப்படி அவர் சஞ்சாரம் செய்யும் போது, உயர்ந்த இடங்கள், தாழ்ந்த இடங்கள் என்று பாராமல் அவன் திருவடிகளை தாங்கியபடியே நீ வருகிறாய். இதனால், நீ வேற்றுமை என்பதை காணாதவள் என்றே உனது பெருமையான சுபாவத்தை அனைவரும் போற்றுகின்றனர். உயர்வு தாழ்வு என்ற எல்லா இடங்களிலும் தடையற்ற உன் நடை கங்கைக்கு ஒப்பாகிறது. ஜனங்களின் தாபங்களை போக்குகிறது” என்கிறார்.
பெருமாளுக்கு “உருக்ரமன்” என்ற திருப்பெயர் ஏற்பட காரணமாக இருந்தவளே பாதுகா தேவி தான் என்று காட்டும் தேசிகன், இரத்தின கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ எம்பெருமானுடைய திருவடியில் இருந்ததால் அல்லவா, இந்த உலகம் முழுவதையும் த்ரிவிக்ரமனாக ஸ்ரீ ரங்க நாத பெருமாள் அளந்தார் அன்று? அதனால் தானே பெருமாளுக்கு உருக்ரமன் என்ற பெயரே ஏற்பட்டது என்கிறார்.
பாதுகையே நீயே திருமாலை இதோ இந்த தொடரின் வழி உனது பெருமைகளை படித்து கொண்டிருக்கும் அனைத்து பக்தர்களின் இதயத்துக்குள்ளும் அப்பெருமான் இன்றியமையாது இன்றிலிருந்து சஞ்சாரம் செய்திட அன்போடு அழைத்து வருவீராக என்ற வேண்டுதலை அப்பாதுகையிடமே சமர்பித்து பாதுகா தேவியின் திருவருளாலே, அவளின் பெருமைகளை பற்றி நாம் தொடர்ந்து அனுபவிப்போம்..
பாதுகையின் பெருமை தொடரும்..
நளினி சம்பத்குமார்